ஞாயிறு, 2 ஜனவரி, 2011
கை தவறி போகும் டயரி
வந்தது ஜனவரி
இனி வரும் ஒரு கூட்டம்
எடுப்பதற்கு டயரி
கடந்த வருடம்
கெஞ்சிக் கூத்தாடிப் பெற்ற
டயரிகளில் பல
பட்டினியால் செத்துப் போயின
உணர்வுகளைச் சுமப்பதற்காய்
புது வருடத்தில் புதிய குழந்தைகளாய்
ஆவலோடு பிறந்தன
உணர்வற்ற பலரது கைகளில் சிக்கி
நடைப் பிணமாய் போயின
கதையையும், கவிதையையும்
ஏன் காவியத்தையும்
சுமக்கவேண்டிய டயரிகள்
பரவாயில்லை
கணக்கையாவது சுமந்திருக்கலாம்
இப்படி அநியாயமாய்
பட்டினிப் போட்டுவிடீர்களே ?
ஒவ்வொரு தினச்செவியிலும்
உங்கள் பேனா(நா)க்கள்
ரகசியம் சொல்லும் என்று
எதிர்பார்த்து ஏமாந்துப் போயின
எழுதத் தெரியாதவர் கைகளில்
டயரி வெறுமனே ஒப்பனை
உபயோகிக்கத் தெரிந்தவருக்கு
கடந்த காலத்தைக் காட்டி நின்று
சொல்லும் கதைகள்தான் எத்தனை ?
ஏன் டயரிகள் என்று தெரியாத பலரும்
ஏன்தான் உயிரை விடுகிறார்களோ
டயரிகளுக்காய்
எழுதத் தெரியாத அநியாயக்காரர்களே
இனி கேட்டுச் செல்லாதீர்கள்
டயரிகள்
வேண்டுமென்றால்
ஒரு கொப்பிப் புத்தகம்
வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்
- என். நஜ்முல் ஹுசைன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)