எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 21 டிசம்பர், 2019

கவிஞர் அருட்கவி அக்கரையூர் அப்துல் குத்தூஸ்

11 – 12 – 2019 அன்று நடைபெற்ற 63 ஆவது வகவ கவியரங்கின்போது கவியரங்கத் தலைமையையேற்று நடத்துமாறு கவிஞர் அருட்கவி அக்கரையூர் அப்துல் குத்தூஸ் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்புவிடுத்தேன்
- என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்

தமிழோடு விளையாடி தமிழாலே தலைசீவி
தன்பெயரை வைத்திருக்கும்  இவரை
அமிழ்தான சொல்லெடுத்து அழகுதமிழ் பாட்டெழுதி
ஆண்டாண்டு புகழ் பெற்ற இவரை
கமழுகின்ற வரியெடுத்து  வாருங்கள் நீங்களென
கரம் விரித்து வரவேற்றோம் இன்று
நமதுள்ளம் தான்மகிழ்ந்து தந்தோமே நம்அரங்கு
தலைமையினை ஏற்றிடுவீர் என்று

அறுபத்தி மூன்றெங்கள் கவியரங்கு நடைபயின்று
அற்புதமாய் தலைநிமிர்ந்து நிற்க
சிறப்புடனே வாருங்கள் தலைமையினை ஏற்றிடுங்கள்
சீராகவே நாமும் அழைத்தோம்
மறுப்பேதும் காட்டாமல் சரியென்று உட னிசைந்து
மனம்மகிழ்ந்து இக்கவிஞர் வந்தார்
பொறுப்போடு வகவத்தின் கவியரங்கைத் தலையேற்று
பொன்மனதைத் தான் காட்டி நின்றார்

அக்கரையூர் இவருக்கு ஊராகி நின்றதுவே
அக்கறையோ தமிழ்மீது என்றும்
எக்கரையும் தொடுகின்ற மொழியாட்சி இவருக்கு
எம்மனதை இன்று வெல வந்தார்
அக்கரையூர் அப்துல்குத்தூஸ் அருட்கவியே உங்களுக்கு
அகமகிழ்ந்தே கவியரங்கைத் தந்தோம்
சர்க்கரையாய் மொழியெடுத்து எங்கள் செவிநிரப்புங்கள்
சந்தோஷம் எமை வந்து தழுவ

வலம்புரியின் கவிஞர்கள் அணிஉங்கள் தலைமையிலே
வளம்சேர்ப்பார் கவியரங்கில் இன்று
சிலம்போசை போல்நீங்கள் தமிழினிலே சொல்லெடுத்து
சிறப்பாக்குங்கள் உங்கள் தலைமை
நலம்பெறட்டும் கவியரங்கு நல்லபெயர்தான் பெறட்டும்
நானிலத்தில் வகவத்தின் சிறப்பு
நிலைபெறட்டும்; அருட்கவியே தலைமையினைத்தான் ஏற்று
நீண்டபுகழ் தான் பெறுக என்றும்

அருட்கவி அக்கரையூர் அப்துல் குத் தூஸு
பலமேடை கண்ட உங்களுக்கு
இத்தலைமை ஒரு தூசு
என்று காட்டுங்கள் !

சனி, 23 நவம்பர், 2019

சுலைமா ஏ. சமி



நாவலாசிரியை திருமதி சுலைமா   சமி இக்பால் அவர்களின் "உண்டியல்"
நூல் வெளியீட்டு விழாவில் வாசித்த கவிதை




பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

சுலைமா சமி இக்பால்
எழுத்தால் வளைத்துப் போட்டு
இருக்க வைத்துக் கொள்கிறார்
தன்பால்

அடடா
எத்தனை வருடங்கள்
இவர் கரங்கள்
எழுத்தை சுவீகரித்துக் கொண்டு

இன்னும்
மின்னும்
எழுத்துகளுக்கு
சொந்தம் கொண்டாடிக் கொண்டு

களைப்பும் சலிப்பும்
இவர் பாதைகளில்
இல்லை
இல்லவே இல்லை

அதனால்தானே
வாசகர் நெஞ்சங்களை
கொண்டு போகிறார் கொள்ளை

குவிந்திருக்கும் இவர்
எழுத்துகள்
குவித்திருக்கும் புகழ்

நம் நாட்டிலும்
வெளிநாடுகளிலும்
ஈட்டியுள்ள புகழ்
ஈட்டி உள்ள புகழ்
ஆம் அத்தனை கூர்மையானது

கூர்
மை தானே
இவரது உடைமை

அந்த
 எழுத்துகளால்தானே
குடைந்தெடுக்கிறார் மனங்களை

இவர் கதைகளை
வாசித்து முடிக்கலாம்
யோசித்து முடிக்க முடியுமா?

சிந்தனை கருத்துகளை
சுமந்த
சுலைமா சமியின் கதைகள்
படித்தவுடன் முடிபவை அல்ல எங்கள் உள்ளங்களில்
சிந்தனைகளை முடிபவை
முடிசூடிக் கொள்பவை

"உண்டியல் " சிறுகதை
தொகுதி தந்திருக்கிறார்
 உண்டு இயல் தன் கதைகளிலே
என்று நிரூபித்திருக்கிறார்

பொழுதுபோக்குக்காய் படிப்பவர்களே
சுலைமா சமி
என்ற இந்த ஆளுமையின்
கதைகளைப் படிக்க வேண்டாம்

இவரது கதைகள்
பொழுதை ஆக்குபவர்களுக்கான
கதைகள்

நல்ல பொழுதை
ஆக்குவதற்கான கதைகள்


இவர் கதைகளிலே
தேவதைகள் இல்லை
தினம் வதை படும்
மானிட   ஆத்மாக்கள்தான்
இருக்கின்றன

அங்கே
நீங்களும் நானும்
இருக்கிறோம்

அணுஅணுவாய்
ஆய்ந்து எழுதியுள்ளார் -
மானுட உணர்வுகளை

படித்து விட்டு
வீசி விடாதீர்கள்
படிய வையுங்கள்
மனங்களில் என்று
படியேறி எழுதியுள்ளார்

பல படிகள்
இறங்கியும்
எழுதியுள்ளார்

மறக்க வேண்டாம்
மாற்றுத் திறனாளிகளை
என்று அவர்கள்
கைகள் பிடித்து
எழுதியுள்ளார்

இல்லை இல்லை
இவர் எழுதவில்லை
அவர்களோடு வாழ்ந்திருக்கிறார்

கைக்குட்டையோடுதான்
இவர் கதைகளை
வாசிக்க வேண்டும்
வடியும் கண்ணீரைத்
துடைப்பதற்கு - அது
கவலையின் கண்ணீர் மட்டுமல்ல
சிலவேளை
ஆனந்தக் கண்ணீரும்தான்

சுலைமா சமி என்ற
இந்த எழுத்தாளர்
மேகத்திலே
சிறகடித்துப் பறந்து
எழுதவில்லை

மண்ணினிலே
தன் பாதகங்கள் பதித்து
எழுதியுள்ளார்
மண்ணின் மைந்தர்களைத்தானே
வரைந்துள்ளார்

என்று ஆரம்பித்த
இந்த எழுத்துப் பயணம்
இன்றும்
நடை தளராமல்

ஒரு டெலஸ்கோப் கொண்டு வந்து
விழிகள் விழித்துப் பார்த்தேன்

இந்தப் பெண்பாலுக்குப் பின்
இருப்பது யார் ?
ஓர் ஆண்பால் அல்லவா

அடடா அது எங்கள்
இக்பால் அல்லவா ?

மௌலவி இக்பால்
சுலைமா சமி என்ற எழுத்தாளருடன்
இன்றும் கை கோர்த்துள்ளார்
அன்பால்

சுலைமா சமியின்
வெற்றியின் ரகசியம்
இப்போது புரிந்தது

என் இதயம்
இவர்களுக்காய்
இப்போது துஆ புரிந்தது

நீண்ட ஆயுளோடு
சுகதேகிகளாய் வாழவேண்டும் என்று

சுலைமா சமி இக்பால்
இன்னும் இன்னும்
எழுதி குவிக்க வேண்டும்
இன்று இவர்
நூல்கள் எல்லாம் விற்கவேண்டும்
என நான்
பிரார்த்திக்கிறேன்

நீங்கள் எல்லாம்
ஆமின் கூறுங்கள்

நன்றி

வியாழன், 21 நவம்பர், 2019

வெள்ளி, 1 நவம்பர், 2019

திங்கள், 23 செப்டம்பர், 2019

பாரதியார் கவிதை


21/9/2019 அன்று கொழும்பு விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் பாரதி கலா மன்றத் தலைவர் த. மணி ஏற்பாட்டில் இடம்பெற்ற பாரதி விழாவும் கவியரங்கம் நிகழ்வில் கவிஞர் ராதா மேத்தா தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் நான் பாடிய கவிதை.
       - என். நஜ்முல் ஹுசைன்



பாரதி
உன் கவிதைகளுக்கு
உயிர் உள்ளது
அதனால்தான்
தமிழர்  உணர்வுகளிலெல்லாம்
இன்றும் உயிரோட்டமாய்
தங்கி உள்ளன

நீ
உள்ளதை சொன்னவன்
உள்ளத்தில்
உள்ளதை சொன்னவன்

நீ
'உள்ள'
மையால் எழுதியவன்

உள்ளமையாய்
எழுதியவன்

நீ இறந்தபோது
உனக்காய் வந்தவர்களை
விரல்விட்டு
எண்ணிவிடலாம்

ஆனால்
உன் உயிரோட்டமான
கவிதைகளுக்காய்
உன்னை
சிம்மாசனம் போட்டு
அமர வைத்திருப்போரை
எண்ணுவதற்கு
அத்தனை
விரல்களுக்கு
நாம் எங்கே போவது ?

இங்கே
ஒவ்வொரு கவிஞன்
பிறக்கும் போதும்
அங்கே
நீ இருக்கிறாய்

அன்று நீ
இறக்கவில்லை
இருக்கிறாய்
என்று நம்பியதனால்தானே
உன்னை அடக்கம் செய்ய
அதிகமானோர்
வரவில்லை

பாரதியே
நீ ஞானி
அதனால்தான்
எங்கள் பிள்ளைகளைப் பார்த்து
"ஓடி விளையாடு பாப்பா "
என்கிறாய்

ஆனால் அவர்கள்
ஓடாமல் விளையாடுகிறார்கள்-
கைபேசியில்

அவர்கள்
கைபேசி வைத்துள்ளார்கள்
அதனால் அவர்கள்
கைகள்தான் பேசுகின்றன
அவர்களோ
யாருடனும் பேசுவதில்லை

"ஓய்ந்திருக்கலாகாது"
என்கிறாய்
அவர்கள் ஓயாமலிருக்கிறார்கள்
விளையாட்டு மைதானங்களில்
அல்ல
கம்ப்யூட்டர் மைதானங்களில்

இன்று
சின்னஞ்சிறு கிளியே
கண்ணம்மாக்கள்
காமுகர்களின்
கவிதைகளாய் போயினர்

நெஞ்சில் உரமுமின்றி
நேர்மை திறனுமின்றி
வஞ்சகம் செய்வோரை
அறிமுகப்படுத்தி
அறிவுக்கண் திறந்தவன் நீ

பல வேளைகளில்
அக் கண்ணை
மூடி வைத்து கொள்கிறோம்

கொடும்
கூற்றுக்கு இரையென பின் மாயும்
வேடிக்கை மனிதனல்ல
நீ என்று
உன்னை அறிமுகப்படுத்தினாய்-
வெடிக்கையில்
இறந்து போகும்
இந்த மனிதர்களைப் பார்த்து

பாரதி
நீ துணிந்து பாடியவன்
தமிழனின் மானங் காக்க
துணி யீந்து பாடியவன்

அதனால்தானே
கவிஞர்கள் என்று
சொல்லிக் கொள்வதிலே
நாங்கள் இன்று
தலைநிமிர்ந்து
இருக்கிறோம்

பாரதி
நீ ஒரு
நெடுங்கவிதை

உன்னைப் பற்றி
விடிய விடிய
பாடலாம்
ஏனெனில்
நம் பாடெலாம்
உன் பாடலாம்

என் சமுதாய தோழர்களே
உங்களுக்கொரு வேண்டுகோள்

எங்கள் பாரதியாரைப் பற்றி
ஒவ்வொரு குழந்தைக்கும்
சொல்லிக் கொடுங்கள் -
விலாவாரியாக

நாளை அவர்கள்
"பாரதி
யார்? " என்று
கேட்கும்படி மட்டும்
வைத்துவிடாதீர்கள் !

நன்றி



வியாழன், 4 ஜூலை, 2019

கைவீசி கொடுத்தோர்க்குப் பெருநாள் -  நோன்புப்  பெருநாள் பாடல் 

மெட்டமைத்து    பாடியவர் : 
ஈழத்து இசை முரசு கலைக்கமல் (ஜமால்தீன் மஹ்தூம்)

பாடல் வரிகள் : என். நஜ்முல் ஹுசைன்

அறிவிப்பாளர் : அமீர் கான்

வெள்ளி, 5 ஏப்ரல், 2019

எந்த சீட் வேண்டும்? சிறுகதை "எங்கள் தேசம் "

2019 ஏப்ரல் மாத "எங்கள் தேசம் " சஞ்சிகையில் எனது சிறுகதை.  நன்றி சகோதரர் இர்ஸாத் இமாம்தீன்

எந்த சீட் வேண்டும்?
~~~~~~~~~~~~~

        - என். நஜ்முல் ஹுசைன்

கட்சிக் கொடிகள் எங்கும் பறந்தன. தேர்தல் பிரசாரங்கள் களை கட்டியிருந்தன. இம்முறை ஆட்சி எங்களின் அனுசரணையில்தான் என்ற வீர முழக்கம் எங்கும் ஒலித்தன.

அந்த முஸ்லிம் பிரதேசம் அல்லோலகல்லோலப்பட்டது. முஸ்லிம் முன்னேற்றக் கட்சியின் முதன்மை வேட்பாளராக இருந்து தொடர்ந்து 20 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் சமத் ஹாஜியாரை அசைக்க, முஸ்லிம் குறையகற்றுவோர் கட்சிக்கு சரியான போட்டியாளர் அகப்பட்டார் என்பதில் அக் கட்சிக்காரர்களுக்கெல்லாம் அளவிடமுடியாத ஆனந்தம்.

அப்பிரதேசத்தில் சமத் ஹாஜியார் அசைக்க முடியாத செல்வாக்கு பெற்றிருந்தார். எத்தனை கரணமடித்தும் அவரை தோற்கடிக்கவே முடியவில்லை.

இம்முறை தேர்தலிலும் அப்படித்தானோ என எண்ணிக் கொண்டிருந்த போதுதான் அவர்களுக்கு புரவலர் சித்தீக் ஹாஜியார் கண்களில் பட்டார்.
பெரும் கோடீஸ்வரர்.  வாரி வழங்கும் வள்ளல்.  உதவி என்று யாரும் கேட்டு வெறுங்கையுடன் திரும்பிய சரித்திரமேயில்லை. மார்க்கப்பற்றுள்ளவர். எதையுமே இறையச்சத்துடன் செய்பவர்.

அரசியலில் ஒரு துளி கூட அவருக்கு ஈடுபாடு கிடையாது.  இருந்தாலும் முஸ்லிம் குறையகற்றும் கட்சியினர் அவரைச் சுற்றி வளைத்தனர். "நீங்கள் சமுதாயத்திற்கு செய்யும் சேவை வீணாகப் போகக் கூடாது.  சாதாரண ஒருவராக இருந்து செய்யும் சேவையை விட பாராளுமன்ற உறுப்பினராக இருந்து நிறைய செய்யலாம்.  நாளை அல்லாஹுத் தஆலாவும் உங்களிடம் கேள்வி கேட்பான்.  வாய்ப்பிருந்தும் ஏன் பயன்படுத்தவில்லை என்று "  இப்படி பலதும் பத்தும் சொல்லி அரசியல் என்பதை வேம்பாக நினைத்துக் கொண்டிருந்த அவரது மனதில் மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள்.

" ஹாஜியார் , நீங்க ஒன்றுமே செய்ய தேவையில்லை.  இந்த போர்ம்ல கையொப்பமிட்டா போதும் "

இப்படி பலபேர் அடித்த அடியில் அந்த அம்மி நகர்ந்தது.

புரவலர் சித்தீக் ஹாஜியார் தேர்தலுக்கு வந்து விட்டார் என்பதுவே அவர் எம்.பி. ஆகிவிட்டார் என்பது போலிருந்தது.  அந்தப் பிரதேசத்தில் ஒவ்வொருவரும் சித்தீக் ஹாஜியாருக்கு ஏதோ ஒரு விதத்தில் கடமைப்பட்டிருந்தனர்.
அதனால் அப்பிரதேச மக்களின் வாக்குகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதில் இம்முறை முஸ்லிம் குறையகற்றும் கட்சிக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை.

அதனால் அதன் தொண்டர்கள் வழமையைவிட உற்சாகமாக களமிறங்கியிருந்தனர்.

அன்று மாலை முஸ்லிம் குறையகற்றும் கட்சி தனது முதலாவது பிரசாரக் கூட்டத்துக்கு ஊரின் பொது மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

புரவலர் சித்தீக் ஹாஜியார் எவ்வளவு மறுத்தும் தொண்டர்கள் அவரை ஊர்வலமாக அழைத்து வருவதில் பின் நிற்கவில்லை.   ஒவ்வொரு விதமான கோஷமிட்டு அவரை உற்சாகமாக தெருவெங்கும் அழைத்துச் சென்றனர்.

இறுதியில் அவரை மேடை அமைந்திருந்த இடத்திற்கு அழைத்து வந்தனர்.  பெரும் ஜனத்திரள் அலை மோதியது. உண்மையில் சித்தீக் ஹாஜியார் அது போன்ற ஒரு கூட்டத்தை இப்படி ஒன்றாக கண்டதேயில்லை. கூட்டத்தைக் பார்த்து சித்தீக் ஹாஜியாருக்கு மலைப்பாக இருந்தது.

எத்தனையோ மாலைகள் ஹாஜியாரின் கழுத்தில் விழுந்தன. போட்டிப் போட்டுக்கொண்டு வந்து பலர் அவருக்கு பொன்னாடைப் போர்த்தினர்.  ஹாஜியாருக்கு மிகவும் சங்கோஜமாக இருந்தது.  இருந்தாலும் அவர் சமாளித்துக் கொண்டார்.

கூட்டம் ஆரம்பமானது.  பலர் மேடையில் வந்து பேசினர்.  சித்தீக் ஹாஜியாரை வானளாவ புகழ்ந்துத் தள்ளினர்.  அவர் இதுவரை காலமும் ஊருக்கு செய்த சேவைகளைப் பட்டியலிட்டுக் காட்டினர்.

எப்போதும் எதையும் விளம்பரத்திற்காக செய்யாதவர் புரவலர் சித்தீக் ஹாஜியார்.  ஆனாலும் இந்த அரசியல் மேடை
அவரை விளம்பரப்படுத்தி கூடியிருந்தவர்களின் மனங்களை களவாடிக் கொண்டிருந்தது. ஹாஜியாரின் கொடை கட்சியின் வாக்கு வங்கியை நிரப்ப நல்ல முதலீடாய் அமைந்தது.

ஒவ்வொருவராக பேசி முடித்ததும்
அறிவிப்பாளர் " இதோ இதுவரை நீங்கள் மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்த சொற்கொண்டல் சஹீத் பேசுவார் " என்று அறிவித்ததுமே சபை பெரும் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தது .  மற்ற பேச்சாளர்களுக்கு இல்லாத வரவேற்பு சபையிலிருந்து அவருக்குக் கிடைத்தது.  அதுமட்டுமல்ல அவர் பேசுவதற்கு முன்பே கொல்லென்று சிரித்தது.

சித்தீக் ஹாஜியார் பக்கத்திலிருந்தவரிடம்  "இவர் யார் ?" என்று கேட்டார்?

"இவரா இவர்தான் எங்க கட்சிட நகைச்சுவைப் பேச்சாளர்.  நல்ல கேலியா பேசுவார்.  இவர்ட பேச்ச கேட்க எப்பவுமே நல்ல கூட்டம் கூடும் "

"அடட அப்படியா " என்று சித்தீக் ஹாஜியார் சொன்னார்.

சொற்கொண்டல் சஹீத் பேசினார்.   இல்லை இல்லை கத்தினார்.  வித்தியாசமான ஏற்ற இறக்கத்தோடு பேசினார்.  பல விதமான குரல்கள் அவரிடமிருந்து வெளிப்பட்டன.   மிகவும் தாராளமாக       வசைபாடினார்.
மிகவும் நையாண்டியாக எதிரணியினரை சாடினார்.  அந்தப் பிரதேச எம்.பி.யாக இருக்கும் சமத் ஹாஜியாரைப் பற்றி மிகவும் கேலியாக மோசமாக உரையாற்றினார்.  அவரது பிரத்தியேக வாழ்க்கையைப் பற்றி கேலியும், கிண்டலுமாக பேசினார். அவரது பேச்சு நல்ல மனிதரான சித்தீக் ஹாஜியாரை ஏதோ செய்தது.

"அடடா இதுதான் அரசியலா...." என்ற எண்ணம் ஓட்டம் அவரது மனதில் ஓடியது.  சொற்கொண்டல் சஹீதின் பேச்சை சபை அப்படி சப்புக் கொட்டி ரசித்தது.

மற்றவர்களின் அசிக்கங்களை கேட்டு ரசிப்பதற்கு மனிதர்கள் எவ்வளவு ஆவலாக இருக்கிறார்கள்.

பேச்சாளர் சஹீத் கொஞ்சம் பேச்சை
நிறுத்தினார்.

மேசையிலிருந்த கூல் டிரிங்க் போத்தலைத் திறந்து  மளமளவென்று குடித்தார்.

தொண்டையைக் கனைத்துக் கொண்டார். மேடையிலுள்ளவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டார்.

"சகோதரர்களே, இனி நான் சொல்லப்போவதுதான் மிகவும் சுவாரசியமானது.

எமது எதிரணி எம். பி.ட மனைவி இருக்காங்களே. லேடீஸ் கிளப்புக்கு போறேன் என்று அவங்க போடுற கூத்து இருக்கே........"என்று ஆரம்பித்து பல அசிங்கங்களை நகைச்சுவையாகப் பேசினார்.  எம். பி.யின் பெண் மக்களைப் பற்றிக் கூட கேவலமாக பேச அந்தப் பேச்சாளர் மறக்கவில்லை . சபை ரசிக்க ரசிக்க அதிக அசிங்கங்கள் சிறகடித்துப் பறந்தன.

சித்தீக் ஹாஜியார் மறுபடி பக்கத்திலுள்ளவரிடம் கேட்டார் "இவர் சொல்றதெல்லாம் உண்மையா ? சமத் ஹாஜியார் குடும்பம் அவ்வளவு மோசமானவங்களா ?" என்று கேட்டார்.

"இல்ல இல்ல. அது அப்படியில்ல. இங்க அரசியல் மேடைல உண்மைய மட்டும் பேசுனா எடுபடாது.  இப்படி கொஞ்சம் பொய்யயும் கலந்து இன்டரஸ்டிங்கா பேசனும் . அப்பதான் எங்க கட்சி கூட்டத்துக்கு ஜனங்க நெறய வருவாங்க..... அவங்கள பத்தி அசிங்கமா பேசினாதான் எங்கட செல்வாக்கு கூடும்....."

அவர் சொல்லிக் கொண்டே போனார்.  இப்போதுதான் சித்தீக் ஹாஜியாருக்கு அரசியல் புரிய ஆரம்பித்தது.

உடனே ஆசனத்திலிருந்து எழுந்தார்.  பேசிக் கொண்டிருந்த சொற்கொண்டல் சஹீத் அருகே சென்று அவரை தனது கைகளால்
கொஞ்சம் தள்ளினார்.

ஒலிவாங்கியில் சித்தீக் ஹாஜியார் பேசினார்,  " இந்த அரசியல செய்யவா என்ன கூட்டி வந்தீங்க.
பதவிக்கு வர எந்தப் பொய்யயும் சொல்ல எங்க மார்க்கம் அனுமதி தந்திருக்கா. எங்கட சகோதரர்கள்ட எறச்சியா தின்றா நாங்க வாழனும். எங்கட முஸ்லிம் சகோதரரிய கேவலப்படுத்தியா பார்ளிமண்ட் போகனும்.
நான் சொர்க்கத்துட சீட்டுக்கு ஆசப்படுறவன். இந்தப் பார்லிமெண்ட் சீட்டுக்காக ஏன்ட சொர்க்கத்து சீட்ட விட்டுக் கொடுக்க எந்த எடத்திலேயும் நான் தயாரா இல்ல.

இந்த வெளயாட்டுக்கு நான் வரலை . தயவுசெய்து என்ன அல்லாஹ்வுக்காக விட்டுடுங்க"

பெரும் ஆவேசமாக பேசிய சித்தீக் ஹாஜியார் அதே வேகத்தில் மேடையை விட்டு இறங்கி நடந்தார்.  கனல் பறக்கும் கண்களோடு வெளியேறிய சித்தீக் ஹாஜியாரை தடுத்து நிறுத்தும் தைரியம் சபையில் யாருக்குமே வரவில்லை.

============================

வியாழன், 4 ஏப்ரல், 2019

கவிஞர் கவிநேசன் நவாஸ்

20 – 03 – 2019 புதன்கிழமை கொழும்பு ஐந்து லாம்பு சந்தி பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற வலம்புரி கவிதா வட்டத்தின் 58 ஆவது கவியரங்கிற்கு தலைமை தாங்க
கவிஞர் கவிநேசன் நவாஸ் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்புவிடுத்தேன்.

எத்தனை காலம் இவனின்
இலக்கிய பங்களிப்பு
அத்தனை செய்தே இவனும்
அடக்கமாய் வீற்றிருப்பான்
சித்தமே கவரும் வண்ணம்
சிரித் திவன் ஆற்றும் செயல்கள்
சுத்தமே ஆனதம்மா
துளியிலும் வஞ்சம் இல்லை

ஆரம்ப நாட்கள் முதலே
ஆர்வமாய் வகவத்தோடு
ஆரமாய் ஜொலித்து நின்றே
ஆற்றிய பணிகள் பலவாம்
வீரமாய் நானே செய்தேன்
வெற்றியும் எனக்கே சொந்தம்
காரமாய் இந்த வார்த்தை
கூறிய தில்லை இவனும் (என்றும் )


எழுதியே குவித்தா னெனினும்
என்னவோ தெரியவில்லை
எழுதிய தெல்லாம் தொகுத்து
ஏற்றமாய் நூலாய் போட
பொழுதுமே அமையவில்லை
பொறுமையாய் உள்ள இவனை
எழுந்திட வைப்போம் நூல்கள்
அளித்திட கரங்கள் தருவோம்

அற்புத சொற்கள் கோத்து
ஆழமாய்   கவிதை யாத்து
சிற்பமாய் இவனும் எங்கள்
சிந்தையி லிடம் பிடித்தான்
உற்றவ னாகி இன்று
உவகையாய் ஏற்றுக் கொண்டு
பற்றுடன் கவிதை யரங்கை
பற்றினான் தலைமை யேற்றான்

கவிதையின்  அரங்கின் தலைமை
கவிநேசன் எங்கள் நவாஸ்
கவிஞரோ டொன்று சேர்ந்து
பெற்றிட வேண்டும் சபாஷ்
புவியெங்கும் எங்கள் வகவ
புகழினை ஓங்கச் செய்தால்
தவிப்பிலை சொல்லி வைப்போம்
தலைமையில் பெற்றாய் நீ பாஸ்!

கவிஞா
கவிநேசன் நவாஸ்
இனி தலைமையினை
நீயும் ஏற்று - எமை
தழுவச் செய்
தென்றல் காற்று!

வெள்ளி, 29 மார்ச், 2019

தீர்க்கமான முடிவு - சிறுகதை

29/03/2019 "விடிவெள்ளி" பத்திரிகையில் இடம்பெற்றுள்ள எனது சிறுகதை "தீர்க்கமான முடிவு ". நன்றி பிரதம ஆசிரியர் சகோதரர் எம். பி.எம். பைரூஸ்

தீர்க்கமான முடிவு !

- என். நஜ்முல் ஹுசைன்

அனீஸுக்கு இருப்பே கொள்ளவில்லை.  கையைப் பிசைந்து கொண்டு இங்குமங்கும் திரிந்து கொண்டிருந்தான்.
பெரும் புதுமையாக இருந்தது-  இப்படி அனீஸ் குட்டி போட்ட பூனை போல் தவித்துக் கொண்டிருப்பது.
இப்படி அவன் தவித்துக் கொண்டிருப்பது அவனுக்காக அல்ல- யாருக்காகவோ !
இதுபோன்று யாருக்காகவோ அனீஸ்; புழுவாய் துடிப்பது அவனது வாழ்க்கையிலேயே இதுதான் முதல் தடவை. இதற்கு முன் அவன் எப்போதுமே  மற்றவரைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை. கவலை என்ன மற்றவரை அவன் மனிதராக மதித்ததே இல்லை. தங்கக் கட்டிலிலே பிறந்த அனீஸுக்கு மற்றவர் நலன் என்பது கொஞ்சமும்  தெரியாது.
பெற்றோருக்கு செல்லப் பிள்ளை.  கேட்டதெல்லாம் கிடைத்தது. அதனால் இயற்கையாகவே மற்றவரை லட்சியப்படுத்தும் தன்மை அவனுக்கு அறவே அற்று போனது.
அவன் என்ன நினைத்தானோ அதைதான் அவன் எப்போதுமே சரி என்று நினைத்தான் அனீஸ் எப்போதுமே மூன்று கால் முயல் பிடிப்பவன். அதனால் அவனைச் சூழவுள்ளோர் அடிக்கடி மூன்று கால் முயலைக் காண்பார்கள்.
அந்தச் செல்வ செழிப்பான வாழ்க்கை அவனுக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே சொகுசு வாகனங்களின் பரிச்சயத்தைக் கொடுத்திருந்தது. அவனது கால் எக்ஸ்ஸலரேட்டரை, பிரேக்கைத் தொடும் முன்பே வாகனங்கள் ஓட்டக் கற்றுக்கொண்டான்.
இப்போது 22 வயது இளைஞன் அனீஸ்.
பலமுறை அவனது வாகனத்தில் மோதி பலர் சிறு சிறு காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அவர்களை எல்லாம் பணத்தை வீசி சமாளித்துவிடுவான்.
அன்றும் அப்படித்தான். வாகனத்தில் இருந்த வானொலி இசையில் தன்னை மறந்தவாறு மிகவும் வேகமாக வாகனத்தை செலுத்திக் கொண்டு வந்தான்.
மிகவும் தூரத்தில் ஓர் இளைஞன் மஞ்சள் கோட்டில் பாதையைக் கடந்து கொண்டிருப்பதை அவதானித்தான். என்றாலும் கூட அவனது வாகனத்தின் வேகம் கொஞ்சமும் குறையவில்லை.

வேகமாய் வரும் வாகனத்தைக் கண்ட அந்த வாலிபன் ஓட்டத்துடன் மஞ்சள் கோட்டைக் கடக்க முயன்றான்.
அவன் தெருவின் மறுமுனைக்கு சென்று கொண்டிருக்கும்போது அனீஸ் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டினை இழந்தான்.
அது அவனது சொல் கேட்காமல் சென்றது. ஏறக்குறைய பாதையைக் கடந்திருந்த அந்த இளைஞனை முட்டி மோதியது.   'அம்மா' என்ற அலறலுடன் அந்த இளைஞன் இரத்த வெள்ளத்திலே மிதந்தான். தனது வெறியைத் தீர்த்துக் கொண்ட அனீஸின் வாகனம் சுய நினைவு பெற்று நின்றது.
இரத்த வெள்ளத்தில் அவன் கண் முன்னாலேயே ஒருவனைக் கண்டவுடன் அனீஸ் தன் சுயநினைவை இழந்தான்.
இவ்வளவு நேரமும் யாருமே இல்லாத தெருவாய் இருந்த அந்தப் பாதையில் ஈக்கள் பறந்து வருவதைப் போன்று பலர் விரைந்து வந்தார்கள். இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த வாலிபனையும், அனீஸையும் சூழ்ந்து கொண்டனர்.
அனீஸின் நல்ல காலம்.  பொலிஸ்காரர்கள் கூட அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அது சூழ இருந்தவர்களின் தர்ம அடியிலிருந்து அவனைப்  பாதுகாத்தது. சூழ்நிலையைப் பயன்படுத்தி நாங்களும் நாலு சாத்து சாத்துவோமே என்று ஓடி வந்தவர்களின் கனவில் மண்ணள்ளிப் போட்டது.
இதற்கு முன்பு கூட அனீஸ் ஒருவனை காயப்படுத்தியபோது தனது வீட்டு டிரைவரை பொலீஸில் முற்படுத்தி அவன்தான் மோதினான் என்று காட்டி அனீஸ் தப்பித்துக் கொண்டுள்ளான்.
அப்பாவி டிரைவர் பொலிஸ் ரிமாண்டிலிருந்து நீதிமன்றம் சென்று குற்றவாளி என்று ஒப்புக்கொண்டு அபராத பணத்தை அனீஸின் தந்தை செலுத்த வெளியே வந்தான்.
இன்று வேறு யாரையும் கை காட்ட சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.   நேரடியாகவே பொலிஸ் ரிமாண்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
அனீஸின் செல்போன் தகவல் கேட்டு அனீஸின ;தந்தை வக்கீலோடு பொலிஸ் நிலையம் வந்து விட்டார்.
இன்ஸ்பெக்டர் அனீஸின் தந்தைக்கு தெரிந்தவராக இருந்தும்கூட அவர் கையை விரித்து விட்டார்.
விபத்தில் அகப்பட்டவன் சாகக் கிடப்பதால் எந்த விதத்திலும் அனீஸை அவரால் வெளியே விட முடியாது என்று அவரது நிலையைக் கூறிவிட்டார்.
'என்ன செய்ய எனது மகனின் விதி' என்று மனங்கலங்கியவாறு அனீஸின் தந்தை ஸ்டேசனை விட்டு வெளியேறினார்.

3.
அன்று வெள்ளிக்கிழமையாய் இருந்ததால் அனீஸ் இரண்டு நாட்களை பொலிஸ் நிலையத்தில் கழிக்க வேண்டும். திங்கட்கிழமைதான் நீதிமன்றம் அழைத்துச் செல்வார்கள்.
'இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே. என்ன நடக்குமோ' என்று நெஞ்சு படபடப்புடன் அனீஸ் தவியாய் தவித்துக் கொண்டிருந்தான். இப்படி ஒரு நிலை தனக்கு வருமென்று அவன் கற்பனைக் கூட பண்ணியதில்லை.
இதையெல்லாம் எண்ணி நொந்தவனாக அமர்ந்திருந்த வேளை அவனுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான அதிர்ச்சி காத்திருந்தது.
வெளியே இருந்து வந்த இன்ஸ்பெக்டர் 'தம்பி உனக்கு நல்ல காலம்.  உனக்கு ஜாமீன்ல வெளிய போகலாம். அதுமட்டுமில்ல உனக்கு பெரிய பிரச்சினையும் இருக்கப் போறதில்ல' என்று கூறிக்கொண்டே போனார்.
தனது தந்தை காலையில் வற்புறுத்தியும் தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று கைவிரித்த இன்ஸ்பெக்டர் இப்போது எப்படி மனம் மாறினார்?
'வேறு பிரச்சினையும் இருக்கப் போறதில்ல' என்கிறாரே எப்படி?
அவனுக்குள்ளேயே பல கேள்விகள்.  அந்த கேள்விகளை இன்ஸ்பெக்டரிடமே கேட்டான்.
அதற்கு அவர் சொன்ன பதில் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
' நீங்க சரியாதான் கார ஓட்டிக்கிட்டு வந்தீங்களாம். அந்தப் பையன் மனக் குழப்பத்தில இருந்ததால திடீரென அவனே வந்து உங்க வாகனத்துக்கு முன்னால வந்து நின்னுட்டானாம். உங்க மேல எந்தக் குத்தமுமே இல்லையாம். அந்தப் பையன் மரண வாக்குமூலம் கொடுத்திருக்கான்.'
விக்கித்துப் போனான் அனீஸ்.
பொலீஸ் ஸ்டேஷனிலிருந்து அவனது கால்கள் வீட்டுக்குப் போகவில்லை. நேரே எக்ஸிடன்ட் வார்ட்டுக்குத்தான் அவனை அழைத்துச் சென்றன.

ஒரு மாதிரியாக சிரமப்பட்டு டாக்டரின் அனுமதியைப் பெற்று தான் முட்டி மோதிய வாலிபனைப் பார்த்தான்.  அவனோ பேசும் நிலையில் இருக்கவில்லை.
நீண்ட நேரம் காத்திருந்தான். அவனுக்கு சிறிது பேசும் நிலை வந்ததும் அவனது காதருகில் சென்று தன்னை அறிமுகப்படுத்தினான். தான்தான் அவனை முட்டி மோதியவன் என்றான்.
வேதனையோடு ஒரு புன்சிரிப்பு அவனது இதழ்களில் மின்னலாய் வந்து மறைந்தது.

4.
குற்றம் முழுவதும் எனது பேரில் இருந்தாலும் கூட பொலீஸிடம் அவ்வாறு கூறாமல் ஏன் பழியை தன் மேலே போட்டுக் கொண்டான்.  இதனைத்தான் அவ் வாலிபனிடம் கேள்வியாக கேட்டான்.
அதற்கு மிகவும் தட்டுத்தடுமாறி அவ் வாலிபன் கூறிய பதில் அவனை தூக்கி வாரிப்போட்டது.
'எனக்குத் தெரியும் என் மீது ஒரு குத்தமும் இல்லை என்று.
சும்மா வந்து கொண்டிருந்த என் மீதுதான் படு மோசமான வேகத்தோடு வந்து நீங்க கார ஏத்துனீங்க.  அந்த சொற்ப வேளையில நீங்களும் என்னப் போல வாலிபன் என்பத தெரிஞ்சுகிட்டன். நான் நிச்சயம் பொழைக்க மாட்டேன். நான் கொடுக்கிற வாக்குமூலத்தால ஏன் என்னப்போல உள்ள ஒரு வாலிபன் வாழ்க்க நாசமா போகனும் என்று நெனைச்சன். அதனாலதான் வாக்குமூலத்தில இப்படி மாத்திச் சொன்னேன் '
திக்கித்திக்கி அவன் சொன்ன இந்த வார்த்தைகள் அனீஸை சம்மட்டியால் அடித்தன.
இறக்கும் தறுவாயிலுள்ள ஒருவனுக்கு இப்படியான மனநிலை இருக்க முடியுமா? தான் இறக்கின்ற போதும் மற்றவர்கள் வாழ வேண்டும் என்று நினைக்க முடியுமா?  அவனது உயர்ந்த பண்பு அனீஸை நிலைகுலையச் செய்தது.  தான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்க்கையை எண்ணி வெட்கப்பட்டான்.
'டொக்டர் எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்ல. பிரைவட் ஹோஸ்பிட்டலுக்கு அனுப்பியாவது  இவன காப்பாத்துங்க'
ஒரு தீர்க்கமான முடிவோடு அனீஸ் டாக்டரிடம் மன்றாடினான்.

...................................................................................................................................................................................................................................................................................................

சனி, 23 மார்ச், 2019

சுடச்சுட

சுடச்சுட
~~~~~~~
---------------

நீ சுட்டாய்
அந்த சங்குகள்
வெண்மையாயின

நீ சுட்டாய்
New Zealand
New Zeal Landடாய்
(Zeal - பேரார்வம்)
தன்னைப்
பிரகடனப்படுத்திக் கொண்டது

நீ சுட்டாய்
அவர்கள்
தலையை மறைத்தார்கள்
உள்ளத்தை திறந்தார்கள்

நீ சுட்டாய்
அந்த மேனிகளில் மட்டுமா
துளைகள் விழுந்தன -
சொர்க்கத்தின்
கதவுகளிலும்தான் -
இலகுவாய்
அந்த ஆத்மாக்களை உள்ளே
இழுத்துக் கொள்ள

இத்தனை ஷுஹதாக்களை
சுவனத்துக்கு அனுப்பி வைத்த
உன்னை
நாளை
அந்த நரகில் போட்டு
சுடுவானா ?
மன்னித்து விடுவானா ?

 - என். நஜ்முல் ஹுசைன்

23-03-2019

புதன், 9 ஜனவரி, 2019

counter for blog

செவ்வாய், 8 ஜனவரி, 2019

கவிஞர் கலா விஸ்வநாதன்


வலம்புரி கவிதா வட்டத்தின் 55 வது கவியரங்கம் 22/12/2018 சனிக்கிழமை கொழும்பு ஐந்து லாம்பு சந்தி பழைய  நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடாத்த கவிஞர் கலா விஸ்வநாதன் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் - என். நஜ்முல் ஹுசைன்,  தலைவர், வகவம்.


எல்லோரும் ஒன்றாக வே வாழ வேண்டு மென்றே
எந்நாளும் நினைக்கின்ற
ஏற்றமுடை மனதுடையான்
வல்லோனாய் தனைக் காட்டி
வார்த்தைகளில் விஷம் வைத்து
வஞ்சக மாய் தான் பேசி
யாரினதும் மனதுடையான்

மலையகத்து மக்கள் படும்
அப் பாட்டை தன் பாட்டாய்
கலையகத் தோடிவனும்
கவிதையிலே தான் வைத்தான்
விலைபோகும் அம் மக்கள்
விடுதலை யை தான் வேண்டி
சளைக்காதே அறைகூவி
சந்தர்ப்ப வாதிகளை
சொற்களினால் இவன் வைதான்

வலம்புரிக்காய் குரல் கொடுத்து
எம்மோடே இவன் இணைந்தான்
வலமாக இவன் நின்று
அன்று முதல் துணை வந்தான்
உளமார சொல்வதென்றால்
இவன் வியர்வை துளிகளுமே
களமாக இருந்தது வே
எம் வளர்ச்சிப் படிகளிலே

நெஞ்சகலா கவிஞனி வன்
எங்கள் கலா
விஸ்வ நாதன்
வஞ்சமிலா சொல்லெடுத்து
வந்து விட்டான்
தலைமை யேற்க

கவிஞனே கலா விஸ்வநாதனே
கவியரங்கை நீ நடத்து
எமை தந்திடவே உன்னிடத்து
நல்ல தமிழ் சொல்லெடுத்து
எம்மையெல்லாம் நீ கடத்து







திங்கள், 7 ஜனவரி, 2019

ஏன் சொல்லவில்லை ? - சிறுகதை


21-12- 2018 "விடிவெள்ளி" பத்திரிகையில் இடம்பெற்ற எனது சிறுகதை -" ஏன் சொல்லவில்லை ?". 

ஏன் சொல்லவில்லை ?

- என். நஜ்முல் ஹுசைன்

பயாஸுக்கு கோபம் கோபமாய் வந்தது. என்ன இப்படி செய்து விட்டார் புரோக்கர் சலீம் நாநா. தன்னை தலைகுனிய விட்டாரே. இந்த கல்யாண புரோக்கர்மார்களையே நம்ப முடியாதுதான். தங்கள் கொமிஷனுக்காக எதையும் சொல்லத் துணிந்த அவர் இதனை சொல்லாமல் விட்டதில் வியப்பு கொள்ளத் தேவையில்லை. என்றாலும் வீடு தேடிச் சென்றாவது அவரை கிழி கிழி யென்று கிழிக்க வேண்டும். மரணித்த தனது தந்தையின் நண்பர்தான் புரோக்கர் சலீம் நாநா. என்றாலும் தன்னை இப்படி தலை குனிய வைத்து விட்டாரே.

அருகே இருந்த பயாஸின் நண்பன் ரசீனும் பயாஸை கடிந்து கொண்டான்.

"நீ செய்தது முறையில்லாத வேல. வேறெங்கேயும் முடிவாகியிருந்தா நீ முறைப்படி இவருக்கு சொல்லியிருக்க வேண்டும்தானே"

ரசீனின் பேச்சும் பயாஸுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எல்லாவற்றுக்கும் காரணம் புரோக்கர் சலீம் நாநாதான்.

பயாஸுக்கு ஒரு மூத்த சகோதரியும் இரண்டு தங்கைகளும் இருந்தனர். அவனது தந்தை உயிருடன் இருந்தபோதே மூத்த சகோதரிக்கும், ஒரு தங்கைக்கும் அவரே திருமணம் முடித்துக் கொடுத்து விட்டார். கடைசி தங்கை பாயிஸாவுக்கு அவர் பகீரதப் பிரயத்தனம் பண்ணியும் அவளுக்கொரு இல்லற வாழ்க்கையை அமைக்க அவரால் முடியாமல் போனது. அவரது மறைவின் பின்னர்தான் அப் பொறுப்பு பயாஸுக்கு வந்தது. பயாஸும் திருமண வயதை தாண்டியிருந்தாலும் முதிர்கன்னியாய் இருந்த தனது தங்கைக்குப் பிறகு திருமணம் முடிக்க அவன் தீர்மானித்திருந்தான். தனது மற்ற சகோதரிகளின் சுமையை சுமக்க தனது தந்தை இடம் வைக்க வில்லையே என்று நினைக்கும் போதெல்லாம் தனது தந்தைக்காக அவன் பிரார்த்தனை செய்ய மறப்பதேயில்லை. தனது கடைசி தங்கையை கரையேற்றுவது தனது மாபெரும் பொறுப்பு என்பதையும் அவன் மறக்கவில்லை.

தனது தந்தை இருந்தபோது மற்றைய சகோதரரிகளுக்கும் கொண்டு வந்ததைப் போலவே இந்தத் தங்கைக்கும் புரோக்கர் சலீம் நாநா பல வரன்களை கொண்டு வந்தார். அவருக்குக் கூட தங்கை பாயிஸாவுக்கு திருமணம் தாமதமாவதில் கொஞ்சம் வேதனையிருந்தது.

பாயிஸாவுக்கு மாப்பிள்ளை பார்த்து மாப்பிள்ளை பார்த்து பல அனுபவங்களை பயாஸும் பெற்றிருந்தான். அப்படிக் கிடைத்த ஓர் அனுபவத்தை பயாஸுக்கு என்றுமே மறக்க முடியாமலிருந்தது.

பாயிஸாவுடன் ஒன்றாய் படித்த கரீமா பயாஸுக்கு போன் பண்ணியிருந்தாள். திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த கரீமாவின் நாநா திருமணம் முடிக்க பச்சைக்கொடி காட்டியிருக்கிறான். பல தரகர்களிடம் அவனுக்கேற்ற மணப்பெண்ணைக் கொண்டு வருமாறு சொன்னபோது ஒருவர் பாயிஸாவின் விபரங்களை கொண்டு போயிருக்கிறார். அதைப் பார்த்து கரீமா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பாடசாலை காலங்களில் மிகவும் நெருங்கிப் பழகிய தோழி. நல்ல பண்புள்ளவள். காலம் கடத்தி திருமணம் முடிக்கும் தனது சகோதரனுக்கு மிகவும் பொருத்தமானவள்.

தரகர் வழங்கிய விபரத்திலிருந்த மொபைல் நம்பருக்கு கரீமா பேசினாள். பயாஸையும் அவளுக்குத் தெரியும். "பயாஸ் நாநா. நா கரீமா பேசுறன். ஒங்க பாயிஸாட கூட்டாளி ." என்று ஆரம்பித்து தரகர் கொண்டு வந்த விபரங்களை சொன்னாள். "நாநா எங்கட நாநாட கல்யாண பொறுப்பு ஏன்ட ஹஸ்பன்ட்தான் எடுத்திருக்கிறார். அவர் ஒங்கட கூட்டாளிதானே. கொஞ்சம் போய் அவரோட பேசுங்க" என்றாள்.

பயாஸும் மிகவும் மகிழ்ந்தான். தங்கை பாயிஸாவிடம் விஷயத்தைக் கூறிவிட்டு கரீமாவின் கணவர் நூர்தீனைப் பார்க்க ஆவலுடன் சென்றான். நூர்தீன் அவனது பாடசாலை நண்பன். பாடசாலை காலங்களில் பல விஷயங்களை ஒன்றாக இணைந்து செய்திருக்கிறார்கள்.

அவன் ஒரு வெளிநாட்டு முகவர் நிலையத்தில் வேலை செய்கிறான். பயாஸைக் கண்டதும் மகிழ்ச்சியோடு வரவேற்றான். அப்போதே பாயிஸாவின் திருமண வேலைகளில் பாதி முடிந்து விட்டதை பயாஸ் உணர்ந்தான்.

"நூர்தீன் சுகமா இருக்குறீங்களா.... ?" என்று ஆரம்பித்து தரகர் மூலம் நடந்த திருமண விஷயத்தை பயாஸ் சொன்னான்.

"அடடா அப்படியா. அந்த கெழட்டு புரோக்கரா பேசியிருக்கிறான். கொஞ்சம் இருங்க .... ." என்று சொல்லி மேசையிலிருந்த போனை தூக்கி நம்பரை சுழற்றினான்.

'கெழட்டு புரோக்கர் ' என்று நூர்தீன் சொன்னது 'சுருக்' என்று எங்கேயோ தைத்தது .

அவனது தொலைபேசி உரையாடலிலிருந்து மறுமுனையிலிருப்பது அவனது மனைவி என்று தெரிந்தது.

"ஏய் என்ன அந்த கெழட்டு புரோக்கர் ஒங்கட நாநாட புரபோசல ஒங்கட பழைய கூட்டாளிட ஊட்டுல இருந்து எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாரோ..." அவனது தொனி பயாஸுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியது.

அவன் அதற்குப் பிறகு பேசியதுதான் அவனை அப்படியே தூக்கி நிலத்தில் அடிப்பது போலிருந்தது.

" ஒங்கட நாநா கக்கூஸு பாளிய தோட்டத்துக்குள்ள தூக்கிக்கொண்டு போவ ஒங்களுக்கு சம்மதமா? " அதட்டலுடன் மனைவியோடு பேசினான். அந்தப் பக்கம் கரீமா என்ன சொன்னாள் என்று தெரியவில்லை.

போனை வைத்து விட்டு திரும்பிய நூர்தீன், " பயாஸ் இந்த விஷயம் சரி வராது " என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாய் சொன்னான்.

பயாஸின் குடும்பம் கொழும்பில் தோட்டம் என்று சொல்லும் இடத்தில்தான் வசித்து வந்தது. கொழும்பில் சாதாரண தர மக்கள் இவ்வாறான தோட்டத்தில்தான் வசித்து வருகின்றனர். தோட்டத்தில் பத்து குடும்பங்கள் குடியிருந்தால் மலசல கூடம் ஒன்றோ அல்லது இரண்டோதானிருந்தன. மலசல கூடத்துக்குள்ளே நீர்க் குழாய்கள் கூட இருப்பதில்லை. எனவே மலசல கூடம் போகும் ஒருவர் வாளியில் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும்.

அதனைத்தான் நூர்தீன் தனது மனைவிக்குக் கூறி இத் திருமணம் சரி வராது என்ற தீர்மானத்தை மனைவியின் மனதில் திணித்தான். அவனும் இதற்கு முன்பு இப்படியான ஒரு தோட்டத்தில் வசித்தவன்தான் என்பதை மறந்திருந்தான்.

சரி பரவாயில்லை. அது அவனது கருத்து. என்றாலும் தனது மறுப்பை நாகரிகமாக சொல்லியிருக்கலாமே. பதில் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு தனிப்பட்ட முறையில் மனைவியிடம் பேசியிருக்கலாமே. தனது மனதை புண்ணாக்கி இப்படி அசடு வழிய செய்யாமல் பாதுகாத்திருக்கலாமே. உலகில் எல்லா விதமான மனிதர்களும் வாழ்கிறார்கள் என்ற உண்மையை பயாஸுக்கு உணர்த்திய இடம். அந்த சம்பவத்தை எப்போதுமே பயாஸ் மறக்கவில்லை.

இப்படியே பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் புரோக்கர் சலீம் நாநா கொண்டு வந்த மாப்பிள்ளை தங்கை பாயிஸாவை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். முதலில் தனியாக வந்து பெண் பார்த்த அவர் பிறகு உத்தியோகப்பூர்வமாக தனது இரண்டு மூத்த சகோதரரிகளையும் அழைத்து வந்தார். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இனி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். எப்படி செய்யலாம் என்று அறிவிப்பதாக பயாஸ் தெரிவித்திருந்தான்.

இப்படி பேசி இரண்டு நாட்கள்தான் ஆகியிருக்கும். பயாஸ் குடும்பத்திற்கு தூரத்து உறவான ஒரு குடும்பம் பயாஸின் வீட்டுக்கு வந்தனர். வந்தவர்கள் சும்மா வரவில்லை. நீண்ட நாட்கள் வெளிநாட்டிலிருந்து வந்த தம்பிக்கு கட்டாயம் பயாஸின் தங்கையை தரவேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தனர். பயாஸுக்கு தர்ம சங்கடமாக போய் விட்டது. இத்தனை காலம் இவர்கள் எங்கிருந்தார்கள். ஒரு விஷயம் சரி வந்திருக்கிற நேரத்திலே இப்படி குழப்புகிறார்களே என்று திக்குமுக்காடிப் போனான். இருந்தாலும் வெளிநாட்டு மாப்பிள்ளை தூரத்து உறவு போன்றவை பயாஸின் தாயாருக்கும், தங்கைக்கும் அந்த மாப்பிள்ளையின் மேலேயே பிடிப்பினை ஏற்படுத்தியிருந்தது. என்ன செய்ய மணப்பெண்ணான தங்கையினதும், தாயாரினதும் விருப்பத்திற்கு மாறாக முதலில் சரி சொன்ன மாப்பிள்ளைக்கு திருமணம் முடித்துக் கொடுக்க பயாஸா லும் முடியவில்லை. முதலாவதாக சரி என்றவர் மன வேதனை கொள்வாரே. இருந்தாலும் சொல்லாமல் இருப்பதும் சரியில்லையே என்று பலவாறு நினைத்து மனங் குழம்பிப் போயிருந்தான் பயாஸ்.

இறுதியில் புரோக்கர் சலீம் நாநாவின் மூலமாகவே தகவல் தெரிவிப்பது என்று தீர்மானித்தான்.

சலீம் நாநாவின் வீடு தேடிச் சென்று விவரங்களைக் கூறினான். அவர் முகத்தில் பாய்வார் என்று எதிர்பார்த்தான். அவரது கொமிஷன் பணமும் இல்லாமல் போகிறதே. என்றாலும் அவர் "சரி சரி எப்படியும் விஷயம் நடந்தால் சரி" என்றார். அவர் அழைத்து வந்த மாப்பிள்ளையிடம் விஷயத்தைக் கூறி சமாதானம் செய்யச் சொன்னான். அதனை தான் செய்வதாக சலீம் நாநா ஒப்புக் கொண்டார்.

பாயிஸாவின் திருமண விஷயத்திற்கு ஓடியாடி இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில்தான் சலீம் நாநா கூட்டி வந்த அந்த மாப்பிள்ளையை சந்தித்தான். ரஸீனும் பக்கத்தில் இருந்தான்.

"என்ன பயாஸ் பிரதர் இரண்டு மாசமாகிருச்சு. உங்க கிட்ட இருந்து எந்த தகவலும் இல்லையே"

பயாஸுக்கு தூக்கிவாரிப் போட்டது.

"என்ன தகவல் வரலையா...." விழுங்கி விழுங்கி பேசினான் பயாஸ். "தங்கச்சிக்கு வேறொரு ஏற்பாடு நடந்திருச்சி. ஒடனே சலீம் நாநாகிட்ட சொல்லி தகவல் அனுப்பினேனே......"

"இல்ல இல்ல யாரும் எந்த தகவலும் சொல்லல்ல. நீங்க ஒரு வார்த்தை எனக்கிட்ட சொல்லியிருக்கலாமே. நா நீங்க இன்னக்கி வருவீங்க, நாளைக்கி வருவீங்க என்று பார்த்து கொண்டிருந்தன். சரி சரி பரவாயில்லை " என்று கூறி விட்டுப் போனார். பயாஸுக்கு ஏதோ போல ஆகிவிட்டது. அருகே இருந்த ரஸீனும் பயாஸை கடிந்து கொண்டான்.

பயாஸுக்கு தாள முடியாத கோபம் புரோக்கர் சலீம் நாநா மீது ஏற்பட்டது.

மற்ற வேலைகளை ஒரு புறம் வைத்து விட்டு அந்த கோபத்தோடு சலீம் நாநாவின் வீட்டுக்குச் சென்று, " சலீம் நாநா சலீம் நாநா. ...”என்று கத்தினான்.

"ஆ.... வாங்க பயாஸ் கல்யாண வேலயெல்லாம் எப்படி நடக்குது? " என்று கேட்டார்.

"அதையெல்லாம் ஒரு பக்கம் வைங்க. நான் சொன்னன்தானே நீங்க கூட்டி வந்த மாப்பிள்ளைக் கிட்ட விஷயத்த சொல்லச் சொல்லி. நீங்க சொன்னீங்களா இல்லையா. ......?" மிகவும் ஆத்திரத்தோடு பயாஸ் கேட்டான்.

"நா சொல்லல ........" மிகவும் சாவதானமாக சலீம் நாநா சொன்னார்.

"என்ன சொல்லலையா? ஏன் மறந்துட்டீங்களா?"

"இல்ல நா வேண்டுமுன்னுதான் சொல்லலல்ல."

"என்ன வேண்டுமுன்னு சொல்லலையா...?"

"ஆமா பயாஸ் . நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு ஒங்க தங்கச்சிக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறீங்க. இப்ப பெய்ட்டு மொத பாத்திட்டு போன மாப்பிள்ளைக் கிட்ட விஷயத்த சொன்னா அவர் கோவத்தில இப்ப நீங்க கல்யாணம் முடிக்கப் போற ஊட்டுக்கு போய்ட்டு ஏதாவது இட்டுக்கட்டி கல்யாணத்த கொழப்ப ஏலும். பாவம் ஒங்க தங்கச்சி. இதுக்கு பொறவாவது அவக்கு நல்ல வாழ்க்க அமையட்டும். இந்த கல்யாணம் முடிஞ்சதும் அவர சமாளிச்சக்கலாம்"

கல்யாண தரகர் என்றதும் அவர்களது ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து ஏளனமாக நினைத்துக் கொண்டிருந்த பயாஸுக்கு இல்லை இல்லை அவர்களிலும் உயர்ந்த மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை சலீம் நாநா நிரூபித்துக் கொண்டிருந்தார் !