எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 26 ஜூலை, 2011

'இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி'

இலங்கை மண்ணின் பிரபல முஸ்லிம் பாடசாலையான கொழும்பு சாஹிரா கல்லூரி 2004 ம் ஆண்டு தமிழ் விழாவினை நடாத்தியது. அப்போது 'இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி' என்ற தலைப்பில் விசேட கவியரங்கொன்றையும் ஏற்பாடு செய்திருந்தது. மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், டாக்டர் ஜின்னாஹ் ஷரிப்டீன், காத்திபுல் ஹக் எஸ். ஐ. நாகூர் கனி, மேமன் கவி ஆகியோருடன் நானும் கவிதை பாடினேன். கலைவாதி கலீலின் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் அன்றைய தினம் என்னால் பாடப்பட்ட கவிதை.

கவிக்கோ அப்துல் ரகுமான் கவியரங்கிற்கு முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி'

கவிக் கோலம் போட
மட்டுமல்ல
எங்கள்
கவிக் (கு) 'ஓ' போடவும்
கவிக்கோ இங்கே

அப்துல்,
ரகு-மானைத்
தேடிப் போனதுடன்
நின்று விடாமல்

ஈமானையும்
நாடி வந்ததில்
எங்களுக்கெல்லாம்
பெருமிதம்

'இஸ்லாம் எங்கள் வழி
இன்பத் தமிழ் எங்கள் மொழி'

என்ற தலைப்பு
கவிக்கோ அவர்களே

உங்களால்
தலைப் பூ
சூடிக் கொண்டுள்ளது

கோ இருப்பதனால்
மந்திரி பிரதானிகளாய்
சபையோரே
நீங்களும் அங்கே

ஆஸ்தான புலவர்களாய்
நாங்களும் இங்கே

அனைவரையும் வாழ்த்தி வரவேற்று...

அந்த
(ஹி) ராக் குகைதானே
இந்த உலகிற்கு
பகலைத் தந்தது

இந்த
சாஹிரா பிறைதானே
நம் சமுதாயத்திற்கு
பகலையும்
பல்கலையும் தந்தது

சாஹிராவே
உன்னால்தானே
முஸ்லிம்கள்
எங்களுக்கு
முதுகெலும்பு கிடைத்தது -
அறிஞர் மத்தியில்
நிற்பதற்கு

நாம் வெறும்
கல்லாய் இருந்தோம் -
கல்லா பெட்டிக்கருகில்
எம்மை
'கல்'
என்று கூட்டி வந்து
மாணிக்கக் கல்லாய்
மாற்றினாயே
சாஹிரா
ஒரு கர்ப்பிணித் தாய்

இங்கே
அறிஞர்கள்
சூல் கொண்டிருக்கிறார்கள்

பெரிதுவக்கும் பாக்கியம்
எப்போதுமே
உனக்கிருக்கிறது


தமிழ் இனி
மெல்லச் சாகும்
என்றார்கள்


சாவது என்ன
விழுவதற்கே
விடமாட்டோம்
நாமிருக்கும் வரை
தமிழ் 'விழா' (து)
என்று
மார் தட்டி
தமிழ் விழா
எடுத்திருக்கிறார்கள்

தமிழே
இங்கு வாழும்
முஸ்லிம்கள்
உனக்கு
விழா எடுக்கக்
கடமைப்பட்டிருக்கிறார்கள்

ஏனெனில்
'லா இலாஹா
இல்லல்லாஹ்'
என்று
அரபு சொன்னபோது

'வணக்கத்திற்குரிய
நாயன் யாருமில்லை
அல்லாஹ்வைத் தவிர'

என்று சொல்லித் தந்தது
தமிழே
நீயல்லவா

நீதானே எங்களுக்கு
இஸ்லாத்தைப் போதித்தாய்

நீதானே எங்களுக்கு
இஸ்லாத்தைப் போதித்த தாய் !

மக்கத்தில்
குப்ரியத் கல்
பெயர்க்கப்பட்ட
வரலாறு சொல்லி

ஈமானின் அடிக்கல்லை
எமது இதயத்தில் நட்டியது
நீயல்லவா

இதயம் நுழைந்து
நாவில் உலா வரும்
நீ
இஸ்லாத்தை
எம் செவிக்குள் நுழைத்து
இதயத்தில் நிரப்பினாய்

நீ எமக்கு
தமிழ் பால் தந்தாய்
அது
எம் உடம்பில்
இஸ்லாமிய இரத்தமாய்....

நீ பேசப்பட்டாய்
எம் மார்க்கம்
வளர்ந்தது

இஸ்லாம் ஒரு மரம்
அது வளர
நீ ஒரு
உரம்

அல்லாஹ் உன்னை
நாவுகளில் நடமாடவைத்து
கல்புகளிலே
இஸ்லாத்தை
இடம் பிடிக்க வைத்தான்

இஸ்லாம்
உலகிற்கு வழி காட்டியது
நீ அதனை
உள்ளங்களுக்கு
வழி காட்டினாய்

இன்னுயிர் தமிழே,

எங்கள் பேச்சு வழக்கிலே
சில வேளை நீ
காயப்பட்டாலும்
மறந்துவிடாதே
அது
அன்புக் காயம்


எங்கள்
வீடுகளிலும்
வீதிகளிலும் நீ
வியாபித்திருக்கிறாய்

நீ
எங்களோடு இருக்கிறாய்
நாங்கள்
உன்னோடுதான் இருக்கிறோம்

என்றாலும்,

தமிழா 'கம்'
என்று தமிழகம்
உன்னை
வெள்ளைக்காரன்
வீட்டுப்படிகளில்
நிற்கவைக்கப்பார்க்கிறது

அப்போதுதானே
உண்மையிலேயே
நீயும், நாங்களும்
காயப்பட்டுப்போகிறோம்

ஆங்கிலத்திலேயே நடக்கும்
தமிழ்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலே
நீயும், நாங்களும்
முடமாகிப்போகிறோம்

ஆங்கிலம் நடக்கிறது
நாங்கள்
முடமாகிப்போகிறோம்

தனித் தமிழுக்காய்
போராடிய மண்ணில்
தமிழே நீ
தனித்த
தமிழாகிவிடுவாயோ ?

தமிழகமே
உன்னால்தானே
நாங்கள்
தமிழைப் பேச
கற்றுக்கொண்டோம்

நீதானே
எங்கள் காதில்
தேனை ஊற்றினாய்
இன்று நீ ஏன்
தமிழ் பேச
தடுமாறுகின்றாய் ?

ஆங்கிலம்
உன் நாவில்
முடிச்சுப் போட்டதோ -
மூன்று முடிச்சு ?

தமிழ் இனி
மெல்லச் சாகுமா
இல்லை
இப்போதுள்ள பேரப்பிள்ளைகள்
வாயில் போட்டு
மெள்ளச் சாகுமா
என்ற நடுக்கம்.........

கொள்ளத்
தேவையில்லை

சாவது என்ன
விழுவதற்கே
விடமாட்டோம்

நாமிருக்கும் வரை
தமிழ் விழா (து)

தமிழே
நாம் உன்னைப்பற்றி
பெருமை கொள்கிறோம்

ஏனெனில்
உன்னைப் பற்றித்தானே

இஸ்லாத்தின் மேல்
பற்று வைத்தோம்

அதனால்தானே
வல்லான் அல்லாஹ்
காத்திருக்கிறான்

எங்களையும்
சொர்க்கத்தில்

பற்று வைக்க !

-என். நஜ்முல் ஹுசைன்

வெள்ளி, 22 ஜூலை, 2011