எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 9 செப்டம்பர், 2013

தினகரன் வாரமஞ்சரி 'திரும்பிப் பார்க்கிறேன்' பக்கத்தில் 08-09-2013 அன்று இடம்பெற்ற எனது பேட்டி

1968 இல் குமுதம் சஞ்சிகைக்கு எழுதிய ஆக்கம் ஆறு மாதத்திற்கு பின் ஒவியத்துடன் பிரசுரமானது கவிமணி நஜ்முல் ஹ¥சைனின் நினைவலைகள்

தலைநகரில் நடக்கும் பெரும்பாலான வெளியீட்டு விழாக்களில் வாழ்த்துக்கவிதை என்றால் அங்கே கவிமணி என். நஜ்முல் ஹுசைனின் கவிதை இருக்கும். தனது வித்தியாசமான கவிதா பார்வையால் இவர் சபையோரை கவர தவறுவதில்லை. வலம்புரி கவிதா வட்டம் (வகவம்) என்ற கவிதா அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினரான இவர், அதன் துணைத் தலைவராகவும், தலைவராகவும் பணியாற்றியுள்ளதுடன் தனது மேடைக்கவிதைகளால் அந்த அமைப்பின் பெருமையை பறைசாற்றுபவராகவும் இருக்கிறார். பிரைவட் பஸ்களைப் பற்றி, ‘பூனையின் வயிற்றில் யானையின் தீனியை அடைக்கும் சாமர்த்தியசாலிகள்’ என்று பாடியதும், டயானா இறந்தபோது, “Dieஆனாள்” என்று பாடியதும் சிலாகித்துப் பேசப்பட்டவை. தனியார் நிறுவனமொன்றில் முகாமையாளராக பணி புரிந்து கொண்டு தனது வேலைப்பளுவுக்கு மத்தியிலும் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், பட்டிமன்றம் என இலக்கியத்தில் ஈடுபாடு காட்டிவருகிறார். இவரது பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்க்கிறேன்.  

தாங்கள் பிறந்த ஊர், பெற்றோர் கற்ற பாடசாலை பற்றி...

நான் கொழும்பு பீர் சாஹிபு வீதியை பிறப்பிடமாகக் கொண்டவன். எனது தந்தை காலஞ்சென்ற கே. கே. எம். மொஹிதீன். தாய் சித்தி செளதா உம்மா. என் மூத்த சகோதரர் இக்பால், இளைய சகோதரர் பிர்தெளஸ் ஒரேயொரு தங்கை ஆதிலா. கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி மகாவித்தியாலயம் நான் பயின்ற கல்விக்கூடம். எனது தந்தை தமிழ், சிங்களம், ஆங்கிலம், ஹிந்தி உட்பட மேலும் பல மொழிகள் பேசும் ஆற்றல் உடையவராக இருந்தார். பழம் பெரும் தமிழ் கவிதைகளை இடத்திற்கேற்ப சொல்லி கேட்போரை கவரும் ஆற்றலும் அவரிடம் இருந்தது. அந்த மரபு வழி என்னையும் தொற்றிக்கொண்டது.  

தங்களுக்கு எழுத்து, கவிதை மேடைப்பேச்சு என்பவற்றில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

ஆங்கில மொழிமூல வகுப்பினில் என்னை எனது தந்தை சேர்த்தாலும், தமிழ், சிங்கள மொழிகளையும் எனக்கு கற்பிக்கத் தவறவில்லை. எனது உற்ற நண்பர். தற்போது அமெரிக்காவில் வசிக்கும் முஹம்மத் கே. மொஹிதீன் அக் காலத்தில் தமிழகத்திலிருந்து வெளிவரும் “கண்ணன்” என்ற சஞ்சிகையையும் சிறுவர் நூல்களையும் தொடர்ந்து வாங்கி வாசிக்கும் பழக்கமுள்ளவராக இருந்தார். அவர் வாசித்த பின் அதனை எனக்குத் தருவார். அந்த வாசிப்புப் பழக்கமும் எனது தந்தையிடமிருந்து தமிழறிவும் என்னைத் தமிழ் மொழியின்பால் ஆர்வம் கொள்ள காரணமாய் அமைந்தது எனலாம். “கண்ணன்” போன்ற சஞ்சிகைகளில் ஓர் எழுத்துப் பிழையையேனும் காண முடியாது. அதனால் நான் தமிழ் மொழியை எழுத்துப் பிழைகள் இன்றி எழுத கற்றுக் கொண்டேன். 1967ஆம் ஆண்டு எனது சிங்கள நண்பனான ஜயதிஸ்ஸ பெரேராவும் நானும் இணைந்து ‘சுஜாதா’ என்ற பெயரில் ஒரு சிங்கள- தமிழ் கையெழுத்துப் பத்திரிகைகயை நடத்தினோம். கொழும்பு பீர் சாஹிபு வீதியில் எங்களது வீட்டுக்குப் பக்கத்திலிருந்த டொக்டர் ஏ. ஆர். எம். மொஹிதீன் அவர்களின் டிஸ்பென்ஸரியில் எனது ஓய்வு நேரம் கழிந்தது. அவரது மகன் அனீஸ் அஸ்ரப் என்னிடம் இருக்கும் எழுத்தார்வத்தைக் கண்டு எனக்கு மிகுந்த உற்சாகம் ஊட்டினார். நகைச்சுவை ஆக்கம் ஒன்றினை எழுதி அவரிடம் காட்டியபோது. “இது “குமுதம்” சஞ்சிகைக்கு பொருத்தமாக இருக்கும்’ என்று கூறியதோடு அதனை தபாலிலுமிட்டார். சுமார் ஆறு மாதத்தின் பின் அது தென்னிந்திய “குமுதம்” சஞ்சிகையில் (1968)ல் ராமுவின் ஓவியங்களுடன் பிரசுரமானது. இதுதான் அச்சுருவில் பிரசுரமான எனது முதல் ஆக்கம். டொக்டர் மொஹிதீனின் மற்றொரு மகனான நயீம் அஸ்ரபும் நானும் கவிஞர் சாரணபாஸ்கரனின் “யூஸ¤ப் சுலைஹா” காவியத்தை வாய்விட்டு வாசிக்க ஆரம்பித்தோம். அது போன்ற பல கவிதை நூல்கள் எங்களுக்குக் கிடைத்தன. அது மரபுக் கவிதையின் மேல் ஓர் ஈர்ப்பினை எனக்குள் கொண்டு வந்தது. அதனால் நான்மரபுக் கவிதைகளை எழுத ஆரம்பித்தேன். எனது முதல் கவிதை 1971ல் வானொலியில் முஸ்லிம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. “ரசிகன்” என்ற ஒரு சஞ்சிகையில் எனது கவிதை முதலில் பிரசுரமானது. ‘இணையர் உண்டோ?’ என்ற எனது கவிதை ‘ தினபதி’ கவிதா மண்டலத்தில் 1972ல் பிரசுரமானது. தொடர்ந்து பல கவிதைகள் தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகின.

மாணவர் பருவத்திலே நண்பர்கள் ஒன்று சேர்ந்து ‘மதிவளர் மன்றம்’ என்ற அமைப்பை ஆரம்பித்து எங்களது பேச்சாற்றல்களை வளர்த்துக் கொண்டோம். எனது கவிதை எழுதும் ஆர்வத்தினைப் பார்த்த கலாபூசணம் எஸ்.ஐ. நாகூர் கனி என்னை வலம்புரிகவிதா வட்டத்தில் (வகவம்) இணைந்து கொள்ள அழைப்பு விடுத்தார். ஒவ்வொரு போயா தினமும் இடம்பெற்ற திறந்தவெளிக்கவியரங்கில் மிகுந்த ஆர்வத்தோடு பங்குபற்றினேன். இக்காலகட்டத்தில்தான் எனக்கு புதுக் கவிதை மீது மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. மேடையில் ஏறி ஏற்ற இறக்கத்தோடு கவிதைபாடவும், கேட்போரை கவரும் வண்ணம் எவ்வாறு கவிதை வாசிக்க வேண்டும் என்ற பாடத்தையும், பார்வையாளர்களாய் அமர்ந்திருந்த கவிஞர்களின் கண்களைப் பார்த்து நான் கற்றுக் கொண்டேன். முஸ்லிம் சேவையின் வானொலிக் கவியரங்கங்களிலும் கவிதை பாடும் வாய்ப்பும், தலைமை தாங்கும் வாய்ப்புகளும் கிடைத்தன எனது கவிதைகள் பத்திரிகைகளில் பிரசுரமாவதற்கும், வானொலியில் வாய்ப்பு கிடைப்பதற்கும் எனது நண்பர் எம். எஸ். எம். ஜின்னாவே மூல காரணமாய் அமைந்தார் என்பதை இங்கு சொல்லியே ஆக வேண்டும். எனது பாடசாலை கால நண்பர்களான எம். ரீ. எம். சரூக், முஹம்மத் கே. மொஹிதீன், பீ. நிலாமுத்தீன், எம். ரபாய்தீன், எம். எம். றெkன் போன்றோர் எனது இலக்கிய வளர்ச்சியில் பெரிதும் துணை நின்றனர். பீ. நிலாமுத்தீனுடன் சேர்ந்து பாடசாலை நாட்களில் நாம் செய்த மாணவர் மன்றம், பிறகு அமைத்த ‘இஸ்லாமிய இலக்கிய கழகம்’ எம்மை மேடைப் பேச்சாளர்களாகவும் வளர்த்தன. அவரது சிறிய தந்தை மறைந்த சேவைச் செம்மல் எஸ். எம். சஹாப்தீன் அவர்களின் வழி காட்டலில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 1979ல் நடைபெற்ற போது அதில் உதவியாளராக பணிபுரிந்தேன். இந்த மாநாட்டுக்காக இலங்கைக்கு வருகை தந்த பேராசிரியர் கா. அப்துல் கபூர் போன்ற தென்னிந்திய அறிஞர்கள் பலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தமை மறக்க முடியாதவை. இந்த காலகட்டத்தில் தமிழ் மொழியிலும், கவிதைத்துறையிலும் அதுபோன்றே ஆங்கில, சிங்கள மொழியிலும் நல்ல ஆற்றல் பெற்ற தமிழ்த்தென்றல் எஸ். எம். அலிஅக்பரின் நட்பு எங்கள் நண்பர் குழாத்திற்குக் கிடைத்தது. எனது கவிதைகளை பார்த்து அவற்றிக்கு நல்ல விமர்சனமும் ஆலோசனையும் சொல்பவராக அவர் இருந்தார்.  

தங்களது வானொலி, தொலைக்காட்சி பிரவேசம் பற்றி...

எங்களது தமிழ் ஆசிரியராக இருந்த, பின்பு அதிபராக பதவி வகித்த மதிப்பிற்குரிய அல்ஹாஜ் எஸ். ஏ. எம். எம். அஸ்ரப் அவர்கள் என்னை முதன்முதலாக மற்ற மாணவர்களுடன் இலங்கை வானொலிக்கு ‘மாணவர் மன்ற’ நிகழ்ச்சிக்காக அழைத்துச் சென்றார். அப்போது எனக்கு வயது 14 தொடர்ந்து மறைந்த மார்க்க அறிஞர் அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) நடத்திய முஸ்லிம் சேவையின் ‘இஸ்லாமிய சமய பாடசாலை’ நிகழ்ச்சியில் பல வருடகாலம் குரல் கொடுத்தேன். முன்னாள் முஸ்லிம் சேவை பணிப்பாளரும், அப்போதையநிகழ்ச்சித் தயாரிப்பாளருமான அல்ஹாஜ் இஸட். எல். எம். முஹம்மத் எங்களை நெறிப்படுத்துவதிலே மிகவும் துணை நின்றார். இக்காலகட்டத்தில் ‘சிறுவர் மலர்’ நிகழ்ச்சியில் பிரபலமாகவிருந்த எம். எஸ். எம். ஜின்னாவின் நட்பு கிடைத்தது. அது இன்று வரை இறுக்கமாக தொடர்கிறது. அவரால் முஸ்லிம் நிகழ்ச்சியில் நடாத்தப்பட்ட ‘பிஞ்சுமனம்’ நிகழ்ச்சித் தயாரிப்பில் அவருக்குத் துணையிருந்தேன். ‘இளைஞர் உலகம்’, ‘மருதமலர்’ போன்ற நிகழ்ச்சிகளிலும் குரல் கொடுத்தேன். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் எங்கள் தாய் வீடாகவே ஆகி இருந்தது. அதன் பயனாக அப்போதைய முஸ்லிம் சேவை ஆலோசனைசபை உறுப்பினராக இருந்த மெளலவியா மலீஹா சுபைர் அவர்களின் முயற்சியினால் வானொலி முஸ்லிம் சேவையில் சுமார் இரண்டு வருட காலமாக ‘இளைஞர் இதயம்’ நிகழ்ச்சியினை நடத்தும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. எனது தந்தையின் நண்பரான பிரபல இசையமைப்பாளர் எம். எஸ். செல்வராஜாவின் இசையமைப்பில் நான் இயற்றிய மெல்லிசைப் பாடல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் வாய்ப்பு கிடைத்தது. நேத்ரா அலைவரிசையில் நான் எழுதிய இஸ்லாமிய கீதங்கள் கே. எம். ஸவாஹிர் மாஸ்டர், டோனி ஹசன், அமீர் கான், கலைக்கமல் ஆகியோரது இசையமைப்பில் ஒளிபரப்பாகியுள்ளன. நேத்ரா தொலைக்காட்சி, வசந்தம் தொலைக்காட்சி, சக்தி தொலைக்காட்சியிலும் எப். எம். வானொலியிலும் பல கவியரங்கங்களில் பங்கேற்றுள்ளேன். பேட்டிகளும் ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன. அவ்வாறே இந்த ஊடகங்களில் அவ்வப்போது கவிதை வாசித்தும், கவியரங்குகளில் பங்கு பற்றியும் வருகிறேன். நம் நாட்டு தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகள் பலவற்றிலும் எனது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகள் பிரசுரமாகியுள்ளன. தமிழகத்தின் “ராணி” சஞ்சிகையிலும் எனது கவிதையும் என்னைப் பற்றிய குறிப்பும் வெளிவந்துள்ளது.  

நீங்கள் வெளியிட்டுள்ள நூல்கள்...

1993இல் எனது ‘பனித்தீ’ என்ற கவிதை தொகுதி எமது ‘இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தினால்’ வெளியிடப்பட்டது. எனது நண்பர்களான தலைவர் அலி. அக்பர், செயலாளர் எம். எஸ். எம். ஜின்னா ஆகியோரின் கடும் முயற்சியினால் இந்த பனித்தீ வெளியீட்டு விழா மிக மிக சிறப்பாகவே நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழா தொடர்பாக எனது நண்பர்கள் எனக்கு எந்த சுமையையும் தரவில்லை. இருப்பினும் புத்தக விற்பனையில் முதல் நாளிலேயே கிடைத்த லாபம் முழுவதையும் எனக்குத் தந்து என்னை எனது நண்பர்கள் திக்குமுக்காட வைத்தனர். எனது நூலின் முதல் பிரதி எனது தந்தைக்கே வழங்கப்பட்டது. நான் எழுதிக் குவித்துள்ள கவிதைகளை நூலாக்கும்படி எனது துணைவியார் உட்பட நெருங்கிய நண்பர்கள் கூட தினமும் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். வாழ்த்துப்பாக்கள், மீலாத் கவிதைகள், ஈத் கவிதைகள், பொதுவான சம கால கவிதைகளை என எனது கவிதைகளை வகைப்படுத்தி வெகு கச்சிதமாக ஆவணப்படுத்தி வைத்துள்ளார். எனது துணைவியார். ஆனால் அவற்றை அச்சு வாகனமேற்றுவது மட்டும் தான் பாக்கி. அவர் ‘சாரி வாங்கி தாருங்கள்! நகை நட்டுகள் வாங்கி தாருங்கள்!’ என்று என்றுமே என்னை நச்சரிப்பதில்லை. மாறாக அன்புத் தொல்லை தருவார் அது ‘உங்கள் கவிதைகளை விரைவில் நூலூரு பெறச் செய்யுங்கள்” என்பது தான். அது மட்டுமல்ல, எனது மனைவியின் மற்றுமொரு முயற்சியையும் நான் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். அதாவது நான் எழுதிய பொதுவான சில முக்கிய கவிதைகளை எனது மனைவி சிங்கள மொழியில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார். அவரால் மொழியாக்கம் செய்யப்பட்ட ஓரிரு கவிதைகள் சிங்கள பத்திரிகைகளில் பிரசுரமாகியுமுள்ளன. எனவே எனதும் என் துணைவியாரதும் நூல்களை ஒரே மேடையில் வெளிவர வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய வேணவா. இன்ஷா அல்லாஹ் விரைவில் இந்த ஒரு நூல்களையும் வெளிக்கொணர முயற்சிக்கின்றேன். இவ்விடத்தில் ஒன்றைக்குறிப்பிட விரும்புகிறேன். “ஒவ்வொரு ஆணின் வெற்றியின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்” என்பார்கள். அதை எனது மனைவி முழுமையாக நிரூபித்து வருகிறார். எனது அனைத்து வெற்றியின் பின்னாலும் இருக்கும் எனது மனைவியை எனது பெயருக்கு முன்னால் எடுத்து எம். எம். நஜ்முல் ஹுசைன் என்று எழுதி வந்த நான் இப்போது என். நஜ்முல் ஹுசைன் என்றே எழுதி வருகிறேன். எனது ஆக்கங்களை www.panitheekalam.blogspot.com முகவரியிலும், youtube ல் NAJMUL HUSSAIN என்ற பெயரிலும் பார்க்கலாம். எனது மகள் ஷப்னாவும் என்னைப் போலவே பல கவிதைகளை எழுதிக் குவித்துள்ளார். சட்டக்கல்லூரியில் கவிதைக்காக தங்கப்பதக்கமும் வென்றுள்ளார்.  
\
உங்கள் குடும்பத்தைப் பற்றிக் கூறுங்களேன்...

எனது மனைவி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன். பிரபலமான பத்திரிகையாளர், எழுத்தாளர். தினபதி -சிந்தாமணி பத்திரிகையில் கடமையாற்றியவர். தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் தகவல் அதிகாரியாக அரச உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் (www.news.lk) பணிபுரிகிறார். இல்லறத்திலும், இலக்கியத்திலும் அவரது பங்களிப்பு அளப்பரியது. அவரும் ‘பண்பாடும் பெண்’ என்ற நூலினை வெளியிட்டுள்ளார். எங்கள் ஒரே மகள் நூருஸ் ஷஃப்னா நஜ்முல் ஹுசைன். சட்டக்கல்லூரியின் இறுதியாண்டு பரீட்சையில் சித்தியெய்தியுள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.  

உங்களுக்குக் கிடைத்த விருதுகள் பற்றி...?





 1999ல் அகில இலங்கைநல்லுறவு ஒன்றியத்தினால் “கவிமணி” பட்டம், 2002ல் உலக இஸ்லாமியதமிழ் இலக்கியமாநாட்டில் “படைப்பாளர்” விருது, 2009ல் இசைக்கோ நூர்தீனின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணியினால் “நவயுக கவிமணி” பட்டம். 2011ல் மலேசிய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிதைக்காக கிடைத்த கெளரவ விருது, மலேசிய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிதைபாடி நாட்டுக்கு பெருமை சேர்த்தமைக்காக அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபமுன்னணி 2011 06 08ல் நடாத்திய பாராட்டுவிழாவின் போது வழங்கப்பட்ட கெளரவ விருது, மலேசிய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிதை பாடி நாட்டுக்கு பெருமை சேர்த்தமைக்காக, 2011.06.15 ல் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றம் நடாத்திய பாராட்டுவிழாவின் போது வழங்கிய கெளரவ விருது, 2011 ல் தடாகம் கலை இலக்கியவட்டம் வழங்கிய ‘அகஸ்தியர் விருது’, 2011.06.26ல் சாய்ந்தமருது லக்ஸ்ட்டோ மீடியா நிறுவனத்தினால் வழங்கப்பட்ட “கலைமுத்து” பட்டம், 2012.10.20. அன்று அகில இலங்கை கவி சம்மேளத்தினால் வழங்கப்பட்ட “காவிய ஸ்ரீ” பட்டம் இவை போன்ற பல பட்டங்களும், கெளரவங்களும் பல மேடைகளில் கிடைத்துள்ளன.  

உங்களால் மறக்கமுடியாதவை....?

 இலங்கை வானொலி தமிழ்ச் சேவையின் ‘அகல் விளக்கு’ என்ற விஞ்ஞான நிகழ்ச்சி மாலை 5.15 அளவில் நேரடியாக ஒலிபரப்புச் செய்யப்படும். நானும் குரல் கொடுப்பது வழக்கம். ஒரு கட்டுரையில் ‘கிளி’ என்ற சொல் இடம் பெற்றிருந்தது. அதனை நான் ‘கிலி’ என்று வாசித்துக் கொண்டிருந்தேன். பல முறை சொல்லித் தந்தும் எனக்கு அப்போது ‘ளகரம்’ வரவில்லை. இப்படியான சந்தர்ப்பங்களில் வேறொருவரிடம் கொடுத்து அதை வாசிக்கச் சொல்லுவதே வழக்கம் என்றாலும் சிறுவனாக இருந்த எனது மனம் நோகக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் ‘கிளி’ என்ற அந்தச் சொல்லை ‘குருவி’ என்று மாற்றி என்னை மகிழ்ச்சிப்படுத்தினார் உயர்ந்த உள்ளம் படைத்த ஓர் உத்தமர். சிறுவர்களோடு எப்போதுமே மிகவும் அன்பாகப் பழகிய திரு. அம்பிகைபாகன் அவர்கள் தான் பெருந்தகையாளர். அவர் இன்றும் என் நினைவில் நிறைந்திருக்கிறார். அதேபோன்று சிரேஷ்ட அறிவிப்பாளர் காலஞ்சென்ற திரு. ஜோர்ஜ் சந்திரசேகரன் அவர்களும் எனது தமிழ் உச்சரிப்புக்களைத் திருத்தியவர்களில் ஒருவராவார். தமிழில் ஒவ்வொரு எழுத்தும் உச்சரிக்கப்பட வேண்டும் என சொல்லித் தந்தவரும் அவரே தான். அவர் நேரடியாக தமிழ் உச்சரிப்புகளை சொல்லித்தரவில்லை. அவரது ‘இளைஞர் மன்றம்’ நிகழ்ச்சி வானொலியில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் உச்சரிப்பு வகுப்பில் பத்தோடு பதினொன்றாக இருந்தே நான் இதனைக் கற்றுக் கொண்டேன்.

 உங்கள் இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகள் பற்றி...

2011 மலேசிய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்காக கவிதைகள் கோரப்பட்ட போது எனது மனைவியின் வற்புறுத்தலின் பேரில் இறுதி நேரத்தில் தான் கவிதை ஒன்றினை எழுதி அனுப்பி வைத்தேன். எனது கவிதையும் கவியரங்க மேடையில் பாட தெரிவு செய்யப்பட்ட செய்தி உண்மையிலேயே எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் தந்தது. அதனை நான் அல்லாஹ்வின் பேரருளாகவே கருதுகின்றேன். மலேசிய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில், கவிக்கோ அப்துல் ரகுமானின் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில் பிரபலமான பல சர்வதேச கவிஞர்கள் கலந்து கொண்டனர். இலங்கையின் சார்பில் என்னோடு கவிஞர் பொத்துவில் அஸ்மினும் கலந்து கொண்டார். நானும் அஸ்மினும் எங்கள் கவிதைகளால் மலேசிய மாநாட்டு சபையோரை வசீகரித்தோம் என பலரும் பாராட்டுக் வாழ்த்தும் தெரிவித்தனர். இதனை என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. | |

புதன், 4 செப்டம்பர், 2013

கொடுக்காதீர்கள் பெண்களுக்கு சம உரிமை




 

(வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய 'கவிதைகளுடனான கை குலுக்கல்' நூல் வெளியீட்டு விழாவும்ரூபவ் சிரேஷ்ட எழுத்தாளர் நயீமா சித்தீக்ரூபவ் சிரேஷ்ட அறிவிப்பாளர் புர்கான் பீ.இப்திகார் ஆகியோர் கௌரவிப்பு விழாவும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 07-07-2013 அன்று டொக்டர் தாஸிம் அஹமத் தலைமையில் நடைபெற்றபோது வாசிக்கப்பட்ட கவிதை)



கொடுக்காதீர்கள்
பெண்களுக்கு
சமஉரிமை

ஆண்களே
பெண்களுக்கு
கொடுக்காதீர்கள் சம உரிமை

இலக்கியத்தில் உழல்கின்ற
பெண்களுக்கு
கொடுக்காதீர்கள் சம உரிமை

ஆண்களேரூபவ்

அதைவிட கொஞ்சம்
கூடுதலாகக் கொடுங்கள்

சம உரிமை கொடுக்காதீர்கள்

அதைவிட கொஞ்சம்
கூடுதலாகக் கொடுங்கள்

ஆளுமைமிக்க எங்களின்
பெண்களின் கைகளில்

படுவது
பேனா மை
மட்டும்தானா
 

சமையல்
பாத்திரத்தில் உள்ள
கரி
மையும் அல்லவா
ஒட்டிக்கொள்கிறது

பெண்கள்
இலக்கியத்தில்
கால் வைக்கிறார்கள் -

கைகளையோ
சமையல் பாத்திரத்தில்
வைத்திருக்கிறார்கள்

குடும்பத்தின்
வெற்று வயிறுகள்
நிரம்பி வழிவதற்காய்

கரி மையைப்
பூசிக் கொண்டதன்
பின்தானே

வாசகர்களின்
பட்டினிக்குத் தீனிபோட

பேனா மை
கையில் பட
அனுமதிக்கப்படுகிறது



பல பாத்திரங்கள்
படைக்கும் அவள்
இரண்டு பாத்திரங்களில்
வேடமேற்று -

அன்புக்கு பாத்திரமாகவும்
திகழ வேண்டும்
பத்திரமாகவும் இருக்கவேண்டும்
பாராட்டுப்
பத்திரமாகவும் பெறவேண்டும்

போதாமைக்கு
குடும்பச்சு 'மை'யும்
அவள்
தலைமேல்தான்

அதனால்தான் அவள்
எப்போதுமே
கால் மேல்
கால் போட்டு
எழுதுவதில்லை

தன்
கவலைகள் மேல்
தாள் போட்டு
எழுதுகிறாள்

அவள் எப்போதுமே
ஒரு மூச்சாய்
எழுதுவதில்லை
குடும்பத்தினருக்காகவும்
இடை இடையே
பெருமூச்சு விட்டுத்தான்
எழுதுகிறாள்

இத்துறையில்

ஓப்பிட்டால்-
ஆண்கள் சுதந்திரப் பறவைகள்

பெண்கள்
எழுதும்போதும்
கூண்டுக்கிளிகள்தான்



அவள்
தன்பாட்டுக்கு நடக்காமல்
பண்பாட்டுக்கு நடந்தால்தானே
பெயரை
தக்கவைத்துக் கொள்ளவும்
முடியும்

ஓவ்வொரு ஆணின்
வெற்றியின் பின்னாலும்
ஒரு
பெண் இருக்கிறாள்

இல்லை இல்லை
அவள் இருக்கவில்லை
நிற்கிறாள்

இலக்கியத்தில்
ஓவ்வொரு
பெண்ணின் பின்னாலும்

பல பெண்கள்
நிற்கிறார்கள் - அதில்
ஒரு சில ஆண்களும்
சேர்ந்து கொள்கிறார்கள் -

அவளது
காலை வாரிவிட

கால்கள்
வாரப்படும் போதெல்லாம்
தங்கள்
தலைகள் வாரப்படுவதாய்
தைரியம் கொள்ளும்
பெண்களே

நிலைத்து நிற்கிறார்கள் -


கலாபூசணம்
நயீமா ஏ. சித்தீக்

சிரேஷ்ட ஒலிபரப்பாளர்
புர்க்கான் பீ. இப்திகார்

போன்று


இந்த ஆளுமைகள்
தங்களை
அடையாளப்படுத்;தி

எத்தனை ஆண்டுகள்

இன்றும்கூட
தனி மவுசோடு
இவர்கள் நாமங்கள்

தொடுவானத்தை
தொட்டுவிடத் துடிக்கும்
முனைப்போடு
எழுதிக் குவிக்கும்

இன்றைய கதாநாயகி
ர்pம்ஸா முஹம்மதுக்கு
பாடப் புத்தகங்களாய்
இந்த ஆளுமைகள் -

மைகளையும்
மைக்களையும்
ஆளும் ஆளுமைகள்

பொன்னாடைப் போர்த்தி
விருதுகள் வழங்கி
கைகளைத் தட்டி....

ஒரு பத்து நிமிடங்களில்
எல்லாம்
முடிந்து போகலாம்

ஆனாலும்
இந்த ஆளுமைகளளை
இனங்கண்டு

தரப்படும் உற்சாகம்

இதயத்தில் பட்ட
எல்லா மைகளுக்கும்
சந்தனம் பூசியுள்ளது

அவர்களது வேர்களை

இந்த மண்ணில்


இன்னும் இன்னும்
ஆழமாய்
ஊன்றச் செய்துள்ளது

புதிய புதிய விதைகளும்
விருட்சங்களாக
எழுச்சி பெற
வழி வகுக்கிறது

இங்கே பாராட்டப்படுபவர்
இருவரல்ல

இந்த
இருவரைப் போலிருக்கும்
அத்தனைப்பேரும்தான்

இன்று
எழுத்து வானிலே
சிறகடித்துப் பறக்கும்
ரிம்ஸா முஹம்மத்
நாளைய ஆளுமையாய்
அடையாளங் காணப்படட்டும்

வலைப்பின்னலிலும்
தன் வண்ணம் காட்டும்
இந்தக்
கணக்குக்காரி
கெட்டிக்காரி என்று
எழுத்துலகம்
பட்டம் சூடட்டும்

சிறகடித்துப் பறக்கும்
பெண்களைப் பார்த்தால்
கவலை-
ஆண்களுக்கு

இவர்கள்
கொம்பு முளைத்து
குத்தாமல்
இருக்க வேண்டுமே என்று..
 

இத்தனை
சங்கடங்களையும்
தாங்கிக் கொண்டு
இலக்கிய உலகில்


நிலைக்கின்ற பெண்களுக்கு

நாங்கள்
கொடுக்கலாமா சம உரிமை

மனச் சாட்சியுள்ள ஆண்களே
பெண்களுக்கு
கொடுக்க வேண்டாம்
சம உரிமை

அதைவிட
கூடுதலாகக் கொடுப்போம்
உரிமை

நன்றி

   -என்.நஜ்முல் ஹுசைன்