எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

கொடுத்த வாக்கு - சிறுகதை

 


கொடுத்த வாக்கு

               -   என். நஜ்முல் ஹுசைன்



ஜமால் மிகவும் கவலையோடு நடந்து கொண்டிருந்தான். என்னடா இப்படி ஆகி விட்டதே என்று மிகவும் வேதனைப்பட்டான். வரும் போது வீட்டிலே எவ்வளவு மகிழ்ச்சியோடு சொல்லி விட்டு வந்தான். இப்போது எப்படி குடும்பத்துக்கு முகம் கொடுப்பான் ?

தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. முன்னால் வரும் வாகனத்தில் பாய்ந்து இறந்து போவாமா ? என்று கூட மனம் சொன்னது.

ஜமால் மிகவும் வறியவன். வெல்லம்பிட்டியில் வசிக்கிறான். கூலி வேலை செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தான். ஜமால் வறியவன்தான் ஆனாலும் செல்வந்தன். ஆம்,  செல்வமாக பிள்ளைகளைத்தான் பெற்றிருந்தான்.  நான்கு பெண் பிள்ளைகள். மூன்று ஆண் பிள்ளைகள். பெண்கள்தான் மூத்தவர்கள். ஆண் பிள்ளைகள் சிறியவர்கள். அப்படியென்றால் அவன் எப்படி உழைக்க வேண்டும் ? மாடாக உழைப்பது எப்படியென்பதை அவனிடம் பார்த்துக் கொள்ளலாம். பெண் பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை அளவோடுதான் பெற்றுக் கொண்டார்கள். அப்படியெல்லாம் படிக்க வைக்க அவனிடம் எந்த வசதியுமில்லை; அதற்கான அறிவுமில்லை. ஏதோ ஆண் பிள்ளைகள் கிழிந்த கொப்பியோடு போய் படித்துக் கொண்டிருந்தார்கள் - இல்லை இல்லை பாடசாலைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். மூத்த மகள் கல்யாண வயதிலிருந்தாள். கொஞ்சம் வெள்ளையாக பார்ப்பதற்கு அழகாக இருந்தாள்.  அதனால் அவளைக் கண்ட  பாத்திமுத்து தாத்தா தனது ஊர் சுற்றித் திரிந்து கொண்டிருந்த மகனுக்கு பெண் கேட்டுப் போய் விட்டார்.

தேடி வந்த வாய்ப்பை விட வேண்டாம் என ஜமாலின் மனைவி ஒற்றைக் காலில் நின்றதால் எந்தவித வசதியும் இல்லாவிட்டாலும் ஜமால் திருமணத்துக்கு சரி சொல்லிவிட்டான். 

பாத்திமுத்து தாத்தா போட்ட ஒரேயொரு நிபந்தனை பொண்ணுக்கு இரண்டு பவுண் சவடி(தாலி)  போட வேண்டும் என்பதுதான்.

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த  ஜமால் ஒருவாறாக தான் அவ்வப்போது தற்காலிமாக பாரமான சாமான்கள் தூக்கும் நஸீர் ஹாஜியாரிடம் போய் தலையைச் சொறிந்து கொண்டு விஷயத்தைச் சொன்னான்.  நஸீர் ஹாஜியர் இரண்டு கடைகள் கிரேண்ட்பாஸில் வைத்திருந்தார். போதாதற்கு ஒரு கடையின் மேல் மாடியை லொட்ஜ் ஆக்கியிருந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் மக்கள் கொழும்புக்கு சாரி சரியாக வந்து கொண்டிருந்த காலம். கொழும்பில் பல இடங்களில் லொட்ஜ் வியாபாரம் கொடி கட்டிப் பறந்தது.  பலர் வெளிநாடுகளுக்குப் போவதற்காக பாஸ்போர்ட் எடுப்பதற்கு போன்ற தேவைகளுக்காக அங்கு வந்து தங்கினர். மாதக் கணக்காக அங்கே தங்கியவர்களும் உண்டு. லொட்ஜ் செய்பவர்கள் தங்குபவர்களைப் பற்றி சரியான பதிவுகளை வைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி பொலிஸார் வந்து பதிவுகளையும், ஆட்களையும் பரிசோதிப்பார்கள். பொலிஸார் மட்டுமல்ல, இராணுவத்தினர், கடற்படையினர் என்றும் விசாரிக்க வருவார்கள். யுத்த காலமாகையால் யாராவது தடைசெய்யப்பட்ட இயக்க உறுப்பினர்கள் தங்கியிருக்கிறார்களா என்று பரிசீலிப்பதற்காக வருவார்கள். எங்கிருந்தாவது இரகசிய தகவல்கள் வந்தாலும் அல்லது வந்ததாக சொல்லியும் விசாரிக்க வருவார்கள். அதனால் லொட்ஜ் செய்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வருபவர்களை அனுசரித்துப் போக வேண்டும். 

ஜமால் தனது மகளின் விஷயத்தை நஸீர் ஹாஜியாரிடம் சொன்ன போது அவர் மிகவுமே நல்ல மூடில் இருந்தார்.

"அடே ஜமால் மகளுக்கு எப்ப கலியாணம் வச்சிரிக்க? " என்று கேட்டார்.

உடம்பை எட்டாக வளைத்து ஜமால் சொன்னான் "ஹாஜியார் ஜூன் மாசம் 18 ஆம் தேதி "

"அடே அதுக்குத்தான் இன்னும் ரெண்டு மாசம் இரிக்கே" என்று சொல்லிக் கொண்டு மேசையிலிருந்த டயரியில் கலண்டரை திருப்பினார். "ம்.......ம்....."
என்று வாயிலே ஏதோ குதூகலமாக முணுமுணுத்தவராக ஜூன் மாதத்தைப் பார்த்தார். 

"சரி ஓன்ட மகள்ட கலியாணம் 18 ஆம் தேதிதானே நீ 17 ஆம் தேதி வா. ஓன்ட மகள்ட ரெண்டு பவுண் சவடி ஏன்ட கணக்கால.  நீ 17 ஆந் தேதி வந்து எடுத்துக்கோ"

ஜமாலின் காதுகளினால் அவர் சொன்னதை நம்ப முடியவில்லை.

"ஹாஜியார் என்ன சொல்றீங்க ?" பயத்தோடும், மகிழ்ச்சியோடும் ஜமால் கேட்டான்.

"அட அதுதான் சொல்லிட்டேனே.  திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டு. நா சொன்னா சொன்னதுதான். போய்ட்டு 17 ஆந் தேதி வா " என்று சொன்னவர் மற்ற வேலைகளைப் பார்க்க எழும்பிப் போய்விட்டார்.

ஹாஜியார் ஏதாவது சின்ன உதவி செய்வார் என்று எதிர்பார்த்துத்தான் உதவி கேட்டான்.  இப்படி சவடியே தருகிறேன் என்று சொல்லுவார் என்று கொஞ்சமுமே எதிர்பார்க்கவில்லை. ஜமாலுக்கு கைகால் ஓடவில்லை. பெரிய வேலை முடிந்தது.  அடுத்தது சாப்பாட்டு வேலைதான்.

அதுவும் ஏழைக் குமர் என்று  சொல்லி வீட்டுக்குப் பக்கத்திலிருந்த பலர் ஒன்று சேர்ந்து அந்தப் பொறுப்பை  ஏற்றுக் கொண்டனர்.

இன்று ஜூன் 17 ஆம் திகதி. இன்று நஸீர் ஹாஜியாரைப் பார்க்க வந்தவனுக்குத்தான் இந்த  அதிர்ச்சி காத்திருந்தது.

காலையிலேயே நஸீர் ஹாஜியாரின் முதலாவது கடைக்கு வந்து விட்டான். அவர் அவசர வேலை காரணமாக லொட்ஜ் இருக்கும் கடைக்குப் போய் விட்டார் என்று அங்குள்ள ஊழியர்கள் சொன்னார்கள்.

அங்கிருந்து லொட்ஜ் இருந்த கடைக்குப் போனான் ஜமால். அங்கே பெரும் கூட்டம். பொலிஸார் இராணுவத்தினர் என்று பலரும் இருந்தனர். ஜமால் போகவும்,  மூன்று வாலிபர்களை பொலிஸார் விலங்கு மாட்டி வெளியே அழைத்து வருவதற்கும் சரியாக இருந்தது. அதுமட்டுமல்ல அங்கே இருந்த ஒரு பெரிய அதிகாரி லொட்ஜிலுள்ள அனைவரையும் வெளியில் செல்லுமாறும் அதை சீல் வைக்கப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். அத்தோடு நஸீர்  ஹாஜியாரையும் மிகவும் கடுமையாக அந்த அதிகாரி ஏசி கொண்டிருந்தது விளங்கியது.  அந்த களேபரம் அடங்கும் வரை ஜமால் ஒரு மூலையில் அமைதியாக இருந்தான். அவர்கள் அனைவரும் போனதன் பின்னர்,  மிகவும் கலவரத்தோடு அமர்ந்திருந்த நஸீர்  ஹாஜியாரிடம் ஜமால் சென்றான்.  "ஹாஜியார் அந்த சவடி...." என்று சொன்னதுதான் தாமதம் நஸீர் ஹாஜியார் தனக்கு இருந்த அத்தனை கோபத்தையும் ஜமாலின் மீது கொட்டித் தீர்த்தார். தனது வாயில் வந்த அனைத்து தூசண வார்த்தைகளையும் கூறி ஜமாலை விரட்டி அடித்தார். சிலையாக நின்ற ஜமால் விழித்தான். இருந்தாலும் கூட  நஸீர் ஹாஜியார் அவனை ஏசுவதை விடவில்லை. அத்துடன் அவரது ஊழியன் ஒருவனை அழைத்து ஜமாலை அங்கிருந்து விரட்டச் சொன்னார். இப்போதுதான் ஜமாலுக்கு தலை சுற்றியது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாளை மகளுக்குத் திருமணம். பாத்திமுத்து தாத்தாவிடம் இரண்டு பவுன் சவடி செய்து தருவதாக வாக்களித்து இருக்கிறான்.

'இப்போது என்ன செய்வது ?' அந்த யோசனையோடு தான் ஜமால் பித்துப் பிடித்தவன் போல் தெருவிலே சென்று கொண்டிருந்தான்.

அப்போதுதான் "ஜமால், ஜமால்" என்று அருகே வந்து யாரோ பேசியது கேட்டு திடுக்கிட்டு விழித்தான். அங்கே  ஜவுபர் நின்று கொண்டிருந்தான்.  "இந்த ஜமால், இப்படி பைத்தியக்காரன போல போகிறாய் ? என்ன விஷயம் ?" என்று கேட்டான்.

ஜமாலின் எண்ண அலைகள் பின்னோக்கிப் பாய்ந்தன. ஜவுபரும், ஜமாலும் பேசி பல வருடங்கள் ஆகின்றன.  அதாவது ஜமாலின் திருமணத்திற்கு முன்பே ஜவுபரோடு அவனுக்கு எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. எங்கு ஜவுபரை ஜமால் கண்டாலும், ஜமாலை ஜவுபர் கண்டாலும் இருவருமே முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுவார்கள்.  காரணம் அவர்களது இளமைப் பருவத்திலே நடைபெற்ற ஒரு சம்பவம் தான். இருவருமே ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள். சிறு வயதிலிருந்து அவர்களது வாலிப வயது வரை எல்லா நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றாகவே விளையாடுவார்கள். நோன்பு காலங்களிலே இரவிலே பாதையிலே கோடு கீறி 'பார் சோப்' என்று விளையாடுவார்கள். அது கிளித்தட்டு ஆகும். அப்படி ஒரு நாள் விளையாடிக் கொண்டிருக்கும் போது நண்பர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சின்ன வாய் தர்க்கம் அவர்களை இத்தனை வருட காலமாக பேச விடாமல் தடுத்து விட்டது. அவன்தான் இன்று வந்து ஜமாலுடன் பேசினான்.  ஜமாலுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. என்றாலும் அவனது கவலையை யாரிடமாவது ஒருவரிடம் இறக்கி வைக்கவும் வேண்டுமே. ஜவுபரிடம் நடந்த சம்பவங்களைச் சொன்னான்.

எப்படி வறியத் தோற்றத்தில் ஜமால் இருந்தானோ, அது போன்றுதான் ஜவுபரும் இருந்தான்.  அவனும் கூட கொஞ்சம் அழுக்குப் படிந்த ஒரு பழைய சட்டையை அணிந்து தான் எந்த  வசதியுமற்றவன் என பறைசாற்றிக் கொண்டிருந்தான். இருந்தாலும் அவன் ஜமாலுக்கு ஆறுதல் சொன்னான், "கவலைப்படாதே, கவலைப்படாதே அல்லாஹ் இருக்கின்றான்" என்றான். அப்படிச்  சொன்னவன் சும்மா இருக்கவில்லை ஏதோ யோசித்து விட்டு,  "சரி ஜமால் வா ஒரு ட்டிரை பண்ணி பார்ப்போம்" என்று சொன்னான்.  அது பற்றி எல்லாம் ஜமாலுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.  ஜவுபர் அவனது கையைப் பிடித்துக் கொண்டு "இங்கே வா" என்று அவனை தரதரவென்று இழுத்துக் கொண்டு போனான்

கொஞ்ச தூரம் போனதும் அவர்கள் அங்கே ஆட்டுப்பட்டித் தெருவிலுள்ள ஒரு கடையின் முன்னால் வந்து நின்றார்கள்.  இருவரும் பிச்சை கேட்டு வந்தவர்கள் போல் அங்கே நின்றார்கள்.  அந்தக் கடையில் வேலை செய்யும் ஒருவர் வந்து இருவரின் கைகளிலும் ஐந்து, ஐந்து ரூபா நாணயக்குற்றியைத் திணிக்கப் பார்த்தார். அதனை எடுக்காத ஜவுபர் கொஞ்சம் தைரியமாக  "நாங்க ஹாஜியார பாக்க வந்தோம்" என்றான். வந்த ஊழியர் முறைத்து விட்டு உள்ளே சென்றார். நீண்ட நேரம் அங்கே அவர்கள் காத்திருந்தார்கள். கவனிக்க யாருமே இல்லை. எல்லோரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஜமால் ஜவுபரைப் பார்த்து சொன்னான், "வேண்டாம் அப்பா நாங்கள் போவோம். இங்கும் ஒரு வேலையும் செய்ய முடியாது. நாங்கள் போவோம்" என்றான்.  ஜவுபர் "இல்லை இல்லை பார்ப்போம் இங்கே எனக்கு கொஞ்சம் தெரிஞ்ச ஒரு ஹாஜியார் இருக்கிறார். அவர்ட்ட ஏதாவது கேட்டுப் பார்ப்போம்" என்று சொன்னான்.

சிறிது நேரத்தில் அங்கே இருந்த பளீல் ஹாஜியார் வெளியே வந்தார். இந்த இருவரையுமே ஏறெடுத்துப் பார்த்தார்.  ஏன் நிற்கிறீர்கள் ?  என்பது போல் பார்த்துவிட்டு இரண்டு நூறு ரூபாய்களை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்.  ஜவுபர் பேசினான். "இல்லை ஹாஜியார்"  "இல்லையா அப்படி என்றால் என்ன ?" என்று கேட்டார் ஹாஜியார்.  ஜவுபர் தயங்கித் தயங்கி ஜமாலுக்கு நடந்த துயரத்தை தனக்கு தெரிந்த மொழியிலே அவருக்கு எடுத்துச் சொன்னான். ஆச்சரியம் கொஞ்சம் பரபரப்பாக இருந்த போதும் கூட அவன் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்தார் அவர். அப்போது பக்கத்திலே இருந்த ஒருவர் ஹாஜியாரின்   காதிலே 'இவர்கள் இருவரையும் பார்த்தால் பெரும்  கள்ளன்கள் போல் இருக்கிறாங்க. கவனம் ஹாஜி' என்று காதில் குசு குசுத்துவிட்டுப் போனார். ஹாஜியார் அதனைக் காதில் போட்டுக் கொண்டே  ஜவுபரின் கதையையும் கேட்டார்.

" அடேய் இங்கே ரெண்டு பேரும் உண்மையா சொல்றீங்களா ? "  என்று கொஞ்சம் உயர்ந்த தொனியில் அதட்டினார். ஜவுபர், "சத்தியமா ஹாஜியார், அல்லாஹ் மேல சத்தியமா ஹாஜியார்" என்று மிகவும் கெஞ்சலாக  சொன்னான்.
ஆனால் ஜமால் மௌனமாகத்தான் இருந்தான். 

என்ன நினைத்தாரோ தெரியாது பளீல் ஹாஜியார்,  "சரி அப்படியே இருங்கள்"என்று கூறிவிட்டு உள்ளே போனார்.  அப்படி சொல்லி விட்டுப் போய் இரண்டு மணித்தியாலங்களில் மேல் கடந்து போனது. யார் யாரோ வந்து போய் கொண்டிருந்தார்கள். ஆனால் பளீல் ஹாஜியார் வெளியே வரவே இல்லை. இப்போது ஜவுபருக்கும் அங்கே நிற்பது வீண் வேலை என்று தெரியத் தொடங்கியது. 

"பரவாயில்லை ஜமால் வா போவோம். நீ கவலைப்படாத அல்லாஹ் ஒனக்கு வழிய காட்டுவான்"

"கவலப்படாதே" என்று ஜவுபர் சொன்ன வார்த்தையில்  எந்த அர்த்தத்தையும் ஜமால் காணவில்லை. ஒரு நடைப்பிணமாக
ஜவுபரின் பின்னால் நடந்தான். வெளியே இருவரும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வரும் போதுதான் யாரோ பின்னால் ஓடி வருவது தெரிந்தது.

"ஹாஜியார் ஒங்கள கூப்புடுரார்!"

இந்த வார்த்தைகளைக் கேட்டதும்  ஒரேயடியாக திரும்பினார்கள்.
வந்த கடை ஊழியர் ஹாஜியாரின் அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றார்.

அவருக்கு முன்னால் அங்கே ஒரு சிறிய நகை பெட்டியில் சவடி இருந்தது.  யாருக்கோ செட்டியார் தெருவில் கோல் எடுத்து கூறி கொண்டு வரச் சொல்லி இருக்கிறார்.

" ஏய் இங்க பாருங்க அல்லாஹ்வை நம்பி உங்களோட வார்த்தைகளை நம்பி குமரு காரியம் என்று இந்த சவடிய தாரன்.  இதை கொண்டு போய்  மகள்ட கல்யாணத்தை சந்தோஷமா நடத்துங்க. சரி பிஸ்மில்லா போங்க" என்று ஜமாலின்  கையிலே கொடுத்தார் ஜமாலுக்கு எதையுமே நம்ப முடியவில்லை. யாருக்கு நன்றி சொல்வது என்று தெரியவில்லை. ஹாஜியாருக்கு நன்றி  சொல்வதா ? இல்லாவிட்டால் இத்தனை காலம் பகையாக இருந்த ஜவுபர் வந்து இப்படியான ஒரு பேருதவியை செய்திருக்கிறானே அவனுக்கு நன்றி சொல்வதா ? தலைகால் புரியாமல் ஆனந்தக் கண்ணீர் வடித்தான். "அல்ஹம்து லில்லாஹ், அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று அவனது நாவு பலமுறை முணுமுணுத்தது.

ஹாஜியாருக்கு பலமுறை நன்றி சொல்லிவிட்டு ஜமால் ஜவுபரின் கைகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டு வீட்டை நோக்கி விரைந்தான்.

நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பளீல் ஹாஜியாரின் மகனைப் பரிசோதித்த அவர்களது குடும்ப டொக்டர் தொண்ணூற்றி ஒன்பது வீதம் அது கென்சர் என்று இரகசியமாக சொல்லி ஒரு விசேட டொக்டரைப் பார்க்கும்படி அறிவுரைச் சொன்னார். மிகவுமே கலங்கிப் போன பளீல் ஹாஜியார் யாருக்குமே பெரிதாக காட்டிக் கொள்ளாமல் நவலோக்கவில் ஒரு விசேட டொக்டரிம் காட்டி ஆலோசனைப் பெற்றார். மகனை ஸ்கேன் பண்ணச் சொன்ன டொக்டர் இன்று காலைதான் அவருக்கு மருத்துவ நிலையத்திற்கு வரச் சொல்லியிருந்தார். நீண்ட தொழுகையின் பின்பும் பிரார்த்தனையின் பின்பும் சென்ற பளீல் ஹாஜியாரிடம் ஸ்பெஷலிஸ்ட் டொக்டர் மிகவும் தீர்மானமாக சொன்னார் " இது கென்சரே இல்லை. இது வெறும் வயிற்று வலிதான். மிகவும் சாதாரணமாக  இதைக் குணப்படுத்தி விடலாம். கவலைப்படவே தேவையில்லை"

டொக்டர் சொன்ன அந்த ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டதுமே பளீல் ஹாஜியார் மனதுக்குள் நிய்யத் வைத்தார்.

"யா அல்லாஹ் இன்று எந்த ஏழை வந்து எதைக் கேட்டாலும் அதனை நான் கொடுக்கிறேன்"

அந்த நிய்யத்தை நிதர்சனமானமாக்கி விட்டு ஜமால், ஜவுபருடன் போய் கொண்டிருந்ததை பளீல் ஹாஜியார் ஆனந்தக் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தார்.


(தினகரன் வாரமஞ்சரி - 21/01/2023)

வெள்ளி, 20 ஜனவரி, 2023

கவிஞர் கவிநேசன் நவாஸ்

 


வலம்புரி கவிதா வட்டத்தின் 83 ஆவது கவியரங்கு 06/01/2023 வெள்ளிக்கிழமை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் கவிநேசன் நவாஸ் அவர்களுக்கு  இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன் -

என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)


மொழியினையே தனக்கேற்ற விதத்தில் வளைக்கும்
மோகனமாய் ஆற்றலினை நிரம்ப வைத்து
வழியெங்கும் இவன் தமிழை வாழ்த்திப் பேச
வாசகர்கள் கூட்டமதை பெற்றான்; பேறான்
அழியாத தமிழினிலே கோலம் போட்டே
அற்புதமாய் வானவில்லின் கவிதை யாப்பான்
பிழிந்தேதான் எம்மனதை ஆட்சி செய்ய
பிறந்தேதான் வந்து நின்றான் கவிதை நேசன்

வலம்புரியும் வளம்பெறவே வேண்டுமென்ற
வாஞ்சையினை நெஞ்சமெல்லாம் ஏந்தி இவனும்
வலம்வருவான்; நாள் தோறும் தோளும் தருவான்
வார்த்தையினால் மட்டுமல்ல இவனும் எங்கள்
நலம்கருதி பலவேலை நன்றாய் செய்வான்
நாம் இவனை கவியரங்கத் தலைமைதன்னில் இன்றமர்த்தி
நெஞ்சமெல்லாம் மகிழ்வு கொண்டோம்

கவிநேசன் நவாஸ் இன்று கவிதைத் தலைவன்
கவிஞர்களை ஒன்றிணைத்து முன்னே செல்வான்
புவிவெல்லும் இவன் கவிதை நாளை என்றே
புள காங்கிதம் கொண்டே வாழ்த்தி அழைப்போம்

கவிஞர் கவிநேசன் நவாஸ்
83 ஆவது வகவ கவியரங்கம்
உன்னிடத்தில்
அணைத்தே நீ வைத்துக் கொள்
எம்மையெல்லாம்
உன்னிடத்தில் !

கவிநேசன் நவாஸ் !

சனி, 14 ஜனவரி, 2023

கடனாளி - சிறுகதை

 


கடனாளி


             - என். நஜ்முல் ஹுசைன்

மாளிகாவத்தை மையவாடி. மக்கள் கூட்டம் அலை மோதியது.  பெருமளவான வாகனங்களும் வந்திருந்தன.  அங்கே உள்ள ஜனத்திரளையும் வாகனங்களையும் பார்த்தால் யாராவது ஒரு பெரும் பணக்காரரின் ஜனாஸாவாக அது இருக்க வேண்டும்.

இல்லை அது சலீம் நாநாவின் ஜனாஸா.  அவர் ஒன்றும் பெரும் பணக்காரர் அல்லவே. மிகவும் சாதாரண வாழ்க்கை நடத்தியவர். அவருக்காகவா இவ்வளவு கூட்டம்.  ஆம் சிலர் பணத்தை சேர்க்கா விட்டாலும், மனிதர்களை சொத்தாக சேர்த்து வைத்திருப்பார்கள். அப்படியான ஒருவராகத்தான் சலீம் நாநா இருக்க வேண்டும்.

சலீம் நானா மட்டக்குளியைச் சேர்ந்தவர். கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பிறகு மட்டக்குளிப் பகுதிக்கு குடி வந்து விட்டார்.   அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் இருந்தனர். கடைசி மகனைத் தவிர அனைத்துப் பிள்ளைகளும் திருமணம் முடித்திருந்தனர். 

அவர் கோட்டையில்  ஒரு சப்பாத்துக் கடையில் நீண்ட காலம் தொழில் பார்த்தார்.

பொதுவாக மட்டக்குளியின் ஜனாஸாக்கள் மாதம்பிட்டி பள்ளிவாசல் மையவாடியிலேயே அடக்கம் செய்வது வழக்கம். சலீம் நாநாவின் பெற்றோர்கள் சொந்தங்கள் மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டிருப்பதால் தனது  ஜனாஸாவும் மாளிகாவத்தை மையவாடியிலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதனால் தான் மாளிகாவத்தை மையவாடியில் அடக்கம் செய்வதற்காக அந்த ஜனாஸா கொண்டு வரப்பட்டிருக்கிறது.

அங்கே காணப்பட்ட பள்ளிவாயில் சிறியதாக இருந்ததால் அவரது ஜனாஸா,  தொழுகைக்காக அங்கே இருந்த மைதானத்துக்கு எடுத்து வரப்பட்டிருக்கிறது.

ஜனாஸாவுடன் வந்திருந்த அவர்கள் குடியிருந்த பள்ளிவாசலின் பெரிய ஹஸரத்  "இவ்வுலக வாழ்க்கைப் பொய்யென்றும், மறு உலக வாழ்க்கையை எண்ணியே இந்த உலகில் வாழ வேண்டும் என்றும்" நீண்ட உபதேசம் செய்தார்.  சலீம் நாநாவின்  நற்குணங்கள் பற்றியும்
சொன்னார்.

முடிவில் யாருக்கும் சலீம் நானா கடன் கொடுக்க வேண்டி இருக்கிறதா என்று கேட்டார். ஏனெனில்  நபி (ஸல்) அவர்கள் கடனாளிகளின் ஜனாஸாக்களை தொழுவிப்பதிலிருந்து விலகி நடந்தார்கள் என்றும் சம்பவங்களை ஆதாரம் கூறி ஹஸ்ரத் பேசினார். பின்பு யாரிடமும் சலீம் நாநா கடன் வாங்கி திருப்பித் தராமல் இருக்கிறாரா என்றும் அவ்வாறிருந்தால்  அவற்றை அவரது மகன்மார்களிடம் கேட்டுக் கொள்ளலாம் என்றும் அது போலவே அவருக்கு யாரும்  கடன் பாக்கி   வேண்டியிருந்தாலும் அது பற்றியும் அவர்களோடு பேசிக் கொள்ளலாம் என்றும் சொல்லி நிறுத்தினார்.

ஜனாஸாவாக இருந்த சலீம் நாநாவின் மூத்த மகன் பசீர் முன்னே வந்து நின்றான்.

எல்லோரும் மௌனமாக இருந்தனர்.

அப்போது அந்த பெரும் கூட்டத்தின் மௌனத்தைக் கிழித்துக் கொண்டு
"நாங் கொஞ்சங் பேசவா....? "

குரல் வந்த திசையை எல்லோருமே திரும்பிப் பார்த்தனர். பேசிய பேச்சு மொழியும் வித்தியாசமாக இருந்தது. அது ஒரு சிங்களவர் பேசிய தமிழ் போலிருந்தது.

ஆம், அவர் ஒரு சிங்களவர்தான்.

"அடடா சலீம் நாநா இவரிடம் கடன் வாங்கி விட்டாரோ.... ? " பலரது எண்ணமாக இருந்த இந்த வார்த்தைகள்  சிலரது வாயிலிருந்து வெளிப்படவும் செய்தன.

இத்தனை பகிரங்கமாக அவர் கேட்ட பின்பு அவர் சிங்கள சகோதரராக இருந்த போதும் அவரை வரவேண்டாம் என்று சொல்ல முடியுமா ?

ஹஸ்ரத் சொன்னார், "ஒபதுமா இஸ்ஸரஹட்ட என்ன " (நீங்கள் முன்னுக்கு வாருங்கள்).

கூட்டத்தில் ஒரே சலசலப்பு. இப்படியான ஒன்றை இதற்கு முன் யாரும் கண்டதில்லை.

முன்னால் வந்தவரிடம், "எதுவாக இருந்தாலும் அவருடைய மகனுடன் பேசிக் கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு தேவையானதை செய்வார்" என்று ஹஸரத் மெதுவாகச் சொன்னது முன்னாலிருந்த சிலரது காதுகளில் விழத்தான் செய்தது. சலீம் நாநாவின் மூத்த மகன் பசீரும் வந்தவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆம் என்பது போன்று சமிக்ஞை காட்டினான்.

வந்தவரும் பசீரின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு "வச்சன தெகக் கதா கரன்ன அவசர தெனவத ? (இரண்டு வார்த்தைப் பேச அனுமதி தாரீங்களா) என்று கேட்டார்.

ஹஸரத்துக்கும்  ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏதோ ஒரு குழப்பம் ஏற்படப் போவதை சூழ இருந்தவர்கள் உணரக் கூடியதாக இருந்தது.

"ஏன்ட பேர் ஜயதிஸ்ஸ. நாங் ஒரு பிரைவட் பஸ் கொந்தஸ்தர்" கொச்சைத் தமிழில்தான் பேசினார். என்றாலும் பேசியது விளங்கியது.

நாங் 145 பஸ் ரூட்ல வேல செய்றெங். நாங்க பத்துப் பேர் அந்த ரூட்ல வேல செய்றங்.  எங்க பத்து கொந்தஸ்தருக்குங் சலீம் அய்யாவ தெரியுங். எப்படிங் தெரியுமா ? சலீம் அய்யா கொட்டுவைக்கி (கோட்டைக்கு) மிச்சங் எங்கட ஒரு பஸ்ல தான் வருவாரு. அந்தில வூட்டுக்கும் போவாரு.  அதால எங்களுக்கு தெரியுங் என்றது இல்ல. சலீம் அய்யாவ போல நெறய பேருங் இது போல வழமையா வாராங்க.  போறாங்க. எல்லாரையும் எங்களுக்கு தெரியாது"

அந்த ஜயதிஸ்ஸ கண்டக்டர் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று எல்லோருமே காதைத் தீட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

"சலீம் அய்யாவ எப்படிங் நல்லா தெரியுங் தெரியுமா ? அவர் போற தூரத்துக்கு டிக்கட் 42/- ரூவா. அவரு செல நேரங் நூறு ரூவா தருவாரு.  நாங் அவருக்கு 60/- ரூபா திருப்பிங் கொடுப்பேங். ஆனா அவரு அப்படியே போவ மாட்டாரு. எப்படி சரிங் தேடி ரெண்டு ரூபாவ தந்துருவாரு. வேணாங் என்று சொன்னா விட மாட்டாரு.  கட்டாயப் படுத்தி தந்துருவாரு. சில நாளைக்கு தர முடியாம போனா மறுபயிணம் எனய பாக்கங்கொள்ள அத நெனவு படுத்திங் தருவாரு.  ஐயோ அது எபா வாணங் என்று சொன்னா உடமாட்டாரு.  இல்ல இல்ல இத எடுங்க இல்லாட்டி நா ஒங்களுக்கு கடன்காரன்.  ஒருநாளும் நா யாருக்கும் கடன்காரனா மௌத்தாவ இஸ்டமில்ல என்றாரு.  என்னடா இவரு வித்தியாசமான ஆளா இருக்கிறாரே என்று ஏன்ட மத்த கொந்தஸ்தர்கிட்ட இவர பத்தி சொல்லப் போக்கல்ல எல்லாத்துக்கும் சலீம் அய்யாவ தெரியும் என்டாங்க.  எல்லாத்துக்கும் அவரு ஒரு ரூவா ரெண்டு ரூவா என்டாலும் மிச்சம் வைக்காம கொடுப்பாராம். அட ஒரு ரூவாதானே ரெண்டு ரூவாதானே என்று ஒரு நாளும் நெனச்சதில்ல.  கடன் கடன்தான் என்றுதான் அவரு நெனைச்சாரு.  அதால இவரோட நாங்க எல்லாமே நல்லா பழகினோம்.
அவருங்ட மய்யத் செய்தி கேட்டதுங் இன்னக்கி ஆறு பேர் இங்க வந்திருக்கங்.
அது மட்டுமில்ல ஒங்களுக்கு தெரியுந்தானே நாங்க கொந்தஸ்தர்மார் 28/- ரூவாக்கு முப்பது ரூவா தந்தா யாருக்குமே ரெண்டு ரூவா கொடுக்கிறதில்ல. ஆனா சலீம் அய்யாட பேச்ச கேட்ட பொறவ் நான் எப்படிங் சரி அந்த ரெண்டு ரூவாவ கொடுத்திருவன்.
இப்பங் சொல்லுங்க இப்படிங் பட்ட நல்ல மனுஷங் யாருக்கிட்டயும் கடன் எடுத்திருப்பாரா  ?"

குழுமியிருந்தோர் அனைவருமே கண் கலங்கிப் போயிருந்தனர். பசீரும், ஹஸரத்தும் ஜயதிஸ்ஸ கண்டக்டரை நெஞ்சோடு அணைத்துக் கொண்டனர்.

பசீரும் பேசினான், "ஆம் எங்கள் வாப்பா எப்போதுமே யாரிடமும் கடன் வாங்க வேண்டாம் என்றுதான் எங்களை வளர்த்தார். பேங்கில் கிரடிட் கார்ட் கூட எடுக்கவே வேண்டாம்"என்று கடுமையாக சொல்லியிருக்கிறார்" என்றான்.

ஜனாஸா தொழுகை பசீர் நடத்தினான்.

பின்பு கண் கலங்கிய நிலையில் ஹஸ்ரத் சலீம் நாநாவின் மறுமை வாழ்வுக்காக கதறிக் கதறி துஆ கேட்டார். எல்லோரும் உணர்ச்சிப்பூர்வமாக "ஆமீன், ஆமீன்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதிலே ஜயதிஸ்ஸ கண்டக்டரின் "ஆமீன்" தனியாக துல்லியமாகக் கேட்டது.


.................................

விடிவெள்ளி - 12/01/2023