கடனாளி
- என். நஜ்முல் ஹுசைன்
மாளிகாவத்தை மையவாடி. மக்கள் கூட்டம் அலை மோதியது. பெருமளவான வாகனங்களும் வந்திருந்தன. அங்கே உள்ள ஜனத்திரளையும் வாகனங்களையும் பார்த்தால் யாராவது ஒரு பெரும் பணக்காரரின் ஜனாஸாவாக அது இருக்க வேண்டும்.
இல்லை அது சலீம் நாநாவின் ஜனாஸா. அவர் ஒன்றும் பெரும் பணக்காரர் அல்லவே. மிகவும் சாதாரண வாழ்க்கை நடத்தியவர். அவருக்காகவா இவ்வளவு கூட்டம். ஆம் சிலர் பணத்தை சேர்க்கா விட்டாலும், மனிதர்களை சொத்தாக சேர்த்து வைத்திருப்பார்கள். அப்படியான ஒருவராகத்தான் சலீம் நாநா இருக்க வேண்டும்.
சலீம் நானா மட்டக்குளியைச் சேர்ந்தவர். கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பிறகு மட்டக்குளிப் பகுதிக்கு குடி வந்து விட்டார். அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் இருந்தனர். கடைசி மகனைத் தவிர அனைத்துப் பிள்ளைகளும் திருமணம் முடித்திருந்தனர்.
அவர் கோட்டையில் ஒரு சப்பாத்துக் கடையில் நீண்ட காலம் தொழில் பார்த்தார்.
பொதுவாக மட்டக்குளியின் ஜனாஸாக்கள் மாதம்பிட்டி பள்ளிவாசல் மையவாடியிலேயே அடக்கம் செய்வது வழக்கம். சலீம் நாநாவின் பெற்றோர்கள் சொந்தங்கள் மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டிருப்பதால் தனது ஜனாஸாவும் மாளிகாவத்தை மையவாடியிலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதனால் தான் மாளிகாவத்தை மையவாடியில் அடக்கம் செய்வதற்காக அந்த ஜனாஸா கொண்டு வரப்பட்டிருக்கிறது.
அங்கே காணப்பட்ட பள்ளிவாயில் சிறியதாக இருந்ததால் அவரது ஜனாஸா, தொழுகைக்காக அங்கே இருந்த மைதானத்துக்கு எடுத்து வரப்பட்டிருக்கிறது.
ஜனாஸாவுடன் வந்திருந்த அவர்கள் குடியிருந்த பள்ளிவாசலின் பெரிய ஹஸரத் "இவ்வுலக வாழ்க்கைப் பொய்யென்றும், மறு உலக வாழ்க்கையை எண்ணியே இந்த உலகில் வாழ வேண்டும் என்றும்" நீண்ட உபதேசம் செய்தார். சலீம் நாநாவின் நற்குணங்கள் பற்றியும்
சொன்னார்.
முடிவில் யாருக்கும் சலீம் நானா கடன் கொடுக்க வேண்டி இருக்கிறதா என்று கேட்டார். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கடனாளிகளின் ஜனாஸாக்களை தொழுவிப்பதிலிருந்து விலகி நடந்தார்கள் என்றும் சம்பவங்களை ஆதாரம் கூறி ஹஸ்ரத் பேசினார். பின்பு யாரிடமும் சலீம் நாநா கடன் வாங்கி திருப்பித் தராமல் இருக்கிறாரா என்றும் அவ்வாறிருந்தால் அவற்றை அவரது மகன்மார்களிடம் கேட்டுக் கொள்ளலாம் என்றும் அது போலவே அவருக்கு யாரும் கடன் பாக்கி வேண்டியிருந்தாலும் அது பற்றியும் அவர்களோடு பேசிக் கொள்ளலாம் என்றும் சொல்லி நிறுத்தினார்.
ஜனாஸாவாக இருந்த சலீம் நாநாவின் மூத்த மகன் பசீர் முன்னே வந்து நின்றான்.
எல்லோரும் மௌனமாக இருந்தனர்.
அப்போது அந்த பெரும் கூட்டத்தின் மௌனத்தைக் கிழித்துக் கொண்டு
"நாங் கொஞ்சங் பேசவா....? "
குரல் வந்த திசையை எல்லோருமே திரும்பிப் பார்த்தனர். பேசிய பேச்சு மொழியும் வித்தியாசமாக இருந்தது. அது ஒரு சிங்களவர் பேசிய தமிழ் போலிருந்தது.
ஆம், அவர் ஒரு சிங்களவர்தான்.
"அடடா சலீம் நாநா இவரிடம் கடன் வாங்கி விட்டாரோ.... ? " பலரது எண்ணமாக இருந்த இந்த வார்த்தைகள் சிலரது வாயிலிருந்து வெளிப்படவும் செய்தன.
இத்தனை பகிரங்கமாக அவர் கேட்ட பின்பு அவர் சிங்கள சகோதரராக இருந்த போதும் அவரை வரவேண்டாம் என்று சொல்ல முடியுமா ?
ஹஸ்ரத் சொன்னார், "ஒபதுமா இஸ்ஸரஹட்ட என்ன " (நீங்கள் முன்னுக்கு வாருங்கள்).
கூட்டத்தில் ஒரே சலசலப்பு. இப்படியான ஒன்றை இதற்கு முன் யாரும் கண்டதில்லை.
முன்னால் வந்தவரிடம், "எதுவாக இருந்தாலும் அவருடைய மகனுடன் பேசிக் கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு தேவையானதை செய்வார்" என்று ஹஸரத் மெதுவாகச் சொன்னது முன்னாலிருந்த சிலரது காதுகளில் விழத்தான் செய்தது. சலீம் நாநாவின் மூத்த மகன் பசீரும் வந்தவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆம் என்பது போன்று சமிக்ஞை காட்டினான்.
வந்தவரும் பசீரின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு "வச்சன தெகக் கதா கரன்ன அவசர தெனவத ? (இரண்டு வார்த்தைப் பேச அனுமதி தாரீங்களா) என்று கேட்டார்.
ஹஸரத்துக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏதோ ஒரு குழப்பம் ஏற்படப் போவதை சூழ இருந்தவர்கள் உணரக் கூடியதாக இருந்தது.
"ஏன்ட பேர் ஜயதிஸ்ஸ. நாங் ஒரு பிரைவட் பஸ் கொந்தஸ்தர்" கொச்சைத் தமிழில்தான் பேசினார். என்றாலும் பேசியது விளங்கியது.
நாங் 145 பஸ் ரூட்ல வேல செய்றெங். நாங்க பத்துப் பேர் அந்த ரூட்ல வேல செய்றங். எங்க பத்து கொந்தஸ்தருக்குங் சலீம் அய்யாவ தெரியுங். எப்படிங் தெரியுமா ? சலீம் அய்யா கொட்டுவைக்கி (கோட்டைக்கு) மிச்சங் எங்கட ஒரு பஸ்ல தான் வருவாரு. அந்தில வூட்டுக்கும் போவாரு. அதால எங்களுக்கு தெரியுங் என்றது இல்ல. சலீம் அய்யாவ போல நெறய பேருங் இது போல வழமையா வாராங்க. போறாங்க. எல்லாரையும் எங்களுக்கு தெரியாது"
அந்த ஜயதிஸ்ஸ கண்டக்டர் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று எல்லோருமே காதைத் தீட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
"சலீம் அய்யாவ எப்படிங் நல்லா தெரியுங் தெரியுமா ? அவர் போற தூரத்துக்கு டிக்கட் 42/- ரூவா. அவரு செல நேரங் நூறு ரூவா தருவாரு. நாங் அவருக்கு 60/- ரூபா திருப்பிங் கொடுப்பேங். ஆனா அவரு அப்படியே போவ மாட்டாரு. எப்படி சரிங் தேடி ரெண்டு ரூபாவ தந்துருவாரு. வேணாங் என்று சொன்னா விட மாட்டாரு. கட்டாயப் படுத்தி தந்துருவாரு. சில நாளைக்கு தர முடியாம போனா மறுபயிணம் எனய பாக்கங்கொள்ள அத நெனவு படுத்திங் தருவாரு. ஐயோ அது எபா வாணங் என்று சொன்னா உடமாட்டாரு. இல்ல இல்ல இத எடுங்க இல்லாட்டி நா ஒங்களுக்கு கடன்காரன். ஒருநாளும் நா யாருக்கும் கடன்காரனா மௌத்தாவ இஸ்டமில்ல என்றாரு. என்னடா இவரு வித்தியாசமான ஆளா இருக்கிறாரே என்று ஏன்ட மத்த கொந்தஸ்தர்கிட்ட இவர பத்தி சொல்லப் போக்கல்ல எல்லாத்துக்கும் சலீம் அய்யாவ தெரியும் என்டாங்க. எல்லாத்துக்கும் அவரு ஒரு ரூவா ரெண்டு ரூவா என்டாலும் மிச்சம் வைக்காம கொடுப்பாராம். அட ஒரு ரூவாதானே ரெண்டு ரூவாதானே என்று ஒரு நாளும் நெனச்சதில்ல. கடன் கடன்தான் என்றுதான் அவரு நெனைச்சாரு. அதால இவரோட நாங்க எல்லாமே நல்லா பழகினோம்.
அவருங்ட மய்யத் செய்தி கேட்டதுங் இன்னக்கி ஆறு பேர் இங்க வந்திருக்கங்.
அது மட்டுமில்ல ஒங்களுக்கு தெரியுந்தானே நாங்க கொந்தஸ்தர்மார் 28/- ரூவாக்கு முப்பது ரூவா தந்தா யாருக்குமே ரெண்டு ரூவா கொடுக்கிறதில்ல. ஆனா சலீம் அய்யாட பேச்ச கேட்ட பொறவ் நான் எப்படிங் சரி அந்த ரெண்டு ரூவாவ கொடுத்திருவன்.
இப்பங் சொல்லுங்க இப்படிங் பட்ட நல்ல மனுஷங் யாருக்கிட்டயும் கடன் எடுத்திருப்பாரா ?"
குழுமியிருந்தோர் அனைவருமே கண் கலங்கிப் போயிருந்தனர். பசீரும், ஹஸரத்தும் ஜயதிஸ்ஸ கண்டக்டரை நெஞ்சோடு அணைத்துக் கொண்டனர்.
பசீரும் பேசினான், "ஆம் எங்கள் வாப்பா எப்போதுமே யாரிடமும் கடன் வாங்க வேண்டாம் என்றுதான் எங்களை வளர்த்தார். பேங்கில் கிரடிட் கார்ட் கூட எடுக்கவே வேண்டாம்"என்று கடுமையாக சொல்லியிருக்கிறார்" என்றான்.
ஜனாஸா தொழுகை பசீர் நடத்தினான்.
பின்பு கண் கலங்கிய நிலையில் ஹஸ்ரத் சலீம் நாநாவின் மறுமை வாழ்வுக்காக கதறிக் கதறி துஆ கேட்டார். எல்லோரும் உணர்ச்சிப்பூர்வமாக "ஆமீன், ஆமீன்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதிலே ஜயதிஸ்ஸ கண்டக்டரின் "ஆமீன்" தனியாக துல்லியமாகக் கேட்டது.
.................................
விடிவெள்ளி - 12/01/2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக