எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 31 மே, 2011

மலேசிய .கோலாலம்பூர் தலை நகரில் மே மாதம் 20 , 21 , 22 ம் திகதிகளில் இடம்பெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2011 ல் கவிக்கோ அப்துல் ரகுமானின் தலைமையில

மலேசிய .கோலாலம்பூர் தலை நகரில் மே மாதம் 20 , 21 , 22 ம் திகதிகளில் இடம்பெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2011 ல் கவிக்கோ அப்துல் ரகுமானின் தலைமையில் நடைப்பெற்ற கவியரங்கில் அண்ணல் நபிகளாரின் அழகிய பண்புகள் என்ற தலைப்பில் எளிமை என்ற உப தலைப்பில் என். நஜ்முல் ஹுசைனினால் பாடப்பட்டு ஒட்டுமொத்த சபையோரினதும் , கூடியிருந்த பேராசிரியர்கள், அறிஞர்களதும் பெரும் பாராட்டைப் பெற்ற கவிதை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

முடியாது
பாட முடியாது
கவிதை பாட முடியாது

..............................................

தமி ழூற்றுக்
கவிதை தர
தலை வணங்கிக்
கேட்டு நின்றேன்
உலகாளும் அல்லாஹ்வே
எனக்கே நீ
அருள் புரிவாய்

தமிழ் வந்து
எனைத் தழுவி
நடமிடட்டும்
என் சிறு வாய்

அந்த
ரஹுமான்
துணை புரிந்தான்

அப்துல்
ரகுமானின் தலைமையிலே
தமிழ் சொல்ல

நான் பெரிய
கவி அல்ல

நான் வந்ததெல்லாம்
உங்கள் கவி அள்ள

என்றாலும்
நீங்களெல்லாம்
ஒருமித்து துஆ கேளுங்களேன்
இச் சபை முன்னே
என் கவி தையும்
வெல்ல


மலேசிய மண்ணுக்கு
நன்றி சொல்வேன்

இலங்கைக்கு
ஒரு கை இருக்கிறது

நீ
இரு கை நீட்டியதற்கு

இங்கே
இருக்கை தந்ததற்கு

கோலாலம்பூரே
இன்று  நீ
கோலாகலம்பூராய்
உரு பெற்றாய்
ஏனெனில்
உன் தெருவெங்கும்
தமிழ்
கோலமல்லவா போடப்பட்டிருக்கிறது

....................................................

கவிக்கோ
தலைமைக்காய்

தலை மை
தொட்டு
கவிதை எழுதி வந்த
கவிஞர்களே ,
கற்றறிந்த அறிஞர்களே ,
என்
தாய் மண்ணின் முத்துக்களே,
இலக்கிய உறவுகளே
அனைவருக்கும் எந்தன் சலாம்

அஸ்ஸலாமு அலைக்கும்

என் தாய்நாட்டுக் கவிஞர்கள்
இனிக்கும்
வெல்லமாய் கவி பாடும்
வெள்ளம்

வெள்ளம் அங்கிருக்க
தெறித்த சிறு துளியாய்
நான்

மலேசிய மண்ணே
ஓர்
உறவுக்காரனாய்
இங்கே நிற்பதில்
பெரு மகிழ்ச்சி எனக்கு

உனக்கும்
எனக்கும் ஒரு
முன் உறவிருக்கிறது

நான் பிறந்தது
கொழும்பு பீர் சாஹிபு வீதியில்

அது
உனது பொக்கிஷமொன்றை
பீர் சாஹிபு தைக்காவில்
பாதுகாத்து வைத்திருந்தது

உங்கள் நாட்டு ஞானி
துவான் பங்கேரா
அங்கேதான் அடங்கப்பட்டிருந்தார்

அது என்ன
அடங்கப்பட்டிருந்தார் ?

ஏனெனில் அவர்
மீண்டும்
தோண்டியெடுக்கப்பட்டார்

மீண்டும்
தோண்டியெடுக்கப்பட்ட
அவரது உடலை
மலேசிய மண்ணே
நீ
ஆரத் தழுவிக்கொண்டாய்

பழுதடையாதிருந்த
அவரது உடலைப் பார்த்து
அப்போதைய பிரிட்டிஷ் ஆட்சி
அகல விரித்தது
விழிகளை மட்டுமல்ல -
செங்கம்பளத்தையும்தான்

சிறு வயதில்
என் காதில் விழுந்த
இந்த செய்தி
மலேசிய உறவுகளே
உங்களை கண்டதும்
என் மனதில்
எழுந்து நிற்கிறது

நான்
புதுக் கவி
தைக்க வந்தவன்
புதுக்க
விதைக்க வந்தவன்
புது
கவிதைக்கு வந்தவன்

அதனால்தான் சொன்னேன்

முடியாது
பாட முடியாது
கவிதை பாட முடியாது

எப்போதும்
ஆடம்பரமாகவே
வாழ ஆசைப்படும்
ஒரு சமூகத்தின்
உறுப்பினனாய்
இருக்கும் என்னால்

அண்ணலே யாராசூலே

முடியாது
பாட முடியாது
உங்கள்
எளிமையைப் பாட முடியாது

உங்கள்
எளிமையைப் பாட முடியாது
எனது நாவும்
நாணித் தவிக்கிறது

எளிமையினால்
வலிமைப் பெற்ற
வரலாற்று நாயகர் அல்லவா
நீங்கள்

கோடீஸ்வரர் பட்டியலில்
முதலிடம் பிடிக்கத் துடித்து
இன்று
ஓடி ஒளிய இடம் தேடும்
எங்கள் உலகத் தலைவர்களினால்
எங்கள் சரித்திரம்
சந்தி சிரிக்கும்
இவ் வேளை

அண்ணலே யாரசூலே
உங்கள் எளிமையைப் பாட

என்ன தகுதி எனக்கு
என்று கேட்டு
என் நாவு
நாணித் தவிக்கிறது

எத்தனை வண்ண மைகளினால்
வர்ணிக்கப்படுபவர்
நீங்கள்
என்றாலும் உங்களை நீங்கள்
எளிமையினால்தானே
எழுதிக் கொண்டீர்கள்

புகழ்
உங்கள் பண்புகளோடு
ஓட்டப் போட்டி நடத்தி
தோற்றுப் போனது

ஒப்பனை போட்ட
பண்புகளுடன்
இந்த உலகம்
வலம்  வரும்போது

இயற்கை அழகுடனல்லவா
உங்கள் பண்புகள்
ஆட்சி பீடமேறின
இதயங்களையெல்லாம்
கொள்ளை கொண்டன

அதனால்தானே
எந்த மொழி நாவானாலும்
உங்களை வாழ்த்திப் பாடுவதை
வரமாகப்
பெற்றுக் கொண்டுள்ளன

உங்களை வாழ்த்தி
தங்களுக்கு
வாழ்வு பெற்றுக் கொள்கின்றன

யாரசூலே
வல்லான் அல்லாஹ்
உங்களை
இந்த மாநிலத்துக்கே
மாநபியாக்கி
பொன்னாடை போர்த்தினான்

என்றாலும்
நீங்கள் அணிந்தது
கந்தலாடைதானே

முத்து மணி ரத்தினங்கள்
மன்னர்களின் ஆடைகளை
அலங்கரித்து கொண்டிருந்தபோது

நீங்கள் அணிந்தது
கந்தலாடைதானே

குப்பையில் சேர வேண்டிய
உங்கள் ஆடைகள்
மீண்டும் மீண்டும்
ஊசியைத்தானே
தேடின -
தம் கிழிசல்களைத் தைத்துக் கொள்ள

நாயகமே
நபித்துவம்
உங்களோடு முசாபஹா செய்ய
கற்களுக்குச் சொல்லிக் கொடுத்தது -
மக்கத்துக்
கற்களுக்குச் சொல்லிக் கொடுத்தது

அந்தக் கற்கள்
நபிகள்
கோனை அல்லவா
காயப்படுத்தினோம் என்று
வெட்கப்பட்டன-
உங்கள் இரத்தத்தால்
தங்களை போர்த்திக்கொண்டன

........................................................................

பிரியாணிக்காய்
சர்வதேசமெங்கும்
புகழ் பெற்ற
உம்மத் நாங்கள்

எங்கள் தலைவரே

சா பாடு பட்டுத்தானே
சாதாரண சாப்பாடும்
உங்களை வந்தடைந்தது

உங்கள் வயிற்றின்
உள் பசிக்கு
வயிற்றுக்கு வெளியிலல்லவா
விருந்து படைத்தீர்கள் -
கற்களால்

ஆண்டுக்கு ஒரு முறை
நாங்கள்
நோன்பு பிடிக்கிறோம்

ஆனாலும்
எந்நாளுமே நோன்புக்கு
உங்களைப் பிடித்திருந்தது

செல்வத்தின் கால்களிலே
சுஜூது செய்ய
ஆசைப்படும்
உம்மத் நாங்கள்

உங்கள் கால்களுக்கடியில்
சுஜூது செய்ய ஆசைப்பட்ட
செல்வதையல்லவா
உதைத்துத் தள்ளினீர்கள்

'வறுமையே
பிரியாதே' என்று
ஒப்பந்தம் செய்து கொண்டு
ஏழ்மையை
மணி மகுடமாய்ச் சூடிக்கொண்ட
விசித்திர
மன்னர் நீங்கள்

மந்திரத்தால்
'தங்க'
மாங்காய்ப் பறிக்கும்
ஆற்றல் பெற்றிருந்த
மாநபியே

வறுமையை அல்லவா
உங்கள்
மந்திரக்கோல் ஆக்கிக் கொண்டீர்கள்

பட்டு மெத்தை
உங்கள் மேனியை
தொட்டுப் பார்க்கத்
துடிக்கையிலே

வெறும்
ஈச்சம் பாய்க்குத்தானே
அந்தப் பாக்கியத்தைத்
தந்தீர்கள்

பாய்தானே
உங்கள் மேனியெங்கும்
வாய் வைத்தது

இரவெங்கும்
உங்கள் மேனியோடு
அதன் உரையாடல்

உங்கள்
எத்தனை நித்திரைகளைச்
சுமையாக்கியது

..........................................................

முழு நாட்டையுமே
தங்களது மாளிகையாக்க
வளைத்துப்போட
நினைக்கும்
எங்கள் ராஜாக்களுக்கு
மத்தியில்

வெறும்
திண்ணையிலே
சாம்ராஜ்யம் அமைத்த
சக்கரவர்த்தி நீங்கள்

திண்ணைத் தோழர்கள்தானே
உங்கள் மந்திரிகள்

உங்கள்
சொற்களுக்குக் கட்டுண்டவர்களை
சீடர்களாக்கி
அவர்களைக் கொண்டே
மேலாசனம் போடாமல்
தோழர்களாக்கி
சரியாசனம் போட்டீர்கள் -
தோளோடு தோள் சேர்த்தீர்கள்

நீக்ரோ இனத்தையே
முதன் முதல்
ஆரத் தழுவி
மேன்மை படுத்திய
வெள்ளை மாளிகை
நீங்கள் அல்லவா
நாயகமே

உயர்குலத்தோர்
ஆயிரம் பேர் இருக்க

ஹஸரத் பிலாலை அல்லவா
'அதான்' சிம்மாசனத்தில்
அமர்த்தி அழகு பார்த்தீர்கள்

எடுபிடிகள் வைத்து
கெடுபிடிகள் காட்டி
தங்களைத் தலைவர்களாய்
பிரகடனப்படுத்திக் கொள்ளும்
உலகத் தலைவர்களைப் பார்த்து
அடிக்கடி இந்த பூமி
அதிர்ச்சி கொள்ளும்

வானவர்களே கைகட்டிச்
சேவகம் செய்ய காத்திருந்தும்
யாருக்காகவும் காத்திருக்காமல்
உங்களது வேலையை
நீங்களே செய்த
பணிவு கண்டு
அந்த பூமி
மெய் சிலிர்த்துப் போனது

கட்டளை இட்டு
ஒதுங்கி நின்ற
தலைவர் அல்ல
நீங்கள்
கற்களைச் சுமந்து
கைகளைப் புண்ணாக்கிக் கொண்ட
பெருந்தகை

ஏசிய கிழவிக்காயும்
ஏந்திய சுமைகள்
தலைக்கனம் இல்லா
உங்கள் கணங்களை   உறுதி செய்தன

உங்கள் நெறிமுறைகளிலே
இந்த உம்மத்
தீ வைத்துக்கொண்டிருக்கும் போது கூட
நாளை மஹ்சரிலே
"யா உம்மத்தீ" என்று
உம்மத்துகளுக்காய்
பூ வைக்கப் பூண்டிருக்கும்
உங்கள்
திட சங்கற்பத்தை எண்ணி
என் உள்ளம் நடுங்குகிறது

எளிமையின் நாயகரே
யா ரசூலே
உங்கள்
பாதம் மிதித்த மண்ணை
நாங்கள் தரிசிக்கும் போது
அம் மண்ணில்
நாங்கள் நடப்பதில்லை
அம் மண்ணை
எங்கள் பாதங்கள்
மிதிப்பதில்லை
சத்தியமாய் மிதிப்பதில்லை

அவை
அப் புனித மண்ணை
முத்தமிட்டு மகிழ்கின்றன

எங்கள் பாதங்கள்
அம் மண்ணை
முத்தமிட்டு முத்தமிட்டு
மகிழ்கின்றன

இதயம் தொட்டுச் சொல்கிறேன்
அண்ணலே யாரசூலே

உங்கள் எளிமையை
மை கொண்டு எழுத முடியாது -
கண்ணீர் கொண்டு
வரைவதை தவிர-
வாய் விட்டு அழுவதை தவிர

எளிமையும்
பொறுமையும் தொட்டு
நீங்கள் எழுதியதெல்லாம்
ஒற்றுமையைத்தானே

அதுதானே இப்போது
சர்வதேச தெருக்களெங்கும்
சிந்தி கிடக்கின்றது -
எங்கள் இரத்தமாய்

அதனால்தான் சொன்னேன்

இந்தச் சுமைகளை
நெஞ்சில் ஏந்திக்கொண்டு

முடியாது
பாட முடியாது
இன்று
கவிதை பாட
முடியாது

நன்றி

வஸ்ஸலாம்

- என். நஜ்முல் ஹுசைன்
(எம்.எம்.நஜ்முல் ஹுசைன்)