எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 4 அக்டோபர், 2013

வகவ கவிதை

வகவம் கடந்த 27-09-2013 அன்று மீள் ஆரம்பம் செய்யப்பட்டபோது என்னால் வாசிக்கப்பட்ட கவிதை -

அனைவருக்கும்
இந்த
இனிய மாலைப் பொழுதின்
இதய வாழ்த்துகள்

பேனாவும்
என் நாவும்
ஒன்றாய் மகிழ்ந்தன

மீண்டும் வகவத்துக்கு
காதுகள்
முளைத்தைக் கண்டு

இது
இதயத்தோடு மட்டுமல்ல
இரு
கைகளோடும்
வரும் இடம்

இது
இதயங்கள்
வலம் வரும்
இடம்

தயவு செய்து
இங்கு வரும்போது
பொன்னாடை
கொண்டு வாருங்கள்

கை தட்டல்
பொன்னாடை -

எங்கள் கவிஞர்களை
போர்த்திவிட

விழிகளைப் பார்த்து
சொல்லும்
கவிதைகளுக்குத்தானே
வலிமைகள் அதிகம்

அதனால்தான்
வகவ கவிஞர்கள்
சர்வதேச
செவிகளுக்குள்ளும்
சென்று வந்திருக்கிறார்கள்

மானத்தைக் காப்பாற்ற
ஆடைகளை ஒன்று சேர்க்க
ஊசி
குத்தி குத்தி
வருவது போல்தான்

எங்கள் கவிஞர்களும்

குத்துவது அல்ல
நோக்கம் -
மானுடத்தைக் காப்பதே

கவிஞனின் பார்வை
வித்தியாசமானது

உலகில்
எழுத்தாளர்களை விட
பேச்சாளர்களையே
அதிகம் காண்கிறான்

எல்லோரும்
கண் மண் தெரியாமல்
பேசிக் கொண்டுதானே
இருக்கிறார்கள் -
மொபைல் போனில்

இப்போது
ஒவ்வொரு மனிதனும்

மூன்று
கைகளுடன்தானே
வாழ்ந்து கொண்டிருக்கிறான் -
கைப் பேசியையும் சேர்த்து

இதற்கு
விதி விலக்கு சொல்ல
யாருமே
இல்லாமல் போனார்கள்

என்றெல்லாம்
கவிதை பாட
எங்கள்
கவிஞர்கள்
தயார்

இந்தக் கருக்களை எல்லாம்
சுமந்து கொண்டு
தாயாராக
நீங்கள் தயாரா ?

ஆம் என்றால்
மீண்டும் மீண்டும்
வாருங்கள்
எங்கள்
வகவ வாசலுக்கு !

நன்றி

- என். நஜ்முல் ஹுசைன்