எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 29 மார்ச், 2019

தீர்க்கமான முடிவு - சிறுகதை

29/03/2019 "விடிவெள்ளி" பத்திரிகையில் இடம்பெற்றுள்ள எனது சிறுகதை "தீர்க்கமான முடிவு ". நன்றி பிரதம ஆசிரியர் சகோதரர் எம். பி.எம். பைரூஸ்

தீர்க்கமான முடிவு !

- என். நஜ்முல் ஹுசைன்

அனீஸுக்கு இருப்பே கொள்ளவில்லை.  கையைப் பிசைந்து கொண்டு இங்குமங்கும் திரிந்து கொண்டிருந்தான்.
பெரும் புதுமையாக இருந்தது-  இப்படி அனீஸ் குட்டி போட்ட பூனை போல் தவித்துக் கொண்டிருப்பது.
இப்படி அவன் தவித்துக் கொண்டிருப்பது அவனுக்காக அல்ல- யாருக்காகவோ !
இதுபோன்று யாருக்காகவோ அனீஸ்; புழுவாய் துடிப்பது அவனது வாழ்க்கையிலேயே இதுதான் முதல் தடவை. இதற்கு முன் அவன் எப்போதுமே  மற்றவரைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை. கவலை என்ன மற்றவரை அவன் மனிதராக மதித்ததே இல்லை. தங்கக் கட்டிலிலே பிறந்த அனீஸுக்கு மற்றவர் நலன் என்பது கொஞ்சமும்  தெரியாது.
பெற்றோருக்கு செல்லப் பிள்ளை.  கேட்டதெல்லாம் கிடைத்தது. அதனால் இயற்கையாகவே மற்றவரை லட்சியப்படுத்தும் தன்மை அவனுக்கு அறவே அற்று போனது.
அவன் என்ன நினைத்தானோ அதைதான் அவன் எப்போதுமே சரி என்று நினைத்தான் அனீஸ் எப்போதுமே மூன்று கால் முயல் பிடிப்பவன். அதனால் அவனைச் சூழவுள்ளோர் அடிக்கடி மூன்று கால் முயலைக் காண்பார்கள்.
அந்தச் செல்வ செழிப்பான வாழ்க்கை அவனுக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே சொகுசு வாகனங்களின் பரிச்சயத்தைக் கொடுத்திருந்தது. அவனது கால் எக்ஸ்ஸலரேட்டரை, பிரேக்கைத் தொடும் முன்பே வாகனங்கள் ஓட்டக் கற்றுக்கொண்டான்.
இப்போது 22 வயது இளைஞன் அனீஸ்.
பலமுறை அவனது வாகனத்தில் மோதி பலர் சிறு சிறு காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அவர்களை எல்லாம் பணத்தை வீசி சமாளித்துவிடுவான்.
அன்றும் அப்படித்தான். வாகனத்தில் இருந்த வானொலி இசையில் தன்னை மறந்தவாறு மிகவும் வேகமாக வாகனத்தை செலுத்திக் கொண்டு வந்தான்.
மிகவும் தூரத்தில் ஓர் இளைஞன் மஞ்சள் கோட்டில் பாதையைக் கடந்து கொண்டிருப்பதை அவதானித்தான். என்றாலும் கூட அவனது வாகனத்தின் வேகம் கொஞ்சமும் குறையவில்லை.

வேகமாய் வரும் வாகனத்தைக் கண்ட அந்த வாலிபன் ஓட்டத்துடன் மஞ்சள் கோட்டைக் கடக்க முயன்றான்.
அவன் தெருவின் மறுமுனைக்கு சென்று கொண்டிருக்கும்போது அனீஸ் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டினை இழந்தான்.
அது அவனது சொல் கேட்காமல் சென்றது. ஏறக்குறைய பாதையைக் கடந்திருந்த அந்த இளைஞனை முட்டி மோதியது.   'அம்மா' என்ற அலறலுடன் அந்த இளைஞன் இரத்த வெள்ளத்திலே மிதந்தான். தனது வெறியைத் தீர்த்துக் கொண்ட அனீஸின் வாகனம் சுய நினைவு பெற்று நின்றது.
இரத்த வெள்ளத்தில் அவன் கண் முன்னாலேயே ஒருவனைக் கண்டவுடன் அனீஸ் தன் சுயநினைவை இழந்தான்.
இவ்வளவு நேரமும் யாருமே இல்லாத தெருவாய் இருந்த அந்தப் பாதையில் ஈக்கள் பறந்து வருவதைப் போன்று பலர் விரைந்து வந்தார்கள். இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த வாலிபனையும், அனீஸையும் சூழ்ந்து கொண்டனர்.
அனீஸின் நல்ல காலம்.  பொலிஸ்காரர்கள் கூட அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அது சூழ இருந்தவர்களின் தர்ம அடியிலிருந்து அவனைப்  பாதுகாத்தது. சூழ்நிலையைப் பயன்படுத்தி நாங்களும் நாலு சாத்து சாத்துவோமே என்று ஓடி வந்தவர்களின் கனவில் மண்ணள்ளிப் போட்டது.
இதற்கு முன்பு கூட அனீஸ் ஒருவனை காயப்படுத்தியபோது தனது வீட்டு டிரைவரை பொலீஸில் முற்படுத்தி அவன்தான் மோதினான் என்று காட்டி அனீஸ் தப்பித்துக் கொண்டுள்ளான்.
அப்பாவி டிரைவர் பொலிஸ் ரிமாண்டிலிருந்து நீதிமன்றம் சென்று குற்றவாளி என்று ஒப்புக்கொண்டு அபராத பணத்தை அனீஸின் தந்தை செலுத்த வெளியே வந்தான்.
இன்று வேறு யாரையும் கை காட்ட சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.   நேரடியாகவே பொலிஸ் ரிமாண்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
அனீஸின் செல்போன் தகவல் கேட்டு அனீஸின ;தந்தை வக்கீலோடு பொலிஸ் நிலையம் வந்து விட்டார்.
இன்ஸ்பெக்டர் அனீஸின் தந்தைக்கு தெரிந்தவராக இருந்தும்கூட அவர் கையை விரித்து விட்டார்.
விபத்தில் அகப்பட்டவன் சாகக் கிடப்பதால் எந்த விதத்திலும் அனீஸை அவரால் வெளியே விட முடியாது என்று அவரது நிலையைக் கூறிவிட்டார்.
'என்ன செய்ய எனது மகனின் விதி' என்று மனங்கலங்கியவாறு அனீஸின் தந்தை ஸ்டேசனை விட்டு வெளியேறினார்.

3.
அன்று வெள்ளிக்கிழமையாய் இருந்ததால் அனீஸ் இரண்டு நாட்களை பொலிஸ் நிலையத்தில் கழிக்க வேண்டும். திங்கட்கிழமைதான் நீதிமன்றம் அழைத்துச் செல்வார்கள்.
'இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே. என்ன நடக்குமோ' என்று நெஞ்சு படபடப்புடன் அனீஸ் தவியாய் தவித்துக் கொண்டிருந்தான். இப்படி ஒரு நிலை தனக்கு வருமென்று அவன் கற்பனைக் கூட பண்ணியதில்லை.
இதையெல்லாம் எண்ணி நொந்தவனாக அமர்ந்திருந்த வேளை அவனுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான அதிர்ச்சி காத்திருந்தது.
வெளியே இருந்து வந்த இன்ஸ்பெக்டர் 'தம்பி உனக்கு நல்ல காலம்.  உனக்கு ஜாமீன்ல வெளிய போகலாம். அதுமட்டுமில்ல உனக்கு பெரிய பிரச்சினையும் இருக்கப் போறதில்ல' என்று கூறிக்கொண்டே போனார்.
தனது தந்தை காலையில் வற்புறுத்தியும் தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று கைவிரித்த இன்ஸ்பெக்டர் இப்போது எப்படி மனம் மாறினார்?
'வேறு பிரச்சினையும் இருக்கப் போறதில்ல' என்கிறாரே எப்படி?
அவனுக்குள்ளேயே பல கேள்விகள்.  அந்த கேள்விகளை இன்ஸ்பெக்டரிடமே கேட்டான்.
அதற்கு அவர் சொன்ன பதில் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
' நீங்க சரியாதான் கார ஓட்டிக்கிட்டு வந்தீங்களாம். அந்தப் பையன் மனக் குழப்பத்தில இருந்ததால திடீரென அவனே வந்து உங்க வாகனத்துக்கு முன்னால வந்து நின்னுட்டானாம். உங்க மேல எந்தக் குத்தமுமே இல்லையாம். அந்தப் பையன் மரண வாக்குமூலம் கொடுத்திருக்கான்.'
விக்கித்துப் போனான் அனீஸ்.
பொலீஸ் ஸ்டேஷனிலிருந்து அவனது கால்கள் வீட்டுக்குப் போகவில்லை. நேரே எக்ஸிடன்ட் வார்ட்டுக்குத்தான் அவனை அழைத்துச் சென்றன.

ஒரு மாதிரியாக சிரமப்பட்டு டாக்டரின் அனுமதியைப் பெற்று தான் முட்டி மோதிய வாலிபனைப் பார்த்தான்.  அவனோ பேசும் நிலையில் இருக்கவில்லை.
நீண்ட நேரம் காத்திருந்தான். அவனுக்கு சிறிது பேசும் நிலை வந்ததும் அவனது காதருகில் சென்று தன்னை அறிமுகப்படுத்தினான். தான்தான் அவனை முட்டி மோதியவன் என்றான்.
வேதனையோடு ஒரு புன்சிரிப்பு அவனது இதழ்களில் மின்னலாய் வந்து மறைந்தது.

4.
குற்றம் முழுவதும் எனது பேரில் இருந்தாலும் கூட பொலீஸிடம் அவ்வாறு கூறாமல் ஏன் பழியை தன் மேலே போட்டுக் கொண்டான்.  இதனைத்தான் அவ் வாலிபனிடம் கேள்வியாக கேட்டான்.
அதற்கு மிகவும் தட்டுத்தடுமாறி அவ் வாலிபன் கூறிய பதில் அவனை தூக்கி வாரிப்போட்டது.
'எனக்குத் தெரியும் என் மீது ஒரு குத்தமும் இல்லை என்று.
சும்மா வந்து கொண்டிருந்த என் மீதுதான் படு மோசமான வேகத்தோடு வந்து நீங்க கார ஏத்துனீங்க.  அந்த சொற்ப வேளையில நீங்களும் என்னப் போல வாலிபன் என்பத தெரிஞ்சுகிட்டன். நான் நிச்சயம் பொழைக்க மாட்டேன். நான் கொடுக்கிற வாக்குமூலத்தால ஏன் என்னப்போல உள்ள ஒரு வாலிபன் வாழ்க்க நாசமா போகனும் என்று நெனைச்சன். அதனாலதான் வாக்குமூலத்தில இப்படி மாத்திச் சொன்னேன் '
திக்கித்திக்கி அவன் சொன்ன இந்த வார்த்தைகள் அனீஸை சம்மட்டியால் அடித்தன.
இறக்கும் தறுவாயிலுள்ள ஒருவனுக்கு இப்படியான மனநிலை இருக்க முடியுமா? தான் இறக்கின்ற போதும் மற்றவர்கள் வாழ வேண்டும் என்று நினைக்க முடியுமா?  அவனது உயர்ந்த பண்பு அனீஸை நிலைகுலையச் செய்தது.  தான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்க்கையை எண்ணி வெட்கப்பட்டான்.
'டொக்டர் எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்ல. பிரைவட் ஹோஸ்பிட்டலுக்கு அனுப்பியாவது  இவன காப்பாத்துங்க'
ஒரு தீர்க்கமான முடிவோடு அனீஸ் டாக்டரிடம் மன்றாடினான்.

...................................................................................................................................................................................................................................................................................................

சனி, 23 மார்ச், 2019

சுடச்சுட

சுடச்சுட
~~~~~~~
---------------

நீ சுட்டாய்
அந்த சங்குகள்
வெண்மையாயின

நீ சுட்டாய்
New Zealand
New Zeal Landடாய்
(Zeal - பேரார்வம்)
தன்னைப்
பிரகடனப்படுத்திக் கொண்டது

நீ சுட்டாய்
அவர்கள்
தலையை மறைத்தார்கள்
உள்ளத்தை திறந்தார்கள்

நீ சுட்டாய்
அந்த மேனிகளில் மட்டுமா
துளைகள் விழுந்தன -
சொர்க்கத்தின்
கதவுகளிலும்தான் -
இலகுவாய்
அந்த ஆத்மாக்களை உள்ளே
இழுத்துக் கொள்ள

இத்தனை ஷுஹதாக்களை
சுவனத்துக்கு அனுப்பி வைத்த
உன்னை
நாளை
அந்த நரகில் போட்டு
சுடுவானா ?
மன்னித்து விடுவானா ?

 - என். நஜ்முல் ஹுசைன்

23-03-2019