எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

கவிஞர் கலாபூஷணம் வதிரி சி. ரவீந்திரன்







வலம்புரி கவிதா வட்டத்தின் 49 வது கவியரங்கு  29-05-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு  கொழும்புஅல் ஹிக்மா கல்லூரியில்  நடைபெற்றபோது கவியரங்கை தலைமை தாங்கி நடாத்த  கவிஞர் கலாபூஷணம் வதிரி சி. ரவீந்திரன் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் -

 என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வலம்புரி கவிதா வட்டம்


இலக்கிய உலகினில் நிலைத்து
இருப்பவன் எம் மனம் கவர்ந்து
வலம்புரி தன்னிலே கலந்து
வைப்பவன் கவிதையால் விருந்து
தலைக்கனம் என்பதை மறந்து
தருகிறான் அன்பினில் மருந்து
தலைமையை ஏற்றவன் இன்று
தகைமையாய் வாழ்பவன் சிறந்து

பொலீஸாய் பணியினை செய்து
பொறுப்புடன் நடந்தவ னிவனும்
வலிமையாய் வாழ்க்கையு மமைய
வழியினை செய்திடும் வகையில்
துளி மையால் மணமக்க ளிணைக்க
துணை செய்யும் பதிவாளராகி
களிக்கிறான்; களிப்பினைத் தந்து

எதிர் கொள்ளும் அனைவரி னோடும்
அன்பினைக் காட்டிடும் நெஞ்சன்
எதிரியாய் யாருமே இல்லை
என்று கர்வமும் கொண்ட மைந்தன்
வதிரியை ஊராய் கொண்டு வளமுடன்
வாழும் இந்திரன்
புதிரிலை என்றே வகவ
தலைமையை யேற்றான் ரவீந்திரன்

கவிஞர் வதிரி சீ. ரவீந்திரன்
கவியரங்கு உங்களுக்கு
கவிதை படையெடுங்கள்
உணர்வு நாம் பெறுவ தற்கு

புதன், 8 ஆகஸ்ட், 2018

காவ்யாபிமானி கலைவாதி கலீல்

வலம்புரி கவிதா வட்டத்தின் 50வது கவியரங்கம் 27-7-2018 வெள்ளிக்கிழமை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் காலை நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடாத்த காவ்யாபிமானி கலைவாதி கலீல் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் - என். நஜ்முல் ஹுசைன்,
தலைவர் - வகவம்


பல்லாற்றல் தன்னைத்தான் அடக்கி
பக்குவமாய் எழுந்து நிற்கும்
கலைஞர்
சொல்லாற்றலால் பலரை
மயக்கி
சோர்வொன்றை காட்டாத
இளைஞர்
இல்லாத துறையென்று
ஏதும்
இல்லாம லேமிளிரும்
ஒருவர்
வல்லோனின் அருளாலே இன்று
கவியரங்கை தலையேற்ற
தலைவர்

தன்மனதில் பட்டவைகள்
சரியாய்
திகழ்ந்தாலே அச்சமென்ப
தின்றி
முன்வருவார் முன்வரிசை
யேற்று
முனைப்புடனே உற்சாகம்
தருவார்
இன்சொற்களே யன்றி
வேறு
இறுமாப்பாய் வசைபாட
மாட்டார்
அன்பாகவே யாரும்
ஒன்றாய்
இணைந்து
பணியாற்றவே இவரும்
உழைப்பார்


தலைமேலே தன்பணியை
வைத்து
 தாகத்தோடே இன்றும்
எழுதி
கலைபடைக்கும் கைவண்ணக் காரர்
கலைவாதி கலீல் எங்கள்
சொந்தம்
நிலையாகவே எழுத்தில்
தங்கி
நிதர்சனமாய் வடிக்கின்றார்
சந்தம்
மலையாகவே உறுதி கொண்டு
கவியரங்கை தலையேற்றார்
இன்று

சிரேஷ்ட பத்திரிகையாளர் கவிஞர்
ஓவியர்
பாடகர்
எனும் பல்கலை வேந்தர்
கலைவாதி கலீல் - இனி
கவியரங்கு உங்களிடம்
தேன் பாயும்
காதுகளோ எங்களிடம்!

'வேறாகாத வேர்கள்' - சிறுகதை


ஆகஸ்ட் 1 - 14 'எங்கள் தேசம்' சஞ்சிகையில் பிரசுரமாகியிருக்கும் 'வேறாகாத வேர்கள்' - எனது சிறுகதை. நன்றி: சகோ. இர்ஷாத்.


வேறாகாத வேர்கள் !
- என். நஜ்முல் ஹுசைன்


"ஏய் இங்க போட வாணாம், இங்க போட வாணாம்" கத்தினான் காசிம்.
ஏழு பேரிருந்த முச்சக்கர வண்டி தரிப்பில் எட்டாவதாக புதிதாக நிறுத்துவதற்கு வந்த இர்ஷாத்தை நோக்கித்தான் காசிம் கத்தினான்.
இன்னும் சரியாக வாடிக்கையாளர்கள் வராததால் ஏழு முச்சக்கர வண்டிகளும் அங்கே நின்றிருந்தன. புதிதாக அவ் வரிசையில் சேர்வதற்காக வந்த இர்ஷாத்தைப் பார்த்துதான் காசிம் கடிந்து கொண்டான்.
இவ்வாறான காட்சிகளை ஒவ்வொரு முச்சக்கர வண்டி தரிப்பிலும் காணலாம். தங்களது இடத்தில் வந்து வேறொருவர் பயணியை ஏற்ற எந்தவொரு சாரதியும் இலேசில் விடாத நேரத்தில் நிரந்தரமாக நிற்க விடுவார்களா?
"பவ்பங் காசிம். எயாட்டத் அபி மெத்தன நதரகரன்ன இட தெமு -
பாவம் காசிம் இங்கே நிற்பாட்ட அவனுக்கும் இடம் கொடுப்போம் " சோமபால காசிமைப் பார்த்துச் சொன்னான்.
அந்த முச்சக்கர தரிப்பில் மூன்று இனத்தவர்களும் கலந்துதான் இருந்தனர். சோமபால அமைதியானவன். நல்ல குணநலமுள்ளவன். அத்தனைப் பேரையும் அனுசரித்துச் செல்பவன்.
"வேண்டாம் வேண்டாம் இவனுக்கு இடம் கொடுத்தால் நாளைக்கு இன்னும் ரெண்டு பேர் நம்மட ஸ்டேண்ட பிடிக்க வருவாங்க" காசிம் மீண்டும் கோபமாக கடத்தினான். அவனுக்கு ஆதரவாக சுரேஷும், சுலைமானும் குரல் கொடுத்தனர்.
ஆனால் ரமேஷும், காதரும், ஜினதாசவும் "பரவாயில்லை பரவாயில்லை எங்களுக்கு கெடைக்கிறது கெடைக்கும். அவனைப் பார்த்தா பாவமா இருக்கி" என அனுதாபக் குரலெழுப்பினர்.
இப்படி அவர்களின் நீண்ட வாக்கு வாதத்தின் முடிவில் காசிம் அரைமனதோடு இர்ஷாத் அங்கே தனது வண்டியை நிறுத்த சம்மதம் தெரிவித்தான். காசிம் கொஞ்சம் முரட்டு குணமுள்ளவனாக இருந்ததால் எல்லோரும் காசிமை அனுசரித்தே நடந்தனர்.
இர்ஷாத் உயர் தரம் வரை படித்தவன். படித்துக் கொண்டிருந்தபோதே வெளிநாட்டு வேலைக்குப் போனவன். வெளிநாட்டில் பல வருடங்களை கழித்து விட்டு வந்த அவன் நாடு திரும்பியபோது திருமணம் முடித்தான். ஒரு மாதம் மனைவியோடு வாழ்ந்த அவன் மீண்டும் வெளிநாடு சென்றான். வெளிநாடு சென்றாலும் இம்முறை அவனது மனைவியின் நினைவு அவனை அதிகம் வாட்டத் தொடங்கியது. மனைவி கர்ப்பமுற்று தனியாக பட்ட வேதனைகளையெல்லாம் நினைத்து நிலைகுலைந்து போனான்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு நாடு திரும்பிய இர்ஷாத்துக்கு மனைவியையும், பிள்ளையையும் விட்டு விட்டுச் செல்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கவும் முடியாதிருந்தது. மீண்டும் வெளிநாடு செல்வதில்லை என்று தீர்க்கமான முடிவெடுத்தான். கையிலிருந்த பணத்தைக் கொண்டு பழக்கமில்லாத வியாபாரங்களைச் செய்து அதனை இழக்க விரும்பவில்லை. எனவே முச்சக்கர வண்டியொன்றை வாங்கி வாடகைக்கு ஓட்டுவோம் என்று தீர்மானித்தான். வண்டி வாங்கி இரண்டு வாரங்கள் ஆகின்றன. அதனை நிறுத்திக் கொள்ளத்தான் ஒழுங்கான தரிப்பிடம் கிடைக்கவில்லை. அதுதான் இறுதியில் தான் வசிக்கும் தெருமுனையில் இருக்கும் தரிப்பிடத்திலேயே நிற்பாட்டுவோம் என்று தீர்மானித்தான். ஒருவாறு மற்றையவர்களின் சம்மதம் கிடைத்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணநலத்தை உடையவர்களாக இருந்தனர். ஆனால் மொத்தத்தில் எல்லோரிடமும் மனிதம் இருந்தது.
கூடிய விரைவில் இர்ஷாத் எல்லோருக்குமே நல்ல நண்பனாகிப் போனான். மற்றையவர்களைவிட படித்திருந்ததால் எல்லோருக்கும் அவனது உதவி தேவைப்பட்டது. வாக்காளர் விண்ணப்பம், பாடசாலை விண்ணப்பம் என்று அனைத்தையும் நிரப்பவும் இர்ஷாத் தேவைப்பட்டான். எல்லோருக்கும் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினான். அங்கே இன மத பேதம் இருக்கவில்லை. அந்த தரிப்பிடத்தில் எல்லோரும் மிகவும் ஒற்றுமையுடன் பழகினர்.
ஒரு வாரமாக சோமபால ஆட்டோ தரிப்பிடத்திற்கு வரவில்லை. அவனது கைபேசியும் வேலை செய்யவில்லை. எல்லோரும் ஒன்றாகப் பழகினாலும் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்று பழகும் பழக்கம் பெரிதாக இருக்கவில்லை. ரமேஷ் மட்டும் சோமபாலவின் வீட்டுக்கு சில தடவைகள் சென்றிருக்கிறான். நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து சோமபாலவை அவனது வீட்டுக்குச் சென்று பார்த்து விட்டு வருமாறு ரமேஷிடம் சொன்னார்கள்.
சோமபாலாவின் வீட்டுக்குப் போய்விட்டு வந்து ரமேஷ் சொன்ன செய்தி நண்பர்களுக்கு மிகவும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
சோமபால ஒரு பயங்கர நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறான். அவனும் அவனது மனைவி சோமலதாவும் இரு வீட்டாரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தங்கள் விருப்பத்திற்கு திருமணம் முடித்தவர்கள். அதனால் இரண்டு குடும்பங்களிடமிருந்தும் எந்த உதவியும் இன்றி அவதிப்பட்டார்கள். அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதிலும் வருவதிலும் சோமலதா மும்முரமாக இருந்தாள். இரண்டு பிள்ளைகளையும் பாடசாலைக்கும் அனுப்பவில்லை. சோமபால ஆட்டோ செலுத்தாததால் கையில் காசின்றியும் பசியோடும் இருக்கிறார்கள். பிள்ளைகள் கூட ஒழுங்காக சாப்பிடவில்லை. இப்போது சோமபால வீட்டில்தான் ஓய்வெடுக்கிறான்.
கதையை கேட்டதும் ஒட்டு மொத்த நண்பர்களுமே மிகவும் கவலைப்பட்டார்கள். ஏழு பேருமே ஒன்றாக சோமபாலாவைப் பார்க்க வீடு தேடிச் சென்றார்கள்.
உணவுப் பொட்டலங்களையும் எடுத்துச்சென்றார்கள். உணவுப் பொட்டலங்களைக் கண்டதும் அருகே ஓடி வந்த சோமபாலவின் பிள்ளைகளைப் பார்த்து கண் கலங்கினார்கள். நோய்வாய்ப்பட்டிருந்த சோமபாலவை எல்லா நண்பர்களுமே கட்டியணைத்தார்கள். எதற்கும் கவலைப்படவேண்டாம் என்று ஆறுதல் சொன்னார்கள். சோமலத்தாவைப் பார்த்து "தங்கச்சி இதுக்குப் பிறகு உங்களுக்கு யாருமே இல்ல என்று கலங்க வேண்டாம். இதோ உங்களுக்கு ஏழு அண்ணன்மார் இருக்கிறோம்" என்றார்கள். அந்த வார்த்தைகளைக் கேட்டு சோமலதா குலுங்கிக் குலுங்கி அழுதாள். ரமேஷ் ஒரு பிள்ளைக்குச் சோறூட்டினான். காசிம் ஒரு பிள்ளைக்கு சோறூட்டினான். சோமபாலாவுக்கும் நண்பர்கள் சோறூட்டினார்கள். சோமபால நண்பர்களின் பாசத்தைப் பார்த்து திக்கு முக்காடிப் போனான். அவனது நோயில் பாதி குறைந்ததை அவன் உணர்ந்தான். விடை பெற்ற நண்பர்கள் தங்களுக்குள் சேகரித்து வந்த பணத்தை சோமபாலாவிடம் கொடுத்தார்கள். சோமபால அதனை வாங்க மறுத்தான். என்றாலும் நண்பர்களின் அன்பு வற்புறுத்தலுக்கு முன் அவன் தோற்றுப்போனான்.
விடை பெற்று வெளியே வந்த நண்பர்களிடம் இர்ஷாத் ஒரு வேண்டுகோள் விடுத்தான். "இன்றிரவு ஏழு மணிக்கு நாங்கள் அனைவரும் எங்கள் ஸ்டேண்டில் சந்திப்போம்". இர்ஷாத் ஏதோ சொல்லப் போகிறான் என்று தெரிந்து கொண்ட நண்பர்கள் சம்மதம் தெரிவித்து பிரிந்தார்கள். ஒவ்வொரு திசையில் பறந்தார்கள்.
ஏழு மணியளவில் ஒவ்வொரு நண்பராக தரிப்பிடத்திற்கு வர ஆரம்பித்தார்கள்.
இர்ஷாத் தன் திட்டத்தை நண்பர்களிடம் சொன்னான். "சோமபால எங்கள் நண்பன். அவன் இப்படி துன்பப்படுவதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க முடியாது. அவனது பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லாமல் இருப்பதையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இப்போது எங்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. அது சோமபாலாவின் கவலையைப் போக்குவது. அவனது நோயை குணமாக்குவது. அவனது சுமையை இறக்கி வைப்பது. ஒவ்வொரு நாளும் ஒருவர் மாறி ஒருவர் சரத்தின் வீட்டுக்குச் சென்று அவனது பிள்ளைகளை பாடசாலையில் விட்டு வருவோம்.
பாடசாலை விட்டதும் வீட்டில் கொண்டு போய் விடுவோம். சோமபால ஆஸ்பத்திரிக்குப் போக ஒருவர் மாறி ஒருவர் எங்கள் ஆட்டோவில் கூட்டிப்போவோம். மறுபடி சோமபால நோய் குணமாகி வரும் வரை எங்கள் ஒவ்வொருவர் உழைப்பிலும் சிறு தொகையை ஒன்று சேர்த்து சோமபாலவிடம் கொடுப்போம். ஏனென்றால் இப்படியான ஒரு நிலை நாளை எமக்கும் ஏற்படலாம். அப்போதும் எங்களுக்குள் நாங்கள் இப்படியே உதவி செய்து கொள்வோம். எங்களுக்கு உதவி செய்ய வெளியிலிருந்து யாரும் வரமாட்டார்கள். நாங்களே எங்களுக்கு உதவியாக இருக்கவேண்டும் "
நண்பர்கள் ஒட்டு மொத்தமாக இர்ஷாத்தின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டனர். எல்லா நண்பர்களுமே ஒற்றுமையுடன் செயல்பட்டு உழைத்த காரணத்தால் விரைவிலேயே சோமபால பூரண சுகம் பெற்றான். பூரண சுகம் பெற்ற அவன் தனது நண்பர்களுடன் ஆட்டோ ஸ்டேண்டில் வந்து இணைந்து கொண்டான்.
இர்ஷாத் அவர்களை விடவில்லை. எல்லோருக்கும் தனித்தனியாக சேமிப்பு புத்தகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறினான். கட்டாயமாக ஒவ்வொரு நாளும் ஒரு சிறு தொகை ஒதுக்கி அதை சேமிப்பில் இடவேண்டும் என்று சொன்னதை எல்லோரும் ஆமோதித்தனர். அவர்கள் கற்பனை செய்திருக்காத விதத்திலே அவர்களிடம் பணம் சேர்ந்தது. ஒருவருக்கு கஷ்டம் என்று வந்த வேளையெல்லாம் மற்றவர்கள் தமது சேமிப்பிலிருந்து பணத்தைக் கொடுத்து உதவினர். இவர்களிடம் காணப்பட்ட ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் பார்த்து குடும்பத்தினர் அளவிலா ஆனந்தமடைந்தனர். வறுமையை மட்டுமே கண்டு வந்த அவர்கள் வாழ்வில் இப்போதுதான் வசந்தம் வீசத் தொடங்கியது.
இப்போது மற்ற ஆட்டோ ஸ்டேண்டில் உள்ளவர்களும் தாங்களும் இப்படி செய்வோமா என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.