எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 23 மே, 2020

"நோன்புப் பெருநாள் சிறுகதை" - புதிய தீர்மானம்



'அல் ஹஸனாத் மே, ஜூன் 2020 இதழில் இடம்பெற்றுள்ள எனது 
"நோன்புப் பெருநாள் சிறுகதை"
 
 
                                                                புதிய தீர்மானம்
                                                                                        
                                                                                                      - என். நஜ்முல் ஹுசைன்
 
' வாப்பா, வாப்பா எங்களுக்கு பெருநாள் இல்லையா வாப்பா....? ' நிஜாமின் பிள்ளைகள் கூடி வந்து கேட்டார்கள்.
 
' ஏன் மகன் அப்படி கேக்குறீங்க ....? ' தனது மூத்த மகனைப் பார்த்து நிஜாம் கேட்டான்.
 
' வாப்பா நாங்க நோம்பெல்லாம் பிடிச்சா நீங்க பெருநாளைக்கு புதிய உடுப்பெல்லாம் எடுத்துத் தருவீங்க. இந்தத் தடவ சின்னத் தம்பியும் அஞ்சு நோம்பு புடிச்சாரு. ஆனா நீங்க யாருக்குமே எந்த புதிய உடுப்பும் வாங்கல்லயே..? ' என நியாயமான கேள்வியைத்தான் கேட்டான். பிஞ்சு மனம் அப்படிக் கேட்டதில் தவறில்லை. 
 
நிஜாமின் மூத்த மகனுக்கு 12 வயது. அடுத்துள்ள பெண் பிள்ளைக்கு 9 வயது, கடைசி மகனுக்கு 7 வயது.
 
' மகன் இப்ப கொரோனா என்டு யாரும் வெளிய போகாம ஊட்டுக்குள்ளதானே இருக்கம். இந்த கொரோனா வெளியில எல்லாம் போய் கவனமில்லாம எல்லாரோடையும் ஒன்டா கலந்தா மறுபடியும் நாட்டுல பெரிய ஊரடங்கு சட்டம் போட வேண்டியிருக்கும். யாருக்கும் மறுபடி வேலைக்கு போக ஏலா. பல பேரு பசியால வாடுவாங்க. அதனாலதான் சிங்கள தமிழ் புதுவருஷம் வந்தப் போ அவங்களும் புது உடுப்பு உடுக்க இல்ல. அதபோல வெசக் வந்த நேரம் அவங்களும் தொரன் ஒன்டும் போட இல்ல. அதபோல நாங்களும் எங்கட பெருநாள இந்த தடவ அமைதியா கொண்டாடுவம். இன்ஷா அல்லாஹ் வார ஹஜ்ஜுப் பெருநாளக்கி நான் எல்லாத்துக்கும் புதிய உடுப்பு எடுத்துத்தாரன் ' 
 
நிஜாம் சொன்னதை புரிந்து கொண்டது போல அவனது மூத்த மகன் தம்பி, தங்கையை கூட்டிக் கொண்டுச் சென்றான்.
 
நிஜாமின் சிந்தனை பின்னோக்கிச் சென்றது.
 
பள்ளிவாசல்களெல்லாம் மூடியிருந்தார்கள். அன்று ஜும்மா தினம். என்றாலும் ஜும்மா தொழ முடியவில்லை. நிஜாமுக்குத் தெரிந்து அவன் தொழாமல் போன முதல் ஜும்மா.

அன்று மாலை ஐந்து மணிமுதல் நாடு பூராவும் ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் அமுல்;படுத்தியிருந்தது. இந்த ஊரடங்குச் சட்டம் பல மாதங்களுக்கு இருக்கும் என பேசிக்கொண்டார்கள்.
 
இது வேறு விதமான ஊரடங்குச் சட்டம். நமது நாட்டில் மட்டுமல்ல உலகமே ஊரடங்குச் சட்டத்தில் அடங்கிப் போயிருந்தது.
 
கொரோனா என்பதே எல்லோர் வாயிலும் பேசு பொருளாக இருந்தது. அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் பெருமளவில் இறந்து போனார்கள். நமது நாடும் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது.
 
சீனாவிலே கொரோனா என்றதும் பாவம் செய்த அவர்களுக்கு அல்லாஹ் தண்டனை வழங்கியிருக்கிறான் என்று சொல்லித் திரிந்து கொண்டிருந்த பலரது வாய் இப்போது அடைபட்டுப் போனது.
 
சீனாவிலிருந்து மற்றைய உலக நாடுகளுக்குப் போனது சரி நமது நாட்டுக்கு அது வரவே வராது என்று நினைத்துக் கொண்டிருந்தோரின் நினைப்பில் மண் விழுந்தது.
 
யாரோடும் கை குலுக்கக் கூடாது. பக்கத்தில் நின்று பேசக்கூடாது. முகக் கவசமில்லாமல் வெளியே வரக்கூடாது. அடிக்கடி கை கழுவ வேண்டும் என பல அறிவுரைகள் சுகாதார நிறுவனங்களால் சொல்லப்பட்ட வண்ணம் இருந்தன.
 
பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருந்தது மிகவும் வேதனையாக இருந்தாலும்கூட அதுதான் காலத்தின் கட்டாயம் என்பது நிஜாமுக்கு நன்றாகத் தெரிந்தது. இந்த கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். சமூகமாக இதனை நன்குணர்ந்து நாங்கள் செயற்பட வேண்டும் என்றும் எந்தப் பழியும் சமூகத்தின் தலையில் விழுந்துவிடக் கூடாது என்பதில் நிஜாம் கூடிய அக்கறை செலுத்தினான். அடிக்கடி இதுபற்றி நண்பர்களுடனும், குடும்ப உறுப்பினர்களுடனும் போனில் கதைத்துக் கொண்டே இருந்தான்.
 
சென்ற வருடம் நாட்டில் இடம்பெற்ற அசாம்பாவித சம்பவத்தால் தனது வியாபார ஸ்தலத்துக்கு வந்த பிற மத மக்களுடன் முகங்கொடுத்து பேச முடியாத நிலை ஏற்பட்டிருந்ததை அவன் மறக்கவில்லை. இம்முறையும் சிலர் செய்யும் தவறுகளை பூதாகரமாக்கி சமூகத்தின் தலையில் கொரோனாவை சாட்டுவதற்கு சிலர் தயாராகிக் கொண்டிருந்ததும் நன்றாகத் தெரிந்தது. எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் பள்ளிவாசல்களை மூடுவது பாவமான செயலல்ல. அதுதான் சமூகத்தையும், அதன் கௌரவத்தையும் பாதுகாக்கும் செயல் என்பதை தெளிவுபடுத்தி சொல்லி வந்தான்.
 
அன்றைய வெள்ளிக்கிழமை வீட்டுக்குள் போய் சேர்ந்த நிஜாம் அதற்குப் பிறகு
தேவையில்லாமல் வீட்டிலிருந்து வெளியே வரவேயில்லை.
 
அரசாங்கம் சொல்லுகின்ற அறிவுரை அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கல்ல, நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்குத்தான் என்ற உண்மை நிஜாமுக்கு தெட்டத் தெளிவாக விளங்கியது.
 
வாழ்க்கையில் முதன்முறையாக இப்படி அச்சப்பட்டிருக்கிறான் நிஜாம். நிஜாம் என்ன வீறாப்பு பேசிய பல சாம்ராஜ்யங்களே இந்த வைரஸுக்குப் பயந்து அடங்கி ஒடுங்கி நடுங்கிக் கொண்டிருக்கின்றன. கூடப் பிறந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று யாரையுமே அவன் காணவில்லை. எல்லோருடனும் அவ்வப்போது கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
 
நிஜாம் புறக்கோட்டையில் வியாபாரம் செய்பவன். திருமணமாகி மனைவி ; பிள்ளைகளுடன் ராஜகிரியவில் வசித்து வந்தான். அவன் இருந்த பகுதியில் அவனைச் சூழ முஸ்லிம்கள் மட்டுமல்ல சிங்கள குடும்பங்களும், தமிழ் குடும்பங்களும் வசித்து வந்தன.
 
நிஜாம் எப்போதுமே எல்லோருடனும் நட்புறவோடுதான் பழகுவான்.
அவனது வீடு பெரிய மாளிகையல்ல என்றாலும் கொஞ்சம் வசதியான வீடு. வீட்டுக்கு முன்பும் வாகனமொன்றை நிறுத்தக் கூடிய இட வசதியிருந்தது.
நிஜாம் வீட்டுக்குள் இருந்து வெளியே வராமல் சமாளித்துக் கொண்டாலும் மூன்று பிள்ளைகளை சமாளிப்பதென்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. குறிப்பாக நிஜாமின் மனைவிதான் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு சிரமப்பட்டாள். இப்போதுதான் அவள் பிள்ளைகளையும் பராமரித்துக் கொண்டு சமையல் செய்வதிலுள்ள சிரமங்களை நேரடியாக உணர்ந்து கொண்டான். கட்டாயம் முடிந்த வரை மனைவியின் சமையலுக்கு உதவவேண்டும் என தீர்மானித்துக் கொண்டான். மனைவி பலமுறை தடுத்தும் இந்த ஓய்வு காலத்தில் சமையலில் மனைவிக்கு உதவி செய்வதிலிருந்து தன்னை தவிர்த்துக் கொள்ளவே இல்லை.
 
மூத்த மகனுக்கு ஒன்லைனில் சில பாடசாலை பாடங்கள் நடந்தன. அது மட்டுமல்ல பிள்ளைகள் செல்லும் மத்ராஸாவின் ஹஸ்ரத் போனில் குர்ஆன் பாடங்களை பிள்ளைகளிடம் ஒவ்வொரு நாளும் கேட்டது நிஜாமுக்கும் அவனது மனைவிக்கும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
.
நிஜாம் மற்றைய நாட்களில் தனியாக அருகிலிருந்த பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவான். இப்போது வீட்டுக்குள்ளேயே தொழவேண்டிய நிர்ப்பந்தம். தான் வேறு மனைவி வேறாக ஏன் தொழவேண்டும் பிள்ளைகளுடன் ஒன்றாய் ஜமாத்தாய் தொழுவோமே என்று தீர்மானித்தான். மஃரிப் தொழுகையுடன் அவர்களது கூட்டுத் தொழுகை ஆரம்பமானது. மூத்த மகன் மத்ரஸா சென்று வருகிறான்தானே அவனையே இமாமாக வைத்து தொழுகை நடத்துவோம் என்று முடிவுகட்டி மகனின் தலைமையின் கீழ் மஃரிப் தொழுதார்கள். தொழுகையிலே மகன் ஓதிய கிராஅத்தைக் கேட்டு நிஜாமும், சகீனாவும் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். தொடர்ந்து வந்த தொழுகைகளும் மகனது தலைமையிலேயே நடந்தன. அப்போதுதான் தனது மகன் இவ்வளவு பெரிய சூராக்களை மனனமிட்டிருக்கிறான் என்பது நிஜாமுக்குத் தெரிய வந்தது. மத்ரஸாவின் ஹஸ்ரத்மார்களை எண்ணி மிகவும் பெருமைப்பட்டார்கள். 
 
மற்றைய ரமழான் காலங்களில் போலன்றி இம்முறை அவர்களது பொருளாதாரம் படு வீழ்ச்சியைக் கண்டிருக்கும் என்பது நிஜாமுக்கு நன்கு தெரிந்தது. எமது சமுதாயத்தின் வசதி படைத்தோர் இது குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்த்தான். தனக்கு தொடர்பிருந்த பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் இது குறித்து கதைத்தான். தானும் இதற்கு பங்களிப்புச் செய்வதாகவும் கூறி வைத்தான்.
 
இந்த ஊரடங்குக் காலத்தில் பிள்ளைகள் விரும்பும் உணவுகளை வாங்கிக் கொடுப்பதென்பது சிரமமான காரியம்தான். வெளியே எங்கேயும் போகாமல் நிஜாம் வீட்டுக்கு முன்னாலே இருந்த அஜித் மல்லியின் கடையில் தங்களது பொருட்களை வாங்கிக்கொண்டான். அஜித் மல்லி அத்தியாவசிய சேவை என்று பொலிஸில் அனுமதிப் பெற்று புறக்கோட்டைச் சென்று பொருட்கள் வாங்கி வருவான்.
 
இப்படி ஒரு நாளும் நிஜாம் வீட்டில் அடைபட்டுக் கிடந்ததே இல்லை. தூங்கும் நேரம் எழும்பும் நேரமெல்லாம் மாறிப்போயிருந்தது.
 
நீண்ட ஊரடங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்திருந்தது.
பக்கத்து வீட்டிலிருந்த சுமனதாஸ அன்றாட செலவுகளுக்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது. அவன் நாள் கூலிக்கு வேலை செய்பவன். அவனுக்கு ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என ஐந்து பிள்ளைகள். அவனது வயதான அம்மாவும் அவர்களோடுதான் இருந்தாள். சுமனதாஸ தொழிலுக்கு போகாமல் எப்படி அந்தக் குடும்பத்தைச் சமாளிப்பான் ?
 
ஆனாலும் யாரிடமும் பல்லிளித்து கை நீட்டும் பழக்கம் அவனிடமில்லை.
நிஜாமின் மனைவிக்கு அந்தக் குடும்பத்தோடு நல்ல தொடர்பிருந்தது. கொரோனா வேளையில் நெருங்கிப் பழகா விட்டாலும் மதில் சுவருக்கு மேலால் சுமனதாஸவின் மனைவி ஸ்ரீயானியுடன் அடிக்கடி பேசிக் கொள்வாள்.
 
'அண்டை வீட்டார் பசித்திருக்க தாம் மட்டும் உண்பவர் உண்மை முஸ்லிமல்ல' என்ற ஹதீஸின் தத்துவம் உணர்ந்தவள் நிஜாமின் மனைவி சகீனா.
 
நிஜாம் வியாபாரத்தோடு சம்பந்தப்பட்டிருந்ததாலும் தனது வேலைகளை திட்டமிட்டு செய்து வந்ததாலும் அவனிடம் நல்ல சேமிப்பு இருந்தது.
அதனால் சகீனா சுமனதாஸவின் குடும்பத்திற்கு தாராளமாக கொடுத்துதவினாள். முதலில் உதவிகளைப் பெற்றுக் கொள்ள சுமனதாஸ வெட்கப்பட்டாலும் தனது பிள்ளைகளை எண்ணியும், நிஜாம் குடும்பத்தினரின் நல்ல பண்புகளை அறிந்ததாலும் அந்த உதவிகளைப் பெற்றுக் கொண்டான். நிஜாமின் மனைவி உதவிகளை அன்பளிப்பாக செய்தாலும் சுமனதாஸ அவற்றை கடனாக குறித்து வைத்துக் கொண்டான்.
 
கொரோனா கலவரத்துக்கூடாகவே ரமழான் நோன்பும் ஆரம்பமானது.
 
நிஜாமின் குடும்பம் சகல தொழுகைகளையும் ஜமாஅத்தாகவே நிறைவேற்றியது. பள்ளிவாசலிலே நடக்கும் அனைத்து அமல்களும் அவனது வீட்டிலே நடந்தது. தராவீஹ், தஸ்பீஹ், வித்ர் போன்ற அனைத்து தொழுகைகளில் பிள்ளைகளையும் இணைத்துக் கொண்டு அவர்கள் செய்து வந்த அமலால் மிகவும் மகிழ்ந்தது நிஜாமின் மனைவி சகீனாதான்.
' மத்த ரமழான்ல நீங்க மட்டும் பள்ளிக்குப் போய் எல்லா அமலையும் செஞ்சிட்டு வருவீங்க. நாங்க ஏதோ சிலத வீட்ல இருந்து செய்வோம். இந்த முற தான் நான் மிக திருப்தியா ஏன்ட அமல்கல செய்றன். பாருங்க எங்கட பிள்ளைகள்கூட தொழுறவிதத்தெல்லாம் படிச்சுக் கொள்ளுறாங்க. நீங்க கூட முன்பு கொஞ்சம்தான் குர்ஆன் ஓதுவீங்க. இப்ப ஒரு நாளக்கி ஒரு ஜூஸுக்கு மேல ஓதுறிங்க ' என்று சகீனா சொன்னபோது நிஜாமும்கூட உள்ளம் பூரித்தான்.
 
' அடடா எங்கள பயப்பட வச்சிருக்கும் கொரோனாகூட சில நன்மைகளையும் செஞ்சிதானிருக்கி. ஒவ்வொரு முஸ்லிம்ட வீட்டயும் பள்ளிவாசல ஆக்கியிருக்கி. எங்கள இன்னும் இன்னும் அல்லாஹ்கிட்ட நெருங்க செஞ்சிருக்கி '
 
வழமையாக நோன்பின் இறுதி பத்தில் தனது உறவினர்களுக்கு அரிசி போன்ற உணவுப் பொருட்களை தாராளமாக வாங்கிக் கொடுக்கும் பழக்கம் நிஜாமிடமிருந்தது. ஸக்காத் பணத்தையும் கணக்குப் பார்த்துக் கொடுத்துவிடுவான்.
 
இம்முறை நிஜாம் ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தான். அரசாங்கம் ஊரடங்கு நடைமுறையில் சில தளர்வுகளைச் செய்திருந்தது. வியாபாரத்துக்காகவும் நிஜாம் சில நாட்கள் சென்று வந்தான். ஏழைகளுக்காக கொடுக்கும் உணவுப் பொதியின் தொகையை அதிகரித்திருந்தான். அவற்றை அவன் பங்கிடுவதற்காக வெளியே எங்கேயும் செல்லவில்லை. தனது வீட்டுக்கருகில் இருக்கும் அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் அவற்றை அவனே நேரில் சென்று வழங்கினான். அப் பொதிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் எல்லோருமே முஸ்லிம்களல்லர் – பௌத்த மக்களும், தமிழ் மக்களும் பெரும்பான்மையாக அடங்கியிருந்தனர். நிஜாம் தனது ஸக்காத் பணத்தைப் பங்கிட்டுக் கொடுக்கும்போது மெயின் ஸ்ட்ரீட்டில் பாதையோரம் துணி வியாபாரம் செய்யும், இம்முறை எந்த வியாபாரமுமின்;றி நொடிந்து போயுள்ள பௌமி நாநாவுக்கும், நஸீர் நாநாவுக்கும் பகிர்ந்தளிக்கவும் மறக்கவில்லை.
 
நோன்புப் பெருநாளை நிஜாமும், மனைவியும் பிள்ளைகளும் வீட்டிலே இருந்த ஆடைகளை அணிந்து, பெருநாள் தொழுகை தொழுது அமைதியாக கொண்டாடினர்.
 
இம்முறை தாம் ரமழானில் செய்த தான தருமம் வல்லான் அல்லாஹ் விரும்பும் வழியில் அமைந்திருந்தது என்பது நிஜாமுக்கும், சகீனாவுக்கும் மிகவும் மனத்திருப்தியைக் கொடுத்தது.
========================================
நன்றி: இர்ஷாத் இமாம்தீன்



வெள்ளி, 1 மே, 2020

கவிஞர் ரவூப் ஹஸீர்

வலம்புரி கவிதா வட்டத்தின் 14வது கவியரங்கம் 13-04 2015 பௌர்ணமி தினத்தன்று கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றபோது கவியரங்கினை தலைமையேற்று நடாத்த கவிஞர் ரவூப் ஹஸீர் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.
                         - என். நஜ்முல் ஹுசைன், தலைவர் வலம்புரி கவிதா வட்டம் - (வகவம்)

சொல் கொண்டு வருவான்
இல்லை, இல்லை
சமுதாய சீர்கேட்டை அடித்து நொறுக்குகின்ற
கல் கொண்டு வருவான்
நாங்களெலாம்
அவன் கவிதையிலே வண்டாய் மயங்க
கள் கொண்டு வருவான்

தன் கவிதையின் ஆழத்தால்
தொடுவான்
அந்தத் தொடுவான்

கண்டதில்லை இவன் கவியில்
தளை, அடி, தொடை, அசைச் சீர்
 என்றாலும் இவன்
புதுக்கவிதை உலகில்
கிடைத்த பெரும் சீர்
குளறுபடிகள் இல்லா இவன் வரிகள்
என்றுமே சீர்

குதூகலமாய் அழைப்போம் நாம் அக் கவியை
அவன் எங்கள்
இதயங் கவர்

கவிஞர் ரவூப் ஹஸீரே
வகவம் இன்றுன்னை தலைமைக்கு அழைத்தது
தலை 'மைக்கு' தந்தது' 





--; என்.நஜ்முல் ஹுசைன்,
தலைவர் வலம்புரி கவிதா வட்டம் - (வகவம்)

)