எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 30 ஜனவரி, 2017

வாழ்த்துக் கவிதை

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை சார்பாக 26.12.2016 (திங்கள் கிழமை) சென்னை, புகாரி ப்ளுலாகூன் மண்டபத்தில் பேராசிரியர் சமீரா மீரான் அவர்களின் 'அன்பு மகளின் அருமை மகளுக்கு' நூல் வெளியீட்டு விழாவும்> திருமண பந்தத்தில் இணைந்த அவரது மகன் மணமகன் முகமது சமீர் ஹசன் மணமகள் ஜெஸ்மின் ஹாஜிராவுக்கான திருமண வரவேற்பு விழாவும் ஒருங்கே நடைபெற்றபோது மணமக்களுக்காக வாசிக்கப்பட்ட வாழ்த்துக் கவிதை
 
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

கடலலைகள்
தாண்டி  வந்தேன்
கையில்
மடல் கொண்டு
ஓடி வந்தேன்

மை தொட்டு எழுதாமல்
என்
மனந் தொட்டு
எழுதிய ஒரு
பாமாலை
கொண்டு வந்தேன்

அன்போடு இணைகின்ற
மணமக்களே
நான்
பூமாலை சூட வந்தேன்

இல்லறமாம் இலக்கியத்தில்
இதயங்களை இணைக்கின்ற
பொன்னான தருணமிது
இதற்கீடான தருண மெது ?

உற்றார்கள் உறவினர்கள்
ஒன்றாக வாழ்த்துரைக்க
நற்றவமே பெற்றேனே
நானும்தான் இங்கிருக்க

நற்றுணையைப் பெற்றோரே
நபிகள் வழி செல்வோரே
வற்றாத அன்போடு
வாழ்க்கை வழி இணைந்தோரே
உற்ற மண மக்க ளுமை
வாயார வாழ்த்த வந்தேன்
வார்த்தைகள் கோர்த்து வந்தேன்

மணம் வீசும் மணமகனே
முகமது
சமீர் ஹசனே - உன்
முக  மது
எந்நாளும் ஜொலிக்க
வாச மலர்
பெயர் கொண்டாள்
நேச கரம்
நீட்டி நின்றாள்

ஜெஸ்மின் எனும்
மலர்க்கிணையாள்
உனக் கிணையாள்
என்று வந்தாள்

குணம் மேவும் மணமகளே
ஜெஸ்மின்
ஹாஜிரா  நல்லாளே - நீ
விண்மீனாய்
எப்போதும் மின்ன
அழகான
பெயர் கொண்டார்
உன்னோடு
சேர்ந்து நின்றார்

ஹாஜி ரா
துன்பம் இரா
வாழ்வு  தர
துணையாக
வந்து நின்றார்

சீராக சிறப்பாக
நடக்கு மிந்த திருமணம்தான்
இதை
காண்கையிலே உவகையிலே
பூரிக்கும்
எம் மனந்தான்

ஒருவருக்கு ஒருவர் நீர்
ஆடையென தானிருந்தால்
எந்நாளும் இனித்திருக்கும்
இல்லறமே கிடைத்துவிடும்

ஏக இறை மறை வழியில்
ஏந்தல் நபி சொல் வழியில்
வாழுகின்ற
முஸ்லிமென இணைந்திருப்பீர்

உம் வாழ்வைப் பிறருக்கும்
உதாரணமாய் காட்டுகின்ற
பெரு வாழ்வு வாழ்ந்திடுவீர்
பேரின்பம் பெற்றிடுவீர்

கொடுப்பதிலே மட்டுமல்ல
விட்டுக்
கொடுப்பதிலே கூடத்தான்
நிறைவாக இருந்திடுவீர்
எனின்
காண்பீரே உம் வாழ்வில்
மகிழ்ச்சியதும் கூடத்தான்

நான் என்ற அகந்தைக்கு
இல்லறத்தில் இடமில்லை

நாண் போன்றே
நீர்  வளைந்து
வாழ்ந்துவிடில்
உங்கள் இன்பத்திற்கு
பஞ்சமில்லை

பெற்றோரைப் பெற்றோரே
பெற்றோராய் ஆகிடுங்கள்

பெற்றதனால் மட்டும் நீர்
பெற்றோராய் ஆகாமல்
நல்ல குணத்தோடு
உயர் கல்வியிலே
செல்வத்திலே
புகழ் பரப்பும்
குழந்தைகளைப்
பெற்றோராய் ஆகிடுங்கள்

மணமகனே
முகம்மது சமீர் ஹசனே
மணமகளே
ஜெஸ்மின் ஹாஜிராவே

இலங்கையிலே
இருந்து வந்து
இதயத்தால் வாழ்த்துகிறேன்
உங்கள்
இளங் கைகள்
இணைவதை நான்
பூரித்தே போற்றுகிறேன்

என்றென்றும் நும் வாழ்வு
வல்லான்
அல்லாஹ்வின் அருள் நிறைந்த
வாழ்வாக அமைந்திடவே
அவனையே நான்
இறைஞ்சி நின்றேன்

பிரார்த்தனைகளுடன்


- என். நஜ்முல் ஹுசைன்