எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

கவிஞர் கம்மல்துறை இக்பால்,

வலம்புரி கவிதா வட்டத்தின் 70 ஆவது கவியரங்கு 01 – 09 – 2020 செவ்வாய்க்கிழமை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கைத் தலைமையேற்க கவிஞர் கம்மல்துறை இக்பால் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன். - என். நஜ்முல் ஹுசைன், தலைவர் - வகவம் 

அடக்கம் தனை தன்னுள்ளே வைத்து 
அகங்காரம் என்றெதுவும் இன்றி 
தொடக்கம் முதல் இலக்கியத்தில் இயங்கி 
தெரியாதது போல் இவரும் இருப்பார் 
நடக்கின்ற வற்றையெல்லாம் ரசித்து 
நல்லவற்றைப் பாராட்டி மகிழ்வார் 
கிடைக்கின்ற போதெல்லாம் எழுதி 
குவித்தாலும் இலைமறைத்த காய்தான் 

 தசாப்தங்கள் பலவற்றைத் தாண்டி 
தன் திறமை பத்திரிகைத் தாளில் 
உசாராக இவர் பதித்தாலும் 
எங்கேயோ எங்கேயோ போட்டார் 
விசா தந்து அழைத்தவக வத்தால் 
வியப்புற்றார் தன்நிலைமை கற்றார் 
அசாதார ணகவிஞன் தானும் 
என்ற உண்மை இவர் உணர்ந்து கொண்டார் 

 கட்டிடத் துறைதன்னில் மிளிர்ந்து 
காரியங்கள் ஆற்றிட்ட போதும் 
எட்டிடும் துறை எங்கள் கவிதை 
என்பதையே உணர்ந் தின்று எழுந்தார் 
பட்டிட்ட அனுபவங்கள் எல்லாம் 
பாங்காக படைத்துவிடு மிவரை 
கட்டியேநாம் கூட்டி வந்தோம் 
கவியரங்கத் தலைமையையும் தந்தோம் 

கம்மல் துறை தந்த இக்பால் 
கண்ணியம் பொருந்திய ஓர் ஆள் 
சம்மதம் சொன்னாரே அரங்கை 
 சறுக்காமல் தலைமேலே ஏற்க 
கம்பனை வள்ளுவன் தம்மை 
காட்டுக கவிஞரோ டிணைந்து 
எம்பியே குதித்திட வைப்பீர் 
எம்புகழ் திக்கெட்டும் பரவ 

கவிஞர் கம்மல்துறை இக்பால், 

கவியரங்கை உங்களிடம் தந்தோம் 
எங்கள் காதுகளில் கம்மலிட்டு ஜொலிக்க 
வைப்பீரென்று 
எதிர்பார்த்து நாங்களிங்கு நின்றோம் !

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

"உடைந்த சைக்கிள்" சிறுகதை

Add caption
 

  •  உடைந்த சைக்கிள்
                           - என். நஜ்முல் ஹுசைன்

    " பழைய இரும்பு சாமான், பிளாஸ்டிக், பழைய பேப்பர் வாங்குறது "
    மிக தொலை தூரத்திலிருந்து இந்த சத்தம் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது.

    அன்று ஞாயிற்றுக்கிழமை ஒன்பது மணிக்குப் பிறகும் படுக்கையிலே உருண்டு கொண்டிருந்தான் நியாஸ்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் சுபஹ் தொழுது குர்ஆன் ஓதிய பின் சூரியன் உதயமான பின்பு மீண்டும் ஒருமுறை உறங்கும் வழக்கம் நீண்ட காலமாக நியாஸிடம் இருக்கும் பழக்கம். மற்ற நாட்களில் அப்படி உறங்குவதற்கு அவனுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதேயில்லை. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து விட்டு மூத்த மகனை பாடசாலையில் விட்டு விட்டு அலுவலகம் செல்வதற்கு நேரம் சரியாக இருக்கும். எனவே ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை அவன் அனுபவிக்கத் தவறுவதில்லை.

    அரை தூக்கத்திலிருந்த நியாஸுக்கு அந்த பழைய இரும்பு சாமான்காரனின் சத்தம் கேட்டாலும் கூட கண்களை மூடிக் கொண்டுதானிருந்தான்.

    " ஏம்பா தேடிக்கொண்டிருந்தீங்களே. இதோ வாரான். கொஞ்சம் எழும்பி அந்த சைக்கிள கொடுத்துறுங்க..... " மனைவி பாஹிரா சொன்னாள்.

    " ஆ....." சோம்பல் முறித்தவாறே கண்களை திறந்தான் நியாஸ்

    " இரி இரி.... அவ என்ன இங்கயா இரிக்கான். ஒரு கட்டக்கி அங்குட்டு இரிக்கான். "

    " அட அப்படியென்னா நீங்க சத்தத்த கேட்டுக் கொண்டுதானிருக்கீங்க. பொய்க்கி தூங்குற மாதிரி நடிக்கிறீங்க" என்றாள் பாஹிரா.

    "நாங்க கொஞ்சம் தூங்குனா ஒங்களுக்கு புடிக்காதே "  நியாஸ் முணுமுணுத்தான்.

    " தூங்குங்க தூங்குங்க நல்லா தூங்குங்க. ஆம்புள்ளைகளுக்கு என்னா லீவு நாள் என்று ஒன்று இரிக்கி. எங்களய மாதிரி பொம்பளகளுக்கு எங்க லீவு. எல்லா நாளும் வேல நாளுதான் " கிண்டலாகச் சொன்னாள் பாஹிரா.

    படுக்கையிலிருந்து எழுந்து கொண்டு கண்ணைக் கசக்கிக் கொண்டு சிரித்துக் கொண்டே நியாஸ் சொன்னான், "அதென்டா உண்மதான். பொம்பளைகளுக்கு எங்க லீவு. சில பேங்குகளுல 24 தர 7 - 365 நாட்கள் என்று விளம்பரம் போட்டிருக்காங்க "

    " அட அதென்ன 24 தர 7 - 365 நாட்கள் ? " கேட்டாள் பாஹிரா.

    " அப்படின்னா அந்த பேங்கு ஒவ்வொரு நாளும் 24 மணித்தியாலம் அதுவும் 7 நாளும் வேல செய்யுறாங்கலாம். மூடுறதே இல்லையாம். அதுதான் வருஷத்தில 365 நாளும் லீவே எடுக்காம வேல செய்யுறாங்கலாம். எனக்கிட்ட கேட்டா ஒங்களய மாதிரி பொம்பளைங்களதான் 24 தர 7 - 365 நாட்கள் என்று சொல்லனும். நீங்க தானே ஒவ்வொரு நாளும் இருபத்தி நாலு மணி நேரமும் லீவே எடுக்காம வேல செய்யுறீங்க " என்று பெண்களுக்குச் சான்றிதழ் வழங்கினான் நியாஸ்

    " அத ஒத்துக் கொண்டீங்களே அதுக்கு முதல்ல ஒரு தேங்ஸ் சொல்லனும் " பாஹிரா நக்கலாகச் சிரித்தாள்

    பேசிக் கொண்டே நியாஸ் படுக்கையிலிருந்து எழுந்து குளியலறைச் சென்று அவசரமாக வாயை அலம்பி முகத்தை பேருக்கு கழுவிக் கொண்டான்.

    நியாஸ் வெளியே வரவும், பழைய இரும்பு வியாபாரி வீட்டு வாசலுக்கு வரவும் சரியாய் இருந்தது.

    " ஏ பழைய இரும்பு கொஞ்சம் நில்லு வாரேன் " என்று தெருவுக்கு கேட்பதற்கு கத்தினான்.

    பழைய இரும்பு வியாபாரி இப்படியான சத்தங்களை கேட்பதற்கே தனது காதுகளை கூர்மையாக்கிக் கொண்டு வருபவன்தான்.

    அதனால் சத்தம் கேட்டவுடன் நியாஸின் வீட்டு வாசலில் தான் தள்ளிக் கொண்டு வந்த வண்டியை நிறுத்தினான்.

    அவனது வண்டியில் பழைய சாமான்கள் கொஞ்சம் இருந்தன. பெட்டி போன்றிருந்த பழைய கொம்பியூட்டரும்கூட அவனது வண்டியை அலங்கரித்துக் கொண்டிருந்தது. இப்போது தான் மெல்லிய கொம்பியூட்டர்கள் வந்து விட்ட காரணத்தால் பழைய பெட்டி கொம்பியூட்டர்களுக்கு மவுசு போய்விட்டது. அதனால் அதுவும்கூட  பழைய இரும்பு பிளாஸ்டிக் பொருட்களுடன் இணைந்து கொண்டன.

    வீட்டு ஸ்டோர் அறையிலே இருந்து நியாஸ் ஒரு சிறிய சைக்கிளை தூக்கிக் கொண்டு வந்தான். அவனது நான்கு வயது மகன் ஓட்டி விளையாடிய மூன்று சக்கர வண்டி.  முன்னால் உள்ள சக்கரத்தின் கம்பிகள் வளைந்திருந்தன.

    குழந்தையாக இருந்த போதிலிருந்தே அவனது மகன் மூன்று சக்கர சைக்கிளை கண்டால் விடமாட்டான். அதிலே அவனை ஏற்றி உட்கார வைத்தால்தான் அழுகையை நிறுத்துவான்.   அதிலே வைத்து தள்ளும் போதுதான் சிரிப்பான். அப்படியான சைக்கிள் எங்காவது உறவினர் வீடுகளுக்கு போனால்தான் இருக்கும். என்றாலும் நியாஸ் தனது சிறிய மகனை அந்த வண்டியில் வைத்ததும் அந்த வீட்டிலிருக்கும் சைக்கிளின் சொந்தக்கார பிள்ளை 'வீல்' என்று அழும். தனது சொத்து தன்னிடமிருந்து பறி போகிறதே என்ற ஏக்கம் அதற்கு. தனது பிள்ளையை சிரிக்க வைக்க இன்னொரு பிள்ளையை அழ வைக்கவேண்டியிருந்தது.

    தனது மகனுக்கு கால் நீட்டமானதுமே நியாஸ் செய்த முதல் வேலை மகனுக்கென்றொரு மூன்று சக்கர வண்டி வாங்கியதுதான்.

    அவனது வீட்டுச் சுற்றுப்புறத்தில் மகனுக்கு பெரிதாய் விளையாட இடம் இல்லாவிட்டாலும் விடுமுறை நாட்களில் சிறுவர் பூங்காவுக்கு அழைத்துச் சென்று விளையாட வைப்பான். அப்படி தனது மகன் காலாற விளையாடிய சைக்கிள்தான் அது. விளையாடி விளையாடி அதன் முன் சக்கரங்களின் கம்பிகள் உடைந்தும் போயின. இப்போது அந்த மகனுக்கு நான்கு வயது. அவனுக்கு இப்போது இந்த சைக்கிளின் மீதுள்ள ஆசைபோய்விட்டது. அதற்கு பதிலாக சார்ஜ் செய்து ஓட்டும் மின்சார பைக்கின் மேல் ஆசை வந்து விட்டது. எங்கேயாவது ஷொப்பிங் சென்டர் களுக்கு போனால் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் மின்சார பைக்கில் ஏறி உட்கார்ந்து கொண்டு இறங்க மாட்டான். மிகவும் கஷ்டப்பட்டே அதிலிருந்து அவனை எடுத்துக் கொண்டு வருவார்கள். இல்லை இழுத்துக் கொண்டு வருவார்கள். எப்படியும் அப்படியான ஒரு பைக்கை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நியாஸும் அவனது மனைவியும் தீர்மானித்துக் கொண்டார்கள். ஆகக் குறைந்ததையே இருபதினாயிரம் என்று சொன்னார்கள்.

    பட்ஜெட்டில் இருபதினாயிரத்தை ஒதுக்க ஒரு மூன்று மாதங்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டன. மகன் ஆசைப்பட்டது போலவே மின்சார பைக் வாங்கி அதை அவன் ஆசை தீர ஓட்டி மகிழ்கிறான்.

    அதனால் இந்த பழைய மூன்று சக்கர சைக்கிளை யாருக்காவது விற்றுவிட்டு வோம் என்று யோசித்தார்கள். என்றாலும் அதனை வாங்க யாரும் முனைப்பு காட்டவில்லை. அதனால்தான் அதனை பழைய இரும்பு வியாபாரியிடம் விற்பதற்கு கணவனும் மனைவியும் பேசிக் கொண்டார்கள். அதுதான் பழைய இரும்பு வியாபாரியின் குரல் கேட்டதுமே அவர்களுக்கு உற்சாகம் வந்து விட்டது.

    இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து வாங்கிய மூன்று சக்கர சைக்கிள் வண்டி. இப்போது முன் சக்கரம் மட்டும் தான் உடைந்திருக்கிறது. அதை ரிப்பெயார் செய்தால் நன்றாக ஓடலாம்.

    " தம்பி இத எடுத்துக்கிட்டு ஆயிரம் ரூபா தா. கொஞ்சம் இத செஞ்சா நல்ல வெலக்கி விய்க்கலாம் "

    அதை நீட்டியவுடன் பழைய இரும்பு வியாபாரி மிகவும் ஆவலோடு அதை வாங்கி அங்கும் இங்கும் திருப்பித் திருப்பிப் பார்த்தான். ஏதோ யோசித்தான்.

    "தொர இத எனக்கு தாங்க. நான் முந்நூறு ரூபா தாறேன் " என்றான்.

    " போப்பா முந்நூறு ரூபாய்க்கு இத தர ஏலுமா. நல்லா ஒன்றுமே ஒடைஞ்சி இல்லநீ கொஞ்சம் சரி செஞ்சா ஒனக்கு நல்ல வெலக்கி விக்க ஏலும். இதுல புது பைசிக்கள் மூவாயிரம் ரூபா வரும். சரி பரவாயில்லை எட்டு நூறு ரூபா தா "

    " இல்ல தொர எனக்கிட்ட அவ்வளவு சல்லி இல்ல.  ஒரு முன்னூத்தி அம்பது ரூபா தாறேன். எனக்கு தாங்க தொர " என்று வியாபாரியாக இல்லாமல் ஏதோ ஓர் ஏக்கத்துடன் கேட்டான்.

    நியாஸுக்கு அவன் மகனுக்கு வாங்கிய மின்சார பைக்கின் விலை ஞாபகம் வந்தது. பதினெட்டாயிரம். இந்த சைக்கிளை விற்று ஒரு எண்ணூறு ரூபாயையாவது அதில் ஈடு செய்ய வேண்டும் என்பதே அவனது தீர்மானமாக இருந்தது.

    " ஏலா ஏலா எட்டு நூறு ரூபா தாரதென்டா தா . இல்லாட்டி போ. நான் சைக்கிள விக்க இல்ல " என்று சொல்லியவாறே சைக்கிளை மீண்டும் கையிலே எடுத்துக் கொண்டான் நியாஸ்.

    பரிதாபமாக பார்த்தபடி அந்த இரும்பு வியாபாரி 


    " தொர இத நா விக்க எடுக்கல்லை. ஏன்ட மகனுக்கு குடுக்க நெனச்சேன். மிச்ச நாளா எனக்கிட்ட ஏன்ட மவன் சைக்கிள் வாங்கி கேட்டு அழுந்து கொண்டிருக்கிறான். புதிய சைக்கிள் வாங்க எங்க தோரே எங்கள்ட சல்லி. ஒங்க சைக்கிள கொண்டு போய் ஒரு முன்னூறு செலவளிச்சா புது சைக்கிள் மாதிரி செஞ்சி குடுத்துருவன். அதுதான் பாத்தேன். "

    இப்போதுதான் இரும்பு வியாபாரி சைக்கிளை ஏக்கத்துடன் பார்த்த காரணம் நியாஸுக்கு விளங்கியது. என்றாலும் நியாஸ் கேட்ட எண்ணூறு ரூபாய்க்கும் அவன் சொல்லும் முன்னூற்றி ஐம்பது ரூபாய்க்கும் எவ்வளவு வித்தியாசம். நியாஸ் யோசித்துக் கொண்டிருந்த போதே உள்ளே இருந்து சாஹிரா பேசினாள்

    " கொஞ்சம் இங்க வாங்க..... " என்று நியாஸை கூப்பிட்டாள்.

    நியாஸ் கையிலே சைக்கிளையும் தூக்கிக் கொண்டே உள்ளே போனான். இரும்பு வியாபாரி சிறிது நேரம் தாமதித்துப் பார்த்தான். உள்ளே போன நியாஸ் வெளியே வர காணவில்லை.

    உள்ளே சென்ற நியாஸுக்கு அவரது மனைவி "வேலய பாருங்க அந்த சைக்கிள தூக்கி ஒரு மூலைல போடுங்க. முன்னூத்தி அம்பது ரூபா பெரிய முன்னூத்தி அம்பது ரூபா " என்று சொல்வது போல் காதில் கேட்டது

    தனது ஆசை நிராசையான வேதனையோடு இரும்பு வியாபாரி அந்த இடத்தை விட்டு அகன்றான். தனது அன்பு மகனின் முகம் அவனது மனத்திரையில் வந்து கொண்டிருந்ததால் ' பழைய இரும்பு சாமான், பிளாஸ்டிக், பழைய பேப்பர் வாங்குறது ' என்று கத்த முடியாமல் அவனது தொண்டை கரகரத்துக் கொண்டிருந்தது.

    மௌனமாகவே சிறிது தூரம் வண்டியை தள்ளிக் கொண்டு போன அவனை
    " தம்பி தம்பி " என்ற சத்தம் திரும்பிப் பார்க்க வைத்தது.

    தூரத்திலே நியாஸ் நின்று கொண்டு கையை அசைத்து அங்கே வருமாறு சைகை காட்டினான்.
    வண்டியை மெதுவாக திருப்பிக் கொண்டு நியாஸுக்கு அருகில் சென்று நிறுத்தினான். மீண்டும் அவனை அங்கே நிறுத்தி விட்டு உள்ளே சென்ற நியாஸ் கையிலே சைக்கிளுடன் வந்தான்.

    " தம்பி இந்த சைக்கிள எடுத்துக்கோ " என்று சொல்லியதோடு நிற்காமல் நியாஸ்


    " இந்த பணத்தையும் வச்சி முன் ரோதய ரிப்பெயார் பண்ணி ஒன்ட மகனுக்கு குடு " என்று கூறி ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றையும் நீட்டினான்.

    இரும்பு வியாபாரிக்கு தனது கண்களையே நம்ப முடியவில்லை.
    அவரது மனைவி சொன்னதை அவர் கேட்கவில்லையோ,  என்று  நினைத்தான்.

    தனது மகனுக்காக ஆசைப்பட்ட சைக்கிள் தனக்கு கிடைக்கிறதே அதுவும் போதாதற்கு ரிப்பெயார் பண்ண பணமும் தருகிறாரே.

    " ஐயா பணமெல்லாம் வாணாம் ஐயா. இந்த முன்னூத்தி அம்பது ரூபாயவாவது எடுங்க ஐயா "

    " இல்லப்பா நான் மனப்பூர்வமா இத தாரேன். நீ ஒன்ட மகனுக்கு என்டு சொன்னதும் ஏன்ட பொண்டாட்டிட மனச உருக்கிரிச்சு. ' எங்கட மகன் எங்கள கரச்சல் பண்ணினது மாதிரி தானே அவர்ட மகனும் கரச்சல் குடுப்பான். எங்களுக்கு எங்கட மகன் மாதிரி தானே அவருக்கு அவர்ட மகன். பணம் என்னப்பா பெரிய பணம். இந்த சைக்கிளையும் குடுத்து அது ரிப்பெயார் பண்ண ஒரு ஐநூறு ரூபாயும் கொடுங்கப்பா ' என்று சொல்லிட்டா. இனி என்ட பொண்டாட்டி சொன்னா அதுக்கு மறுபேச்சு ஏது. இந்தா சந்தோஷமா தாரேன். ஒன்ட மகனுக்கு சந்தோஷமா குடு " என்று மலர்ந்த முகத்துடன் கொடுத்தான்.

    அந்த உள்ளங்களின் பெருந்தன்மையை  எண்ணி கடவுளுக்கு நன்றி சொன்னவனாக நியாஸ் கொடுத்த சைக்கிளையும், பணத்தையும் நன்றி உணர்வோடு பெற்றுக் கொண்ட பழைய இரும்பு வியாபாரி

    " குடுக்கிறன் தொர குடுக்கிறன் ஒங்க ரெண்டு பேரையும் சொல்லியே ஏன்ட மகன் கிட்ட குடுக்கிறன் " என்று சொன்ன போது அவனது கண்கள் பனித்திருந்தன.
    ...................................................




    தினகரன் வாரமஞ்சரி 23-08-2020

  • நன்றி: பிரதம ஆசிரியர் திரு. செந்தில் வேலவர்


புதன், 19 ஆகஸ்ட், 2020

ஹஜ்ஜுப் பெருநாள் கவிதை 01/08/2020


01/08/2020 வசந்தம் தொலைக்காட்சியின் ஹஜ்ஜுப்  பெருநாள் விசேட ஒளிபரப்பில் இடம்பெற்ற கவிதை 

சனி, 23 மே, 2020

"நோன்புப் பெருநாள் சிறுகதை" - புதிய தீர்மானம்



'அல் ஹஸனாத் மே, ஜூன் 2020 இதழில் இடம்பெற்றுள்ள எனது 
"நோன்புப் பெருநாள் சிறுகதை"
 
 
                                                                புதிய தீர்மானம்
                                                                                        
                                                                                                      - என். நஜ்முல் ஹுசைன்
 
' வாப்பா, வாப்பா எங்களுக்கு பெருநாள் இல்லையா வாப்பா....? ' நிஜாமின் பிள்ளைகள் கூடி வந்து கேட்டார்கள்.
 
' ஏன் மகன் அப்படி கேக்குறீங்க ....? ' தனது மூத்த மகனைப் பார்த்து நிஜாம் கேட்டான்.
 
' வாப்பா நாங்க நோம்பெல்லாம் பிடிச்சா நீங்க பெருநாளைக்கு புதிய உடுப்பெல்லாம் எடுத்துத் தருவீங்க. இந்தத் தடவ சின்னத் தம்பியும் அஞ்சு நோம்பு புடிச்சாரு. ஆனா நீங்க யாருக்குமே எந்த புதிய உடுப்பும் வாங்கல்லயே..? ' என நியாயமான கேள்வியைத்தான் கேட்டான். பிஞ்சு மனம் அப்படிக் கேட்டதில் தவறில்லை. 
 
நிஜாமின் மூத்த மகனுக்கு 12 வயது. அடுத்துள்ள பெண் பிள்ளைக்கு 9 வயது, கடைசி மகனுக்கு 7 வயது.
 
' மகன் இப்ப கொரோனா என்டு யாரும் வெளிய போகாம ஊட்டுக்குள்ளதானே இருக்கம். இந்த கொரோனா வெளியில எல்லாம் போய் கவனமில்லாம எல்லாரோடையும் ஒன்டா கலந்தா மறுபடியும் நாட்டுல பெரிய ஊரடங்கு சட்டம் போட வேண்டியிருக்கும். யாருக்கும் மறுபடி வேலைக்கு போக ஏலா. பல பேரு பசியால வாடுவாங்க. அதனாலதான் சிங்கள தமிழ் புதுவருஷம் வந்தப் போ அவங்களும் புது உடுப்பு உடுக்க இல்ல. அதபோல வெசக் வந்த நேரம் அவங்களும் தொரன் ஒன்டும் போட இல்ல. அதபோல நாங்களும் எங்கட பெருநாள இந்த தடவ அமைதியா கொண்டாடுவம். இன்ஷா அல்லாஹ் வார ஹஜ்ஜுப் பெருநாளக்கி நான் எல்லாத்துக்கும் புதிய உடுப்பு எடுத்துத்தாரன் ' 
 
நிஜாம் சொன்னதை புரிந்து கொண்டது போல அவனது மூத்த மகன் தம்பி, தங்கையை கூட்டிக் கொண்டுச் சென்றான்.
 
நிஜாமின் சிந்தனை பின்னோக்கிச் சென்றது.
 
பள்ளிவாசல்களெல்லாம் மூடியிருந்தார்கள். அன்று ஜும்மா தினம். என்றாலும் ஜும்மா தொழ முடியவில்லை. நிஜாமுக்குத் தெரிந்து அவன் தொழாமல் போன முதல் ஜும்மா.

அன்று மாலை ஐந்து மணிமுதல் நாடு பூராவும் ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் அமுல்;படுத்தியிருந்தது. இந்த ஊரடங்குச் சட்டம் பல மாதங்களுக்கு இருக்கும் என பேசிக்கொண்டார்கள்.
 
இது வேறு விதமான ஊரடங்குச் சட்டம். நமது நாட்டில் மட்டுமல்ல உலகமே ஊரடங்குச் சட்டத்தில் அடங்கிப் போயிருந்தது.
 
கொரோனா என்பதே எல்லோர் வாயிலும் பேசு பொருளாக இருந்தது. அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் பெருமளவில் இறந்து போனார்கள். நமது நாடும் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது.
 
சீனாவிலே கொரோனா என்றதும் பாவம் செய்த அவர்களுக்கு அல்லாஹ் தண்டனை வழங்கியிருக்கிறான் என்று சொல்லித் திரிந்து கொண்டிருந்த பலரது வாய் இப்போது அடைபட்டுப் போனது.
 
சீனாவிலிருந்து மற்றைய உலக நாடுகளுக்குப் போனது சரி நமது நாட்டுக்கு அது வரவே வராது என்று நினைத்துக் கொண்டிருந்தோரின் நினைப்பில் மண் விழுந்தது.
 
யாரோடும் கை குலுக்கக் கூடாது. பக்கத்தில் நின்று பேசக்கூடாது. முகக் கவசமில்லாமல் வெளியே வரக்கூடாது. அடிக்கடி கை கழுவ வேண்டும் என பல அறிவுரைகள் சுகாதார நிறுவனங்களால் சொல்லப்பட்ட வண்ணம் இருந்தன.
 
பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருந்தது மிகவும் வேதனையாக இருந்தாலும்கூட அதுதான் காலத்தின் கட்டாயம் என்பது நிஜாமுக்கு நன்றாகத் தெரிந்தது. இந்த கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். சமூகமாக இதனை நன்குணர்ந்து நாங்கள் செயற்பட வேண்டும் என்றும் எந்தப் பழியும் சமூகத்தின் தலையில் விழுந்துவிடக் கூடாது என்பதில் நிஜாம் கூடிய அக்கறை செலுத்தினான். அடிக்கடி இதுபற்றி நண்பர்களுடனும், குடும்ப உறுப்பினர்களுடனும் போனில் கதைத்துக் கொண்டே இருந்தான்.
 
சென்ற வருடம் நாட்டில் இடம்பெற்ற அசாம்பாவித சம்பவத்தால் தனது வியாபார ஸ்தலத்துக்கு வந்த பிற மத மக்களுடன் முகங்கொடுத்து பேச முடியாத நிலை ஏற்பட்டிருந்ததை அவன் மறக்கவில்லை. இம்முறையும் சிலர் செய்யும் தவறுகளை பூதாகரமாக்கி சமூகத்தின் தலையில் கொரோனாவை சாட்டுவதற்கு சிலர் தயாராகிக் கொண்டிருந்ததும் நன்றாகத் தெரிந்தது. எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் பள்ளிவாசல்களை மூடுவது பாவமான செயலல்ல. அதுதான் சமூகத்தையும், அதன் கௌரவத்தையும் பாதுகாக்கும் செயல் என்பதை தெளிவுபடுத்தி சொல்லி வந்தான்.
 
அன்றைய வெள்ளிக்கிழமை வீட்டுக்குள் போய் சேர்ந்த நிஜாம் அதற்குப் பிறகு
தேவையில்லாமல் வீட்டிலிருந்து வெளியே வரவேயில்லை.
 
அரசாங்கம் சொல்லுகின்ற அறிவுரை அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கல்ல, நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்குத்தான் என்ற உண்மை நிஜாமுக்கு தெட்டத் தெளிவாக விளங்கியது.
 
வாழ்க்கையில் முதன்முறையாக இப்படி அச்சப்பட்டிருக்கிறான் நிஜாம். நிஜாம் என்ன வீறாப்பு பேசிய பல சாம்ராஜ்யங்களே இந்த வைரஸுக்குப் பயந்து அடங்கி ஒடுங்கி நடுங்கிக் கொண்டிருக்கின்றன. கூடப் பிறந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று யாரையுமே அவன் காணவில்லை. எல்லோருடனும் அவ்வப்போது கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
 
நிஜாம் புறக்கோட்டையில் வியாபாரம் செய்பவன். திருமணமாகி மனைவி ; பிள்ளைகளுடன் ராஜகிரியவில் வசித்து வந்தான். அவன் இருந்த பகுதியில் அவனைச் சூழ முஸ்லிம்கள் மட்டுமல்ல சிங்கள குடும்பங்களும், தமிழ் குடும்பங்களும் வசித்து வந்தன.
 
நிஜாம் எப்போதுமே எல்லோருடனும் நட்புறவோடுதான் பழகுவான்.
அவனது வீடு பெரிய மாளிகையல்ல என்றாலும் கொஞ்சம் வசதியான வீடு. வீட்டுக்கு முன்பும் வாகனமொன்றை நிறுத்தக் கூடிய இட வசதியிருந்தது.
நிஜாம் வீட்டுக்குள் இருந்து வெளியே வராமல் சமாளித்துக் கொண்டாலும் மூன்று பிள்ளைகளை சமாளிப்பதென்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. குறிப்பாக நிஜாமின் மனைவிதான் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு சிரமப்பட்டாள். இப்போதுதான் அவள் பிள்ளைகளையும் பராமரித்துக் கொண்டு சமையல் செய்வதிலுள்ள சிரமங்களை நேரடியாக உணர்ந்து கொண்டான். கட்டாயம் முடிந்த வரை மனைவியின் சமையலுக்கு உதவவேண்டும் என தீர்மானித்துக் கொண்டான். மனைவி பலமுறை தடுத்தும் இந்த ஓய்வு காலத்தில் சமையலில் மனைவிக்கு உதவி செய்வதிலிருந்து தன்னை தவிர்த்துக் கொள்ளவே இல்லை.
 
மூத்த மகனுக்கு ஒன்லைனில் சில பாடசாலை பாடங்கள் நடந்தன. அது மட்டுமல்ல பிள்ளைகள் செல்லும் மத்ராஸாவின் ஹஸ்ரத் போனில் குர்ஆன் பாடங்களை பிள்ளைகளிடம் ஒவ்வொரு நாளும் கேட்டது நிஜாமுக்கும் அவனது மனைவிக்கும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
.
நிஜாம் மற்றைய நாட்களில் தனியாக அருகிலிருந்த பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவான். இப்போது வீட்டுக்குள்ளேயே தொழவேண்டிய நிர்ப்பந்தம். தான் வேறு மனைவி வேறாக ஏன் தொழவேண்டும் பிள்ளைகளுடன் ஒன்றாய் ஜமாத்தாய் தொழுவோமே என்று தீர்மானித்தான். மஃரிப் தொழுகையுடன் அவர்களது கூட்டுத் தொழுகை ஆரம்பமானது. மூத்த மகன் மத்ரஸா சென்று வருகிறான்தானே அவனையே இமாமாக வைத்து தொழுகை நடத்துவோம் என்று முடிவுகட்டி மகனின் தலைமையின் கீழ் மஃரிப் தொழுதார்கள். தொழுகையிலே மகன் ஓதிய கிராஅத்தைக் கேட்டு நிஜாமும், சகீனாவும் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். தொடர்ந்து வந்த தொழுகைகளும் மகனது தலைமையிலேயே நடந்தன. அப்போதுதான் தனது மகன் இவ்வளவு பெரிய சூராக்களை மனனமிட்டிருக்கிறான் என்பது நிஜாமுக்குத் தெரிய வந்தது. மத்ரஸாவின் ஹஸ்ரத்மார்களை எண்ணி மிகவும் பெருமைப்பட்டார்கள். 
 
மற்றைய ரமழான் காலங்களில் போலன்றி இம்முறை அவர்களது பொருளாதாரம் படு வீழ்ச்சியைக் கண்டிருக்கும் என்பது நிஜாமுக்கு நன்கு தெரிந்தது. எமது சமுதாயத்தின் வசதி படைத்தோர் இது குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்த்தான். தனக்கு தொடர்பிருந்த பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் இது குறித்து கதைத்தான். தானும் இதற்கு பங்களிப்புச் செய்வதாகவும் கூறி வைத்தான்.
 
இந்த ஊரடங்குக் காலத்தில் பிள்ளைகள் விரும்பும் உணவுகளை வாங்கிக் கொடுப்பதென்பது சிரமமான காரியம்தான். வெளியே எங்கேயும் போகாமல் நிஜாம் வீட்டுக்கு முன்னாலே இருந்த அஜித் மல்லியின் கடையில் தங்களது பொருட்களை வாங்கிக்கொண்டான். அஜித் மல்லி அத்தியாவசிய சேவை என்று பொலிஸில் அனுமதிப் பெற்று புறக்கோட்டைச் சென்று பொருட்கள் வாங்கி வருவான்.
 
இப்படி ஒரு நாளும் நிஜாம் வீட்டில் அடைபட்டுக் கிடந்ததே இல்லை. தூங்கும் நேரம் எழும்பும் நேரமெல்லாம் மாறிப்போயிருந்தது.
 
நீண்ட ஊரடங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்திருந்தது.
பக்கத்து வீட்டிலிருந்த சுமனதாஸ அன்றாட செலவுகளுக்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது. அவன் நாள் கூலிக்கு வேலை செய்பவன். அவனுக்கு ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என ஐந்து பிள்ளைகள். அவனது வயதான அம்மாவும் அவர்களோடுதான் இருந்தாள். சுமனதாஸ தொழிலுக்கு போகாமல் எப்படி அந்தக் குடும்பத்தைச் சமாளிப்பான் ?
 
ஆனாலும் யாரிடமும் பல்லிளித்து கை நீட்டும் பழக்கம் அவனிடமில்லை.
நிஜாமின் மனைவிக்கு அந்தக் குடும்பத்தோடு நல்ல தொடர்பிருந்தது. கொரோனா வேளையில் நெருங்கிப் பழகா விட்டாலும் மதில் சுவருக்கு மேலால் சுமனதாஸவின் மனைவி ஸ்ரீயானியுடன் அடிக்கடி பேசிக் கொள்வாள்.
 
'அண்டை வீட்டார் பசித்திருக்க தாம் மட்டும் உண்பவர் உண்மை முஸ்லிமல்ல' என்ற ஹதீஸின் தத்துவம் உணர்ந்தவள் நிஜாமின் மனைவி சகீனா.
 
நிஜாம் வியாபாரத்தோடு சம்பந்தப்பட்டிருந்ததாலும் தனது வேலைகளை திட்டமிட்டு செய்து வந்ததாலும் அவனிடம் நல்ல சேமிப்பு இருந்தது.
அதனால் சகீனா சுமனதாஸவின் குடும்பத்திற்கு தாராளமாக கொடுத்துதவினாள். முதலில் உதவிகளைப் பெற்றுக் கொள்ள சுமனதாஸ வெட்கப்பட்டாலும் தனது பிள்ளைகளை எண்ணியும், நிஜாம் குடும்பத்தினரின் நல்ல பண்புகளை அறிந்ததாலும் அந்த உதவிகளைப் பெற்றுக் கொண்டான். நிஜாமின் மனைவி உதவிகளை அன்பளிப்பாக செய்தாலும் சுமனதாஸ அவற்றை கடனாக குறித்து வைத்துக் கொண்டான்.
 
கொரோனா கலவரத்துக்கூடாகவே ரமழான் நோன்பும் ஆரம்பமானது.
 
நிஜாமின் குடும்பம் சகல தொழுகைகளையும் ஜமாஅத்தாகவே நிறைவேற்றியது. பள்ளிவாசலிலே நடக்கும் அனைத்து அமல்களும் அவனது வீட்டிலே நடந்தது. தராவீஹ், தஸ்பீஹ், வித்ர் போன்ற அனைத்து தொழுகைகளில் பிள்ளைகளையும் இணைத்துக் கொண்டு அவர்கள் செய்து வந்த அமலால் மிகவும் மகிழ்ந்தது நிஜாமின் மனைவி சகீனாதான்.
' மத்த ரமழான்ல நீங்க மட்டும் பள்ளிக்குப் போய் எல்லா அமலையும் செஞ்சிட்டு வருவீங்க. நாங்க ஏதோ சிலத வீட்ல இருந்து செய்வோம். இந்த முற தான் நான் மிக திருப்தியா ஏன்ட அமல்கல செய்றன். பாருங்க எங்கட பிள்ளைகள்கூட தொழுறவிதத்தெல்லாம் படிச்சுக் கொள்ளுறாங்க. நீங்க கூட முன்பு கொஞ்சம்தான் குர்ஆன் ஓதுவீங்க. இப்ப ஒரு நாளக்கி ஒரு ஜூஸுக்கு மேல ஓதுறிங்க ' என்று சகீனா சொன்னபோது நிஜாமும்கூட உள்ளம் பூரித்தான்.
 
' அடடா எங்கள பயப்பட வச்சிருக்கும் கொரோனாகூட சில நன்மைகளையும் செஞ்சிதானிருக்கி. ஒவ்வொரு முஸ்லிம்ட வீட்டயும் பள்ளிவாசல ஆக்கியிருக்கி. எங்கள இன்னும் இன்னும் அல்லாஹ்கிட்ட நெருங்க செஞ்சிருக்கி '
 
வழமையாக நோன்பின் இறுதி பத்தில் தனது உறவினர்களுக்கு அரிசி போன்ற உணவுப் பொருட்களை தாராளமாக வாங்கிக் கொடுக்கும் பழக்கம் நிஜாமிடமிருந்தது. ஸக்காத் பணத்தையும் கணக்குப் பார்த்துக் கொடுத்துவிடுவான்.
 
இம்முறை நிஜாம் ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தான். அரசாங்கம் ஊரடங்கு நடைமுறையில் சில தளர்வுகளைச் செய்திருந்தது. வியாபாரத்துக்காகவும் நிஜாம் சில நாட்கள் சென்று வந்தான். ஏழைகளுக்காக கொடுக்கும் உணவுப் பொதியின் தொகையை அதிகரித்திருந்தான். அவற்றை அவன் பங்கிடுவதற்காக வெளியே எங்கேயும் செல்லவில்லை. தனது வீட்டுக்கருகில் இருக்கும் அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் அவற்றை அவனே நேரில் சென்று வழங்கினான். அப் பொதிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் எல்லோருமே முஸ்லிம்களல்லர் – பௌத்த மக்களும், தமிழ் மக்களும் பெரும்பான்மையாக அடங்கியிருந்தனர். நிஜாம் தனது ஸக்காத் பணத்தைப் பங்கிட்டுக் கொடுக்கும்போது மெயின் ஸ்ட்ரீட்டில் பாதையோரம் துணி வியாபாரம் செய்யும், இம்முறை எந்த வியாபாரமுமின்;றி நொடிந்து போயுள்ள பௌமி நாநாவுக்கும், நஸீர் நாநாவுக்கும் பகிர்ந்தளிக்கவும் மறக்கவில்லை.
 
நோன்புப் பெருநாளை நிஜாமும், மனைவியும் பிள்ளைகளும் வீட்டிலே இருந்த ஆடைகளை அணிந்து, பெருநாள் தொழுகை தொழுது அமைதியாக கொண்டாடினர்.
 
இம்முறை தாம் ரமழானில் செய்த தான தருமம் வல்லான் அல்லாஹ் விரும்பும் வழியில் அமைந்திருந்தது என்பது நிஜாமுக்கும், சகீனாவுக்கும் மிகவும் மனத்திருப்தியைக் கொடுத்தது.
========================================
நன்றி: இர்ஷாத் இமாம்தீன்



வெள்ளி, 1 மே, 2020

கவிஞர் ரவூப் ஹஸீர்

வலம்புரி கவிதா வட்டத்தின் 14வது கவியரங்கம் 13-04 2015 பௌர்ணமி தினத்தன்று கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றபோது கவியரங்கினை தலைமையேற்று நடாத்த கவிஞர் ரவூப் ஹஸீர் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.
                         - என். நஜ்முல் ஹுசைன், தலைவர் வலம்புரி கவிதா வட்டம் - (வகவம்)

சொல் கொண்டு வருவான்
இல்லை, இல்லை
சமுதாய சீர்கேட்டை அடித்து நொறுக்குகின்ற
கல் கொண்டு வருவான்
நாங்களெலாம்
அவன் கவிதையிலே வண்டாய் மயங்க
கள் கொண்டு வருவான்

தன் கவிதையின் ஆழத்தால்
தொடுவான்
அந்தத் தொடுவான்

கண்டதில்லை இவன் கவியில்
தளை, அடி, தொடை, அசைச் சீர்
 என்றாலும் இவன்
புதுக்கவிதை உலகில்
கிடைத்த பெரும் சீர்
குளறுபடிகள் இல்லா இவன் வரிகள்
என்றுமே சீர்

குதூகலமாய் அழைப்போம் நாம் அக் கவியை
அவன் எங்கள்
இதயங் கவர்

கவிஞர் ரவூப் ஹஸீரே
வகவம் இன்றுன்னை தலைமைக்கு அழைத்தது
தலை 'மைக்கு' தந்தது' 





--; என்.நஜ்முல் ஹுசைன்,
தலைவர் வலம்புரி கவிதா வட்டம் - (வகவம்)

)


புதன், 29 ஏப்ரல், 2020

கவிதாயினி ரி.என்.இஸ்ரா

வலம்புரி கவிதா வட்டத்தின் 35 ஆவது கவியரங்கு
12 – 03 – 2017 அன்று கொழும்பு, அல்ஹிக்மா கல்லூரியில் சக்தீ பால ஐயா அரங்கில் நடைபெற்றபோது கவியரங்கத் தலைமையினை ஏற்று நடாத்த கவிதாயினி ரி.என்.இஸ்ராஅவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்புவிடுத்தேன்
 
 - என். நஜ்முல் ஹு சைன், 
தலைவர், வலம்புரி கவிதா வட்டம் - வகவம்
 
 
கூரான சிந்தனைகள் நெஞ்சில் கொண்டே
நேராக தன் கருத்தை முன்னே வைப்பாள்
சீராக இதயங்கள் ஆகவென்றே
வேராக வேமாறி சேவை செய்வாள்
 
கவிதையினை தன் கைக்குள்
போட்டுக் கொள்வாள்
புவிவெல்லும் கலைகூட
கற்றுக் கொள்வாள்
தவிக்கின்ற பெண்களுக்கும்
கரங்கள் நீட்டி
தானும் ஒரு பெண் என்றே
பெருமை கொள்வாள்
 
இன்றிந்த வகவத்தின்
கவிதை அரங்கை
தலையேற்று நடத்திடவே
துணிந்து வந்தாள்.
 
கவிதைமகள் இவள் பெயரோ
ரி.என். இஸ்ரா
வகவத்தையே நினைத்தாள்
தனது உசுரா
தெல்தோட்டை புலவர் மண்
சொந்தம்; பிசிறா
சொல்லெடுத்து வீசிடுவாள்
பந்தோ தூஸ்ரா
 
கவிதாயினி
ரி.என். இஸ்ரா
 
கவியரங்கத் தலைமையினை
உன்றன்
தலைமேல் வைத்தோம்
எங்கள் செவிகளையே
உன்னிடத்தில்
கடனே கொடுத்தோம்
 
கவியரங்க சாகரத்துள்
எம்மை ஆழ்த்து
வந்து குவிந்துவிடும்
உன்றனுக்கு
கவிஞர் வாழ்த்து !
 
- என் நஜ்முல் ஹுசைன்
தலைவர் - வகவம்

சனி, 4 ஏப்ரல், 2020

யாருக்குப் பாராட்டு.................!

கரவை திரு. மு. தயாளன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு இங்கிலாந்திலிருந்து வெளிவரும் "சிறுகதை மஞ்சரி" முதலாவது இதழில் (பெப்ரவரி 2020) எனது சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. அதற்கான கொடுப்பனவும் கிடைத்தது. மிகவும் நன்றி கரவை திரு. மு. தயாளன் அவர்கள்.





யாருக்குப் பாராட்டு.................!


-              என். நஜ்முல் ஹுசைன்

முன்னாள் கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சாந்தகுமார் அழைப்பிதழை வெறித்துப் பார்த்தார்.  உள் மனது அவரையறியாமலேயே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது.
அழைப்பிதழில் கொட்டை எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்த  வாசகம்தான் அவரை வேதனை கொள்ளச் செய்தது.
' விவசாயிக்கு வாழ்வு கொடுத்த அமைச்சருக்குப் பாராட்டு விழா'
தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக கடுமையாக உழைத்து அபிவிருத்திச் செய்த கமத்தொழில் வேலைத்திட்டங்களை ஆறு மாதங்களுக்கு முன்பு தேர்தலில் வென்று தான் அமைச்சராகவிருந்த அதே அமைச்சைப் பெற்றுக் கொண்ட பத்மசிரி அந்த அபிவிருத்தித் திட்டத்திற்கான வெற்றி விழாவையும் பாராட்டு விழாவையும் தனது ஜனாதிபதியின் தலைமையின் கீழ் ஏற்பாடு செய்திருந்ததோடு அந்த அழைப்பிதழையும் சாந்தகுமாருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
தான் அந்த விழாவுக்குச் சென்றால் அது தனது வேதனையை அதிகரிக்கும்,  அங்கே சொல்லப்படும் பொய்கள் தனக்கு எரிச்சலைத் தரும் என்று உணர்ந்து கொண்டதால் அந்த விழாவுக்கு போவதில்லை என அவர் தீர்மானித்துக் கொண்டார்.
அப்படி இருக்கும்போதுதான் அமைச்சர் பத்மசிரியின் பிரத்தியேக செயலாளர் சாந்தகுமாருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து அமைச்சர் கதைக்க வேண்டும் என்கிறார் என்றார்.  பேசத் தேவையில்லை என நினைத்து கொண்டிருந்த போதே பத்மசிரி லைனில் வந்து விட்டார்.  ' சேர் நீங்கள் கட்டாயம் இந்த விழாவுக்கு வரவேண்டும்.  என்னை வாழ்த்த வேண்டும் ' என்றார்.
ஒரு இளைஞன் அமைச்சராக வந்திருக்கிறான்.  ' வந்து வாழ்த்துங்கள்' என்று வினயமாக கேட்கிறான். என்ன இருந்தாலும் அந்தப் பதவியில் மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்தவன்.  புதிய அமைச்சரின் நடவடிக்கைகளை அவதானிப்பது தனக்கும்  எதிர்கால நடவடிக்கைகளுக்கும்  நன்மை பயக்கும் என்பதனால் சரி போவோம் என்று தீர்மானித்தார்.
ஐந்து வருடங்கள் அவர் அங்கம் வகித்த கட்சிதான் ஆட்சியில் இருந்தது.  தனது அமைச்சை சாந்தகுமார் முடிந்தவரை சிறப்பாக வழி நடத்தினாலும், தனது சக அமைச்சர்கள் எப்போதும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிக் கொண்டே இருந்தார்கள்.  அரசினால் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
ஒரு மாதத்திற்கு ஒரு தடவையாவது ஏதாவது ஒரு வேலைநிறுத்தம் நடைபெற்றுக் கொண்டே இருந்தது.   மேடைகளிலே வீராவேசமாக பேசுவதற்கு எதிர்க்கட்சிக்கு எப்போதும் ஏதாவதொரு தலைப்பு கிடைத்துக் கொண்டே இருந்தது.
நடந்து வந்த ஆட்சியின் மீது பெரும்பாலான மக்களுக்கு வெறுப்பேற்படும் வகையிலே சம்பவங்கள் நடந்து கொண்டு வந்தன.
ஒரு சில நல்ல அமைச்சர்கள் இருந்த போதும் தேர்தல் வந்த போது வெற்றி பெற முடியாது சாந்தகுமாரின் கட்சி படுதோல்வியைத் தழுவியது.
தாம் ஆட்சி அமைத்தால்  ஊழல் செய்த அமைச்சர்களை சிறையில் அடைப்போம்,  ஜம்பர் அணிவிப்போம், தூக்குமேடை அனுப்புவோம் என்று எதிர்க்கட்சி முழங்கி வந்ததால் சாந்தகுமாரின் கட்சியைச் சேர்ந்த பலர் உள்ளுர அச்சத்தோடிருந்தது சாந்தகுமாருக்குத் தெரியும்.  என்றாலும் சாந்தகுமார் கறைபடியாதவர். அவர் தனது மனச்சாட்சிக்கு விரோதமில்லாத வகையில் தனது பணியினைச் செய்தவர்.   தேர்தல் காலங்களில் சாந்தகுமார் பற்றியும் எதிர்க்கட்சியினர் வசை பாடினாலும் ஒப்பீட்டளவில் அவை குறைவானவையே.
இளம் அமைச்சரான பத்மசிரி பேசி அழைப்பு விடுத்த விதத்தில் அதனைத் தட்டிக் கழிக்க முடியாத நிலைக்கு சாந்தகுமார் தள்ளப்பட்டார்.  கட்டாயம் அவரது மனைவி பிள்ளைகளோடு விழாவில் கலந்து கொள்ளவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
என்றாலும் அதனை அவரது மனைவி பிள்ளைகள் ஏற்றுக் கொள்வதாயில்லை.
அது மட்டுமல்ல அவரைக் கூட அந்த விழாவுக்குப் போக வேண்டாம் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அங்கே போனால் அங்கே நடக்கும் நிகழ்வுகள் அவரது மனதைப் பாதிக்கும் என்றும் சொன்னார்கள்.
' இல்லை...... ..இல்லை என்ன நடந்தாலும் பரவாயில்லை.  நான் ஒரு ஜென்டில்மேனாக நடந்து கொள்ள வேண்டும்.  எனது பேச்சை மதித்து நீங்களும் கட்டாயம் வரவேண்டும் ' என்று மிகவும் கண்டிப்பாக சொல்லிவிட்டார். அவரது இரண்டு பிள்ளைகளான மகளும்,  மகனும் அவரது மனைவியும் அவருக்கு மேலும் வேதனை தரக் கூடாதென்பதற்காக அரை மனதுடன் ஒத்துக் கொண்டனர்.
தேர்தல் தோல்வி அவரை பெரும் துன்பத்திற்குள்ளாக்கி இருந்தது அவர்களுக்குத் தெரியும். தன்னலம் பாராது சேவை செய்த அவர் தேர்தலில்  தோல்வியுற்றதால்  அவர்கள் கூட மனம் சோர்ந்துதான் இருந்தனர்.

------------------------------------------

விழா மண்டபம் நிறைந்து வழிந்தது.  முன்னாள் அமைச்சர் சாந்தகுமாருக்கு முன் வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.  மனைவி பிள்ளைகளுக்கு பின் வரிசையில்.    ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் அழைத்துச் சென்று அமர வைத்தார்.  அதன் பிறகுதான் ஜனாதிபதி,  பிரதமர் ஆகியோர் வந்தனர்.  சாந்தகுமாருடன் இருவருமே வெறும் புன்னகையுடன் கடந்து சென்றனர்.  அமைச்சர் பத்மசிரி மட்டும் அருகில் வந்து கைலாகு கொடுத்தார்.   ஜனாதிபதி பிரதமர் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் கதைப்பதிலேயே கவனம் செலுத்தினர்.
ஜனாதிபதி பிரதமருடன் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற உதவிய ஜப்பான் கம்பெனி தலைவரும் மேடையில் சென்றமர்ந்தனர். சாந்தகுமார் அமைச்சராக இருந்தபோது பல முறை அந்த ஜப்பான்  கம்பெனி தலைவர் அவரை சந்தித்துள்ளார். கால மாற்றத்தை எண்ணி சாந்தகுமார் தனக்குள் சிரித்துக் கொண்டார்.     அமைச்சர் பத்மசிரியும் ஜனாதிபதிக்கருகில் அமர்ந்தார்.
நிகழ்வுகள் ஆரம்பமாகின. அந்த அபிவிருத்தித் திட்டத்தின் ஒவ்வொரு படிமுறையும் திரையில் விளக்கிக் காட்டப்பட்டது. இதன்மூலம் விவசாயிகள் அடையும் நன்மைகள் பற்றி சிலாகித்துக் கூறப்பட்டது. பல விவசாய உற்பத்திகளின் இறக்குமதியை எதிர்பாரத்திருந்த நாடு அதே பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு முன்னேற்றம் கண்டது விளக்கப்பட்டது.  இதன் மூலம் நாடு பல பில்லியன் ரூபாய்களைப் பெறும் என்றும் மேடையில் பேசப்பட்டது.  இந்தத் திட்டம் உலக நாடுகளை நம் பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் என்றும் வர்ணிக்கப்பட்டது. அமைச்சர் பத்மசிரி மேடையில் மிகவும் பெருமிதத்துடன் வீற்றிருந்தார். அத்தனைப் புகழாரங்களையும் அவர் தனக்குரியது என்று சூடிக் கொண்டது சாந்தகுமார் மனதை ஏதோ செய்தது.
ஒருவர் கஷ்டப்பட்டு செய்த அபிவிருத்தித் திட்டத்தை தான் செய்ததாக பறை சாற்ற எப்படித்தான் மனச்சாட்சி இடம் கொடுக்கிறதோ. சரி சரி இதற்காக தான் ஒன்றும் கவலைப்படக்கூடாது.  கவலைப்படுவதாக காட்டிக் கொள்ளவும் கூடாது.  இதெல்லாம் அரசியலில் சகஜம்தானே. இப்படித்தானே ஒவ்வொரு ஆட்சியிலும் நடக்கிறது.  தனது கட்சி ஆட்சி செய்த வேளையில்கூட எத்தனை அமைச்சர்கள் முந்தைய ஆட்சியில் செய்த திட்டங்களுக்கு தங்களது பெயரைப் பொறித்துக் கொண்டனர்.  நினைவுப் பதிகத்திலே தங்களது பெயர்களைத்தானே பதித்துக் கொண்டனர்.
மேடையில் ஆண் பெண் என இரண்டு அறிவிப்பாளர்கள் மாறி மாறிப் பேசினர்.  'இப்போது இப்படியான மாபெரும் திட்டத்தை    வெற்றிகரமாக செய்து நொடிந்து போயிருந்த விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய          அமைச்சரைப் பாராட்டும் நிகழ்வு.
கௌரவ ஜனாதிபதி அவர்களை, மாண்புமிகு பிரதமர் அவர்களை, திட்டத்தை வெற்றிகரமாக நடாத்த கரம் கொடுத்த ஜப்பான் கம்பெனி தலைவரை மேடைக்கு முன்னால் அழைக்கிறேன்.   அவர்கள் மூவரும் மேடைக்கு முன்னால் வந்து நின்றனர்.
' இப்போது கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பத்மசிரி அவர்களை மிகவும் கௌரவத்துடன் முன்னால் அழைக்கிறேன் '
பத்மசிரி மிகவும் பெருமையுடன் முன்னால் வந்தார்.  சபையோரின் கரகோஷம் வானைப் பிளந்தது. முன்னாள் அமைச்சர் சாந்தகுமாரும் தன் பங்குக்கு கைகளைத் தட்டி வைத்தார்.
மறுபடியும் அறிவிப்பாளர், ' நமது தாய் நாட்டுக்கு இவ்வாறான ஒரு அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்திய அமைச்சரைப் பாராட்டுவது நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் கடமையாகும்.  ஏனெனில் அவர் எங்களைப் பற்றி மட்டும் சிந்திக்கவில்லை.  எமது சந்ததிகளைப் பற்றியும் சிந்தித்துள்ளார்.  அவருக்கு இந்த நாடு என்றும் நன்றிக் கடன் பட்டுள்ளது. அத்தகைய பெருமைப் பெற்ற அமைச்சரை மிகவும் கௌரவத்தோடு மேடைக்கு அழைக்கிறேன் ' என்று சொன்னதும் அமைச்சர் பத்மசிரி மிகவும் பெருமையோடு ஜனாதிபதிக்கருகில் வந்து நின்றார்.
மறுபடியும் அறிவிப்பாளர்,  ' சபையோரே இந்தப் பெருந்தகையை வாழ்த்த கௌரவிக்க தயவுசெய்து அனைவரும் எழுந்து நிற்குமாறு பணிவோடு வேண்டுகிறேன் '
முழு சபையும் எழுந்து நின்றது.  முன்னாள் அமைச்சர் சாந்தகுமாரும் எழுந்து நின்றார்.
அறிவிப்பாளர், ' இந்த வெற்றிகரமான அபிவிருத்தித் திட்டத்தைத் தந்த அமைச்சரை மிகுந்த கௌரவத்துடன் அழைக்கிறேன் '
மேடையில் நிற்கும் அமைச்சர் பத்மசிரியை அறிவிப்பாளர்கள் இன்னும் எவ்வளவு நேரத்திற்குத்தான் வர்ணித்துக் கொண்டிருப்பார்கள். சாந்தகுமார் நினைத்துக் கொண்டார்.
மீண்டும் அறிவிப்பாளர்,  ' கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சாந்தகுமார் அவர்களை அன்போடு மேடைக்கு அழைக்கிறேன் '
அடடா அறிவிப்பாளர் தவறுதலாக அமைச்சர் பத்மசிரி என்பதற்கு பதிலாக முன்பு சொல்லிச் சொல்லி பழக்கப்பட்ட  தனது பெயரைச் சொல்லிவிட்டார். நிச்சயம் விழா முடிந்ததும் அறிவிப்பாளரது சீட்டு கிழிந்து விடும். அப்படித்தான் ஆட்சி மாறிய புதிதில் புதிய ஜனாதிபதியின் படத்திற்கு பழைய ஜனாதிபதியின் பெயரைப் போட்டதனால்  வேலை இடைநிறுத்தப்பட்ட பத்திரிகை ஆசிரியரும் சாந்தகுமாரின் நினைவுக்கு வந்தார்.
என்றாலும் அறிவிப்பாளர் மீண்டும் சொன்னார் ' முன்னாள் அமைச்சர் சாந்தகுமார் அவர்களை மிகவும் கௌரவத்துடன் மேடைக்கு அழைக்கிறேன் '
சாந்தகுமாருக்கு இப்போது தெரிந்தது.  அறிவிப்பாளர் தெரியாமல் சொல்லவில்லை.  தெரிந்தேதான் சொல்கிறார்.
அவரையறியாமல் அவரது உள்ளம் நடுங்கியது.
மேடையிலிருந்து அமைச்சர் பத்மசிரி இறங்கி வந்தார்.
' வாங்க சேர் மேடைக்கு ...'
முன்னாள் அமைச்சர் சாந்தகுமாருக்கு காது கேட்கவில்லை.
மீண்டும் அழைத்தார் அமைச்சர் பத்மசிரி, ' வாங்க சேர் மேடைக்கு '
சாந்தகுமாரின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழைத்தார்.  சாந்தகுமார் தன்னை அறியாமலேயே பத்மசிரியோடு மேடைக்குச் சென்றார்.  நடப்பதெல்லாம் ஒரு கனவு போல் அவருக்குத் தோன்றியது.  சாந்தகுமாரை ஜனாதிபதிக்கு அருகில் பத்மசிரி நிறுத்தினார். பின்பு ஒலிவாங்கி முன்னால் நின்று பேசினார்
' அதிமேதகு ஜனாதிபதி,  கௌரவ பிரதமர்,  மாண்புமிகு அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிதிகள் பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம்.
என்னை கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சராக நியமித்ததும் அமைச்சுக்குச் சென்று அங்கே முன்பு என்னென்ன ஊழல்கள் நடந்திருக்கின்றன என்று கண்டு பிடிக்கச் சென்றேன்.  எனது புதிய செயலாளரும் நானும் பைல் பைல்களாகத் தேடினோம்.  ஒருநாள் எனது செயலாளர் தயங்கித் தயங்கி ஏதோ சொல்ல வந்தார்.  என்றாலும் சொல்லவில்லை.  அவரிடம் ஏதோ தயக்கமிருப்பதைத் தெரிந்து கொண்ட நான் ' எதுவென்றாலும் பரவாயில்லை சொல்லுங்கள் ' என்றேன்.  ' சொல்லுவேன் சேர். சேர் கோபப்படக்கூடாது ' என்று பீடிகைப் போட்டார். ' பரவாயில்லை சொல்லுங்கள் ' என்று சொன்ன பின்புதான் அவர் சொன்னார்  ' மிக ஆழமாக எல்லாவற்றையும் பார்த்த பின்பு விளங்குகிறது முன்னாள் அமைச்சர் சாந்தகுமார் எதுவிதமான ஊழலிலும் ஈடுபட்டிருக்கவில்லை என்பது மட்டுமல்ல அவர் எங்கள் நாட்டுக்கு மாபெரும் சேவை செய்துள்ளார்.  ஐந்து வருட காலத்தில் இப்படியான ஒரு சேவையை எந்த அமைச்சராலும் செய்ய முடியாது. ' என்றார்.   எனக்குக் கூட அவ்வாறான உணர்வு ஏற்பட்டிருந்தது எனக்குத் தெரிந்தது.   அமைச்சில் பணிபுரிந்த அனைத்து பழைய ஊழியர்களும் அவர் மீது அளவு கடந்த மதிப்பும் அபிமானமும் வைத்திருந்தையும் நான் தெரிந்துதான் வைத்திருந்தேன். அவரின் கீழ் நடந்த அபிவிருத்தித் திட்டங்களை நேரடியாகச் நாங்கள் பார்வையிட்டோம்.  நான் உண்மையிலேயே மலைத்துப் போனேன்.  அவரது சேவையைப் பார்த்து நாங்கள் பிரமித்துப் போனோம்.  சாந்தகுமார் போன்றவர்கள் நம் நாட்டின் அமைச்சர்களாக இருப்பார்களேயானால் நமது நாடும் விரைவில் செல்வச் செழிப்பான நாடாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை.   உண்மையிலேயே நான் ஊழல்களைக் கண்டு பிடித்து அமைச்சர் சாந்தகுமார் அவர்களை கேவலப்படுத்த நினைத்தேன்.  ஆனால் அவரோ தனது அபிவிருத்தித் திட்டத்தில்  தொண்ணூற்றியொன்பது வீதத்தை பூரணப்படுத்தியிருந்தார்.  இதனைப் பூரணப்படுத்த எனக்கு சிறிதளவே வேலை இருந்தது.  உண்மையைச் சொல்லப்போனால் நான் எதுவுமே செய்யவில்லை.   அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவது  நாங்கள் மக்களுக்காக எங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து சேவையாற்றுவோம் என்று சொல்லித்தான்.  ஆனால் எத்தனை அரசியல்வாதிகள் அப்படிச் செய்கிறார்களோ எனக்குத் தெரியாது.  ஆனால் சாந்தகுமார் சேர் அவர்களை தனது நேர காலத்தை மக்களுக்காக தியாகம் செய்து சேவையாற்றியிருப்பதை நான் கண்டு கொண்டேன். இவ்வாறான ஒரு மாபெரும் சேவை செய்த தியாகியின் அபிவிருத்தித் திட்டத்திற்கு லேபல் ஒட்டிக் கொள்ள எனது மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை.  எமது நாடே இவரை கௌரவிக்கவேண்டும், கொண்டாட வேண்டும் என ஆசைப்பட்டேன்.  இப்படிச் செய்தால்தான் சேவை மனப்பான்மையுள்ள அரசியல்வாதிகள் உருவாகுவார்கள் என நினைத்தேன்.  எனது திட்டத்தை எமது ஜனாதிபதி பிரதமரிடம் சொன்னேன்.  நான் சொன்ன காரணங்களை அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள்.  என்றாலும் எனது கட்சி உறுப்பினர்கள் பலர் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.  நான் எனது தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதாக கூறினர்.   என்றாலும் விடாமுயற்சியுடன் முயன்று அவர்களின் மனங்களை மாற்றினேன்.
அமைச்சர் சாந்தகுமார் அவர்களே இன்று நடக்கும் விழா எமது அரசின் மனப்பூர்வமான விழா.   இங்கே வாழ்த்திப் பேசப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் உங்களுக்குரியது. அமைச்சர் அமைச்சர் என்று அவர்கள் புகழ்ந்ததெல்லாம் உங்களைத்தான் '
கொஞ்சம் வயதாகியிருந்த சாந்தகுமார் இப்போதுதான் தான் வயதாகியிருப்பதை உணர்ந்தார்.  நடப்பவைகளைப் பார்த்து அவரது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
முழு சபையுமே எழுந்து நின்று கைகளைத் தட்டிக் கொண்டிருந்தது.  சாந்தகுமாரின் மனைவியும் பிள்ளைகளும் மலைத்துப் போயிருந்தனர்.
                                                                                                                       
………………………………………………………………………………………………………………………