எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 9 ஜனவரி, 2019

counter for blog

செவ்வாய், 8 ஜனவரி, 2019

கவிஞர் கலா விஸ்வநாதன்


வலம்புரி கவிதா வட்டத்தின் 55 வது கவியரங்கம் 22/12/2018 சனிக்கிழமை கொழும்பு ஐந்து லாம்பு சந்தி பழைய  நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடாத்த கவிஞர் கலா விஸ்வநாதன் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் - என். நஜ்முல் ஹுசைன்,  தலைவர், வகவம்.


எல்லோரும் ஒன்றாக வே வாழ வேண்டு மென்றே
எந்நாளும் நினைக்கின்ற
ஏற்றமுடை மனதுடையான்
வல்லோனாய் தனைக் காட்டி
வார்த்தைகளில் விஷம் வைத்து
வஞ்சக மாய் தான் பேசி
யாரினதும் மனதுடையான்

மலையகத்து மக்கள் படும்
அப் பாட்டை தன் பாட்டாய்
கலையகத் தோடிவனும்
கவிதையிலே தான் வைத்தான்
விலைபோகும் அம் மக்கள்
விடுதலை யை தான் வேண்டி
சளைக்காதே அறைகூவி
சந்தர்ப்ப வாதிகளை
சொற்களினால் இவன் வைதான்

வலம்புரிக்காய் குரல் கொடுத்து
எம்மோடே இவன் இணைந்தான்
வலமாக இவன் நின்று
அன்று முதல் துணை வந்தான்
உளமார சொல்வதென்றால்
இவன் வியர்வை துளிகளுமே
களமாக இருந்தது வே
எம் வளர்ச்சிப் படிகளிலே

நெஞ்சகலா கவிஞனி வன்
எங்கள் கலா
விஸ்வ நாதன்
வஞ்சமிலா சொல்லெடுத்து
வந்து விட்டான்
தலைமை யேற்க

கவிஞனே கலா விஸ்வநாதனே
கவியரங்கை நீ நடத்து
எமை தந்திடவே உன்னிடத்து
நல்ல தமிழ் சொல்லெடுத்து
எம்மையெல்லாம் நீ கடத்து







திங்கள், 7 ஜனவரி, 2019

ஏன் சொல்லவில்லை ? - சிறுகதை


21-12- 2018 "விடிவெள்ளி" பத்திரிகையில் இடம்பெற்ற எனது சிறுகதை -" ஏன் சொல்லவில்லை ?". 

ஏன் சொல்லவில்லை ?

- என். நஜ்முல் ஹுசைன்

பயாஸுக்கு கோபம் கோபமாய் வந்தது. என்ன இப்படி செய்து விட்டார் புரோக்கர் சலீம் நாநா. தன்னை தலைகுனிய விட்டாரே. இந்த கல்யாண புரோக்கர்மார்களையே நம்ப முடியாதுதான். தங்கள் கொமிஷனுக்காக எதையும் சொல்லத் துணிந்த அவர் இதனை சொல்லாமல் விட்டதில் வியப்பு கொள்ளத் தேவையில்லை. என்றாலும் வீடு தேடிச் சென்றாவது அவரை கிழி கிழி யென்று கிழிக்க வேண்டும். மரணித்த தனது தந்தையின் நண்பர்தான் புரோக்கர் சலீம் நாநா. என்றாலும் தன்னை இப்படி தலை குனிய வைத்து விட்டாரே.

அருகே இருந்த பயாஸின் நண்பன் ரசீனும் பயாஸை கடிந்து கொண்டான்.

"நீ செய்தது முறையில்லாத வேல. வேறெங்கேயும் முடிவாகியிருந்தா நீ முறைப்படி இவருக்கு சொல்லியிருக்க வேண்டும்தானே"

ரசீனின் பேச்சும் பயாஸுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எல்லாவற்றுக்கும் காரணம் புரோக்கர் சலீம் நாநாதான்.

பயாஸுக்கு ஒரு மூத்த சகோதரியும் இரண்டு தங்கைகளும் இருந்தனர். அவனது தந்தை உயிருடன் இருந்தபோதே மூத்த சகோதரிக்கும், ஒரு தங்கைக்கும் அவரே திருமணம் முடித்துக் கொடுத்து விட்டார். கடைசி தங்கை பாயிஸாவுக்கு அவர் பகீரதப் பிரயத்தனம் பண்ணியும் அவளுக்கொரு இல்லற வாழ்க்கையை அமைக்க அவரால் முடியாமல் போனது. அவரது மறைவின் பின்னர்தான் அப் பொறுப்பு பயாஸுக்கு வந்தது. பயாஸும் திருமண வயதை தாண்டியிருந்தாலும் முதிர்கன்னியாய் இருந்த தனது தங்கைக்குப் பிறகு திருமணம் முடிக்க அவன் தீர்மானித்திருந்தான். தனது மற்ற சகோதரிகளின் சுமையை சுமக்க தனது தந்தை இடம் வைக்க வில்லையே என்று நினைக்கும் போதெல்லாம் தனது தந்தைக்காக அவன் பிரார்த்தனை செய்ய மறப்பதேயில்லை. தனது கடைசி தங்கையை கரையேற்றுவது தனது மாபெரும் பொறுப்பு என்பதையும் அவன் மறக்கவில்லை.

தனது தந்தை இருந்தபோது மற்றைய சகோதரரிகளுக்கும் கொண்டு வந்ததைப் போலவே இந்தத் தங்கைக்கும் புரோக்கர் சலீம் நாநா பல வரன்களை கொண்டு வந்தார். அவருக்குக் கூட தங்கை பாயிஸாவுக்கு திருமணம் தாமதமாவதில் கொஞ்சம் வேதனையிருந்தது.

பாயிஸாவுக்கு மாப்பிள்ளை பார்த்து மாப்பிள்ளை பார்த்து பல அனுபவங்களை பயாஸும் பெற்றிருந்தான். அப்படிக் கிடைத்த ஓர் அனுபவத்தை பயாஸுக்கு என்றுமே மறக்க முடியாமலிருந்தது.

பாயிஸாவுடன் ஒன்றாய் படித்த கரீமா பயாஸுக்கு போன் பண்ணியிருந்தாள். திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த கரீமாவின் நாநா திருமணம் முடிக்க பச்சைக்கொடி காட்டியிருக்கிறான். பல தரகர்களிடம் அவனுக்கேற்ற மணப்பெண்ணைக் கொண்டு வருமாறு சொன்னபோது ஒருவர் பாயிஸாவின் விபரங்களை கொண்டு போயிருக்கிறார். அதைப் பார்த்து கரீமா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பாடசாலை காலங்களில் மிகவும் நெருங்கிப் பழகிய தோழி. நல்ல பண்புள்ளவள். காலம் கடத்தி திருமணம் முடிக்கும் தனது சகோதரனுக்கு மிகவும் பொருத்தமானவள்.

தரகர் வழங்கிய விபரத்திலிருந்த மொபைல் நம்பருக்கு கரீமா பேசினாள். பயாஸையும் அவளுக்குத் தெரியும். "பயாஸ் நாநா. நா கரீமா பேசுறன். ஒங்க பாயிஸாட கூட்டாளி ." என்று ஆரம்பித்து தரகர் கொண்டு வந்த விபரங்களை சொன்னாள். "நாநா எங்கட நாநாட கல்யாண பொறுப்பு ஏன்ட ஹஸ்பன்ட்தான் எடுத்திருக்கிறார். அவர் ஒங்கட கூட்டாளிதானே. கொஞ்சம் போய் அவரோட பேசுங்க" என்றாள்.

பயாஸும் மிகவும் மகிழ்ந்தான். தங்கை பாயிஸாவிடம் விஷயத்தைக் கூறிவிட்டு கரீமாவின் கணவர் நூர்தீனைப் பார்க்க ஆவலுடன் சென்றான். நூர்தீன் அவனது பாடசாலை நண்பன். பாடசாலை காலங்களில் பல விஷயங்களை ஒன்றாக இணைந்து செய்திருக்கிறார்கள்.

அவன் ஒரு வெளிநாட்டு முகவர் நிலையத்தில் வேலை செய்கிறான். பயாஸைக் கண்டதும் மகிழ்ச்சியோடு வரவேற்றான். அப்போதே பாயிஸாவின் திருமண வேலைகளில் பாதி முடிந்து விட்டதை பயாஸ் உணர்ந்தான்.

"நூர்தீன் சுகமா இருக்குறீங்களா.... ?" என்று ஆரம்பித்து தரகர் மூலம் நடந்த திருமண விஷயத்தை பயாஸ் சொன்னான்.

"அடடா அப்படியா. அந்த கெழட்டு புரோக்கரா பேசியிருக்கிறான். கொஞ்சம் இருங்க .... ." என்று சொல்லி மேசையிலிருந்த போனை தூக்கி நம்பரை சுழற்றினான்.

'கெழட்டு புரோக்கர் ' என்று நூர்தீன் சொன்னது 'சுருக்' என்று எங்கேயோ தைத்தது .

அவனது தொலைபேசி உரையாடலிலிருந்து மறுமுனையிலிருப்பது அவனது மனைவி என்று தெரிந்தது.

"ஏய் என்ன அந்த கெழட்டு புரோக்கர் ஒங்கட நாநாட புரபோசல ஒங்கட பழைய கூட்டாளிட ஊட்டுல இருந்து எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாரோ..." அவனது தொனி பயாஸுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியது.

அவன் அதற்குப் பிறகு பேசியதுதான் அவனை அப்படியே தூக்கி நிலத்தில் அடிப்பது போலிருந்தது.

" ஒங்கட நாநா கக்கூஸு பாளிய தோட்டத்துக்குள்ள தூக்கிக்கொண்டு போவ ஒங்களுக்கு சம்மதமா? " அதட்டலுடன் மனைவியோடு பேசினான். அந்தப் பக்கம் கரீமா என்ன சொன்னாள் என்று தெரியவில்லை.

போனை வைத்து விட்டு திரும்பிய நூர்தீன், " பயாஸ் இந்த விஷயம் சரி வராது " என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாய் சொன்னான்.

பயாஸின் குடும்பம் கொழும்பில் தோட்டம் என்று சொல்லும் இடத்தில்தான் வசித்து வந்தது. கொழும்பில் சாதாரண தர மக்கள் இவ்வாறான தோட்டத்தில்தான் வசித்து வருகின்றனர். தோட்டத்தில் பத்து குடும்பங்கள் குடியிருந்தால் மலசல கூடம் ஒன்றோ அல்லது இரண்டோதானிருந்தன. மலசல கூடத்துக்குள்ளே நீர்க் குழாய்கள் கூட இருப்பதில்லை. எனவே மலசல கூடம் போகும் ஒருவர் வாளியில் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும்.

அதனைத்தான் நூர்தீன் தனது மனைவிக்குக் கூறி இத் திருமணம் சரி வராது என்ற தீர்மானத்தை மனைவியின் மனதில் திணித்தான். அவனும் இதற்கு முன்பு இப்படியான ஒரு தோட்டத்தில் வசித்தவன்தான் என்பதை மறந்திருந்தான்.

சரி பரவாயில்லை. அது அவனது கருத்து. என்றாலும் தனது மறுப்பை நாகரிகமாக சொல்லியிருக்கலாமே. பதில் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு தனிப்பட்ட முறையில் மனைவியிடம் பேசியிருக்கலாமே. தனது மனதை புண்ணாக்கி இப்படி அசடு வழிய செய்யாமல் பாதுகாத்திருக்கலாமே. உலகில் எல்லா விதமான மனிதர்களும் வாழ்கிறார்கள் என்ற உண்மையை பயாஸுக்கு உணர்த்திய இடம். அந்த சம்பவத்தை எப்போதுமே பயாஸ் மறக்கவில்லை.

இப்படியே பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் புரோக்கர் சலீம் நாநா கொண்டு வந்த மாப்பிள்ளை தங்கை பாயிஸாவை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். முதலில் தனியாக வந்து பெண் பார்த்த அவர் பிறகு உத்தியோகப்பூர்வமாக தனது இரண்டு மூத்த சகோதரரிகளையும் அழைத்து வந்தார். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இனி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். எப்படி செய்யலாம் என்று அறிவிப்பதாக பயாஸ் தெரிவித்திருந்தான்.

இப்படி பேசி இரண்டு நாட்கள்தான் ஆகியிருக்கும். பயாஸ் குடும்பத்திற்கு தூரத்து உறவான ஒரு குடும்பம் பயாஸின் வீட்டுக்கு வந்தனர். வந்தவர்கள் சும்மா வரவில்லை. நீண்ட நாட்கள் வெளிநாட்டிலிருந்து வந்த தம்பிக்கு கட்டாயம் பயாஸின் தங்கையை தரவேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தனர். பயாஸுக்கு தர்ம சங்கடமாக போய் விட்டது. இத்தனை காலம் இவர்கள் எங்கிருந்தார்கள். ஒரு விஷயம் சரி வந்திருக்கிற நேரத்திலே இப்படி குழப்புகிறார்களே என்று திக்குமுக்காடிப் போனான். இருந்தாலும் வெளிநாட்டு மாப்பிள்ளை தூரத்து உறவு போன்றவை பயாஸின் தாயாருக்கும், தங்கைக்கும் அந்த மாப்பிள்ளையின் மேலேயே பிடிப்பினை ஏற்படுத்தியிருந்தது. என்ன செய்ய மணப்பெண்ணான தங்கையினதும், தாயாரினதும் விருப்பத்திற்கு மாறாக முதலில் சரி சொன்ன மாப்பிள்ளைக்கு திருமணம் முடித்துக் கொடுக்க பயாஸா லும் முடியவில்லை. முதலாவதாக சரி என்றவர் மன வேதனை கொள்வாரே. இருந்தாலும் சொல்லாமல் இருப்பதும் சரியில்லையே என்று பலவாறு நினைத்து மனங் குழம்பிப் போயிருந்தான் பயாஸ்.

இறுதியில் புரோக்கர் சலீம் நாநாவின் மூலமாகவே தகவல் தெரிவிப்பது என்று தீர்மானித்தான்.

சலீம் நாநாவின் வீடு தேடிச் சென்று விவரங்களைக் கூறினான். அவர் முகத்தில் பாய்வார் என்று எதிர்பார்த்தான். அவரது கொமிஷன் பணமும் இல்லாமல் போகிறதே. என்றாலும் அவர் "சரி சரி எப்படியும் விஷயம் நடந்தால் சரி" என்றார். அவர் அழைத்து வந்த மாப்பிள்ளையிடம் விஷயத்தைக் கூறி சமாதானம் செய்யச் சொன்னான். அதனை தான் செய்வதாக சலீம் நாநா ஒப்புக் கொண்டார்.

பாயிஸாவின் திருமண விஷயத்திற்கு ஓடியாடி இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில்தான் சலீம் நாநா கூட்டி வந்த அந்த மாப்பிள்ளையை சந்தித்தான். ரஸீனும் பக்கத்தில் இருந்தான்.

"என்ன பயாஸ் பிரதர் இரண்டு மாசமாகிருச்சு. உங்க கிட்ட இருந்து எந்த தகவலும் இல்லையே"

பயாஸுக்கு தூக்கிவாரிப் போட்டது.

"என்ன தகவல் வரலையா...." விழுங்கி விழுங்கி பேசினான் பயாஸ். "தங்கச்சிக்கு வேறொரு ஏற்பாடு நடந்திருச்சி. ஒடனே சலீம் நாநாகிட்ட சொல்லி தகவல் அனுப்பினேனே......"

"இல்ல இல்ல யாரும் எந்த தகவலும் சொல்லல்ல. நீங்க ஒரு வார்த்தை எனக்கிட்ட சொல்லியிருக்கலாமே. நா நீங்க இன்னக்கி வருவீங்க, நாளைக்கி வருவீங்க என்று பார்த்து கொண்டிருந்தன். சரி சரி பரவாயில்லை " என்று கூறி விட்டுப் போனார். பயாஸுக்கு ஏதோ போல ஆகிவிட்டது. அருகே இருந்த ரஸீனும் பயாஸை கடிந்து கொண்டான்.

பயாஸுக்கு தாள முடியாத கோபம் புரோக்கர் சலீம் நாநா மீது ஏற்பட்டது.

மற்ற வேலைகளை ஒரு புறம் வைத்து விட்டு அந்த கோபத்தோடு சலீம் நாநாவின் வீட்டுக்குச் சென்று, " சலீம் நாநா சலீம் நாநா. ...”என்று கத்தினான்.

"ஆ.... வாங்க பயாஸ் கல்யாண வேலயெல்லாம் எப்படி நடக்குது? " என்று கேட்டார்.

"அதையெல்லாம் ஒரு பக்கம் வைங்க. நான் சொன்னன்தானே நீங்க கூட்டி வந்த மாப்பிள்ளைக் கிட்ட விஷயத்த சொல்லச் சொல்லி. நீங்க சொன்னீங்களா இல்லையா. ......?" மிகவும் ஆத்திரத்தோடு பயாஸ் கேட்டான்.

"நா சொல்லல ........" மிகவும் சாவதானமாக சலீம் நாநா சொன்னார்.

"என்ன சொல்லலையா? ஏன் மறந்துட்டீங்களா?"

"இல்ல நா வேண்டுமுன்னுதான் சொல்லலல்ல."

"என்ன வேண்டுமுன்னு சொல்லலையா...?"

"ஆமா பயாஸ் . நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு ஒங்க தங்கச்சிக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறீங்க. இப்ப பெய்ட்டு மொத பாத்திட்டு போன மாப்பிள்ளைக் கிட்ட விஷயத்த சொன்னா அவர் கோவத்தில இப்ப நீங்க கல்யாணம் முடிக்கப் போற ஊட்டுக்கு போய்ட்டு ஏதாவது இட்டுக்கட்டி கல்யாணத்த கொழப்ப ஏலும். பாவம் ஒங்க தங்கச்சி. இதுக்கு பொறவாவது அவக்கு நல்ல வாழ்க்க அமையட்டும். இந்த கல்யாணம் முடிஞ்சதும் அவர சமாளிச்சக்கலாம்"

கல்யாண தரகர் என்றதும் அவர்களது ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து ஏளனமாக நினைத்துக் கொண்டிருந்த பயாஸுக்கு இல்லை இல்லை அவர்களிலும் உயர்ந்த மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை சலீம் நாநா நிரூபித்துக் கொண்டிருந்தார் !