எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

"உடைந்த சைக்கிள்" சிறுகதை

Add caption
 

  •  உடைந்த சைக்கிள்
                           - என். நஜ்முல் ஹுசைன்

    " பழைய இரும்பு சாமான், பிளாஸ்டிக், பழைய பேப்பர் வாங்குறது "
    மிக தொலை தூரத்திலிருந்து இந்த சத்தம் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது.

    அன்று ஞாயிற்றுக்கிழமை ஒன்பது மணிக்குப் பிறகும் படுக்கையிலே உருண்டு கொண்டிருந்தான் நியாஸ்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் சுபஹ் தொழுது குர்ஆன் ஓதிய பின் சூரியன் உதயமான பின்பு மீண்டும் ஒருமுறை உறங்கும் வழக்கம் நீண்ட காலமாக நியாஸிடம் இருக்கும் பழக்கம். மற்ற நாட்களில் அப்படி உறங்குவதற்கு அவனுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதேயில்லை. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து விட்டு மூத்த மகனை பாடசாலையில் விட்டு விட்டு அலுவலகம் செல்வதற்கு நேரம் சரியாக இருக்கும். எனவே ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை அவன் அனுபவிக்கத் தவறுவதில்லை.

    அரை தூக்கத்திலிருந்த நியாஸுக்கு அந்த பழைய இரும்பு சாமான்காரனின் சத்தம் கேட்டாலும் கூட கண்களை மூடிக் கொண்டுதானிருந்தான்.

    " ஏம்பா தேடிக்கொண்டிருந்தீங்களே. இதோ வாரான். கொஞ்சம் எழும்பி அந்த சைக்கிள கொடுத்துறுங்க..... " மனைவி பாஹிரா சொன்னாள்.

    " ஆ....." சோம்பல் முறித்தவாறே கண்களை திறந்தான் நியாஸ்

    " இரி இரி.... அவ என்ன இங்கயா இரிக்கான். ஒரு கட்டக்கி அங்குட்டு இரிக்கான். "

    " அட அப்படியென்னா நீங்க சத்தத்த கேட்டுக் கொண்டுதானிருக்கீங்க. பொய்க்கி தூங்குற மாதிரி நடிக்கிறீங்க" என்றாள் பாஹிரா.

    "நாங்க கொஞ்சம் தூங்குனா ஒங்களுக்கு புடிக்காதே "  நியாஸ் முணுமுணுத்தான்.

    " தூங்குங்க தூங்குங்க நல்லா தூங்குங்க. ஆம்புள்ளைகளுக்கு என்னா லீவு நாள் என்று ஒன்று இரிக்கி. எங்களய மாதிரி பொம்பளகளுக்கு எங்க லீவு. எல்லா நாளும் வேல நாளுதான் " கிண்டலாகச் சொன்னாள் பாஹிரா.

    படுக்கையிலிருந்து எழுந்து கொண்டு கண்ணைக் கசக்கிக் கொண்டு சிரித்துக் கொண்டே நியாஸ் சொன்னான், "அதென்டா உண்மதான். பொம்பளைகளுக்கு எங்க லீவு. சில பேங்குகளுல 24 தர 7 - 365 நாட்கள் என்று விளம்பரம் போட்டிருக்காங்க "

    " அட அதென்ன 24 தர 7 - 365 நாட்கள் ? " கேட்டாள் பாஹிரா.

    " அப்படின்னா அந்த பேங்கு ஒவ்வொரு நாளும் 24 மணித்தியாலம் அதுவும் 7 நாளும் வேல செய்யுறாங்கலாம். மூடுறதே இல்லையாம். அதுதான் வருஷத்தில 365 நாளும் லீவே எடுக்காம வேல செய்யுறாங்கலாம். எனக்கிட்ட கேட்டா ஒங்களய மாதிரி பொம்பளைங்களதான் 24 தர 7 - 365 நாட்கள் என்று சொல்லனும். நீங்க தானே ஒவ்வொரு நாளும் இருபத்தி நாலு மணி நேரமும் லீவே எடுக்காம வேல செய்யுறீங்க " என்று பெண்களுக்குச் சான்றிதழ் வழங்கினான் நியாஸ்

    " அத ஒத்துக் கொண்டீங்களே அதுக்கு முதல்ல ஒரு தேங்ஸ் சொல்லனும் " பாஹிரா நக்கலாகச் சிரித்தாள்

    பேசிக் கொண்டே நியாஸ் படுக்கையிலிருந்து எழுந்து குளியலறைச் சென்று அவசரமாக வாயை அலம்பி முகத்தை பேருக்கு கழுவிக் கொண்டான்.

    நியாஸ் வெளியே வரவும், பழைய இரும்பு வியாபாரி வீட்டு வாசலுக்கு வரவும் சரியாய் இருந்தது.

    " ஏ பழைய இரும்பு கொஞ்சம் நில்லு வாரேன் " என்று தெருவுக்கு கேட்பதற்கு கத்தினான்.

    பழைய இரும்பு வியாபாரி இப்படியான சத்தங்களை கேட்பதற்கே தனது காதுகளை கூர்மையாக்கிக் கொண்டு வருபவன்தான்.

    அதனால் சத்தம் கேட்டவுடன் நியாஸின் வீட்டு வாசலில் தான் தள்ளிக் கொண்டு வந்த வண்டியை நிறுத்தினான்.

    அவனது வண்டியில் பழைய சாமான்கள் கொஞ்சம் இருந்தன. பெட்டி போன்றிருந்த பழைய கொம்பியூட்டரும்கூட அவனது வண்டியை அலங்கரித்துக் கொண்டிருந்தது. இப்போது தான் மெல்லிய கொம்பியூட்டர்கள் வந்து விட்ட காரணத்தால் பழைய பெட்டி கொம்பியூட்டர்களுக்கு மவுசு போய்விட்டது. அதனால் அதுவும்கூட  பழைய இரும்பு பிளாஸ்டிக் பொருட்களுடன் இணைந்து கொண்டன.

    வீட்டு ஸ்டோர் அறையிலே இருந்து நியாஸ் ஒரு சிறிய சைக்கிளை தூக்கிக் கொண்டு வந்தான். அவனது நான்கு வயது மகன் ஓட்டி விளையாடிய மூன்று சக்கர வண்டி.  முன்னால் உள்ள சக்கரத்தின் கம்பிகள் வளைந்திருந்தன.

    குழந்தையாக இருந்த போதிலிருந்தே அவனது மகன் மூன்று சக்கர சைக்கிளை கண்டால் விடமாட்டான். அதிலே அவனை ஏற்றி உட்கார வைத்தால்தான் அழுகையை நிறுத்துவான்.   அதிலே வைத்து தள்ளும் போதுதான் சிரிப்பான். அப்படியான சைக்கிள் எங்காவது உறவினர் வீடுகளுக்கு போனால்தான் இருக்கும். என்றாலும் நியாஸ் தனது சிறிய மகனை அந்த வண்டியில் வைத்ததும் அந்த வீட்டிலிருக்கும் சைக்கிளின் சொந்தக்கார பிள்ளை 'வீல்' என்று அழும். தனது சொத்து தன்னிடமிருந்து பறி போகிறதே என்ற ஏக்கம் அதற்கு. தனது பிள்ளையை சிரிக்க வைக்க இன்னொரு பிள்ளையை அழ வைக்கவேண்டியிருந்தது.

    தனது மகனுக்கு கால் நீட்டமானதுமே நியாஸ் செய்த முதல் வேலை மகனுக்கென்றொரு மூன்று சக்கர வண்டி வாங்கியதுதான்.

    அவனது வீட்டுச் சுற்றுப்புறத்தில் மகனுக்கு பெரிதாய் விளையாட இடம் இல்லாவிட்டாலும் விடுமுறை நாட்களில் சிறுவர் பூங்காவுக்கு அழைத்துச் சென்று விளையாட வைப்பான். அப்படி தனது மகன் காலாற விளையாடிய சைக்கிள்தான் அது. விளையாடி விளையாடி அதன் முன் சக்கரங்களின் கம்பிகள் உடைந்தும் போயின. இப்போது அந்த மகனுக்கு நான்கு வயது. அவனுக்கு இப்போது இந்த சைக்கிளின் மீதுள்ள ஆசைபோய்விட்டது. அதற்கு பதிலாக சார்ஜ் செய்து ஓட்டும் மின்சார பைக்கின் மேல் ஆசை வந்து விட்டது. எங்கேயாவது ஷொப்பிங் சென்டர் களுக்கு போனால் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் மின்சார பைக்கில் ஏறி உட்கார்ந்து கொண்டு இறங்க மாட்டான். மிகவும் கஷ்டப்பட்டே அதிலிருந்து அவனை எடுத்துக் கொண்டு வருவார்கள். இல்லை இழுத்துக் கொண்டு வருவார்கள். எப்படியும் அப்படியான ஒரு பைக்கை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நியாஸும் அவனது மனைவியும் தீர்மானித்துக் கொண்டார்கள். ஆகக் குறைந்ததையே இருபதினாயிரம் என்று சொன்னார்கள்.

    பட்ஜெட்டில் இருபதினாயிரத்தை ஒதுக்க ஒரு மூன்று மாதங்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டன. மகன் ஆசைப்பட்டது போலவே மின்சார பைக் வாங்கி அதை அவன் ஆசை தீர ஓட்டி மகிழ்கிறான்.

    அதனால் இந்த பழைய மூன்று சக்கர சைக்கிளை யாருக்காவது விற்றுவிட்டு வோம் என்று யோசித்தார்கள். என்றாலும் அதனை வாங்க யாரும் முனைப்பு காட்டவில்லை. அதனால்தான் அதனை பழைய இரும்பு வியாபாரியிடம் விற்பதற்கு கணவனும் மனைவியும் பேசிக் கொண்டார்கள். அதுதான் பழைய இரும்பு வியாபாரியின் குரல் கேட்டதுமே அவர்களுக்கு உற்சாகம் வந்து விட்டது.

    இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து வாங்கிய மூன்று சக்கர சைக்கிள் வண்டி. இப்போது முன் சக்கரம் மட்டும் தான் உடைந்திருக்கிறது. அதை ரிப்பெயார் செய்தால் நன்றாக ஓடலாம்.

    " தம்பி இத எடுத்துக்கிட்டு ஆயிரம் ரூபா தா. கொஞ்சம் இத செஞ்சா நல்ல வெலக்கி விய்க்கலாம் "

    அதை நீட்டியவுடன் பழைய இரும்பு வியாபாரி மிகவும் ஆவலோடு அதை வாங்கி அங்கும் இங்கும் திருப்பித் திருப்பிப் பார்த்தான். ஏதோ யோசித்தான்.

    "தொர இத எனக்கு தாங்க. நான் முந்நூறு ரூபா தாறேன் " என்றான்.

    " போப்பா முந்நூறு ரூபாய்க்கு இத தர ஏலுமா. நல்லா ஒன்றுமே ஒடைஞ்சி இல்லநீ கொஞ்சம் சரி செஞ்சா ஒனக்கு நல்ல வெலக்கி விக்க ஏலும். இதுல புது பைசிக்கள் மூவாயிரம் ரூபா வரும். சரி பரவாயில்லை எட்டு நூறு ரூபா தா "

    " இல்ல தொர எனக்கிட்ட அவ்வளவு சல்லி இல்ல.  ஒரு முன்னூத்தி அம்பது ரூபா தாறேன். எனக்கு தாங்க தொர " என்று வியாபாரியாக இல்லாமல் ஏதோ ஓர் ஏக்கத்துடன் கேட்டான்.

    நியாஸுக்கு அவன் மகனுக்கு வாங்கிய மின்சார பைக்கின் விலை ஞாபகம் வந்தது. பதினெட்டாயிரம். இந்த சைக்கிளை விற்று ஒரு எண்ணூறு ரூபாயையாவது அதில் ஈடு செய்ய வேண்டும் என்பதே அவனது தீர்மானமாக இருந்தது.

    " ஏலா ஏலா எட்டு நூறு ரூபா தாரதென்டா தா . இல்லாட்டி போ. நான் சைக்கிள விக்க இல்ல " என்று சொல்லியவாறே சைக்கிளை மீண்டும் கையிலே எடுத்துக் கொண்டான் நியாஸ்.

    பரிதாபமாக பார்த்தபடி அந்த இரும்பு வியாபாரி 


    " தொர இத நா விக்க எடுக்கல்லை. ஏன்ட மகனுக்கு குடுக்க நெனச்சேன். மிச்ச நாளா எனக்கிட்ட ஏன்ட மவன் சைக்கிள் வாங்கி கேட்டு அழுந்து கொண்டிருக்கிறான். புதிய சைக்கிள் வாங்க எங்க தோரே எங்கள்ட சல்லி. ஒங்க சைக்கிள கொண்டு போய் ஒரு முன்னூறு செலவளிச்சா புது சைக்கிள் மாதிரி செஞ்சி குடுத்துருவன். அதுதான் பாத்தேன். "

    இப்போதுதான் இரும்பு வியாபாரி சைக்கிளை ஏக்கத்துடன் பார்த்த காரணம் நியாஸுக்கு விளங்கியது. என்றாலும் நியாஸ் கேட்ட எண்ணூறு ரூபாய்க்கும் அவன் சொல்லும் முன்னூற்றி ஐம்பது ரூபாய்க்கும் எவ்வளவு வித்தியாசம். நியாஸ் யோசித்துக் கொண்டிருந்த போதே உள்ளே இருந்து சாஹிரா பேசினாள்

    " கொஞ்சம் இங்க வாங்க..... " என்று நியாஸை கூப்பிட்டாள்.

    நியாஸ் கையிலே சைக்கிளையும் தூக்கிக் கொண்டே உள்ளே போனான். இரும்பு வியாபாரி சிறிது நேரம் தாமதித்துப் பார்த்தான். உள்ளே போன நியாஸ் வெளியே வர காணவில்லை.

    உள்ளே சென்ற நியாஸுக்கு அவரது மனைவி "வேலய பாருங்க அந்த சைக்கிள தூக்கி ஒரு மூலைல போடுங்க. முன்னூத்தி அம்பது ரூபா பெரிய முன்னூத்தி அம்பது ரூபா " என்று சொல்வது போல் காதில் கேட்டது

    தனது ஆசை நிராசையான வேதனையோடு இரும்பு வியாபாரி அந்த இடத்தை விட்டு அகன்றான். தனது அன்பு மகனின் முகம் அவனது மனத்திரையில் வந்து கொண்டிருந்ததால் ' பழைய இரும்பு சாமான், பிளாஸ்டிக், பழைய பேப்பர் வாங்குறது ' என்று கத்த முடியாமல் அவனது தொண்டை கரகரத்துக் கொண்டிருந்தது.

    மௌனமாகவே சிறிது தூரம் வண்டியை தள்ளிக் கொண்டு போன அவனை
    " தம்பி தம்பி " என்ற சத்தம் திரும்பிப் பார்க்க வைத்தது.

    தூரத்திலே நியாஸ் நின்று கொண்டு கையை அசைத்து அங்கே வருமாறு சைகை காட்டினான்.
    வண்டியை மெதுவாக திருப்பிக் கொண்டு நியாஸுக்கு அருகில் சென்று நிறுத்தினான். மீண்டும் அவனை அங்கே நிறுத்தி விட்டு உள்ளே சென்ற நியாஸ் கையிலே சைக்கிளுடன் வந்தான்.

    " தம்பி இந்த சைக்கிள எடுத்துக்கோ " என்று சொல்லியதோடு நிற்காமல் நியாஸ்


    " இந்த பணத்தையும் வச்சி முன் ரோதய ரிப்பெயார் பண்ணி ஒன்ட மகனுக்கு குடு " என்று கூறி ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றையும் நீட்டினான்.

    இரும்பு வியாபாரிக்கு தனது கண்களையே நம்ப முடியவில்லை.
    அவரது மனைவி சொன்னதை அவர் கேட்கவில்லையோ,  என்று  நினைத்தான்.

    தனது மகனுக்காக ஆசைப்பட்ட சைக்கிள் தனக்கு கிடைக்கிறதே அதுவும் போதாதற்கு ரிப்பெயார் பண்ண பணமும் தருகிறாரே.

    " ஐயா பணமெல்லாம் வாணாம் ஐயா. இந்த முன்னூத்தி அம்பது ரூபாயவாவது எடுங்க ஐயா "

    " இல்லப்பா நான் மனப்பூர்வமா இத தாரேன். நீ ஒன்ட மகனுக்கு என்டு சொன்னதும் ஏன்ட பொண்டாட்டிட மனச உருக்கிரிச்சு. ' எங்கட மகன் எங்கள கரச்சல் பண்ணினது மாதிரி தானே அவர்ட மகனும் கரச்சல் குடுப்பான். எங்களுக்கு எங்கட மகன் மாதிரி தானே அவருக்கு அவர்ட மகன். பணம் என்னப்பா பெரிய பணம். இந்த சைக்கிளையும் குடுத்து அது ரிப்பெயார் பண்ண ஒரு ஐநூறு ரூபாயும் கொடுங்கப்பா ' என்று சொல்லிட்டா. இனி என்ட பொண்டாட்டி சொன்னா அதுக்கு மறுபேச்சு ஏது. இந்தா சந்தோஷமா தாரேன். ஒன்ட மகனுக்கு சந்தோஷமா குடு " என்று மலர்ந்த முகத்துடன் கொடுத்தான்.

    அந்த உள்ளங்களின் பெருந்தன்மையை  எண்ணி கடவுளுக்கு நன்றி சொன்னவனாக நியாஸ் கொடுத்த சைக்கிளையும், பணத்தையும் நன்றி உணர்வோடு பெற்றுக் கொண்ட பழைய இரும்பு வியாபாரி

    " குடுக்கிறன் தொர குடுக்கிறன் ஒங்க ரெண்டு பேரையும் சொல்லியே ஏன்ட மகன் கிட்ட குடுக்கிறன் " என்று சொன்ன போது அவனது கண்கள் பனித்திருந்தன.
    ...................................................




    தினகரன் வாரமஞ்சரி 23-08-2020

  • நன்றி: பிரதம ஆசிரியர் திரு. செந்தில் வேலவர்


புதன், 19 ஆகஸ்ட், 2020

ஹஜ்ஜுப் பெருநாள் கவிதை 01/08/2020


01/08/2020 வசந்தம் தொலைக்காட்சியின் ஹஜ்ஜுப்  பெருநாள் விசேட ஒளிபரப்பில் இடம்பெற்ற கவிதை