எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 17 ஜூலை, 2017

கவிஞர் ஏ. பீர் முகம்மது

வலம்புரி கவிதா வட்டத்தின் 39 வது கவியரங்கு 8-7-2017 அன்று நடந்தபோது கவியரங்கினை தலைமையேற்று நடாத்த கவிஞர் ஏ. பீர் முகம்மது அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்புவிடுத்தேன்.
- என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்


பேராற்றல் கொண்ட ஒரு
குடும்பத்தின் உறுப்பினராய்
பேர் பெற்ற ஒரு கவிஞர்
பேச்சாளர் எழுத்தாளர்
கூர் கொண்ட பேனாவின்
தேன் நாவின் சொந்தமிவர்
சீர்வரிசை யாக இவர்
வகவத் தோடொன்றிணைந்தார்
பீர்முகம்மத் பெற்றதினை
எங்களுக்குப் பெருமை என்பேன்


கிழக்கிலங்கை மண்ணுக்கே
உண்டான செழுமை பெற்று
முழக்கமிட்டு இலக்கியத்தில்
முத்திரையும் பதிப்பவராம்
சளைக்காத தன் பேச்சில்
சுவையூட்டி மனங்கவரும்
வித்தகராம்
கலைக்காக மட்டுமல்ல கல்விக்கும் இவர் சேவை
கல்வி
அதிகாரியாய் இருந்து
காட்டிய இவர் திறமை
மாணவர்
மனங்களெல்லாம் மணக்குதம்மா


கவிதை வெள்ளம் பாய்கிறது
வகவத்தில் என்றறிந்து
நனைவதற்கு இவர் வந்தார்
உங்கள் கவிதையிலே நனைவதற்கு
நாமுள்ளோம் என்றுரைத்து
கவிதை
தலைமையினை இன்று
தந்தோம்
கவிஞரே பீர்முகம்மது
ஊற்றுங்கள் எங்கள் காதுகளில்
உங்கள் அக மது
எங்கள் அகமது வைப்போம்
உங்கள் பேர் முகமது

   - என். நஜ்முல் ஹுசைன்


வியாழன், 6 ஜூலை, 2017

கழுதைகளிடம் ஏன் கற்பூரம்?



மனது வலிக்கிறது
பாடப் புத்தகங்களைக் கிழித்து
கை துடைக்க
தரும்போது

அறிவூட்டிய
ஒரு தாயல்லவா
கழுத்து நெறித்து
கொல்லப்படுகிறாள்

இன்னும்
பல பிள்ளைகளைப்
பெற்றெடுக்கத் தகுதியானவள்

அறிவிலிகளின் கைகளில்
அகப்பட்டு
சின்னாப்
பின்னமாக்கப்படுகிறாள்

பாவத்தில் எங்களுக்கும்
பங்கு வைத்து

படித்த முட்டாள் பிள்ளைகளும்
இளந் தாயை
முதியோர் இல்லத்தில்
ஒப்படைத்து

இந்தத்  தாயை
கொலை செய்த காரணத்தால்
எத்தனை அறிஞர்கள்
கரு கலைக்கப்பட்டார்கள்

சரியாக கணக்குப் பார்த்து
பணத்தைப் பெற்ற
ஹோட்டல் முதலாளி
சொல்லிக் கொடுத்த
தாயை
காலுக்குக் கீழல்லவா
போட்டுள்ளார்

தயவுசெய்து
படித்த பாடப் புத்தகங்களை
சிறு தொகைக்காய்
சீனி சுற்ற கொடுக்காதீர்கள்

எத்தனையோ
ஏழை தேனிகளின்
தேன்
அங்கே புதைந்திருக்கும்போது

நாளைய பெரும் முதலீட்டுக்காய்
அறிஞர்களாக துடித்துக் கொண்டிருக்கும்
அந்த அப்பாவிகளிடம்
ஒப்படையுங்கள்!

- என். நஜ்முல் ஹுசைன்
05/07/2017