எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி கவியரங்கு - "கை"

வரக்காப்பொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி தனது 60ம் ஆண்டு வைர விழா நிகழ்வுகளுக்காக 28-5-2005 இரவு 10 மணிக்கு கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கவியரங்கொன்றை ஏற்பாடு
செய்திருந்தது. 



தலைமை : கலாபூஷணம் கலைவாதி கலீல்

கவிஞர்களும் தலைப்புகளும்

கிண்ணியா அமீர் அலி - நாசி
காத்தான்குடி பௌஸ் - வாய்
ரவூப் ஹசீர் - கண்
மேமன்கவி - காது
நஜ்முல் ஹுசைன் - கை


"கை" என்ற தலைப்பில் நான் பாடிய கவிதை -
என். நஜ்முல் ஹுசைன்


வைரவிழா காணும்
பாபுல் ஹஸன்
அதிபர் எம். ஜே.எம். காசிம்
அவர்களே
அதிதிகளே, ஆசிரியர் குழு
உறுப்பினர்களே


கவிதையால்
தலைவாரி பூச்சூடும்
கலைவாதி கலீல் அவர்களே

அவர் எங்கள்
தலைகளை வாரும்போது
எங்கள் கால்களை வாராமல்
கை தட்டி மகிழும்
சபையோரே


இக் கல்லூரி காற்றினிலே
சுவாசித்து
இன்று தலைநகரிலே
தென்றலாய் பவனி வரும்
தமிழ்த் தென்றல் அலி அக்பர்
அவர்களே

இங்கே இதய மண்ணிலே
விதைகள் போடுவதற்காய்
கவிதை கொண்டு வந்திருக்கும்
என் அருமை கவிஞர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்


இது நாங்கள்
கவிதை பாட
சாலை தந்த
பாடசாலை
இல்லை இல்லை
உறுப்புகள் தந்த
தான சாலை


சீறிப் பாயும்
ஹசீர் கண்
கண் கொடுத்திருக்கிறது

புவிக்காய் பாடும்
மேமன்கவிக்காய்
காது கொடுத்திருக்கிறது
அவர் கவிதைக்கு
காது கொடுக்கக் காத்திருக்கிறது


அடடா
மருத்துவத்தில் இல்லா
விசித்திரம்
வாய், நாசிகூட
கொடுத்திருக்கிறது


காத்தான்குடி பௌசிடம்
வாயைக் கொடுத்திருக்கிறது

கிண்ணியா அமீர் அலியின்
கவிதைகளை
மூக்கைக் கொடுத்து
முகர்ந்துப் பார்த்துள்ளது


இதில் என்ன விசித்திரம்
எத்தனைப் பேருக்கு
மூளை கொடுத்த கல்லூரி
வெறுமனே மூலையில் போய்
குந்தி விடாதே
சமுதாய மேடையிலே
நிமிர்ந்து நில் என்று
எத்தனைப் பேருக்கு
மூளை கொடுத்த கல்லூரி
இன்றெனக்கு
கை கொடுத்துள்ளது -
கவிதை பாட
 

இன்றெனக்கு ஒரு கை
கொடுத்துள்ளது


உங்களுக்கு
இருக்கை தந்துள்ளது


இருக்கைகளை நீங்களே
வைத்துக் கொள்ளுங்கள்

அதற்காகத்தானே
ஏலம் போல் மணக்க வேண்டிய
எம் சமுதாயம்
ஏலம் போடப்படுகிறது
அதனால் இருக்கையை
நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்
 

இரு
கைகளை மட்டும்
எங்களுக்குத் தாருங்கள்
தட்டும் இரு கைகளை மட்டும்
எங்களுக்குத் தாருங்கள்


சபையோரே
பந்தை வீசுவது மட்டும்தான்
எங்கள் வேலை
அதை சரியாய்
பாய்ந்துப் பிடிப்பது
உங்கள் வேலை


சமுதாயமே
உனது இதயக் கையைப்
பொத்தி வைத்துக்கொண்டு
உனக்கு வேறென்ன வேலை


மனிதனை ஏற்றிவிடுவது
வேண்டுமானால்
ஏணியாய் இருக்கலாம்
என்றாலும் எம் சமூகத்தை
கை தூக்கி விடுவது
கல்விதானே
 

காலால் நீங்கள்
இமயத்தை ஏறலாம்
எனினும்
உன் கைகளால்தான்
வானத்தைப் பிடிக்கலாம் -
எழுத்து ஏணி வைத்து


வள்ளுவன்
இந்தக் கையால்
திருக்குறள் எழுதவில்லை
ஏனெனில்
இது என் கை
இருந்தாலும் உன் கையால்
ஒரு புதுக் குறள் எழுதலாம்
கல்வி உன் கைக்குள்
இருந்தால்


இங்கே எத்தனையோ விஷயங்கள்
எங்கள் கைக்கு வெளியே


சமுதாயமே நீ
மறக்காதே
எழுவாய் இலையேல்
வாக்கியம் இல்லை
கல்வியில் நீ
எழுவாய் இலையேல்
உனக்கு
வாழ்க்கையும் இல்லை


இலக்கணத்தில்
அவனும், அவளும்,
அவர்களும் படர்க்கை
என்றாலும்
அவர்கள் இல்லாமல்
ஏதுனக்கு வாழ்க்கை


கல்வி - ஒற்றுமை இரண்டும்
இருக்க வேண்டியது
உன் கை
இருந்தால் இந்த உலகுக்கே
தருவாய் விளக்கை
வாழ்க்கை உனக்குத் தரப்பட்ட
வலக்கை
நீ அதில் காட்டப்போவது
உதயமாகும் கிழக்கையா ?
அஸ்தமிக்கும் மேற்கையா ?
தீர்மானம் இருக்கிறது
உன் கை


கை கொடுத்த கடல் கூட
ஒரு நாள் கை விரித்தது
அந்தச் சந்தோசத்தில்
பலர்
கை சுருட்டிக் கொண்டார்கள் -
கிடைத்ததையெல்லாம்
சுருட்டிக் கொண்டார்கள்

அகதிகளுக்கு வந்ததை
அதிதிகளுக்கு வந்ததாய்
நினைத்துக் கொண்டார்கள்
 

இல்லை இல்லை
அதிதிகளாய் இருக்கும்
நாங்கள்
நாளை அகதிகளாய்
போய் விடுவோமோ
என்று பயந்து
கிடைத்த பொருட்களை
எடுத்து வைத்து
ஒத்திகைப் பார்த்துக் கொண்டார்கள்


சமுதாயம் இவர்களுக்கு
என்ன கைம்மாறு
செய்யப்போகிறது ?


அமெரிக்காவைப் போல்
இங்கே சிலர் வைத்திருப்பது
உலகை அழிக்கும் உலக்கை
என்றாலும் பாசாங்காய்
நீட்டுவது கருணைக்கை
அவர்களுக்கெல்லாம்
எப்படியாவது அடையவேண்டும்
தம் இலக்கை
யாரிடம் போய் சொல்லுவது
இவர்கள் வழக்கை


கைக்கும் இந்த வாழ்க்கை
இனிக்கும் நாள் எப்போது ?
எங்கள் கைக்குள்
சட்டத்தரணிகளாய் மிளிரும்
இளைய சமுதாயம்
இந்த வழக்கை
ஏற்றுக் கொள்ளும்போது


இளைய சமுதாயமே -
நம்பிக்கை வைத்துள்ளது
உடுக்கை இழந்த சமுதாய
இடுக்கண் களைய
உன் கை தருவாய்
என்று நம்பி
கை வைத்துள்ளது எம் சமூகம்


இலட்சியங்களை நீ
கைகளால் கைது செய்து
உன் கைகள்
வெறும் பொய்கள் அல்ல
இந்த உலகத்தைப் புரட்டும்
நெம்புகோலைத் தூக்கும்
வலிமை
உன் கைகளுக்குத்தான் உண்டு


வெறுமனே சத்தியம்
செய்வதற்காய் அல்ல
உன் கைகள்
சத்தியம் காப்பதற்காய்


நாளை என்ற நாளை
உன்னால்தான்
அடையாளம் காண முடியும்
சின்னஞ்சிறு வித்தியாசங்களுக்கிடையே
சறுகிப் போய் விடாதே
நீ பென்னம்பெரு
காரியங்களுக்காய்
உருவாகியுள்ளவன்


ஊசியின் கைகளில்
வழங்கப்படும் நூலைப் படித்து
மானத்தைப் பாதுகாக்க
பிரிந்திருக்கும் ஆடைகளை
ஒற்றுமையாக்குவதில்லையா -
அதுதான் உன் கைகளிலும்
தரப்பட்டிருக்கும் பணி


எது கை என்று
என்னிடம் கேட்டார்கள்
எதுகை இல்லாமல் சொன்னேன்
இது கை என்று -


இளைய சமுதாயமே
 

அது
உன் கை
உன் கை
உன் கை
 

நன்றி!

வெள்ளி, 6 அக்டோபர், 2017

கவிதாயினி யோகராஜன் சுசீலா




வலம்புரி கவிதா வட்டத்தின் (வகவம்) 42வது கவியரங்கு 05-10-2017 அன்று நடைபெற்றபோது கவியரங்கைத் தலைமைத் தாங்கி நடாத்த கவிதாயினி யோகராஜன் சுசீலாவுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் - என் நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்



 
புலிபோலே பாய்ந்து வரும் பெண்ணாள் - இவள்
பொங்கிடுவாள் கொடுமைகள் முன்னால்
வலி மிகுந்தாள் பெண்கள் வலி
கண்டால்
வார்த்தைகளால் சுட்டெரித்துக்
கொல்வாள்
வரிகளிலே ஏந்திய இவள்
சொல் வாள் 

இல்லை இவள் கவிதையிலே வேஷம்
இதயத்தைப் பிழிந்திடுவாள் ;
பேசும்
சொல்லுக்குள்ளே பொங்கும்
ரோஷம்
சோர்வில்லாள்; இவள் முன்னே 
எம் கவிதை கூசும்

உளவியலைப் பொருட்டாக கொண்டாள்
உலவுகின்ற மனத்துயரை
தீர்க்கும்
உறுதியினை தலைமேலே
வைத்தாள்
உம்மத்தம் செய்து திரிவோரை
அச்சமின்றி வெளிப்படையாய்
வைதாள் 

வகவத் திற்கிவள் வந்தாள்
மயிலா
தோகை விரித்தாடுகின்ற
குயிலா
வாகை சூடும் இவள்
வை சுசீலா
உன் தலைமையிலே சிறப்பை
வை சுசீலா 

யோகராஜன் சுசீலாவின்
தலைமை
காட்டிடுவாள் கவிதையிலே
இளமை
தொட்டிடுவோம் இவள்
கொட்டும் உளமை
வகவத்திற் கிவள் வருகை
பெருமை!