(வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய 'கவிதைகளுடனான கை குலுக்கல்' நூல் வெளியீட்டு விழாவும்ரூபவ் சிரேஷ்ட எழுத்தாளர் நயீமா சித்தீக்ரூபவ் சிரேஷ்ட அறிவிப்பாளர் புர்கான் பீ.இப்திகார் ஆகியோர் கௌரவிப்பு விழாவும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 07-07-2013 அன்று டொக்டர் தாஸிம் அஹமத் தலைமையில் நடைபெற்றபோது வாசிக்கப்பட்ட கவிதை)
கொடுக்காதீர்கள்
பெண்களுக்கு
சமஉரிமை
ஆண்களே
பெண்களுக்கு
கொடுக்காதீர்கள் சம உரிமை
இலக்கியத்தில் உழல்கின்ற
பெண்களுக்கு
கொடுக்காதீர்கள் சம உரிமை
ஆண்களேரூபவ்
அதைவிட கொஞ்சம்
கூடுதலாகக் கொடுங்கள்
சம உரிமை கொடுக்காதீர்கள்
அதைவிட கொஞ்சம்
கூடுதலாகக் கொடுங்கள்
ஆளுமைமிக்க எங்களின்
பெண்களின் கைகளில்
படுவது
பேனா மை
மட்டும்தானா
சமையல்
பாத்திரத்தில் உள்ள
கரி
மையும் அல்லவா
ஒட்டிக்கொள்கிறது
பெண்கள்
இலக்கியத்தில்
கால் வைக்கிறார்கள் -
கைகளையோ
சமையல் பாத்திரத்தில்
வைத்திருக்கிறார்கள்
குடும்பத்தின்
வெற்று வயிறுகள்
நிரம்பி வழிவதற்காய்
கரி மையைப்
பூசிக் கொண்டதன்
பின்தானே
வாசகர்களின்
பட்டினிக்குத் தீனிபோட
பேனா மை
கையில் பட
அனுமதிக்கப்படுகிறது
பல பாத்திரங்கள்
படைக்கும் அவள்
இரண்டு பாத்திரங்களில்
வேடமேற்று -
அன்புக்கு பாத்திரமாகவும்
திகழ வேண்டும்
பத்திரமாகவும் இருக்கவேண்டும்
பாராட்டுப்
பத்திரமாகவும் பெறவேண்டும்
போதாமைக்கு
குடும்பச்சு 'மை'யும்
அவள்
தலைமேல்தான்
அதனால்தான் அவள்
எப்போதுமே
கால் மேல்
கால் போட்டு
எழுதுவதில்லை
தன்
கவலைகள் மேல்
தாள் போட்டு
எழுதுகிறாள்
அவள் எப்போதுமே
ஒரு மூச்சாய்
எழுதுவதில்லை
குடும்பத்தினருக்காகவும்
இடை இடையே
பெருமூச்சு விட்டுத்தான்
எழுதுகிறாள்
இத்துறையில்
ஓப்பிட்டால்-
ஆண்கள் சுதந்திரப் பறவைகள்
பெண்கள்
எழுதும்போதும்
கூண்டுக்கிளிகள்தான்
அவள்
தன்பாட்டுக்கு நடக்காமல்
பண்பாட்டுக்கு நடந்தால்தானே
பெயரை
தக்கவைத்துக் கொள்ளவும்
முடியும்
ஓவ்வொரு ஆணின்
வெற்றியின் பின்னாலும்
ஒரு
பெண் இருக்கிறாள்
இல்லை இல்லை
அவள் இருக்கவில்லை
நிற்கிறாள்
இலக்கியத்தில்
ஓவ்வொரு
பெண்ணின் பின்னாலும்
பல பெண்கள்
நிற்கிறார்கள் - அதில்
ஒரு சில ஆண்களும்
சேர்ந்து கொள்கிறார்கள் -
அவளது
காலை வாரிவிட
கால்கள்
வாரப்படும் போதெல்லாம்
தங்கள்
தலைகள் வாரப்படுவதாய்
தைரியம் கொள்ளும்
பெண்களே
நிலைத்து நிற்கிறார்கள் -
கலாபூசணம்
நயீமா ஏ. சித்தீக்
சிரேஷ்ட ஒலிபரப்பாளர்
புர்க்கான் பீ. இப்திகார்
போன்று
இந்த ஆளுமைகள்
தங்களை
அடையாளப்படுத்;தி
எத்தனை ஆண்டுகள்
இன்றும்கூட
தனி மவுசோடு
இவர்கள் நாமங்கள்
தொடுவானத்தை
தொட்டுவிடத் துடிக்கும்
முனைப்போடு
எழுதிக் குவிக்கும்
இன்றைய கதாநாயகி
ர்pம்ஸா முஹம்மதுக்கு
பாடப் புத்தகங்களாய்
இந்த ஆளுமைகள் -
மைகளையும்
மைக்களையும்
ஆளும் ஆளுமைகள்
பொன்னாடைப் போர்த்தி
விருதுகள் வழங்கி
கைகளைத் தட்டி....
ஒரு பத்து நிமிடங்களில்
எல்லாம்
முடிந்து போகலாம்
ஆனாலும்
இந்த ஆளுமைகளளை
இனங்கண்டு
தரப்படும் உற்சாகம்
இதயத்தில் பட்ட
எல்லா மைகளுக்கும்
சந்தனம் பூசியுள்ளது
அவர்களது வேர்களை
இந்த மண்ணில்
இன்னும் இன்னும்
ஆழமாய்
ஊன்றச் செய்துள்ளது
புதிய புதிய விதைகளும்
விருட்சங்களாக
எழுச்சி பெற
வழி வகுக்கிறது
இங்கே பாராட்டப்படுபவர்
இருவரல்ல
இந்த
இருவரைப் போலிருக்கும்
அத்தனைப்பேரும்தான்
இன்று
எழுத்து வானிலே
சிறகடித்துப் பறக்கும்
ரிம்ஸா முஹம்மத்
நாளைய ஆளுமையாய்
அடையாளங் காணப்படட்டும்
வலைப்பின்னலிலும்
தன் வண்ணம் காட்டும்
இந்தக்
கணக்குக்காரி
கெட்டிக்காரி என்று
எழுத்துலகம்
பட்டம் சூடட்டும்
சிறகடித்துப் பறக்கும்
பெண்களைப் பார்த்தால்
கவலை-
ஆண்களுக்கு
இவர்கள்
கொம்பு முளைத்து
குத்தாமல்
இருக்க வேண்டுமே என்று..
இத்தனை
சங்கடங்களையும்
தாங்கிக் கொண்டு
இலக்கிய உலகில்
நிலைக்கின்ற பெண்களுக்கு
நாங்கள்
கொடுக்கலாமா சம உரிமை
மனச் சாட்சியுள்ள ஆண்களே
பெண்களுக்கு
கொடுக்க வேண்டாம்
சம உரிமை
அதைவிட
கூடுதலாகக் கொடுப்போம்
உரிமை
நன்றி
-என்.நஜ்முல் ஹுசைன்
1 கருத்து:
சம உரிமைக்காக போராடும்
ஆண்களைக் காணும் காலம்
வெகு தூரத்தில் இல்லை...!!!
கருத்துரையிடுக