எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 21 டிசம்பர், 2019

கவிஞர் அருட்கவி அக்கரையூர் அப்துல் குத்தூஸ்

11 – 12 – 2019 அன்று நடைபெற்ற 63 ஆவது வகவ கவியரங்கின்போது கவியரங்கத் தலைமையையேற்று நடத்துமாறு கவிஞர் அருட்கவி அக்கரையூர் அப்துல் குத்தூஸ் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்புவிடுத்தேன்
- என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்

தமிழோடு விளையாடி தமிழாலே தலைசீவி
தன்பெயரை வைத்திருக்கும்  இவரை
அமிழ்தான சொல்லெடுத்து அழகுதமிழ் பாட்டெழுதி
ஆண்டாண்டு புகழ் பெற்ற இவரை
கமழுகின்ற வரியெடுத்து  வாருங்கள் நீங்களென
கரம் விரித்து வரவேற்றோம் இன்று
நமதுள்ளம் தான்மகிழ்ந்து தந்தோமே நம்அரங்கு
தலைமையினை ஏற்றிடுவீர் என்று

அறுபத்தி மூன்றெங்கள் கவியரங்கு நடைபயின்று
அற்புதமாய் தலைநிமிர்ந்து நிற்க
சிறப்புடனே வாருங்கள் தலைமையினை ஏற்றிடுங்கள்
சீராகவே நாமும் அழைத்தோம்
மறுப்பேதும் காட்டாமல் சரியென்று உட னிசைந்து
மனம்மகிழ்ந்து இக்கவிஞர் வந்தார்
பொறுப்போடு வகவத்தின் கவியரங்கைத் தலையேற்று
பொன்மனதைத் தான் காட்டி நின்றார்

அக்கரையூர் இவருக்கு ஊராகி நின்றதுவே
அக்கறையோ தமிழ்மீது என்றும்
எக்கரையும் தொடுகின்ற மொழியாட்சி இவருக்கு
எம்மனதை இன்று வெல வந்தார்
அக்கரையூர் அப்துல்குத்தூஸ் அருட்கவியே உங்களுக்கு
அகமகிழ்ந்தே கவியரங்கைத் தந்தோம்
சர்க்கரையாய் மொழியெடுத்து எங்கள் செவிநிரப்புங்கள்
சந்தோஷம் எமை வந்து தழுவ

வலம்புரியின் கவிஞர்கள் அணிஉங்கள் தலைமையிலே
வளம்சேர்ப்பார் கவியரங்கில் இன்று
சிலம்போசை போல்நீங்கள் தமிழினிலே சொல்லெடுத்து
சிறப்பாக்குங்கள் உங்கள் தலைமை
நலம்பெறட்டும் கவியரங்கு நல்லபெயர்தான் பெறட்டும்
நானிலத்தில் வகவத்தின் சிறப்பு
நிலைபெறட்டும்; அருட்கவியே தலைமையினைத்தான் ஏற்று
நீண்டபுகழ் தான் பெறுக என்றும்

அருட்கவி அக்கரையூர் அப்துல் குத் தூஸு
பலமேடை கண்ட உங்களுக்கு
இத்தலைமை ஒரு தூசு
என்று காட்டுங்கள் !

கருத்துகள் இல்லை: