வசந்தம் எப்.எம். வானொலி நோன்புப் பெருநாள் தினமான 18-07-2015 அன்று காலை 8.30 க்கு எனது குரலில் ஒலிபரப்பிய கவிதை
தூசு தட்டி
துப்பரவாக்கி வைத்திருந்தோம்
எங்கள் மனங்களை
ரமழானே
நீ வந்து எங்கள் இதயங்களில்
இபாதத் செய்யவேண்டும்
என்பதற்காய்
நீ வந்தாய்
ரமழானே நீ வந்தாய்
பாவிகளாய் இருந்த நாங்கள்
ஞானிகள் ஆனோம்
கல்லாய் இருந்த எங்களை
வைரக்
கல்லாய் ஜொலிக்கச் செய்தாய்
என்று
பெருமை கொண்டோம்
சொர்க்கத்தின் வாரிசுகளாய்
எங்கள் பெயர்களையும்
எழுதிச் சென்றாய்
என்று
இறுமாப்புக் கொண்டோம்
எங்கள் கால்களை
ஷவ்வாலிடம்
ஒப்படைத்துவிட்டுச் சென்றாயே
ரமழானே
ரமழானை
அனுபவித்த சுகந்தத்தில்
இன்று
ஈதுப் பெருநாள் கொண்டாடுகிறோம்
ஈதுப் பெருநாள்
நாம் கொண்டாட
இது பெருநாளா என்று
திண்டாடும் ஒரு கூட்டம்
ரமழானில் நாம்
தின்பதற்கான வயிறுகளைக்
கட்டிப்போட்டோம்
இந்த
ஷவ்வால் பெருநாளிலும்
தின்பதற்கான வயிறுகளைத்
திறக்க முடியாது
ஒரு கூட்டம்
சொர்க்கத்தில்
எங்கள் பெயர்களும் இருக்கிறதா
உறுதிப்படுத்திக் கொள்ள
அந்த
ஏழைகளின் வயிறுகளைப் பாருங்கள்
அந்த வயிறுகளும்
நிரம்பிய பின்புதானே
ரமழான் எங்கள் இபாதத்களை
சொர்க்கத்தில் ஒப்படைக்க
தூக்கிச் செல்லும்
ஈதுப் பெருநாள்
இது உங்களுக்கும் பெருநாள்தான் என
ஏழைகளிடம்
பிரகடனப்படுத்துங்கள்
ஷவ்வால் தன்
செவ் வாய்த்திறந்து
கூறும்
நாங்கள்
சொர்க்கத்தின் சொந்தக்காரர்கள்
என்று !
ஈத் முபாரக்
- என். நஜ்முல் ஹுசைன்