10/3/2017 விடிவெள்ளியில் இடம்பெற்ற எனது சிறுகதை
அவனில்லாமல் நானில்லை..........!
- என். நஜ்முல் ஹுசைன்
மல்காந்தி சுனிலின் அறையைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள். இதற்கு முன்பு அவன் ஒரு நாளும் இவ்வளவு அழகாக அவனது அறையை வைத்தவனில்லை. இப்போது எல்லாவற்றையுமே சீராக வைத்திருந்தான்.
சுனில் தம்பி கெம்பஸுக்கு போனதன்பின் மாறியுள்ளதை உணர்ந்தாள். இல்லாவிட்டால் ஒவ்வொரு நாளும் மல்காந்தி தான் அவனது படுக்கையை சரி செய்து பெட் சீட்டை யெல்லாம் மடித்து வைக்க வேண்டும். அவனது சட்டை டிரவுஸரைக் கூட அங்கங்கே வீசி வைத்திருப்பான். மல்காந்தி தான் அவற்றை யெல்லாம் சீராக்கி வைப்பாள்.
அவர்கள் இருப்பது பெலியத்தவில். தம்பி சுனிலுக்கு பேராதனை பல்கலைக்கழகத்தில் எஞ்சினியரிங் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கே சென்று ஒரு வருடமாகிறது. விடுமுறைக்கு நேற்றுத் தான் வீட்டுக்கு வந்தான்.
மல்காந்தி இப்போது தனது பெற்றோருடன் தான் இருக்கிறாள். அவள் திருமணம் முடித்தவள். ஆனால் இப்போது கணவனுடன் இல்லை. அவனைப் பிரிந்து வாழ்கிறாள்.
திருமணம் முடித்த முதல் நாளே மணவறைக்கு போதையுடன் வந்தவன். நண்பர்களுடன் சேர்ந்து நன்றாக குடித்துவிட்டு வந்திருந்தான். அன்று ஒரு மகிழ்ச்சியான நாள்தானே என அவள் அதை பெரிதாக கணக்கெடுக்க வில்லை.
தொடர்ந்து வந்த நாட்களிலே அவனை சாதாரணமாக சிகரெட் புகைத்து தள்ளுபவனாக கண்டு கொண்டாள். வழக்கமாகவே ஒவ்வொரு நாள் மாலையிலும் வேலையிலிருந்து வீட்டுக்கு வரும்போது போதையுடன்தான் வருவான். எங்கேயாவது திருமண வீட்டுக்கோ, மரண வீட்டுக்கோ போனால் அந்தப் போதை பன்மடங்காகி இருக்கும்.
மல்காந்திக்கு ஒரே மனக்கவலை 'ஏன்தான் நம்மவர்கள் குடிகார மணமகனை திருமணத்திற்கு தகுதியற்றவனாக நினைப்பதேயில்லை. குடிப்பதை ஒரு சாதாரண பழக்கமாகவே கருதுகின்றனர். இவ்வாறான குடிகாரர்களால் எத்தனைப் பெண்கள் வாழாது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். '
நல்ல குணவதியான மல்காந்தியால் அவனோடு ஒரு வருடம்கூட இணைந்து வாழ முடியாமல் போயிற்று. இப்போது வாழாவெட்டியாக தனது பெற்றோருடன் வந்து இணைந்து கொண்டாள்.
சுனில் தம்பியும் அப்படித்தான். நிறைய சிகரட் பிடிப்பான். நண்பர்களுடன் அடிக்கடி 'பார்ட்டி ' என்று சொல்லி குடித்து விட்டு வருவான். ஆனாலும் அவன் மிகவும் நல்லவன். எவ்வித குழப்படியும் பண்ணமாட்டான். குடி பழக்கத்தை விட்டு விடு என்றால் கேட்கவா போகிறான். 'குடிப்பது என்பது எங்களவர்களுக்குத்தான் இரத்தத்திலேயே ஊறிய ஒன்றே. மகிழ்ச்சியிலும் குடிக்கிறார்கள், துன்பத்திலும் குடிக்கிறார்கள் ' குடியினால் வாழ்விழந்த மல்காந்தியினால்கூட தன் தம்பியைப் பார்த்து குடிக்காதே என்று சொல்ல முடியவில்லை - குடிப்பதை குறைத்துக் கொள் என்று சொல்வதைத் தவிர.
சுனில் வந்து கதவைத் தட்டினால் திறக்க வேண்டும். பார்ட்டிகளுக்குப் போனால் எப்படியும் இரவு பன்னிரண்டு ஒரு மணிக்குத்தான் திரும்பி வருவான். ஒரு வருடத்தின் பின் வந்திருக்கிறான். நண்பர்களுடன் கூத்தும் கும்மாளமுமாக இருக்கும்.
அவன் வரும் போது அம்மாவும் அப்பாவும் உறங்கியிருப்பார்கள்.
மல்காந்திதான் வீட்டுக் கதவை திறக்க வேண்டும்.
இரவு சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தவாறே சோபாவிலேயே உறங்கி விட்டாள்.
அழைப்பு மணி சத்தம் அவளது தூக்கத்தைக் கலைத்தது.
குடித்து விட்டு வந்திருக்கும் தம்பியை வீட்டுக்குள் அழைத்து வரவேண்டும். தள்ளாடிக் கொண்டு வரும் அவனை கைத்தாங்கலாக படுக்கைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இவையெல்லாம் வழமையாக நடைபெற்று வருபவைதான். இவற்றை எண்ணியவாறே கதவைத் திறந்தாள் மல்காந்தி. சுனில் தம்பி சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்தான்.
"சொரி அக்கா, கொஞ்சம் லேட்டாகிருச்சு" அவனது பேச்சிலே நிதானமும் தெளிவும் தெரிந்தது.
மல்காந்தி ஆச்சரியத்தோடு சுனில் தம்பியைப் பார்த்தாள்.
அவன் போதையில் தள்ளாடவில்லை. குடியின் நெடியோ சிகரெட்டின் நாற்றமோ அவனிடம் வீசவில்லை.
நண்பர்களுடன் பார்ட்டிக்குப் போய் வந்த சுனில் தம்பியை ஒருநாள் கூட மல்காந்தி இப்படிப் பார்த்ததில்லை.
தான் தூக்கத்தில் கனவு காண்கிறோமா என்று தன்னை ஒருமுறை கிள்ளியும் பார்த்துக் கொண்டாள்.
தம்பியின் பின்னாலேயே தம்பியின் அறைக்குச் சென்றாள்.
" தம்பி, இன்று நீ பார்ட்டிக்கு போகவில்லையா ?"
"பார்ட்டியிலிருந்துதான் வருகிறேன் "
" அப்ப நீ குடிக்கல்லையா ?"
"சிகரட் கூட குடிக்கல்ல..." கூறி புன்னகைத்தான்.
"எனக்கு நம்பவே முடியல்ல.... என் தம்பியா இப்படி......"
"அக்கா, இப்ப அந்த ரெண்டு பழக்கத்தையும் அடியோட விட்டுட்டன்"
"என்ன அடியோட விட்டுட்டியா" ஆச்சரியத்தால் வாய் பிளந்து நின்றாள். அவளது தூக்கக் கலக்கம் காணாமல் போனது. அவளது மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.
"என்ன ஒன்ட கெம்பஸ் வாழ்க்கை ஒன்ன அடியோட மாத்திருச்சா, இல்ல இல்ல இப்ப வெளங்கிச்சு நீ யாரையோ காதலிக்கிற ?"
இப்பொழுதும் சுனில் தம்பி புன்னகைத்தான்.
"என்னய எந்தக் காதலியும் மாத்தல்ல. எனய மாத்தியது ஏன்ட ரூம் மேட்"
"என்ன ரூம் மேட்டா ....?" அவளது ஆச்சரியம் தொடர்ந்தது.
"நான் கெம்பஸுக்கு போன நேரம் எனக்கு ஹொஸ்டல்ல ரூம் கெடைக்கல்ல. வெளியிலதான் ரூம் எடுத்தேன். ரெண்டு பேர் தங்குற ரூம். என்னோடதான் அவனும் தங்கினான். அவன் மெடிக்கல் செஞ்சான்.
ஒரு கெழமையிலேயே நாங்க ரெண்டு பேரும் நல்ல கூட்டாளி ஆயிட்டோம். பழகுறதுக்கு மிகவும் இனிமையானவன்.
ஒனக்குதான் தெரியுமே நான் ரொம்ப சிகரட் குடிப்பேனே. அங்கேயும் சிகரட் பிடிச்சன். கெம்பஸ் லீவு நாளுல கொஞ்சம் குடிப்பன் .
ஆனா அவன்கிட்ட எந்த கெட்டப் பழக்கத்தையும் நான் காணல்ல. அதுக்கும் மேல அவன் ஒழுக்கம் நெறைஞ்சவனா இருந்தான். எங்கட அறைய அவன்தான் ரொம்ப சுத்தமான வச்சிருப்பான். என்ட உடுப்பகூட அழகான மடிச்சி வைப்பான் . அவனோட சேர்ந்து அறைய அழகான வச்சிக்க நானும் கத்துக்கிட்டன். மொதல்ல அவன்ட முன்னுக்கு சிகரெட் குடிக்கிறத விட்டன்.
அவன்ட வீடு திஹாரில இருக்குது. ஒரு முற ஒரு திருமண வீட்டுக்கும் இன்னொரு முற ஒரு சாவு வீட்டுக்கும் அவனோட போனேன்.
நான் அந்த ரெண்டு எடத்திலேயும் ஒரு விஷயத்தை கண்டு ஆச்சரியப்பட்டு போனேன்.
நாங்க எப்பவுமே திருமண வீட்டுக்கோ சாவு வீட்டுக்கோ போனா எங்கடவங்களுக்கு விசேஷமே குடிக்கிறதுதான். ஆனா அங்க அவங்க நல்லா சாப்பிட்டாங்க. ஆனா யாருமே குடிக்கல்ல. பொறவுதான் எனக்கு தெரிஞ்சிச்சு அவங்க யாருமே குடிக்கிறதில்லன்னு. அவங்கல்ல கொஞ்சம் பேர் குடிக்கிறவங்க இருக்காங்கலாம். அப்படியானவங்கள அவங்க மதிக்கிறதே இல்லையாம். எங்கட திருமண வீட்டுக்கும் சாவு வீட்டுக்கும் மிச்சம் பேர் வாறதே நல்ல குடிக்கிறதுக்குதானே.
இதையெல்லாம் பார்க்கிற நேரம் எனக்குள்ளேயே மாற்றம் நிகழ்ந்திச்சு. ஒன்ட வாழ்க்கையும் குடியாலதானே நாசமாச்சு என்று நானும் அடிக்கடி மனசுக்குள்ள வெந்து கொண்டுதான் இருந்தேன். அதனால எனக்கிட்ட இருந்த குடி பழக்கத்துக்கும், சிகரட் பழக்கத்துக்கும் விட கொடுத்தேன். எனக்கு இப்ப நல்லா வெளங்குது நான் மொதல்ல விட இப்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கன்."
சுனில் தனது கதையை சொல்லிக் கொண்டிருந்தபோதே மல்காந்தி சொன்னாள்,
" நீ மட்டுமா மகிழ்ச்சியா இருக்கிற, ஒன் கதையை கேட்டு நானும்தான் மகிழ்ச்சியா இருக்கன். உன்ன நெனச்சி நான் ரொம்ப பெரும படுறன். ஏன்ட மாப்பிள்ளையும் ஒனய மாதிரி திருந்தியிருந்தா ஏன்ட வாழ்க்கை இப்படி நரகமாகியிருக்குமா? சரி ஒன்ட கூட்டாளிட பேர சொல்லவே இல்லையே. அவர்ட பேரென்ன?"
"மொஹமட் முஸம்மில்"
******************************************************************************