2019 ஏப்ரல் மாத "எங்கள் தேசம் " சஞ்சிகையில் எனது சிறுகதை. நன்றி சகோதரர் இர்ஸாத் இமாம்தீன்
எந்த சீட் வேண்டும்?
~~~~~~~~~~~~~
- என். நஜ்முல் ஹுசைன்
கட்சிக் கொடிகள் எங்கும் பறந்தன. தேர்தல் பிரசாரங்கள் களை கட்டியிருந்தன. இம்முறை ஆட்சி எங்களின் அனுசரணையில்தான் என்ற வீர முழக்கம் எங்கும் ஒலித்தன.
அந்த முஸ்லிம் பிரதேசம் அல்லோலகல்லோலப்பட்டது. முஸ்லிம் முன்னேற்றக் கட்சியின் முதன்மை வேட்பாளராக இருந்து தொடர்ந்து 20 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் சமத் ஹாஜியாரை அசைக்க, முஸ்லிம் குறையகற்றுவோர் கட்சிக்கு சரியான போட்டியாளர் அகப்பட்டார் என்பதில் அக் கட்சிக்காரர்களுக்கெல்லாம் அளவிடமுடியாத ஆனந்தம்.
அப்பிரதேசத்தில் சமத் ஹாஜியார் அசைக்க முடியாத செல்வாக்கு பெற்றிருந்தார். எத்தனை கரணமடித்தும் அவரை தோற்கடிக்கவே முடியவில்லை.
இம்முறை தேர்தலிலும் அப்படித்தானோ என எண்ணிக் கொண்டிருந்த போதுதான் அவர்களுக்கு புரவலர் சித்தீக் ஹாஜியார் கண்களில் பட்டார்.
பெரும் கோடீஸ்வரர். வாரி வழங்கும் வள்ளல். உதவி என்று யாரும் கேட்டு வெறுங்கையுடன் திரும்பிய சரித்திரமேயில்லை. மார்க்கப்பற்றுள்ளவர். எதையுமே இறையச்சத்துடன் செய்பவர்.
அரசியலில் ஒரு துளி கூட அவருக்கு ஈடுபாடு கிடையாது. இருந்தாலும் முஸ்லிம் குறையகற்றும் கட்சியினர் அவரைச் சுற்றி வளைத்தனர். "நீங்கள் சமுதாயத்திற்கு செய்யும் சேவை வீணாகப் போகக் கூடாது. சாதாரண ஒருவராக இருந்து செய்யும் சேவையை விட பாராளுமன்ற உறுப்பினராக இருந்து நிறைய செய்யலாம். நாளை அல்லாஹுத் தஆலாவும் உங்களிடம் கேள்வி கேட்பான். வாய்ப்பிருந்தும் ஏன் பயன்படுத்தவில்லை என்று " இப்படி பலதும் பத்தும் சொல்லி அரசியல் என்பதை வேம்பாக நினைத்துக் கொண்டிருந்த அவரது மனதில் மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள்.
" ஹாஜியார் , நீங்க ஒன்றுமே செய்ய தேவையில்லை. இந்த போர்ம்ல கையொப்பமிட்டா போதும் "
இப்படி பலபேர் அடித்த அடியில் அந்த அம்மி நகர்ந்தது.
புரவலர் சித்தீக் ஹாஜியார் தேர்தலுக்கு வந்து விட்டார் என்பதுவே அவர் எம்.பி. ஆகிவிட்டார் என்பது போலிருந்தது. அந்தப் பிரதேசத்தில் ஒவ்வொருவரும் சித்தீக் ஹாஜியாருக்கு ஏதோ ஒரு விதத்தில் கடமைப்பட்டிருந்தனர்.
அதனால் அப்பிரதேச மக்களின் வாக்குகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதில் இம்முறை முஸ்லிம் குறையகற்றும் கட்சிக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை.
அதனால் அதன் தொண்டர்கள் வழமையைவிட உற்சாகமாக களமிறங்கியிருந்தனர்.
அன்று மாலை முஸ்லிம் குறையகற்றும் கட்சி தனது முதலாவது பிரசாரக் கூட்டத்துக்கு ஊரின் பொது மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
புரவலர் சித்தீக் ஹாஜியார் எவ்வளவு மறுத்தும் தொண்டர்கள் அவரை ஊர்வலமாக அழைத்து வருவதில் பின் நிற்கவில்லை. ஒவ்வொரு விதமான கோஷமிட்டு அவரை உற்சாகமாக தெருவெங்கும் அழைத்துச் சென்றனர்.
இறுதியில் அவரை மேடை அமைந்திருந்த இடத்திற்கு அழைத்து வந்தனர். பெரும் ஜனத்திரள் அலை மோதியது. உண்மையில் சித்தீக் ஹாஜியார் அது போன்ற ஒரு கூட்டத்தை இப்படி ஒன்றாக கண்டதேயில்லை. கூட்டத்தைக் பார்த்து சித்தீக் ஹாஜியாருக்கு மலைப்பாக இருந்தது.
எத்தனையோ மாலைகள் ஹாஜியாரின் கழுத்தில் விழுந்தன. போட்டிப் போட்டுக்கொண்டு வந்து பலர் அவருக்கு பொன்னாடைப் போர்த்தினர். ஹாஜியாருக்கு மிகவும் சங்கோஜமாக இருந்தது. இருந்தாலும் அவர் சமாளித்துக் கொண்டார்.
கூட்டம் ஆரம்பமானது. பலர் மேடையில் வந்து பேசினர். சித்தீக் ஹாஜியாரை வானளாவ புகழ்ந்துத் தள்ளினர். அவர் இதுவரை காலமும் ஊருக்கு செய்த சேவைகளைப் பட்டியலிட்டுக் காட்டினர்.
எப்போதும் எதையும் விளம்பரத்திற்காக செய்யாதவர் புரவலர் சித்தீக் ஹாஜியார். ஆனாலும் இந்த அரசியல் மேடை
அவரை விளம்பரப்படுத்தி கூடியிருந்தவர்களின் மனங்களை களவாடிக் கொண்டிருந்தது. ஹாஜியாரின் கொடை கட்சியின் வாக்கு வங்கியை நிரப்ப நல்ல முதலீடாய் அமைந்தது.
ஒவ்வொருவராக பேசி முடித்ததும்
அறிவிப்பாளர் " இதோ இதுவரை நீங்கள் மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்த சொற்கொண்டல் சஹீத் பேசுவார் " என்று அறிவித்ததுமே சபை பெரும் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தது . மற்ற பேச்சாளர்களுக்கு இல்லாத வரவேற்பு சபையிலிருந்து அவருக்குக் கிடைத்தது. அதுமட்டுமல்ல அவர் பேசுவதற்கு முன்பே கொல்லென்று சிரித்தது.
சித்தீக் ஹாஜியார் பக்கத்திலிருந்தவரிடம் "இவர் யார் ?" என்று கேட்டார்?
"இவரா இவர்தான் எங்க கட்சிட நகைச்சுவைப் பேச்சாளர். நல்ல கேலியா பேசுவார். இவர்ட பேச்ச கேட்க எப்பவுமே நல்ல கூட்டம் கூடும் "
"அடட அப்படியா " என்று சித்தீக் ஹாஜியார் சொன்னார்.
சொற்கொண்டல் சஹீத் பேசினார். இல்லை இல்லை கத்தினார். வித்தியாசமான ஏற்ற இறக்கத்தோடு பேசினார். பல விதமான குரல்கள் அவரிடமிருந்து வெளிப்பட்டன. மிகவும் தாராளமாக வசைபாடினார்.
மிகவும் நையாண்டியாக எதிரணியினரை சாடினார். அந்தப் பிரதேச எம்.பி.யாக இருக்கும் சமத் ஹாஜியாரைப் பற்றி மிகவும் கேலியாக மோசமாக உரையாற்றினார். அவரது பிரத்தியேக வாழ்க்கையைப் பற்றி கேலியும், கிண்டலுமாக பேசினார். அவரது பேச்சு நல்ல மனிதரான சித்தீக் ஹாஜியாரை ஏதோ செய்தது.
"அடடா இதுதான் அரசியலா...." என்ற எண்ணம் ஓட்டம் அவரது மனதில் ஓடியது. சொற்கொண்டல் சஹீதின் பேச்சை சபை அப்படி சப்புக் கொட்டி ரசித்தது.
மற்றவர்களின் அசிக்கங்களை கேட்டு ரசிப்பதற்கு மனிதர்கள் எவ்வளவு ஆவலாக இருக்கிறார்கள்.
பேச்சாளர் சஹீத் கொஞ்சம் பேச்சை
நிறுத்தினார்.
மேசையிலிருந்த கூல் டிரிங்க் போத்தலைத் திறந்து மளமளவென்று குடித்தார்.
தொண்டையைக் கனைத்துக் கொண்டார். மேடையிலுள்ளவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டார்.
"சகோதரர்களே, இனி நான் சொல்லப்போவதுதான் மிகவும் சுவாரசியமானது.
எமது எதிரணி எம். பி.ட மனைவி இருக்காங்களே. லேடீஸ் கிளப்புக்கு போறேன் என்று அவங்க போடுற கூத்து இருக்கே........"என்று ஆரம்பித்து பல அசிங்கங்களை நகைச்சுவையாகப் பேசினார். எம். பி.யின் பெண் மக்களைப் பற்றிக் கூட கேவலமாக பேச அந்தப் பேச்சாளர் மறக்கவில்லை . சபை ரசிக்க ரசிக்க அதிக அசிங்கங்கள் சிறகடித்துப் பறந்தன.
சித்தீக் ஹாஜியார் மறுபடி பக்கத்திலுள்ளவரிடம் கேட்டார் "இவர் சொல்றதெல்லாம் உண்மையா ? சமத் ஹாஜியார் குடும்பம் அவ்வளவு மோசமானவங்களா ?" என்று கேட்டார்.
"இல்ல இல்ல. அது அப்படியில்ல. இங்க அரசியல் மேடைல உண்மைய மட்டும் பேசுனா எடுபடாது. இப்படி கொஞ்சம் பொய்யயும் கலந்து இன்டரஸ்டிங்கா பேசனும் . அப்பதான் எங்க கட்சி கூட்டத்துக்கு ஜனங்க நெறய வருவாங்க..... அவங்கள பத்தி அசிங்கமா பேசினாதான் எங்கட செல்வாக்கு கூடும்....."
அவர் சொல்லிக் கொண்டே போனார். இப்போதுதான் சித்தீக் ஹாஜியாருக்கு அரசியல் புரிய ஆரம்பித்தது.
உடனே ஆசனத்திலிருந்து எழுந்தார். பேசிக் கொண்டிருந்த சொற்கொண்டல் சஹீத் அருகே சென்று அவரை தனது கைகளால்
கொஞ்சம் தள்ளினார்.
ஒலிவாங்கியில் சித்தீக் ஹாஜியார் பேசினார், " இந்த அரசியல செய்யவா என்ன கூட்டி வந்தீங்க.
பதவிக்கு வர எந்தப் பொய்யயும் சொல்ல எங்க மார்க்கம் அனுமதி தந்திருக்கா. எங்கட சகோதரர்கள்ட எறச்சியா தின்றா நாங்க வாழனும். எங்கட முஸ்லிம் சகோதரரிய கேவலப்படுத்தியா பார்ளிமண்ட் போகனும்.
நான் சொர்க்கத்துட சீட்டுக்கு ஆசப்படுறவன். இந்தப் பார்லிமெண்ட் சீட்டுக்காக ஏன்ட சொர்க்கத்து சீட்ட விட்டுக் கொடுக்க எந்த எடத்திலேயும் நான் தயாரா இல்ல.
இந்த வெளயாட்டுக்கு நான் வரலை . தயவுசெய்து என்ன அல்லாஹ்வுக்காக விட்டுடுங்க"
பெரும் ஆவேசமாக பேசிய சித்தீக் ஹாஜியார் அதே வேகத்தில் மேடையை விட்டு இறங்கி நடந்தார். கனல் பறக்கும் கண்களோடு வெளியேறிய சித்தீக் ஹாஜியாரை தடுத்து நிறுத்தும் தைரியம் சபையில் யாருக்குமே வரவில்லை.
============================