21/9/2019 அன்று கொழும்பு விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் பாரதி கலா மன்றத் தலைவர் த. மணி ஏற்பாட்டில் இடம்பெற்ற பாரதி விழாவும் கவியரங்கம் நிகழ்வில் கவிஞர் ராதா மேத்தா தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் நான் பாடிய கவிதை.
- என். நஜ்முல் ஹுசைன்
பாரதி
உன் கவிதைகளுக்கு
உயிர் உள்ளது
அதனால்தான்
தமிழர் உணர்வுகளிலெல்லாம்
இன்றும் உயிரோட்டமாய்
தங்கி உள்ளன
நீ
உள்ளதை சொன்னவன்
உள்ளத்தில்
உள்ளதை சொன்னவன்
நீ
'உள்ள'
மையால் எழுதியவன்
உள்ளமையாய்
எழுதியவன்
நீ இறந்தபோது
உனக்காய் வந்தவர்களை
விரல்விட்டு
எண்ணிவிடலாம்
ஆனால்
உன் உயிரோட்டமான
கவிதைகளுக்காய்
உன்னை
சிம்மாசனம் போட்டு
அமர வைத்திருப்போரை
எண்ணுவதற்கு
அத்தனை
விரல்களுக்கு
நாம் எங்கே போவது ?
இங்கே
ஒவ்வொரு கவிஞன்
பிறக்கும் போதும்
அங்கே
நீ இருக்கிறாய்
அன்று நீ
இறக்கவில்லை
இருக்கிறாய்
என்று நம்பியதனால்தானே
உன்னை அடக்கம் செய்ய
அதிகமானோர்
வரவில்லை
பாரதியே
நீ ஞானி
அதனால்தான்
எங்கள் பிள்ளைகளைப் பார்த்து
"ஓடி விளையாடு பாப்பா "
என்கிறாய்
ஆனால் அவர்கள்
ஓடாமல் விளையாடுகிறார்கள்-
கைபேசியில்
அவர்கள்
கைபேசி வைத்துள்ளார்கள்
அதனால் அவர்கள்
கைகள்தான் பேசுகின்றன
அவர்களோ
யாருடனும் பேசுவதில்லை
"ஓய்ந்திருக்கலாகாது"
என்கிறாய்
அவர்கள் ஓயாமலிருக்கிறார்கள்
விளையாட்டு மைதானங்களில்
அல்ல
கம்ப்யூட்டர் மைதானங்களில்
இன்று
சின்னஞ்சிறு கிளியே
கண்ணம்மாக்கள்
காமுகர்களின்
கவிதைகளாய் போயினர்
நெஞ்சில் உரமுமின்றி
நேர்மை திறனுமின்றி
வஞ்சகம் செய்வோரை
அறிமுகப்படுத்தி
அறிவுக்கண் திறந்தவன் நீ
பல வேளைகளில்
அக் கண்ணை
மூடி வைத்து கொள்கிறோம்
கொடும்
கூற்றுக்கு இரையென பின் மாயும்
வேடிக்கை மனிதனல்ல
நீ என்று
உன்னை அறிமுகப்படுத்தினாய்-
வெடிக்கையில்
இறந்து போகும்
இந்த மனிதர்களைப் பார்த்து
பாரதி
நீ துணிந்து பாடியவன்
தமிழனின் மானங் காக்க
துணி யீந்து பாடியவன்
அதனால்தானே
கவிஞர்கள் என்று
சொல்லிக் கொள்வதிலே
நாங்கள் இன்று
தலைநிமிர்ந்து
இருக்கிறோம்
பாரதி
நீ ஒரு
நெடுங்கவிதை
உன்னைப் பற்றி
விடிய விடிய
பாடலாம்
ஏனெனில்
நம் பாடெலாம்
உன் பாடலாம்
என் சமுதாய தோழர்களே
உங்களுக்கொரு வேண்டுகோள்
எங்கள் பாரதியாரைப் பற்றி
ஒவ்வொரு குழந்தைக்கும்
சொல்லிக் கொடுங்கள் -
விலாவாரியாக
நாளை அவர்கள்
"பாரதி
யார்? " என்று
கேட்கும்படி மட்டும்
வைத்துவிடாதீர்கள் !
நன்றி