எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 23 நவம்பர், 2019

சுலைமா ஏ. சமி



நாவலாசிரியை திருமதி சுலைமா   சமி இக்பால் அவர்களின் "உண்டியல்"
நூல் வெளியீட்டு விழாவில் வாசித்த கவிதை




பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

சுலைமா சமி இக்பால்
எழுத்தால் வளைத்துப் போட்டு
இருக்க வைத்துக் கொள்கிறார்
தன்பால்

அடடா
எத்தனை வருடங்கள்
இவர் கரங்கள்
எழுத்தை சுவீகரித்துக் கொண்டு

இன்னும்
மின்னும்
எழுத்துகளுக்கு
சொந்தம் கொண்டாடிக் கொண்டு

களைப்பும் சலிப்பும்
இவர் பாதைகளில்
இல்லை
இல்லவே இல்லை

அதனால்தானே
வாசகர் நெஞ்சங்களை
கொண்டு போகிறார் கொள்ளை

குவிந்திருக்கும் இவர்
எழுத்துகள்
குவித்திருக்கும் புகழ்

நம் நாட்டிலும்
வெளிநாடுகளிலும்
ஈட்டியுள்ள புகழ்
ஈட்டி உள்ள புகழ்
ஆம் அத்தனை கூர்மையானது

கூர்
மை தானே
இவரது உடைமை

அந்த
 எழுத்துகளால்தானே
குடைந்தெடுக்கிறார் மனங்களை

இவர் கதைகளை
வாசித்து முடிக்கலாம்
யோசித்து முடிக்க முடியுமா?

சிந்தனை கருத்துகளை
சுமந்த
சுலைமா சமியின் கதைகள்
படித்தவுடன் முடிபவை அல்ல எங்கள் உள்ளங்களில்
சிந்தனைகளை முடிபவை
முடிசூடிக் கொள்பவை

"உண்டியல் " சிறுகதை
தொகுதி தந்திருக்கிறார்
 உண்டு இயல் தன் கதைகளிலே
என்று நிரூபித்திருக்கிறார்

பொழுதுபோக்குக்காய் படிப்பவர்களே
சுலைமா சமி
என்ற இந்த ஆளுமையின்
கதைகளைப் படிக்க வேண்டாம்

இவரது கதைகள்
பொழுதை ஆக்குபவர்களுக்கான
கதைகள்

நல்ல பொழுதை
ஆக்குவதற்கான கதைகள்


இவர் கதைகளிலே
தேவதைகள் இல்லை
தினம் வதை படும்
மானிட   ஆத்மாக்கள்தான்
இருக்கின்றன

அங்கே
நீங்களும் நானும்
இருக்கிறோம்

அணுஅணுவாய்
ஆய்ந்து எழுதியுள்ளார் -
மானுட உணர்வுகளை

படித்து விட்டு
வீசி விடாதீர்கள்
படிய வையுங்கள்
மனங்களில் என்று
படியேறி எழுதியுள்ளார்

பல படிகள்
இறங்கியும்
எழுதியுள்ளார்

மறக்க வேண்டாம்
மாற்றுத் திறனாளிகளை
என்று அவர்கள்
கைகள் பிடித்து
எழுதியுள்ளார்

இல்லை இல்லை
இவர் எழுதவில்லை
அவர்களோடு வாழ்ந்திருக்கிறார்

கைக்குட்டையோடுதான்
இவர் கதைகளை
வாசிக்க வேண்டும்
வடியும் கண்ணீரைத்
துடைப்பதற்கு - அது
கவலையின் கண்ணீர் மட்டுமல்ல
சிலவேளை
ஆனந்தக் கண்ணீரும்தான்

சுலைமா சமி என்ற
இந்த எழுத்தாளர்
மேகத்திலே
சிறகடித்துப் பறந்து
எழுதவில்லை

மண்ணினிலே
தன் பாதகங்கள் பதித்து
எழுதியுள்ளார்
மண்ணின் மைந்தர்களைத்தானே
வரைந்துள்ளார்

என்று ஆரம்பித்த
இந்த எழுத்துப் பயணம்
இன்றும்
நடை தளராமல்

ஒரு டெலஸ்கோப் கொண்டு வந்து
விழிகள் விழித்துப் பார்த்தேன்

இந்தப் பெண்பாலுக்குப் பின்
இருப்பது யார் ?
ஓர் ஆண்பால் அல்லவா

அடடா அது எங்கள்
இக்பால் அல்லவா ?

மௌலவி இக்பால்
சுலைமா சமி என்ற எழுத்தாளருடன்
இன்றும் கை கோர்த்துள்ளார்
அன்பால்

சுலைமா சமியின்
வெற்றியின் ரகசியம்
இப்போது புரிந்தது

என் இதயம்
இவர்களுக்காய்
இப்போது துஆ புரிந்தது

நீண்ட ஆயுளோடு
சுகதேகிகளாய் வாழவேண்டும் என்று

சுலைமா சமி இக்பால்
இன்னும் இன்னும்
எழுதி குவிக்க வேண்டும்
இன்று இவர்
நூல்கள் எல்லாம் விற்கவேண்டும்
என நான்
பிரார்த்திக்கிறேன்

நீங்கள் எல்லாம்
ஆமின் கூறுங்கள்

நன்றி

வியாழன், 21 நவம்பர், 2019

வெள்ளி, 1 நவம்பர், 2019