07/10/2021 வியாழக்கிழமை விடிவெள்ளி பத்திரிகையில் இடம்பெற்ற எனது சிறுகதை.
என். நஜ்முல் ஹுசைன்
"டக்... டக்...டக்..."
யாரோ கதவைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். கியாஸ் வீட்டுக்குள்ளே ஒரு வேளையாய் இருந்தான். அவனது மகனும் மகளும் முன் அறையில்தான் இருந்தனர். என்றாலும் அவர்கள் கதவைத் திறக்கவில்லை.
ஆம் அது பிள்ளைகளுக்கு கியாஸின் உத்தரவு. யார் வீட்டுக் கதவைத் தட்டினாலும் போய் கதவைத் திறக்க வேண்டாம் என்று கட்டளை இட்டிருக்கிறான்.
மீண்டும் கொரோனா தலை தூக்கி தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. இந்த வேளையில் பிள்ளைகளையும் குடும்பத்தையும் பாதுகாப்பது அவனது கடமை என்பதை அவன் நன்றாக உணர்ந்திருந்தான்.
கியாஸ் சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவன். என்றாலும் அவனது பழக்க வழக்கங்கள் உயர்வானவை. எப்போதும் தெளிவாக சிந்திப்பவன் மட்டுமல்ல நேர்மையாக சிந்திப்பவனும் கூட. தன்னால் யாரும் காயப்பட்டு விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருப்பவன். பிள்ளைகளுக்கும் அந்த நல்ல பழக்க வழக்கங்களை போதித்திருந்தான். அவனது போதனைகளுக்குப் புறம்பாக அவனைப் பார்த்தே பல நல்லவற்றை அவனது பிள்ளைகள் கற்றிருந்தனர். வீட்டிலிருந்த சின்ன பிள்ளைகள் மட்டுமல்ல திருமணம் முடித்து வெளியே சென்றிருக்கும் பிள்ளைகளும் அப்படித்தான் வளர்க்கப்பட்டிருந்தனர்.
தந்தை சொல்லை மந்திரமாக கருதினர். தங்கள் தந்தை தவறு செய்யமாட்டார் என்று அவர்கள்
உறுதியாக நம்பினர். தங்களின் எந்தப் பிரச்சினைக்கும் தந்தையிடமே ஆலோசனை கேட்டனர். அவர் கூறியபடியே நடந்து கொண்டனர்.
கியாஸ் தொழில் புரிந்தது ஒரு கோழிக் கடையில். வீட்டுக்கு ஒரு சில கிலோமீட்டர்களுக்கு அப்பால் அந்தக் கோழிக் கடை இருந்தது. கியாஸ்தான் அந்தக் கோழிக் கடையைப் பொறுப்பாக பார்த்துக் கொண்டான். அவனுக்குக் கீழ் மூவர் வேலை செய்தனர்.
அது சுஹைப் ஹாஜியாரின் கடை. கடந்த 10 வருடங்கள் கியாஸ் அங்கே நேர்மையாக உழைத்து வருகிறான். தனக்குக் கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு தனது குடும்பத்தை சிறப்பாக நிர்வகித்து வந்தான். விரலுக்கேற்ற வீக்கம்தான் அவன் தனது குடும்பத்துக்கு வழங்கும் உபதேசம்.
கோழிக் கடை முதலாளி சுஹைப் ஹாஜியார் மிகவும் வசதியுடன் வாழ்ந்த போதும் தனது ஊழியர்களுடன் மிகவும் கறாராகத்தான் நடந்து கொள்வார். வேலைக்கு வந்தால் மட்டுமே அவர்களுக்கு சம்பளம் கொடுப்பார்; கடையை பொறுப்பாக நடத்தும் கியாஸுக்கும் அதே நிலைதான். கியாஸ் தனது குடும்ப நிலையை கவனத்தில் கொண்டு தேவையின்றி லீவெடுக்கவே மாட்டான்.
சென்ற வருடம் வந்த கொரோனா, வருமானத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒருவாறு சமாளித்துக் கொண்டான். லொக்டவுனை எடுத்ததும் மறுபடி கடை திறக்கப்பட்டது. ஒருவாறு தலையை தூக்கிக் கொண்டு வரும் போது சரியாக நோன்புப் பெருநாளைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் லொக் டவுன் ஆரம்பித்து விட்டது.
கையிலே பணமில்லாத கடை ஊழியர்கள் கியாஸை நச்சரிக்க ஆரம்பித்தனர். முதலாளியுடன் பேசி ஏதாவது பண உதவி பெற்றுத் தருமாறு கெஞ்சினார்கள். அப்படியான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்பவர் அல்ல சுஹைப் ஹாஜியார். என்றாலும் தனக்குக் கீழ் வேலை பார்க்கும் ஊழியர்களின் கஷ்ட நிலையை உணர்ந்து கொண்ட காரணத்தினால் முதலாளி ஏசினாலும் பரவாயில்லை என்று வேலை செய்பவர்களுக்காக கியாஸ் பேசினான். அதெல்லாம் முடியாது என்று அடம் பிடித்த சுஹைப் ஹாஜியார் கியாஸின் பிடிவாதத்திற்காக இணங்கினார். கொஞ்சம் பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் இட்டார். என்றாலும் கியாஸுக்கென்று எதையுமே போடவில்லை. ஏனெனில் கியாஸ் தனக்கென்று எதையுமே கேட்கவில்லை.
மற்ற வேலைக்காரர்களின் நிலைமைதான் கியாஸின் நிலைமையும். தொடர் லொக் டவுனால் பொருளாதாரத்தின் அடிமட்டத்துக்கே சென்று விட்டான். சுஹைப் ஹாஜியாருக்கு நேர்மையாக இருந்த காரணத்தால் வேறெங்குமே அவன் எந்தத் தொழிலும் மேலதிகமாக புரியவில்லை. அவனுக்கு வந்த வருமானம் சுஹைப் ஹாஜியார் வழங்கிய சம்பளம் மட்டும்தான். அதனை வைத்துத்தான் தனது குடும்ப செலவை சமாளித்து வந்தான்.
தன்மான உணர்வு மேலோங்கி இருந்த கியாஸினால் எப்போதுமே அது வேண்டும் இது வேண்டும் என்று தலையை சொறியும் பழக்கம் அளவேயில்லை. அதனை சுஹைப் முதலாளி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு ஒப்புக்காகவாவது உங்களுக்கு எதுவும் வேண்டுமா என்று கேட்கவேயில்லை.
இப்போது அடிக்கடி கியாஸின் மனைவி கியாஸை நச்சரிக்கத் தொடங்கினால்
" பாருங்க, நோம்பு பெருநாளைல இருந்தே எங்களுக்கு கஷ்டம் தானே. ஒங்க ஹாஜியாருக்கு மன சாட்சியே இல்லையா. ஒங்கட கஷ்ட நஷ்டங்கள அவரு பாக்க வேணாமா. அட பெருநாளைக்கு இவங்க என்ன தின்டாங்க என்று கூட பாக்க இல்லையே. எத்தனை வருஷம் ஒங்க மொதலாளிக்கு ஒழச்சி கொடுத்திருக்கீங்க. நீங்க அவருக்கிட்ட வாய தொறந்து கேளுங்க. மத்தவங்க கிட்டதான் நீங்க கேக்க மாட்டீங்க.
மொதலாளிக்கிட்ட கேக்கிறத ஒங்கட உரிமதானே" என்று அடிக்கடி புலம்ப ஆரம்பித்தாள்.
அவள் எப்போதும் கணவனை மீறி பேசுபவள் அல்ல. என்றாலும் வறுமை கோட்டை பார்த்துக் கொண்டிருக்கும் அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை.
இந்த லொக் டவுன் எப்போதுதான் முடியும் என்றே தெரியவில்லை. அரசாங்கத்தையும் குறை சொல்ல முடியாது. லொக் டவுனை எடுத்தவுடன் எங்களவர்கள் நடந்து கொள்ளும் விதம் அப்படி.
முகத் கவசத்தை முறையாக அணியுங்கள்; சமூக இடைவெளியை முறையாக பேணுங்கள் என்ற அறிவுரையை சட்டைப் பண்ணுபவர்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர். அதனால்தான் சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கமைய நீண்ட கால லொக் டவுனை அரசாங்கம் போடுகிறது. நடமாடத் தடை என்று அரசாங்கம் அறிவித்திருந்த காலத்தில் பாதையில் ஓடிய வாகனங்கள் 'அப்படி ஒரு சட்டம்' இருக்கிறதா என்று வீட்டிலே முடங்கி இருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தோரை எண்ண வைத்தது.
வெளியே சென்றால்தான் வருமானம் என்ற நிலை உள்ளவர்களின் கதி அதோ கதிதான். பல குடும்பங்கள் கஷ்டத்தின் விளிம்பு நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன என்பது பலருக்கும் தெரியும்.
பல நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தங்களால் முடிந்த உதவிகளை தேவையானோருக்கு கொடுத்து கொண்டிருப்பவர்களும் இல்லாமலில்லை. சிலர் விளம்பரத்துக்காக உதவி செய்து பேஸ்புக், வட்ஸ்அப் என்று போட்டுக் கொண்டிருந்தாலும் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக உதவும் பரோபகார சிந்தை படைத்தவர்களும் நம் மத்தியில் இருக்கிறார்கள்.
என்றாலும் என்ன செய்ய ? கியாஸை நோக்கித்தான் எந்த உதவியும் வரவேயில்லை. இப்படி இந்த இடர் காலத்தில் எந்த உதவியும் கிடைக்காமல் சொல்லொணா துயரத்துடன் காலம் கழிப்பவர்களும் ஏராளமாக எம் மத்தியில் இருக்கிறார்கள்தானே.
"டக்...டக்....டக்.... " என்று கதவு தட்டும் சத்தம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டே இருந்தது.
கியாஸ் சென்று மெதுவாக கதவைத் திறந்தான். அங்கே பாயிஸ் நின்று கொண்டிருந்தான்.
பாயிஸ் அவனது பால்ய கால நண்பன். வெளிநாடு செல்ல வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்தும் அதில் அவனுக்கு வெற்றி கிடைக்கவேயில்லை. கடைசியாக சென்ற நேர்முகப் பரீட்சைக்கு இந்தியாவிலிருந்து ஏஜன்ட் வந்திருந்தார்.
அதில் பாயிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டான் - சும்மாவல்ல. இரண்டு லட்சம் கொடுத்தால் ஏஜன்ட்டுடனேயே இந்தியாவுக்குச் சென்று துபாய் செல்லலாம் என்றும் சொல்லி வைத்தான். இரண்டு லட்சத்துக்கு பாயிஸ் எங்கே போவான். ஏஜன்ட் போவதற்கு ஒரு வாரம்தான் இருந்தது. தனது மனைவியின் நகையை விற்று இன்னும் சிலரிடம் கடன் வாங்கி ஏஜன்ட்டிடம் கொண்டு போய் பணத்தைக் கொடுத்தான். இன்னும் இரண்டு நாட்களில் துபாய் போகலாம் என்று சொன்ன ஏஜன்ட்டிடமிருந்து இரண்டு நாட்கள் எதுவித பதிலும் வரவில்லை. அவனது கைபேசியும் சுவிட்ச் ஓப் பாகி இருந்தது.
"ஆகா ஏமாந்து விட்டோமே " என்று கவலையோடு இருந்த பாயிஸுக்கு மூன்றாவது நாள் காலை ஏஜன்ட்டிடமிருந்து போன் வந்தது. உடனடியாக விமான நிலையம் வருமாறு சொன்னார். பாயிஸ் தயார் நிலையிலேயே இருந்ததால் உடனே ஆயத்தமாகி விட்டான்.
அவனது மனைவி மிகவும் மனவேதனையோடு அவனை வழியனுப்பி வைத்தாள். வேறு யாருக்கும் பயணம் சொல்ல அவனுக்கு நேரம் இருக்கவில்லை.
மும்பைக்குச் சென்று அங்கிருந்து துபாய்க்குச் செல்வதாக கூறி சென்றான். மும்பையில் இறங்கியவுடன் மனைவிக்கு போனில் பேசியவன்தான். மாதக் கணக்காக அவனிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லை. அவனது மனைவியும் குடும்பமும் கலங்கிப் போனார்கள். பல இடங்களில் விசாரித்தும் பாயிஸைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கியாஸும் கூட அவனுக்குத் தெரிந்த விதத்திலெல்லாம் விசாரித்துப் பார்த்து விட்டான். எதிலுமே வெற்றிக் கிடைக்கவில்லை. பாயிஸின் மனைவி பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறியதோடு தன்னால் முடிந்த உதவிகளை செய்வதைவிட வேறு ஒன்றையும் அவனாலும் செய்ய முடியாமலிருந்தது.
தவித்துக் கொண்டிருந்த பாயிஸ் குடும்பத்துக்கு ஆறு மாதங்கள் கழித்துதான் பாயிஸிடமிருந்து கோல் வந்தது. அந்த இந்திய ஏஜன்ட் அவனை ஏமாற்றி மும்பையிலேயே விட்டு விட்டு தலைமறைவாகிவிட்டானாம். சாப்பிட கூட வழியில்லாமல் தெருத் தெருவாக அலைந்து திரிந்த பாயிஸ் பல மாதங்களுக்குப் பிறகு மும்பையில் தமிழ் நாட்டுக்காரர் ஒருவரின் சலூனில் தொழில் பார்த்துள்ளான். அதற்குப் பிறகுதான் கோல் பேசக் கூட அவனால் முடிந்திருக்கிறது. துபாய் பயணம் கனவாகியே போனது. மனைவியின் அத்தனை தங்க நகைகளும் விழலுக்கு இறைத்த நீராகிப் போயின.
"பரவாயில்லை, எங்களுக்கு பணம் வேண்டாம். நீங்கள் திரும்பி வந்தால் போதும்" என்ற மனைவியின் அழுகுரலுக்கு அடிபணிந்து ஒருவாறாக விமான டிக்கெட்டை சமாளித்து இலங்கை வந்து சேர்ந்தான்.
பல மாதம் இங்கும் ஒரு தொழிலுமின்றி அவதிப்பட்டான் பாயிஸ். கியாஸ் அவனை தான் வேலைப் பார்க்கும் கோழிக் கடையில் வந்து சேருமாறு சொல்லியும் அவன் மறுத்து விட்டான்.
அதற்குப் பிறகு ஒருநாள் கியாஸை பார்க்க வந்த பாயிஸ்,
" எனக்கு ஒரு வேலையும் செட்டாகுது இல்ல. அதனால நானே ஒரு சலூனை போடலாம் என்று நெனைக்கிறேன். எனக்கு கொஞ்சம் கொஞ்சம் முடி வெட்டத் தெரியும் " என்றான்.
ஆனாலும் கியாஸ் அது வேண்டவே வேண்டாம் என சொன்னான். "எங்கட யாரும் ஒன்னய மதிக்க மாட்டாங்க " என்றான்.
" ஏன்ட பொண்டாட்டியும் இப்படித்தான் சொல்லுறா. இருந்தாலும் நான் ஆரம்பிக்கக் தான் போறேன்." என்று சொல்லிவிட்டு போனான்.
ஏனோ கியாஸுக்கு மனம் ஒப்பவில்லை. பாயிஸ் முடி வெட்டும் சலூன் ஆரம்பித்தாலும் கூட கியாஸ் ஒரு முறையாவது அந்த சலூன் பக்கம் போகவில்லை.
அதற்குள் இந்தக் கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்று வந்து முழுவதுமாக முடக்கிப் போட்டுவிட்டது.
கதவைத் திறந்ததும் பாயிஸ்தான் நின்று கொண்டிருந்தான்.
முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தான். முன்பெல்லாம் பாயிஸைக் கண்டவுடன் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டுதான் பேசுவான். இப்பொழுதுள்ள சூழல் அப்படியெல்லாம் பேச முடியவில்லை.
"அடே பாயிஸ், சொகமா இருக்கியா ? வா வா உள்ளுக்கு வா " என்று தனது பால்ய நண்பனைக் கண்ட மகிழ்ச்சியில் முகம் மலர அழைத்தான்.
" இல்ல கியாஸ், நா உள்ள வரல்ல. பிள்ளைகள் இருக்கிற எடம். நீ கொஞ்சம் வெளிய வா..." என்றான் பாயிஸ்.
வெளியே சென்ற கியாஸ் அப்போதுதான் பார்த்தான். ஒரு பெரிய பொதியோடு பாயிஸ் வந்திருந்தான்.
"கியாஸ் இந்த பார்ஸல ஒனக்குதான் கொண்டு வந்தேன் " என்று கூறி அதனை எடுத்து முன்னே வைத்தான். அது மட்டுமல்ல கியாஸின் கையில் இரண்டு ஐந்தாயிரம் ரூபாய்களையும் வைத்தான்.
"இதெல்லாம் என்ன. எனக்கு ஒன்னும் வாணாம். இந்தக் கஷ்ட காலத்துல நீ ஒன்னையும் ஒன்ட குடும்பத்தையும் பாரு" என்று பணத்தை மறுபடி பாயிஸின் கையில் வைத்தவாறு கியாஸ் சொன்னான்.
"இல்ல இல்ல, எனக்கும் ஏன்ட குடும்பத்துக்கும் வச்சிட்டுத்தான் ஒனக்கு கொணந்திருக்கேன் "
என்று சொல்லிக் கொண்டே பாயிஸ் பேசினான்,
"இது எனக்கு கஷ்ட காலமே இல்ல. நா வழமையவிட நல்லா சம்பாதிக்கிறன்" என்று சொன்ன பாயிஸை கியாஸ் ஆச்சரியமாக பார்த்தான். 'எல்லோருமே வியாபாரம் இல்லை என்று மூக்கால் அழுது கொண்டிருக்கும் போது இவன் என்ன நல்லா சம்பாதிக்கிறேன் என்று சொல்கிறான்'
கியாஸ் மனதால் இப்படி நினைக்கும் போதே பாயிஸ் பேசினான்.
"நா பம்பாயில இருந்து வந்து சலூன் போட போறன் என்று சொன்னதும் யாருமே அதுக்கு சப்போர்ட் பண்ணயில. நீ கூட வாணாம் என்று தான் சொன்னாய். என்றாலும் எனக்கு அப்ப இருந்த சூழ்நிலையில அது தவிர வேறொன்றும் தெரியல்ல. ரெண்டு சீப்பும் ரெண்டு கத்திரியும் ஒரு சார்ஜ் செய்யிற ரேஷர் மெஷினோடு இன்னும் செல சாமான்கள வாங்கி சலூன வீட்டுக்கு முன்ன இருந்த அறையில ஆரம்பிச்சன். நான் தொழில் படிச்ச தமிழ் நாட்டுக்காரர் நல்லாதான் எனக்கு சொல்லித்தந்திருந்தார்.
கொஞ்சம் கொஞ்சமா ஆள் கள் வர ஆரம்பிச்சாங்க. சாதாரணமாதான் தொழில் நடந்திச்சு. மொதலாவது லொக் டவுன் போட்டு எடுத்த ஒடனே என்னய தேடி பட எடுத்து வர ஆரம்பிச்சாங்க. டொக்டர்மார்ட்ட போலவே எனக்கிட்டயும் எப்பொயின்மன்ட் எடுத்து ஆள் கள் வர ஆரம்பிச்சாங்க. நா சரியான பிஸி ஆகிட்டன். அதே நேரம் எனக்கிட்டயும் அல்ஹம்துலில்லாஹ் பணம் குவிய ஆரம்பிச்சிடுச்சு. மாஷா அல்லாஹ் இப்ப எனக்கிட்ட கை நெறய பணமிருக்கி. எனக்கு ஓன்ட கோழிக் கட மொதலாளி சுஹைப் ஹாஜியார பத்தித்தான் நல்லா தெரியுமே. பெரிய கஞ்சன். ஒன்னயெல்லாம் சரியா கவனிக்கிறதேயில்ல என்றது எனக்கு நல்லா தெரியும். அதுதான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தன்.
முதல்ல இந்த பார்ஸல உள்ள வை. இந்தா இந்த பணத்தை புடி." வலுக்கட்டாயமாக பணத்தை திணித்தான்.
"ஒனக்கு என்ன தேவயென்றாலும் இனி நீ தாராளமா கேளு. நா கஷ்டப் பட்ட நேரத்துல எத்தன தடவ நீ எனக்கு ஒதவி செஞ்சிரீக்க. நா இந்தியாவுல மாட்டிக்கொண்டிருந்த நேரம் ஏன்ட குடும்பத்துக்கு நீ எவ்வளவு ஒதவி செஞ்சிரீக்க"
பாயிஸ் பேசிக்கொண்டே போனான். அடடா நாங்களெல்லாம் கீழாக நெனைச்ச ஒரு தொழில் மூலம் பாயிஸ் எப்படி முன்னேறியிருக்கிறான்.
ஆம் உழைத்து சம்பாதிப்பதில் எதுவுமே தவறில்லை. கியாஸின் மனம் சொல்லிக் கொண்டிருந்தது.
"