03/07/2023 அன்று வலம்புரி கவிதா வட்டத்தின் 89 ஆவது கவியரங்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் சிந்தனைப் பிரியன் ஜமால்தீன் முஸம்மில் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்.
- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர், வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)
பல்வேறு ஆற்றல்கள் தன்னகத்தே
பவ்வியமாய் வைத்திருக்கும் இக்கவிஞன்
சொல்கொண்டு சொக்கித்தான் போய்விடவே
சுவையான கவிதைகள் சபை வைப்பான்
வில்லிருந்து பாய்ந்து வரும் அம்பைப்போல்
வித்தைகள் காட்டிவிடும் தகைமை உள்ளான்
பல்லாண்டைக் கடந்துஇவன் வகவத்தில்
பணிவோடு பயணிக்கும் குணமும் கொண்டான்
கவிதையொடு நாடகங்கள் புகைப்படமும்
கலைநயமாய் படைத்துவிடும் திறமை உள்ளான்
பவித்திரமாய் ஒளிப்பதிவு செய்து அதனை
பக்குவமாய் ஒளிபரப்பும் தளமும் கொண்டான்
தவிக்கின்ற பேர்களுக்கு கரங்கள் நீட்டி
தகும் வேளை உதவுகின்ற மனமும்
பெற்றான்
புவிமேலே வகவத்தின் புகழும் பரவ
புத்தாக்கத் தோடு இவன் பயணம் செய்வான்
சிந்தனைப் பிரியன் எனும் பெயரில் தன்னை
சிறப்பாக அடையாளம் காட்டும் இவனை
வந்துநீ கவியரங்கின் தலைமையேற்று
வாழ்த்துக் கள் குவிக்க வேண்டும் என்றோம்
வந்தனன் வாஞ்சையாய் கவிதைப் படையை
சுந்தரன் பின்னால் அழகாய்
அழைத்துச் செல்ல
வலம்புரி கவிதா வட்டத்தின்
89 ஆவது கவியரங்கைத்
தலைமையேற்கும்
சிந்தனைப் பிரியன்
ஜமால்தீன் முஸம்மில்
அழகு தமிழ் சொல்லெடுத்துக்
கொள்
ஆற்றலுடன்
கவிஞர் மனங்களை
நீ வெல்
என்றென்றும் எங்கள் இதயங்களுக்குள்
செல்
இப்போது கவியரங்கைத் தலைமேயேற்க
எங்கள் முன் வந்து
நில்
சிந்தனைப் பிரியன்
ஜமால்தீன் முஸம்மில்