எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 8 டிசம்பர், 2024

மழை நாளும் நொண்டிக் காலும்



பெய் என்னாது
பெய்த மழை
தெருவெங்கும்
பொய்கை அமைத்தது

வடிகாணில் இறங்க முடியாது
நீரும்
நடக்க முடியாது நாமும்
நொண்டிக்கால்
போட்டுக்கொண்டிருந்தோம் -
வோட்டுப் போட்ட
அரசியல்வாதியைப்
பழித்துக் கொண்டு !

கடலலைக்கு மட்டுமா
உங்கள் கால்களைக் கழுவும்
தகுதி
எங்களுக்கும் உண்டு
என்று இறுமாப்புடன்
சாக்கடை நீர்
புதிய பாதணிக்கு
விண்ணப்பம் வழங்கியது

பாவம் அந்த
நகர சுத்தித் தொழிலாளர்கள்
அடை மழையிலும்
அடைத்துப் போன
காணைத் துப்பரவு
செய்து கொண்டு -
எங்களது
அறிவீனமும், அலட்சியமும்
அல்லவா
அடைத்த குப்பையாய்
வெளியே வந்து விழுகிறது

ஷொப்பிங் பேக்கள்
வெற்று டின்கள்
கிழிந்த புடைவை
இன்னும் என்னென்னவோ -
எங்கள் இரகசியங்கள்
பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன !

எங்கள் வீட்டுக் காண்களில்
கொட்டி
வடிகாண்களின்
தொண்டைகளை
அடைக்கச் செய்துள்ளோம்

எய்த நாங்களே
அம்பை நோகிறோம் !

ஒரு பஸ்
டிக்கெட்டைக் கூட
தெருவில் வீசும் உரிமை
உனக்கும் எனக்கும்
இல்லை என்று
உணராத வரை -
மழை நாட்களில்
நீங்களும் நானும்
நொண்டி போட்டுத்தான்
ஆக வேண்டும் !

 என். நஜ்முல் ஹுசைன்