செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011
வியாழன், 18 ஆகஸ்ட், 2011
பாரதி யார்?
பாரதிரப்
பாடியவன் பாரதி
சொல்லிக்கொண்டிருக்கும்போதே
விளங்கிக் கொள்வதற்காய்
கிள்ளிக் கொண்டிருக்கும்போதே
கிளர்ந்தெழுவதற்காய்
பாடியவன்
காய் பாடியவன்
பாரதி
மானுடத்தைக்
கனியாக்குவற்காய்
சேர்ந்து வாழ்வதை
சொல்லித் தந்தவன்
சோர்ந்து விழுவதைக்
கிள்ளி எறிந்தவன்
பண்டிதத் தமிழை
புதுக்க விதைத்தவன்
புதுக்கவி தைத்தவன்
அவனால்
எத்தனை புதுக்கவிதைகள்
இன்று
நாட்டில் நடப்பதைச்
சொல்லிக் கொடுத்தவன்
மட்டுமல்ல
கவிஞர்களுக்கு
ஏட்டில் நடப்பதையும்
சொல்லிக் கொடுத்தவன்
விலங்கு போட்டு
வைத்திருந்த
தமிழ் கவிதையை
விளங்க வைத்து
விடுதலை
வாங்கித் தந்தவன்
ஏனெனில்
அவன் சுதந்திரப் பாட்டுக்காரன்
நாட்டுச் சுதந்திரத்திற்காய்
பாட்டுப் பாடியவன்
பாட்டுச் சுதந்திரத்திற்காய்
நாட்டைப் பாடியவன்
தன்
தலைப்பாகைக்குள்
தன்னை வைத்தவன்
தன்
தலைப் பா
கைக்குள் வைத்தவன்
எம்மோடு
சிறு வயது முதல்
ஓடி விளையாடி
காலை எழுந்தவுடன்
நல்ல
படிப்புச் சொல்லிக் கொடுத்து
சிந்து நதியின் மிசை
தமிழ் நிலவுச் சோறூட்டி
எம்மோடைக்கியமானவன்
பாரதி
எம் பேனா
பாரதிக்கு
உடைமை ஆனது
பாரதி
எம் பேனாவுக்கு
டை
மை ஆனான்
காலச் சக்கரத்திலே
அவன் கவிதை சர்க்கரை
இனிக்க மட்டுமல்ல
உறைக்கவும் செய்தது
உணர்வுகளைத் தட்டி எழுப்பி
உண்மைகளை
உரைக்கவும் செய்தது
பாரதி
நேற்று எழுதிய
கவிதையில்
இன்றும் வாழ்பவன்
நாளையும்
உயிரோடிருப்பதற்காய்
நாற்று நட்டவன்
ஏனெனில் அவன்
சொல்லேணி வைத்து
மில்லேனியக்
கவிதை பாடியவன்
பாரதியின்
கவிதை படிக்காதவன்
எழுதிக் குவித்தாலும்
பேனைப்
பிடிக்காதவன்
அதனால் தான்
பாரதி
தன்னை யாரென்று
கேட்கச் சொன்னான்
பாரதி
யார் ?
கேட்டுப்பார்
அப்போது உனக்கு
நீ யாரென்று
தெரியும்
என்.நஜ்முல் ஹுசைன்
சனி, 13 ஆகஸ்ட், 2011
வியாழன், 11 ஆகஸ்ட், 2011
அஷ்ரப் ஷிஹாப்தீனின் 'அவர்கள் வருகிறார்கள்' என்ற கவிதையை அவரது ப்ளாக்கில் வாசித்தபோது ஞாபகம் வந்த என் கவிதை
இக் கவிதை தினகரன் 'ஆலமுல் இஸ்லாம்' பகுதியில் 04/03/1994 அன்று வெளிவந்தது
படையெடுப்பை முறியடிப்போம்
இது
'அமல்' விளக்கேற்றி
அழகுபடுத்தும்
ரமழான் மாதம்
நாம்
நன்மை நோட்டுக்களைப்
பெற்றுக்கொள்ள
இறைவனிடம் கையேந்தும்
இன்னருள் மாதம்
என்ன அதிசயம்
இங்கே
எம்மிடம்
கையேந்திக்கொண்டு...
எங்கிருந்து வந்தார்கள்
இந்த ஏழைகள் ?
எங்கள் சில்லறைகளுக்காய்......
நாம்
இச்சை அடக்கும்
மாதத்தில்
பிச்சைக்காரர்கள்
தெருக்களத்தில்
'வியூகம்' அமைத்து
'பரணி' பாடி
அவர்கள்
'தர்ம யுத்தம்'
தொடுத்திருக்கிறார்கள்
சில்லறைத்தனமான
பணக்காரர் செயல்களால்
சில்லறைகளாய் போன
பிச்சைக்காரர்கள்
ரமழானே
அப்போராளிகள்
உனக்கெதிராய் அல்ல .....
பணத்திற்கு எதிராய்
அவர்கள் உன்னை
அசிங்கப்படுத்தவில்லை
பணக்காரர்
அசிங்கங்களை
வெளிப்படுத்துகிறார்கள்
கொடுக்க வேண்டியதை
எடுத்துக் கொண்ட
பணக்காரருக்கு எதிராக
போர்க்கொடி
தூக்கியிருக்கிறார்கள்
ஏழைச் சகோதரர்களை
ஊர்வலம் வைத்து
சந்தோசப்படும் அவர்கள்
நாளை
தலை குனிந்து செல்லப் போகும்
ஊர்வலத்தை உணராமல் ...........
ரமழானே
இந்த ஏழைகள்
படி அரிசிக்காய்
படி
ஏறி இறங்குவதை
தடுக்க நீ
வாரி வழங்குவதைச்
சொல்லித் தந்திருக்கிறாய்
கவலைப்படாதே
இந்தப்
பிச்சைக்காரர் போராட்டத்தை
முறியடிக்க
எங்கள் பணக்காரர்கள்
தயாராகிவிட்டார்கள்
சில்லறைச் 'ஷெல்'களால்
தாக்கி அல்ல
'ஸக்காத்' ஒப்பந்தத்தால்
தூக்கி
எனவே
இந்தப் பிச்சைகாரர்கள்
வரமாட்டார்கள்
எம்மை
அசிங்கப்படுத்த
போர்க்கொடி தூக்கிக்கொண்டு
இந்தப் பிச்சைகாரர்கள்
அடுத்த வருடம்
வரவே மாட்டார்கள்
என். நஜ்முல் ஹுசைன்
ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011
நோன்பின் மாண்பு- இது கட்டுரை அல்ல ஒரு எலி கதை
சில பகற்பொழுதுகளில் கூட ஓடிப் பிடித்து விளையாடிய எலிகளை நோன்பு மாதத்திலே காணவே முடியவில்லை. தலையைப் பிய்த்துக்கொண்டு விடை தேடினோம்.
விடை கிடைத்தது. நோன்பு அல்லாத காலத்தில் நாம் பகல் வேளைகளில் உணவருந்திவிட்டு மிச்சம் மிகுதமிருந்த எச்சில்களை அலுவலகத்திற்குள்ளேயே
குப்பைத் தொட்டியில் போட்டோம். அதனை ருசிப் பார்க்கத்தான் அந்த எலிகள் அங்கே நடமாடியிருக்கின்றன. நோன்பு காலத்தில்தான் பகலிலே நாங்கள் எதுவுமே போடுவதில்லையே. இரவில் அலுவலகம் மூடி இருக்கும். அதனால் எங்கள் குப்பைத் தொட்டி நோன்பு காலத்தில் எப்போதுமே சுத்தமாகவே இருக்கும். இனி அங்கே எலிகளுக்கு என்ன வேலை.
இது ஒன்றை எங்களுக்கு நன்கு புலப்படுத்தியது. எப்போதும் சுத்தமாகவே வைக்கப்பட்டிருக்கும் இடங்களுக்கு எலிகள் வருவதில்லை.
வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011
புதன், 3 ஆகஸ்ட், 2011
இஸ்லாமிய கீதம் - நோன்பு
தலையை சாய்த்து இறையை வணங்க
சொல்லித் தந்தது - ரமழான்
இதயந் தன்னை கழுவிவிட்டு
இன்று மகிழ்ந்தது
எங்கள் வயிறு நோன்பு என்ற
பாடம் கற்றது - இதயம்
அமலில் லயித்து பாவம் விட்டு
சித்தி பெற்றது
உலக மெல்லாம் ஒன்று சேர்ந்து
பசித் திருந்தது - அல்லாஹ்
கட்டளைக்கே அடி பணிந்து
இன்பம் கண்டது
உண்மை முஸ்லிம் வாழ்வு என்ன
நோன்பு சொன்னது - இதிலே
நிலைத்து நிற்கும் மாந்த ருக்கு
சொர்க்கம் தந்தது
- என். நஜ்முல் ஹுசைன்