இக் கவிதை தினகரன் 'ஆலமுல் இஸ்லாம்' பகுதியில் 04/03/1994 அன்று வெளிவந்தது
படையெடுப்பை முறியடிப்போம்
இது
'அமல்' விளக்கேற்றி
அழகுபடுத்தும்
ரமழான் மாதம்
நாம்
நன்மை நோட்டுக்களைப்
பெற்றுக்கொள்ள
இறைவனிடம் கையேந்தும்
இன்னருள் மாதம்
என்ன அதிசயம்
இங்கே
எம்மிடம்
கையேந்திக்கொண்டு...
எங்கிருந்து வந்தார்கள்
இந்த ஏழைகள் ?
எங்கள் சில்லறைகளுக்காய்......
நாம்
இச்சை அடக்கும்
மாதத்தில்
பிச்சைக்காரர்கள்
தெருக்களத்தில்
'வியூகம்' அமைத்து
'பரணி' பாடி
அவர்கள்
'தர்ம யுத்தம்'
தொடுத்திருக்கிறார்கள்
சில்லறைத்தனமான
பணக்காரர் செயல்களால்
சில்லறைகளாய் போன
பிச்சைக்காரர்கள்
ரமழானே
அப்போராளிகள்
உனக்கெதிராய் அல்ல .....
பணத்திற்கு எதிராய்
அவர்கள் உன்னை
அசிங்கப்படுத்தவில்லை
பணக்காரர்
அசிங்கங்களை
வெளிப்படுத்துகிறார்கள்
கொடுக்க வேண்டியதை
எடுத்துக் கொண்ட
பணக்காரருக்கு எதிராக
போர்க்கொடி
தூக்கியிருக்கிறார்கள்
ஏழைச் சகோதரர்களை
ஊர்வலம் வைத்து
சந்தோசப்படும் அவர்கள்
நாளை
தலை குனிந்து செல்லப் போகும்
ஊர்வலத்தை உணராமல் ...........
ரமழானே
இந்த ஏழைகள்
படி அரிசிக்காய்
படி
ஏறி இறங்குவதை
தடுக்க நீ
வாரி வழங்குவதைச்
சொல்லித் தந்திருக்கிறாய்
கவலைப்படாதே
இந்தப்
பிச்சைக்காரர் போராட்டத்தை
முறியடிக்க
எங்கள் பணக்காரர்கள்
தயாராகிவிட்டார்கள்
சில்லறைச் 'ஷெல்'களால்
தாக்கி அல்ல
'ஸக்காத்' ஒப்பந்தத்தால்
தூக்கி
எனவே
இந்தப் பிச்சைகாரர்கள்
வரமாட்டார்கள்
எம்மை
அசிங்கப்படுத்த
போர்க்கொடி தூக்கிக்கொண்டு
இந்தப் பிச்சைகாரர்கள்
அடுத்த வருடம்
வரவே மாட்டார்கள்
என். நஜ்முல் ஹுசைன்
2 கருத்துகள்:
நல்ல கவிதை அருமையான் ஆழமான கருத்து சொல்லப்பட்டிருக்கிறது. நன்றி தங்களுக்கு அல்லாஹும் அவனது ரசூல்(ஸல்..) அவர்களும் அருள்வார்களாக!
மிக்க நன்றி தங்களது பாராட்டுக்கும் துஆவுக்கும் சகோதரர் பாட்ஷா
கருத்துரையிடுக