எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 27 ஜூன், 2013

சௌந்தரராஜனே ....................




சௌராஷ்டிர
குந்தி தேவி
தமிழ் கம்பனுக்கு
தாரை வார்த்த
கர்ணன் நீ

அள்ளி அள்ளி
கொடுக்கும்
சீதக்காதி நீ –
இறந்த பின்பும்
கொடுக்கிறாய்

இந்தச் சொற்களுக்குள்
உன்னை
அடக்க முடியாது

தமிழ் கடலில்
மூழ்கி
முத்தெடுத்தவன் நீ
நீச்சல் மட்டுமல்ல-
எதிர் நீச்சலும் போட்டவன்

தமிழில்
எந்தச் சொல்லும்
உன் நாவைத்
தப்பிப் போகவில்லை –
தப்பாகவும் போகவில்லை

நாங்கள் உனது
கடன்காரர்கள்
உன்னிடம் படித்த
உச்சரிப்புப் பாடத்துக்கு
இன்னும்
கட்டணம் செலுத்தவில்லை


தமிழ் மொழி
உன்னைப் பார்த்துதான்
'மொழி' என்றது

நீ மொழிந்தபோதெல்லாம்
அது
குற்றாலம் அருவியிலே
குளித்துக் கொண்டது

அதுமட்டுமல்ல

கல் தோன்றி
மண் தோன்றா
காலத்தின்
முன் தோன்றிய
மூத்தத் தமிழ்
என்ற
சான்றிதழையும்; பெற்றுக்கொண்டது

உன் குரல் வளையில்
சிக்கிய
மீன்கள் நாங்கள்

நீ எங்கள்
பிராணனை வாங்கவில்லை

இன்றும்
பிராணவாயு
தந்துகொண்டிருக்கிறாய்


நீ
தமிழன்
களைப்பைப்
போக்கிய
கலப்பை -
உள்ளத்தில் உற்சாகப் பயிரிட்டு


நீ
விலங்காகப் பாடியவனல்ல
நாங்கள்
விளங்காமல்
பாடியவனுமல்ல

உன் பாடலால்
எங்களுக்கு
விலங்கிட்டவன்
இலட்சோப லட்ச
இதய அரியாசணையின்
ஆஸ்தான பாடகனாய்
விளங்கிட்டவன்


டி.எம்.எஸ்.
வாழ்வின்
எல்லா தருணத்திற்கும்
தகவல் தந்த
எஸ்.எம்.எஸ்

வல்லவனே
நீயும் ஒரு
வள்ளுவன்தான்
அவனிடமிருந்தது
திருக்குறள்
உன்னிடமோ
திருக் குரல்

பிசிறு தட்டாத
அந்தக் குரலால்தானே
உன்
விசிறிகளின் வியர்வைக்கு
நீ
சாமரம் வீசியிருக்கிறாய்

இதய வடுக்களுக்கு
ஒத்தடம் இட்டவனே


உன்னைத்
தீயினால் சுட்ட வடு

நீ
நாவினால் சுட்டுப் போட்டிருக்கும்
வடுக்களால்தானே
ஆறிக்கொண்டிருக்கிறது

உன்னோடு உடன் வந்த
உனது வயதுதான்
உன்னை
எமனிடம் ஒப்படைத்தது

எங்கெங்கோ சிதறியிருக்கும் 
உன் 
ரசிகர்கள் அல்ல !




-    என். நஜ்முல் ஹுசைன்

கருத்துகள் இல்லை: