இன்று 25/8/2017 வெள்ளிக்கிழமை "விடிவெள்ளி" பத்திரிகையில் இடம்பெற்ற எனது சிறுகதை
இப்படி செஞ்சிட்டீங்களே...............!
என். நஜ்முல் ஹுசைன்
நஸ்ரியாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கைகளைப் பிசைந்து கொண்டு
நின்றாள். தனது தாய் இப்படி செய்வாள் என்றும் கொஞ்சமும்
எதிர்பார்க்கவில்லை..இப்போது அவர் வந்து விடுவார்.
அதற்குள் இதனை சரி செய்ய முடியுமா? முடியாது என்று நஸ்ரியாவுக்குத் தெரியும்.
'என்ன உம்மா இப்படி செஞ்சிட்டீங்க ?' வேதனை கலந்த கோபத்தோடு நஸ்ரியா கேட்டாள். தாய் பேந்த பேந்த விழித்தாள்.
'சரி சரி கொஞ்சம் சீக்கிரமாக எறங்கி வாங்க.....' என்று கூறியவாறே தனது
தாயை கைத்தாங்கலாகப் பிடித்தாள். அவளைப் பிடித்தவாறே குளியலறைக்கு
அழைத்துச் சென்றாள்.
அவளது தாய் நடுங்கியவாறு அவள் இழுத்த இழுப்புக்குச் சென்றாள். அப்படி போய்க்கொண்டிருக்கும் போதே அன்வர் வந்து விட்டான்.
களைப்போடும், அலுப்போடும் அவன் இருந்தது அவனது முகத்திலேயே தெரிந்தது.
'நஸ்ரியா இன்னக்கி ஒபீஸ்ல சரியான வேல. எனக்கு கொஞ்சம் டீ தாங்க' என்று சொல்லிக் கொண்டே அவர்களது அறைக்குள் போனான்.
நஸ்ரியாவுக்கு ஒரு நாளும் ஏற்படாத ஒரு நடுக்கம் ஏற்பட்டது. தனது கணவர்
பெரிய கோபக்காரர் அல்ல என்றாலும் கோபப்படாதவரும் அல்ல என்பது அவளுக்கு
நன்கு தெரியும்.
நஸ்ரியாவுக்கு திருமணம் முடிந்து எட்டு
மாதங்கள்தான் ஆகின்றன. தந்தை இல்லை. அவளது ஒரே சகோதரன் பாரூக் கஷ்டப்பட்டு
நஸ்ரியாவுக்கு திருமணம் முடித்து வைத்தான். அன்வரோடு நஸ்ரியா
தனிக்குடித்தனம் வந்து விட்டாள்.
கஷ்டப்பட்டு செய்து வைத்ததால்
நஸ்ரியாவின் குடும்ப வாழ்வில் சுமையாகிப் போகக்கூடாது என்பதற்காக வயதான
தனது தாயை தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டான் பாரூக்.
தனது மகளைப்
பார்க்க ஆசையாக இருக்கிறது என்று தாய் விடுத்த வேண்டுகோளை ஏற்று
நஸ்ரியாவின் வீட்டுக்கு அழைத்து வந்தான் பாரூக். தாயை கண்டதும் நஸ்ரியா
கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள். அவள் அவளது தாயின் மேல் உயிரையே
வைத்திருந்தாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்ட காரணத்தால் எப்போதுமே
தாயின் நிழல் போலத்தான் நஸ்ரியா இருப்பாள்.
அவளது திருமண வாழ்க்கை தாயாரிடமிருந்து அவளைத் தூரமாக்கியது.
அதுதான் தாயைக் கண்டதும் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் .
'நானா ரெண்டு நாளைக்காவது உம்மாவ என்கிட்ட உட்டுட்டுப் போங்க. எனக்கு ஆசையா இருக்கு' என்றாள்.
'வேண்டாம்மா இப்ப அவங்கள பாக்கிறது ஒங்களுக்கு கஷ்டம்' என்று அவளது
சகோதரன் கூறியும் நஸ்ரியாவின் பிடிவாதத்தால் விட்டுவிட்டுப் போனான்.
நாநா சொன்னது போல பெரிய கஷ்டம் ஒன்றும் இருக்கவில்லை. அவர்களது பாட்டில்
சாப்பிட்டு விட்டு தூங்குவார்கள். முன்பு போல பேச்சு இல்லை. சில நேரம்
மலசலகூடத்துக்குக் கூட்டிக்கொண்டு போகவேண்டும். இன்று பகல்
சாப்பாட்டுக்குப் பிறகு தள்ளாடி தள்ளாடி நஸ்ரியாவின் அறைக்கு வந்தார்.
மெதுமெதுவாக பழைய கதைகளைப் பேச ஆரம்பித்தார். நஸ்ரியாவுக்கு மிகவும்
மகிழ்ச்சியாக இருந்தது. அவளும் சில விஷயங்களை நினைவுப்படுத்தி
பேசிக்கொண்டிருந்தாள். அவர்களது பேச்சு வார்த்தை நடந்தது நஸ்ரியாவின்
கட்டிலின் மேல். பேசிக் கொண்டிருந்தவாறே தாயார் தூங்கிப் போனார்.
பரவாயில்லை கொஞ்சம் தூங்கட்டும் என நஸ்ரியா தனது வேலைகளை கவனிக்கப் போனாள்.
தனது வேலைகளை முடித்துக் கொண்டு அறைப் பக்கம் வந்தவளுக்கு
அதிர்ச்சி காத்திருந்தது. அறைக்குள் வித்தியாசமான வாசம். நஸ்ரியா மூக்கை
உறிஞ்சினாள். அது வாசமல்ல் துர்நாற்றம். பதறிக்கொண்டு பார்த்தாள். அவளது
உம்மா கட்டிலை அசுத்தப்படுத்தியிருந்தாள். அவளது நாநா சொன்னதன் அர்த்தம்
இப்போதுதான் நஸ்ரியாவுக்குப் புரிந்தது.
வயதானவள்; தன்
உணர்விழந்திருந்தாள். முதன்முறையாக அவள் தனது தாயின் மீது கோபப்பட்டாள்.
இப்போது அவர் வரும் நேரம். இதையெல்லாம் கழுவி காயவைக்க முடியாது.
படுக்கையை எதுவும் செய்யவும் முடியாது.
'நஸ்ரியா' அவளது கணவன்
முதன் முதலாக கத்தினான். உம்மா செய்த காரியத்தால் எனக்கே கோபம் வந்ததே.
அவருக்கு வராமல் இருக்குமா. என்ன சொல்லி சமாளிக்கப் போறன் என்று யோசித்துக்
கொண்டே உம்மாவை ஒரு நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு அறைக்கு ஓடினாள்.
இப்போதுதான் அவளது உம்மாவுக்கு சரியான நினைவு வந்திருந்தது. தான் விட்ட
பிழை அவளுக்குத் தெரிந்தது. அவள் வேண்டுமென்று எதையும் செய்யவில்லை. என்ன
செய்ய அவளது கட்டுப்பாட்டை அவள் இழந்து விட்டாள்.
அறைக்குள் ஓடிய நஸ்ரியாவுக்கு அவளை அறியாமலேயே சிறிய காய்ச்சல் ஏற்பட்டிருந்தது.
'நஸ்ரியா கூப்பிட்டது காதுல விழலையா' மறுபடி அன்வர் கத்தியபோது நஸ்ரியா உள்ளே போய்விட்டாள்.
'இல்லங்க வந்து......அவங்க. ...' தடுமாறினாள் நஸ்ரியா.
'நான் ஏன் கூப்பிட்டன் என்று தெரியாம என்ன பொலம்புறீங்க....நான் காலைல இங்க வச்சிட்டுப் போன பைல் எங்க. ...? '
நஸ்ரியாவுக்கு ஒன்றும் புரியவில்லை. 'அத நான் தான் எடுத்து வச்சேன்.
..... இந்தாங்க ..' என்று வைத்த இடத்திலிருந்து எடுத்துக் கொடுத்தாள்.
'அதுதானே நானும் பயந்துட்டன். இது முக்கியமான பைல்' அன்வர் இயல்பு நிலைக்கு வந்திருந்தான்.
'சரி, டீ கொண்டு வந்தீங்களா .....' என்று கேட்டுக் கொண்டே அன்வர்
இப்போதுதான் நஸ்ரியாவின் முகத்தைப் பார்த்தான். அதில் வியர்வை
படிந்திருந்தது. ஓர் அச்சமும் தெரிந்தது.
'என்ன நஸ்ரியா பேயறைஞ்ச
மாதிரி இருக்கீங்க. உங்களுக்கு ஒடம்பு சரியில்லையா' என்று கேட்டவாறே அவளது
நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.
'இல்ல.... உம்மா...' அவள் எதையோ சொல்லத் தயங்கினாள். அப்போதுதான் அன்வர் அறைக்குள் வீசிய துர்நாற்றத்தை உணர்ந்தான்.
'சொல்லுங்க நஸ்ரியா. என்ன நடந்திச்சு. என்ன நாத்தம்'
நஸ்ரியா உருக்குலைந்து போனாள். கணவனின் அந்தக் கேள்விக்கு நஸ்ரியாவால் உடனடியாக தெளிவான பதில் சொல்ல முடியவில்லை.
துண்டுத் துண்டாக எதை எதையோ சொன்னாள். தனது தாயை குற்றவாளி கூண்டில் ஏற்றுவது அவளுக்கு சங்கோஜமாக இருந்தது.
அவள் தெளிவாக சொல்லாவிட்டாலும் அன்வர் நடந்தது என்ன என்பதை புரிந்து கொண்டான்.
அன்வர் நஸ்ரியாவின் கைகளைப் பற்றினான்.அதிலே ஒரு பரிவு இருந்தது.
'இதுக்காகவா கவலபடுறீங்க...' அன்வரின் தொனியில் அன்பு இருந்தது.
'நஸ்ரியா எங்க உம்மா வாப்பா எங்க வீட்ட அசுத்தப்படுத்தினா, படுக்கைய
அசுத்தப்படுத்தினா உண்மையிலேயே அது எங்களுக்கு பெரிய பாக்கியம்.
அவங்களுக்கு வயசு போக போக அவங்க கொழந்தய போல. நாங்க கொழந்தையா இருக்கிற
நேரம் எத்தனை தடவ அவங்க மேலெல்லாம் நஜீஸாக்கியிருப்போம். படுக்கய
அசுத்தமாக்கியிருப்போம். எந்த உம்மா, வாப்பாவாவது தங்கட கொழந்தய அதுக்காக
ஏசியிருக்காங்களா. பதிலுக்கு வாரி அணைக்க இல்லையா. நாங்க கொஞ்சம் பெரிய
புள்ள ஆன நேரத்தில கூட தெரியாம கட்டுல்ல சிறுநீர் கழிச்சிருக்கோம். எங்க
உம்மா, வாப்பா அத யாருக்கும் தெரியாம கழுவி போட இல்லையா.
அந்த உம்மா, வாப்பாக்கு நாங்க எப்ப கைம்மாறு செய்றது . நாங்க எத்தன மொற செஞ்சாலும் அவங்க செஞ்சதுக்கு ஈடாகுமா .....'
அன்வர் பேசுவதை கேட்டு நஸ்ரியா பூரித்துப் போனாள்.
சாரத்தை அணிந்து கொண்ட அன்வர் பெட் சீட்டை நானே கழுவுறேன் என்று நஸ்ரியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தி எடுத்துச் சென்றான்.
தனது மகளை மருமகன் அடித்து விடுவானோ என்று பயந்து போய் வந்த நஸ்ரியாவின்
தாய் அன்வரின் பேச்சைக் கேட்டு கதவருகே கதறியழுது கொண்டிருந்தாள்.
.............................................................................................................................