எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 24 ஏப்ரல், 2017

கவிஞர்களை இப்படி அழைத்தேன்.......

12/01/2017 அன்று இடம்பெற்ற வலம்புரி கவிதா வட்டத்தின் 33 வது கவியரங்கம் எமது மறைந்த ஸ்தாபக செயலாளர் கவின் கமல் இர்ஷாத் கமால்தீன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வுகளும் கவியரங்கும் எனது தலைமையிலேயே நடைபெற்றது. கவிதை பாட வந்த எமது கவிஞர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.
- என். நஜ்முல் ஹுசைன்


1. சுபாஷினி பிரணவன்

அதியமானுக்கு மட்டுமா
ஔவைப் புலவர்
அதிகமான எங்கள்
கவிஞர்களிடமுமிருக்கிறார்
ஓர் அவைப் புலவர்

இங்கே பூனையாய் வந்தார்
கவிதையிலே
புலியாய் பாய்ந்தார்
தலைமையிலே
தலை மயிலாய் ஜொலித்தார்
இலை இவர்க்கு ஆற்றல்
என நினைத்த எம்மை
வீழ்த்தி இவர் நிலைத்தார்

கவிதாயினி சுபாஷினி பிரணவன்
நீ கவிதை சுடர் வீசும் பகலவன்
உன்னிடமிருக்கிறது
கவிதை கல் வீசும் கவண்
நீ வீசு; பார்ப்போம்
உனக்கு முன்னிற்பவர் எவன்?


2. எம்.எஸ்.தாஜ்மஹான் 


செந்தமிழை தன்நாவில்
புரட்டிப் போட்டான்
அதன்
இனிமையிலே தன்னைத்தான்
கட்டிப்போட்டான்
வகவத்தோடு தனக்குமொரு
கட்டுப் போட்டான்
வளம் மிக்க கவி எழுதி
ஒரு போடு போட்டான்

வாழ்த்தி-
கவி பாட வேண்டுமென்றால்
ரெடி என்பானே
அழகான வரிகளினால்
ஒரு பிடி பிடிப்பானே
தமிழுலகில் தனக்குமொரு
இடம் பிடிப்பானே
இன்று -
எம் காதினிக்க
நல்லதொரு கவி படிப்பானே


3. வெலிமடை ஜஹாங்கீர்

மடை திறப்பான் - கவிதை
மடல் தொடுப்பான் - வெலி
மடை பிறப்பான்
வெகுளியாய் சிரிப்பான்

ஒரு சொல் போதும்
இவன் கவிதைக்கு - அதில்
புகுந்து விளையாடும்
இவன் திறமைக்கு

சில வரிகளுக்குக்குள்ளே - கவிதையை
இவன் முடித்துக் கொள்வான்
அந்த வரிகளுக்குள்ளும் பல
முடிச்சுகள் அவிழ்த்து விடுவான்

புதியவன் அல்ல - வகவத்தில்
பழையவன் - என்றாலும்
இவன் கவிதைகள் என்றும் புதியன
அழி தடை - எழுந்து வா
வெலி மடை ஜஹாங் கீர்
காட்டு உன் கவிதையின் கூர்

(தொடரும் )

கருத்துகள் இல்லை: