எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 26 ஏப்ரல், 2017

கவிஞர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.

12/01/2017 அன்று இடம்பெற்ற வலம்புரி கவிதா வட்டத்தின் 33 வது கவியரங்கம் எனது தலைமையிலேயே நடைபெற்றது. கவிதை பாட வந்த எமது
கவிஞர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.

- என். நஜ்முல் ஹுசைன்

(தொடர்ச்சி )



+++++++++++++++++
5. கலைவாதி கலீல்
+++++++++++++++++
பல்லாற்றல் கொண்ட ஒரு கலைஞர் - இவர்
சொல்லாற்ற லுடனியங்கும் கவிஞர்
சற்றேனும் சோர்வென்பதின்றி
சுறுசுறுப்பாய் இயங்குகின்ற
இளைஞர்

கற்றோர்கள் சபை பலவும் கண்டு
பெற்றவர்தான் பெருமைகள்; என்றும்
சளைக்காதே தன் கருத்தை கொண்டு
சரியென்று நினைத்த வைகளெல்லாம்
வளையாது வைப்பவராம் இந்த
பத்திரிகை உலகத்தில் மன்னன்

கலைவாதி கலீல் என்ற பெயராம்
பல தசாப்தங்கள் தமிழுலக பதிவாம்
எம்மோடும் கைகோத்து நின்று
வகவ மேடைகளை ஜொலிக்கவைக்கும் உறவாம்

வரவேண்டும் கலைவாதி இங்கு
எங்கள் தலைவாரி கவிதையினால் பொங்கு


++++++++++++++++++++
6. கம்மல்துறை இக்பால்
+++++++++++++++++++++


அணிகலனாய் வகவத்தில் இணைந்தார்
அணி சேர்க்கும் கவிதைகள் தந்தார்
மணியான கருத்து களாலே
மனங்களையே கவர்ந்து இவர்
வென்றார்

வித்தியாசம் இவர் கவிதை போக்கு
விதவிதமாய் ரசனையுள்ள நோக்கு
எத்திசையும் செல்ல வல்ல தாக்கி
ஏவுகணை போல் பாயும் தாக்கி

வகவத்திலே மின்னும் கம்மல்
வாஞ்சையோடு எமை சேர்ந்த செம்மல்
இலக்கியத்தை இன்பமென நினைக்கும்
இதயத்தைக் கொண்ட ஒரு கவிஞன்

கம்மல்துறை இக்பாலே வருக
கவிதையினால் எமை மயக்கிச் செல்க !


++++++++++++++++++++++
7. எம். பிரேம்ராஜ்
++++++++++++++++++++++

தமிழறிவு ஆழமாய் பெற்றான்
தமிழிலே விளையாட வல்லான்
தமிழோடு பிற அறிவும் கொண்டு
'தினக்குரல்' ஞாயிறு ஜொலித்தான்

கவிதைக்கு தன்மனது கொடுத்தான்
வகவத்தில் நல்ல பேர் எடுத்தான்
மேடைகள் பலவற்றில் ஏறி
தனக்கென்று கைத்தட்டல் குவித்தான்

கவிதையிலே பலபேரை மயக்கி
ரசிகர் நாம் என்று சொல வைத்தான்
சபையோரை விழி திறக்க வைத்து
அவர்கள் மனங்களிலே இவனும்தான்
நிலைத்தான்

தன்னை மனதுக்குள் பிரேம் போட
வைத்த - எம்.
பிரேம்ராஜ்ஜே
எங்கே காட்டி விடு
கவிதையில் உன் வீச்சே!

திங்கள், 24 ஏப்ரல், 2017

கவிஞர்களை இப்படி அழைத்தேன்.......

12/01/2017 அன்று இடம்பெற்ற வலம்புரி கவிதா வட்டத்தின் 33 வது கவியரங்கம் எமது மறைந்த ஸ்தாபக செயலாளர் கவின் கமல் இர்ஷாத் கமால்தீன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வுகளும் கவியரங்கும் எனது தலைமையிலேயே நடைபெற்றது. கவிதை பாட வந்த எமது கவிஞர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.
- என். நஜ்முல் ஹுசைன்


1. சுபாஷினி பிரணவன்

அதியமானுக்கு மட்டுமா
ஔவைப் புலவர்
அதிகமான எங்கள்
கவிஞர்களிடமுமிருக்கிறார்
ஓர் அவைப் புலவர்

இங்கே பூனையாய் வந்தார்
கவிதையிலே
புலியாய் பாய்ந்தார்
தலைமையிலே
தலை மயிலாய் ஜொலித்தார்
இலை இவர்க்கு ஆற்றல்
என நினைத்த எம்மை
வீழ்த்தி இவர் நிலைத்தார்

கவிதாயினி சுபாஷினி பிரணவன்
நீ கவிதை சுடர் வீசும் பகலவன்
உன்னிடமிருக்கிறது
கவிதை கல் வீசும் கவண்
நீ வீசு; பார்ப்போம்
உனக்கு முன்னிற்பவர் எவன்?


2. எம்.எஸ்.தாஜ்மஹான் 


செந்தமிழை தன்நாவில்
புரட்டிப் போட்டான்
அதன்
இனிமையிலே தன்னைத்தான்
கட்டிப்போட்டான்
வகவத்தோடு தனக்குமொரு
கட்டுப் போட்டான்
வளம் மிக்க கவி எழுதி
ஒரு போடு போட்டான்

வாழ்த்தி-
கவி பாட வேண்டுமென்றால்
ரெடி என்பானே
அழகான வரிகளினால்
ஒரு பிடி பிடிப்பானே
தமிழுலகில் தனக்குமொரு
இடம் பிடிப்பானே
இன்று -
எம் காதினிக்க
நல்லதொரு கவி படிப்பானே


3. வெலிமடை ஜஹாங்கீர்

மடை திறப்பான் - கவிதை
மடல் தொடுப்பான் - வெலி
மடை பிறப்பான்
வெகுளியாய் சிரிப்பான்

ஒரு சொல் போதும்
இவன் கவிதைக்கு - அதில்
புகுந்து விளையாடும்
இவன் திறமைக்கு

சில வரிகளுக்குக்குள்ளே - கவிதையை
இவன் முடித்துக் கொள்வான்
அந்த வரிகளுக்குள்ளும் பல
முடிச்சுகள் அவிழ்த்து விடுவான்

புதியவன் அல்ல - வகவத்தில்
பழையவன் - என்றாலும்
இவன் கவிதைகள் என்றும் புதியன
அழி தடை - எழுந்து வா
வெலி மடை ஜஹாங் கீர்
காட்டு உன் கவிதையின் கூர்

(தொடரும் )

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

கவிஞர் பிரேம்ராஜ்