எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 2 மார்ச், 2020

" பேசு மகனே பேசு " சிறுகதை

01 - 03 - 2020 ஞாயிறு தினக்குரலில் இடம்பெற்ற எனது சிறுகதை " பேசு மகனே பேசு "

நன்றி பிரதம ஆசிரியர்
  திரு. பாரதி இராசநாயகம் அவர்கள்

பேசு மகனே பேசு.......!
- என். நஜ்முல் ஹுசைன்

நிஸாமும், ஆரியபாலவும்தான் அன்று அந்தச் சந்தியில் டியூட்டி.
விதவிதமான வாகனங்கள் அவர்களைத் தாண்டி குறுக்கும் நெடுக்குமாகச்   சென்று கொண்டிருந்தன. அவர்களது கண்கள் இங்கும் அங்கும் நோட்டமிட்டுக் கொண்டேயிருந்தன.   இரண்டு பேருமே போக்குவரத்து கான்ஸ்டபிள்கள்தான். அதனால் வேகும் வெயிலில் அவர்கள் நின்றே ஆகவேண்டும். மழையே இல்லாத காரணத்தால் உஷ்ணம்கூட அதிகமாகியிருந்தது. அவர்களது யூனிபோர்ம் அவர்களை வியர்வையில் தொப்பாக்கியிருந்தது.

இப்போது ஆட்களை கொன்று விடுவோம் என்பது போல் வேகமாக வரும் பல வாகனங்கள் இவர்களது  வெள்ளை ஹெல்மட்டை தூரத்தில் கண்டதும் எதுவுமே தெரியாதது போல வேகத்தைக் குறைத்து வருவதை அறிந்தும் அறியாதது போல நிற்பார்கள்.
அதிலும் பிரைவட் பஸ்காரர்களின் அட்டகாசங்களை இலகுவில் சொல்லி விடமுடியாது.  போட்டிப் போட்டுக் கொண்டு ஓடுவதிலே வல்லவர்கள்.  சில வேளைகளிலே பயணிகளை மனிதர்களாகவே மதிப்பதில்லை. பல சந்தர்ப்பங்களில் பஸ்களிலிருந்து பாயத் தயாராக இருக்க வேண்டும்.   ஏனெனில் பஸ் நிற்காது. வேகம் கொஞ்சம் குறையும்.  பயணிகள்தான் எப்படியாவது இறங்க வேண்டும்  இல்லை இல்லை பாயவேண்டும்.

அதுமட்டுமல்ல தனது பொறுப்பிலே எத்தனை உயிர்கள் இருக்கின்றன என்பதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் மொபைலில் பேசிக்கொண்டே பஸ்ஸை வேகமாக ஓட்டும் டிரைவர்கள் நாம் அன்றாடம் காணும் காட்சிதான்.
என்றாலும் எல்லா பிரைவட் பஸ்காரர்களையுமே குறை சொல்லி விடமுடியாது.  பயணிகளுடன் அன்புடன் வினயமாக பழகுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

உண்மையிலேயே பஸ் டிரைவர்கள் செய்யும் தவறுகளை கண்டுப் பிடித்து தண்டிக்க வேண்டுமென்றால் பஸ்ஸிலேயே பிரயாணம் செய்யும் பொலிஸாரை வைக்க வேண்டும்.
அப்போதுதான் அவர்கள் பயணிகளுக்கு செய்யும் கொடுமைகளையும் கட்டுப்படுத்த முடியும். அப்படியெல்லாம் நடக்கவா போகிறது. இப்படியெல்லாம்
எண்ணிக்கொண்டே வழமையான பணிகளிலே அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது வேகமாக வந்த ஓர்   ஆட்டோ பாதையின் நடுவிலே தாண்டக் கூடாது என்று போடப்பட்டிருந்த கோட்டைத் தாண்டிக் கொண்டு மற்ற வாகனங்களுக்கு முன்னால் போக எத்தனித்தது. ஆரியபால விசிலடித்து அதனை நிறுத்தினான்.
ஆட்டோ டிரைவருக்கு தான் செய்த தவறு என்னவென்று நன்றாகத் தெரிந்தது. பொலிஸார் நிற்பதை அவன் கவனிக்கவில்லை. அவனது வாய் குளறியது. “எடு லைசன்ஸ்ஸை” என்று ஆரியபால சொன்னதும் தனக்கு மிகவும் அவசரமாக போக வேண்டியிருந்தது என்று ஏதேதோ சொன்னான். என்றாலும் ஆரியபால விடவில்லை. லைசன்ஸை கேட்டு நின்றான். ஆட்டோ டிரைவர் இறுதியில் அதை எடுத்தான். அது லைசன்ஸ் அல்ல. இதற்குமுன் இப்படியான குற்றம் செய்த காரணத்தால் அவனது லைசன்ஸை எடுத்துக் கொண்டு பொலிஸ்காரர் கொடுத்த தண்டப்பணம் கட்டுவதற்கான ரஸீது.

அதனைக் கண்டதும் ஆரிபாலவூக்கு கடும் கோபம் வந்தது.
“நீ திருந்தவே மாட்டியா..? இப்படியே குற்றம் செய்து கொண்டே இருப்பியா… உன்னையெல்லாம் ஜெயிலில் தள்ள வேண்டும்…” என்று ஏசிக் கொண்டே அவனுக்கு இன்னொரு தண்டப்பண ரஸீது கொடுக்காமல், “மறுபடி அகப்படாதே” என்று சொல்லி விரட்டிவிட்டான்.  ஆரிபாலவின் மனதின் ஒரு மூலையிலே பச்சாதாபம் தோன்றியிருக்கலாம்.  ஆரியபாலவும் தண்டப்பண ரஸீது கொடுத்தால் அது அவனுக்கு பெரும் சுமையாகப் போய்விடும் என்று நினைத்திருக்கலாம்.
“இவர்களுக்கு என்ன தண்டனைக் கொடுத்தும் இலேசில் திருத்த முடியாது” என்று சிரித்துக் கொண்டே நிஸாமும் ,ஆரியபாலவூம் பேசிக்கொண்டனர்.

அப்போது அவர்களை சற்றும் பொருட்படுத்தாமல் மிகவும் வேகமாக ஒரு வாகனம்  இல்லை அதை வாகனம் என்று சொல்லிவிட முடியாது.  அது தெருவில் ஓடும் கப்பல்.  கோடிக்கு மேல் பெறுமதி வாய்ந்தது. அவர்களைக் கடந்து கொண்டிருந்தது. பக்க வாட்டில் கண்ணாடி முழுவதும் கறுப்பினால் போர்த்தியிருந்தாலும் விண்ட்ஸ்கிரீனில் முன்னால் வாகனம் ஓட்டுபவர் மிகவும் நன்றாகத் தெரிந்தார்.
ஒரு கையால் வாகன ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டே மறு கையால் அவரது மொபைல் போனில் கதைத்துக் கொண்டே வந்தார்.  வாகனம் ஓட்டும் போது மொபைல் போனில் பேசுவது தண்டனைக்குரிய குற்றம்.
ஒரே சமயத்தில் நிஸாமும் ஆரியபாலவும் விசிலை ஊதி வாகனத்தை நிறுத்துமாறு பணித்தனர். ஆனாலும் வாகனம் நிற்கவில்லை.  என்றாலும் சிறிது முன்னால் சென்று வாகனம் நின்றது. வாகனத்தை ஓட்டியவர் இறங்கி வருவார் என்று இருவரும்  பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர் வாகனத்தைவிட்டு இறங்கவே இல்லை.  அவரது வாகன கண்ணாடியை  கீழே இறக்கி கையை வெளியே போட்டு ஒரு விரலால் இவர்களை அழைத்தார்.
நிஸாமும் ஆரியபாலவூம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  ஓர் அரசாங்க ஊழியனை அதுவும்   பொலிஸ் கான்ஸ்டபிள்ளை எவ்வளவு இளக்காரமாக அழைக்கிறான். என்ன செய்ய ? பெரும் பணக்காரன்.  திமிர் இருக்கத்தானே செய்யும்.   நிஸாம்தான் முன்னே சென்றான்.

வாகனத்தை ஓட்டி வந்தவர் கொழுத்த ஒருவர். கழுத்தில் கைகளில் தங்கம் மின்னியது.
“ஏன் நிற்பாட்டினாய் ?" என ஒருமையில் மிகவும் கடுமையான தொனியில் சிங்களத்தில் பேசினார்.

"சேர்,  நீங்கள் ஓவர் ஸ்பீட்.  அதுமட்டுமல்ல வாகனத்தை ஓட்டிக்கொண்டே மொபைல் போனில் பேசிக் கொண்டு வந்தீர்கள்.  இரண்டும் குற்றம்.  சேர் தயவுசெய்து உங்கள் லைசன்சை தாருங்கள் " மிக மிக வினயமாக நிஸாம் சிங்களத்தில் சொன்னான். அப்படிச் சொன்னதுதான் தாமதம் வாகனத்திலிருந்தவர் நிஸாமைப் பார்த்து உறுமினார்.

“ நீ யாரோடு பேசுகிறாய் என்று உனக்குத் தெரியுமா? ”  என்று கூறி சில கெட்ட வார்த்தைகளைக் கூறி ஏசினார்.
அது மட்டுமல்ல “ நாயே இதற்குப் பிறகு இந்த ஸ்டேஷனில் இருக்கமாட்டாய். உன்னை தண்ணியில்லாத காட்டுக்கு மாத்துகிறேன்" என்று சொல்லியவாறே நிஸாமின் நெஞ்சில் பொறிக்கப்பட்டிருந்த பெயரையூம், இலக்கத்தையும் ஒரு தாளில் குறித்துக் கொண்டான்.  இத்தனைக்கும் மொபைல் போனின் தொடர்பை துண்டிக்கவே இல்லை.  மறுமுனையில் அவரோடு பேசிக் கொண்டிருப்பவருக்கும் தெரியும் வண்ணம்தான் நிஸாமுக்கு ஏசிக் கொண்டிருந்தார்.
தனது தலையெழுத்தை எண்ணி தானே நொந்து கொண்டான் நிஸாம். மொபைலில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டிக்கொண்டு வந்த குற்றத்திற்காக தான்தான் அவருக்கு குற்றப் பத்திரிகை கொடுக்க வேண்டும்.  அதற்கு மாறாக குற்றவாளியே தனக்கு தண்டனை வழங்க துடித்துக் கொண்டிருந்தார்.   நிஸாமுக்கு கோபம் கோபமாக வந்தது. தனது கையாலாகாத தனத்தை எண்ணி அவன் தன்னைத்தானே நொந்து கொண்டான்.  தனது மகன் தனது கம்பியூட்டரில்   விளையாடும் கேம்மில் எதிரியை சாராமாரியாக சுட்டு வீழ்த்துவதைப் போல் மனதுக்குள் அவனைச் சுட்டி வீழ்த்தியிருந்தான் நிஸாம்.    அதற்குள் ஆரியபாலவும் பக்கத்தில் வந்துவிட்டான். நிலைமை அவனுக்குப் புரிந்தது.

“ சரி சேர்....சரி சேர்..... மன்னித்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் போங்கள் சேர்...... " என்று ஆரியபாலவே பேசி நிலைமையைச் சமாளித்தான்.

“ இந்தப் பேய்க்கு சொல்லி வை யாரோடு எப்படி நடக்க வேண்டும் என்று "
 பேசிய வேகத்திலேயே வாகனத்தை பயங்கர வேகத்தோடு செலுத்தினான். இன்னும் மொபைலில் கதைப்பதை விடவில்லை.
நிஸாமும்,  ஆரியபாலவும் முகத்தில் அசடு வழிய வாகனம் சென்ற திசையைப் பார்த்து கொண்டிருந்தனர். வாகனம் வேகமாக முன்னால் உள்ள வளைவில் சென்று மறைந்தது.
நிஸாமும் ஹேமபாலவும் எதுவும் நடக்காதது போல் வேறு யாராவது  சிக்குகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

சில நிமிடங்கள்தான் சென்றிருக்கும்.  “ டமார் " என்று பெரும் சத்தமொன்று எங்கேயோ கேட்டது.  ஏதாவது ஒரு பெரிய விபத்தாகத்தான் இருக்க வேண்டும். எதிர் திசையிலிருந்துதான் சத்தம் வந்தது.  நிஸாமும் ஆரியபாலவும் மட்டுமல்ல தெருவிலிருந்த பலரும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினர். வளைவிலே திரும்பி ஓடினர். 
அவர்கள் கண்முன்னே அவர்கள் கண்ட காட்சி அவர்களுக்கு மிரட்சியை ஏற்படுத்தியது. ஒரே களேபரம்.
அந்தக் கப்பல் கார் எதிரே வந்த ஒரு கண்டைனருடன் மோதி இருந்தது.   அந்தக் கொழுத்த மனிதன் இரத்த வெள்ளத்தில் கிடந்தான்.  மனிதன் அல்ல பிணம்தான் இரத்த வெள்ளத்தில் கிடந்தது.  கண்டைனரோடு மோதிய மாத்திரத்திலேயே அவனது உயிர் பிரிந்திருந்தது. அவனது உயிரை எடுக்க உதவிய காரணத்தால் எமன் மொபைல் போனை விட்டு வைத்திருந்தான். அது கீழே விழுந்தும் இன்னும் பேசிக்கொண்டே இருந்தது.

____________________________________________________________________________________________________________

கருத்துகள் இல்லை: