கரவை
திரு. மு. தயாளன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு இங்கிலாந்திலிருந்து
வெளிவரும் "சிறுகதை மஞ்சரி" முதலாவது இதழில் (பெப்ரவரி 2020) எனது
சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. அதற்கான கொடுப்பனவும் கிடைத்தது. மிகவும்
நன்றி கரவை திரு. மு. தயாளன் அவர்கள்.
யாருக்குப்
பாராட்டு.................!
- என். நஜ்முல் ஹுசைன்
முன்னாள்
கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சாந்தகுமார் அழைப்பிதழை வெறித்துப் பார்த்தார். உள்
மனது அவரையறியாமலேயே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது.
அழைப்பிதழில்
கொட்டை எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம்தான்
அவரை வேதனை கொள்ளச் செய்தது.
' விவசாயிக்கு
வாழ்வு கொடுத்த அமைச்சருக்குப் பாராட்டு
விழா'
தான்
கடந்த ஐந்து ஆண்டுகளாக கடுமையாக
உழைத்து அபிவிருத்திச் செய்த கமத்தொழில் வேலைத்திட்டங்களை
ஆறு மாதங்களுக்கு முன்பு தேர்தலில் வென்று
தான் அமைச்சராகவிருந்த அதே அமைச்சைப் பெற்றுக்
கொண்ட பத்மசிரி அந்த அபிவிருத்தித் திட்டத்திற்கான
வெற்றி விழாவையும் பாராட்டு விழாவையும் தனது ஜனாதிபதியின் தலைமையின்
கீழ் ஏற்பாடு செய்திருந்ததோடு அந்த
அழைப்பிதழையும் சாந்தகுமாருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
தான்
அந்த விழாவுக்குச் சென்றால் அது தனது வேதனையை
அதிகரிக்கும், அங்கே
சொல்லப்படும் பொய்கள் தனக்கு எரிச்சலைத்
தரும் என்று உணர்ந்து கொண்டதால்
அந்த விழாவுக்கு போவதில்லை என அவர் தீர்மானித்துக்
கொண்டார்.
அப்படி
இருக்கும்போதுதான் அமைச்சர் பத்மசிரியின் பிரத்தியேக செயலாளர் சாந்தகுமாருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து அமைச்சர் கதைக்க வேண்டும் என்கிறார்
என்றார். பேசத்
தேவையில்லை என நினைத்து கொண்டிருந்த
போதே பத்மசிரி லைனில் வந்து விட்டார். ' சேர்
நீங்கள் கட்டாயம் இந்த விழாவுக்கு வரவேண்டும். என்னை
வாழ்த்த வேண்டும் ' என்றார்.
ஒரு
இளைஞன் அமைச்சராக வந்திருக்கிறான். ' வந்து
வாழ்த்துங்கள்' என்று வினயமாக கேட்கிறான்.
என்ன இருந்தாலும் அந்தப் பதவியில் மூன்று
மாதங்களுக்கு முன்பு இருந்தவன். புதிய அமைச்சரின் நடவடிக்கைகளை
அவதானிப்பது தனக்கும் எதிர்கால
நடவடிக்கைகளுக்கும் நன்மை
பயக்கும் என்பதனால் சரி போவோம் என்று
தீர்மானித்தார்.
ஐந்து
வருடங்கள் அவர் அங்கம் வகித்த
கட்சிதான் ஆட்சியில் இருந்தது. தனது
அமைச்சை சாந்தகுமார் முடிந்தவரை சிறப்பாக வழி நடத்தினாலும், தனது
சக அமைச்சர்கள் எப்போதும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிக் கொண்டே
இருந்தார்கள். அரசினால்
விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
ஒரு
மாதத்திற்கு ஒரு தடவையாவது ஏதாவது
ஒரு வேலைநிறுத்தம் நடைபெற்றுக் கொண்டே இருந்தது. மேடைகளிலே வீராவேசமாக பேசுவதற்கு எதிர்க்கட்சிக்கு எப்போதும் ஏதாவதொரு தலைப்பு கிடைத்துக் கொண்டே
இருந்தது.
நடந்து
வந்த ஆட்சியின் மீது பெரும்பாலான மக்களுக்கு
வெறுப்பேற்படும் வகையிலே சம்பவங்கள் நடந்து
கொண்டு வந்தன.
ஒரு
சில நல்ல அமைச்சர்கள் இருந்த
போதும் தேர்தல் வந்த போது
வெற்றி பெற முடியாது சாந்தகுமாரின்
கட்சி படுதோல்வியைத் தழுவியது.
தாம்
ஆட்சி அமைத்தால் ஊழல்
செய்த அமைச்சர்களை சிறையில் அடைப்போம், ஜம்பர்
அணிவிப்போம், தூக்குமேடை அனுப்புவோம் என்று எதிர்க்கட்சி முழங்கி
வந்ததால் சாந்தகுமாரின் கட்சியைச் சேர்ந்த பலர் உள்ளுர
அச்சத்தோடிருந்தது சாந்தகுமாருக்குத் தெரியும். என்றாலும்
சாந்தகுமார் கறைபடியாதவர். அவர் தனது மனச்சாட்சிக்கு
விரோதமில்லாத வகையில் தனது பணியினைச்
செய்தவர். தேர்தல்
காலங்களில் சாந்தகுமார் பற்றியும் எதிர்க்கட்சியினர் வசை பாடினாலும் ஒப்பீட்டளவில்
அவை குறைவானவையே.
இளம்
அமைச்சரான பத்மசிரி பேசி அழைப்பு விடுத்த
விதத்தில் அதனைத் தட்டிக் கழிக்க
முடியாத நிலைக்கு சாந்தகுமார் தள்ளப்பட்டார். கட்டாயம்
அவரது மனைவி பிள்ளைகளோடு விழாவில்
கலந்து கொள்ளவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
என்றாலும்
அதனை அவரது மனைவி பிள்ளைகள்
ஏற்றுக் கொள்வதாயில்லை.
அது
மட்டுமல்ல அவரைக் கூட அந்த
விழாவுக்குப் போக வேண்டாம் என
அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அங்கே போனால் அங்கே
நடக்கும் நிகழ்வுகள் அவரது மனதைப் பாதிக்கும்
என்றும் சொன்னார்கள்.
' இல்லை......
..இல்லை என்ன நடந்தாலும் பரவாயில்லை. நான்
ஒரு ஜென்டில்மேனாக நடந்து கொள்ள வேண்டும். எனது
பேச்சை மதித்து நீங்களும் கட்டாயம்
வரவேண்டும் ' என்று மிகவும் கண்டிப்பாக
சொல்லிவிட்டார். அவரது இரண்டு பிள்ளைகளான
மகளும், மகனும்
அவரது மனைவியும் அவருக்கு மேலும் வேதனை தரக்
கூடாதென்பதற்காக அரை மனதுடன் ஒத்துக்
கொண்டனர்.
தேர்தல்
தோல்வி அவரை பெரும் துன்பத்திற்குள்ளாக்கி
இருந்தது அவர்களுக்குத் தெரியும். தன்னலம் பாராது சேவை
செய்த அவர் தேர்தலில் தோல்வியுற்றதால் அவர்கள்
கூட மனம் சோர்ந்துதான் இருந்தனர்.
------------------------------------------
விழா
மண்டபம் நிறைந்து வழிந்தது. முன்னாள்
அமைச்சர் சாந்தகுமாருக்கு முன் வரிசையில் ஆசனம்
ஒதுக்கப்பட்டிருந்தது. மனைவி
பிள்ளைகளுக்கு பின் வரிசையில்.
ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் அழைத்துச்
சென்று அமர வைத்தார். அதன் பிறகுதான் ஜனாதிபதி, பிரதமர்
ஆகியோர் வந்தனர். சாந்தகுமாருடன்
இருவருமே வெறும் புன்னகையுடன் கடந்து
சென்றனர். அமைச்சர்
பத்மசிரி மட்டும் அருகில் வந்து
கைலாகு கொடுத்தார். ஜனாதிபதி
பிரதமர் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் கதைப்பதிலேயே கவனம் செலுத்தினர்.
ஜனாதிபதி
பிரதமருடன் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற
உதவிய ஜப்பான் கம்பெனி தலைவரும்
மேடையில் சென்றமர்ந்தனர். சாந்தகுமார் அமைச்சராக இருந்தபோது பல முறை அந்த
ஜப்பான் கம்பெனி
தலைவர் அவரை சந்தித்துள்ளார். கால
மாற்றத்தை எண்ணி சாந்தகுமார் தனக்குள்
சிரித்துக் கொண்டார். அமைச்சர்
பத்மசிரியும் ஜனாதிபதிக்கருகில் அமர்ந்தார்.
நிகழ்வுகள்
ஆரம்பமாகின. அந்த அபிவிருத்தித் திட்டத்தின்
ஒவ்வொரு படிமுறையும் திரையில் விளக்கிக் காட்டப்பட்டது. இதன்மூலம் விவசாயிகள் அடையும் நன்மைகள் பற்றி
சிலாகித்துக் கூறப்பட்டது. பல விவசாய உற்பத்திகளின்
இறக்குமதியை எதிர்பாரத்திருந்த நாடு அதே பொருட்களை
ஏற்றுமதி செய்யும் அளவிற்கு முன்னேற்றம் கண்டது விளக்கப்பட்டது.
இதன் மூலம் நாடு பல
பில்லியன் ரூபாய்களைப் பெறும் என்றும் மேடையில்
பேசப்பட்டது. இந்தத்
திட்டம் உலக நாடுகளை நம்
பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் என்றும்
வர்ணிக்கப்பட்டது. அமைச்சர் பத்மசிரி மேடையில் மிகவும் பெருமிதத்துடன் வீற்றிருந்தார்.
அத்தனைப் புகழாரங்களையும் அவர் தனக்குரியது என்று
சூடிக் கொண்டது சாந்தகுமார் மனதை
ஏதோ செய்தது.
ஒருவர்
கஷ்டப்பட்டு செய்த அபிவிருத்தித் திட்டத்தை
தான் செய்ததாக பறை சாற்ற எப்படித்தான்
மனச்சாட்சி இடம் கொடுக்கிறதோ. சரி
சரி இதற்காக தான் ஒன்றும்
கவலைப்படக்கூடாது. கவலைப்படுவதாக
காட்டிக் கொள்ளவும் கூடாது. இதெல்லாம்
அரசியலில் சகஜம்தானே. இப்படித்தானே ஒவ்வொரு ஆட்சியிலும் நடக்கிறது. தனது
கட்சி ஆட்சி செய்த வேளையில்கூட
எத்தனை அமைச்சர்கள் முந்தைய ஆட்சியில் செய்த
திட்டங்களுக்கு தங்களது பெயரைப் பொறித்துக்
கொண்டனர். நினைவுப்
பதிகத்திலே தங்களது பெயர்களைத்தானே பதித்துக்
கொண்டனர்.
மேடையில்
ஆண் பெண் என இரண்டு
அறிவிப்பாளர்கள் மாறி மாறிப் பேசினர். 'இப்போது
இப்படியான மாபெரும் திட்டத்தை வெற்றிகரமாக
செய்து நொடிந்து போயிருந்த விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அமைச்சரைப்
பாராட்டும் நிகழ்வு.
கௌரவ
ஜனாதிபதி அவர்களை, மாண்புமிகு பிரதமர் அவர்களை, திட்டத்தை
வெற்றிகரமாக நடாத்த கரம் கொடுத்த
ஜப்பான் கம்பெனி தலைவரை மேடைக்கு
முன்னால் அழைக்கிறேன். அவர்கள்
மூவரும் மேடைக்கு முன்னால் வந்து நின்றனர்.
' இப்போது
கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பத்மசிரி அவர்களை மிகவும் கௌரவத்துடன்
முன்னால் அழைக்கிறேன் '
பத்மசிரி
மிகவும் பெருமையுடன் முன்னால் வந்தார். சபையோரின்
கரகோஷம் வானைப் பிளந்தது. முன்னாள்
அமைச்சர் சாந்தகுமாரும் தன் பங்குக்கு கைகளைத்
தட்டி வைத்தார்.
மறுபடியும்
அறிவிப்பாளர், ' நமது தாய் நாட்டுக்கு
இவ்வாறான ஒரு அபிவிருத்தித் திட்டத்தை
நடைமுறைப்படுத்திய அமைச்சரைப் பாராட்டுவது நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் கடமையாகும். ஏனெனில்
அவர் எங்களைப் பற்றி மட்டும் சிந்திக்கவில்லை. எமது
சந்ததிகளைப் பற்றியும் சிந்தித்துள்ளார். அவருக்கு
இந்த நாடு என்றும் நன்றிக்
கடன் பட்டுள்ளது. அத்தகைய பெருமைப் பெற்ற
அமைச்சரை மிகவும் கௌரவத்தோடு மேடைக்கு
அழைக்கிறேன் ' என்று சொன்னதும் அமைச்சர்
பத்மசிரி மிகவும் பெருமையோடு ஜனாதிபதிக்கருகில்
வந்து நின்றார்.
மறுபடியும்
அறிவிப்பாளர், ' சபையோரே
இந்தப் பெருந்தகையை வாழ்த்த கௌரவிக்க தயவுசெய்து
அனைவரும் எழுந்து நிற்குமாறு பணிவோடு
வேண்டுகிறேன் '
முழு
சபையும் எழுந்து நின்றது. முன்னாள் அமைச்சர் சாந்தகுமாரும் எழுந்து நின்றார்.
அறிவிப்பாளர்,
' இந்த வெற்றிகரமான அபிவிருத்தித் திட்டத்தைத் தந்த அமைச்சரை மிகுந்த
கௌரவத்துடன் அழைக்கிறேன் '
மேடையில்
நிற்கும் அமைச்சர் பத்மசிரியை அறிவிப்பாளர்கள் இன்னும் எவ்வளவு நேரத்திற்குத்தான்
வர்ணித்துக் கொண்டிருப்பார்கள். சாந்தகுமார் நினைத்துக் கொண்டார்.
மீண்டும்
அறிவிப்பாளர், ' கமத்தொழில்
அபிவிருத்தி அமைச்சர் சாந்தகுமார் அவர்களை அன்போடு மேடைக்கு
அழைக்கிறேன் '
அடடா
அறிவிப்பாளர் தவறுதலாக அமைச்சர் பத்மசிரி என்பதற்கு பதிலாக முன்பு சொல்லிச்
சொல்லி பழக்கப்பட்ட தனது
பெயரைச் சொல்லிவிட்டார். நிச்சயம் விழா முடிந்ததும் அறிவிப்பாளரது
சீட்டு கிழிந்து விடும். அப்படித்தான் ஆட்சி
மாறிய புதிதில் புதிய ஜனாதிபதியின் படத்திற்கு
பழைய ஜனாதிபதியின் பெயரைப் போட்டதனால் வேலை இடைநிறுத்தப்பட்ட பத்திரிகை
ஆசிரியரும் சாந்தகுமாரின் நினைவுக்கு வந்தார்.
என்றாலும்
அறிவிப்பாளர் மீண்டும் சொன்னார் ' முன்னாள் அமைச்சர் சாந்தகுமார் அவர்களை மிகவும் கௌரவத்துடன்
மேடைக்கு அழைக்கிறேன் '
சாந்தகுமாருக்கு
இப்போது தெரிந்தது. அறிவிப்பாளர்
தெரியாமல் சொல்லவில்லை. தெரிந்தேதான்
சொல்கிறார்.
அவரையறியாமல்
அவரது உள்ளம் நடுங்கியது.
மேடையிலிருந்து
அமைச்சர் பத்மசிரி இறங்கி வந்தார்.
' வாங்க
சேர் மேடைக்கு ...'
முன்னாள்
அமைச்சர் சாந்தகுமாருக்கு காது கேட்கவில்லை.
மீண்டும்
அழைத்தார் அமைச்சர் பத்மசிரி, ' வாங்க சேர் மேடைக்கு
'
சாந்தகுமாரின்
கைகளைப் பிடித்துக்கொண்டு அழைத்தார். சாந்தகுமார்
தன்னை அறியாமலேயே பத்மசிரியோடு மேடைக்குச் சென்றார். நடப்பதெல்லாம்
ஒரு கனவு போல் அவருக்குத்
தோன்றியது. சாந்தகுமாரை
ஜனாதிபதிக்கு அருகில் பத்மசிரி நிறுத்தினார்.
பின்பு ஒலிவாங்கி முன்னால் நின்று பேசினார்
' அதிமேதகு
ஜனாதிபதி, கௌரவ
பிரதமர், மாண்புமிகு
அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிதிகள் பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம்.
என்னை
கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சராக நியமித்ததும் அமைச்சுக்குச் சென்று அங்கே முன்பு
என்னென்ன ஊழல்கள் நடந்திருக்கின்றன என்று
கண்டு பிடிக்கச் சென்றேன். எனது
புதிய செயலாளரும் நானும் பைல் பைல்களாகத்
தேடினோம். ஒருநாள்
எனது செயலாளர் தயங்கித் தயங்கி ஏதோ சொல்ல
வந்தார். என்றாலும்
சொல்லவில்லை. அவரிடம்
ஏதோ தயக்கமிருப்பதைத் தெரிந்து கொண்ட நான் ' எதுவென்றாலும்
பரவாயில்லை சொல்லுங்கள் ' என்றேன். ' சொல்லுவேன்
சேர். சேர் கோபப்படக்கூடாது ' என்று
பீடிகைப் போட்டார். ' பரவாயில்லை சொல்லுங்கள் ' என்று சொன்ன பின்புதான்
அவர் சொன்னார் ' மிக
ஆழமாக எல்லாவற்றையும் பார்த்த பின்பு விளங்குகிறது
முன்னாள் அமைச்சர் சாந்தகுமார் எதுவிதமான ஊழலிலும் ஈடுபட்டிருக்கவில்லை என்பது மட்டுமல்ல அவர்
எங்கள் நாட்டுக்கு மாபெரும் சேவை செய்துள்ளார்.
ஐந்து வருட காலத்தில் இப்படியான
ஒரு சேவையை எந்த அமைச்சராலும்
செய்ய முடியாது. ' என்றார். எனக்குக்
கூட அவ்வாறான உணர்வு ஏற்பட்டிருந்தது எனக்குத்
தெரிந்தது. அமைச்சில்
பணிபுரிந்த அனைத்து பழைய ஊழியர்களும்
அவர் மீது அளவு கடந்த
மதிப்பும் அபிமானமும் வைத்திருந்தையும் நான் தெரிந்துதான் வைத்திருந்தேன்.
அவரின் கீழ் நடந்த அபிவிருத்தித்
திட்டங்களை நேரடியாகச் நாங்கள் பார்வையிட்டோம்.
நான் உண்மையிலேயே மலைத்துப் போனேன். அவரது
சேவையைப் பார்த்து நாங்கள் பிரமித்துப் போனோம். சாந்தகுமார்
போன்றவர்கள் நம் நாட்டின் அமைச்சர்களாக
இருப்பார்களேயானால் நமது நாடும் விரைவில்
செல்வச் செழிப்பான நாடாக மாறும் என்பதில்
எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. உண்மையிலேயே நான் ஊழல்களைக் கண்டு
பிடித்து அமைச்சர் சாந்தகுமார் அவர்களை கேவலப்படுத்த நினைத்தேன். ஆனால்
அவரோ தனது அபிவிருத்தித் திட்டத்தில் தொண்ணூற்றியொன்பது
வீதத்தை பூரணப்படுத்தியிருந்தார். இதனைப்
பூரணப்படுத்த எனக்கு சிறிதளவே வேலை
இருந்தது. உண்மையைச்
சொல்லப்போனால் நான் எதுவுமே செய்யவில்லை. அரசியல்வாதிகள்
ஆட்சிக்கு வருவது நாங்கள்
மக்களுக்காக எங்கள் வாழ்க்கையை தியாகம்
செய்து சேவையாற்றுவோம் என்று சொல்லித்தான்.
ஆனால் எத்தனை அரசியல்வாதிகள் அப்படிச்
செய்கிறார்களோ எனக்குத் தெரியாது. ஆனால்
சாந்தகுமார் சேர் அவர்களை தனது
நேர காலத்தை மக்களுக்காக தியாகம்
செய்து சேவையாற்றியிருப்பதை நான் கண்டு கொண்டேன்.
இவ்வாறான ஒரு மாபெரும் சேவை
செய்த தியாகியின் அபிவிருத்தித் திட்டத்திற்கு லேபல் ஒட்டிக் கொள்ள
எனது மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை.
எமது நாடே இவரை கௌரவிக்கவேண்டும்,
கொண்டாட வேண்டும் என ஆசைப்பட்டேன்.
இப்படிச் செய்தால்தான் சேவை மனப்பான்மையுள்ள அரசியல்வாதிகள்
உருவாகுவார்கள் என நினைத்தேன்.
எனது திட்டத்தை எமது ஜனாதிபதி பிரதமரிடம்
சொன்னேன். நான்
சொன்ன காரணங்களை அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்
கொண்டார்கள். என்றாலும்
எனது கட்சி உறுப்பினர்கள் பலர்
இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். நான்
எனது தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதாக
கூறினர். என்றாலும்
விடாமுயற்சியுடன் முயன்று அவர்களின் மனங்களை
மாற்றினேன்.
அமைச்சர்
சாந்தகுமார் அவர்களே இன்று நடக்கும்
விழா எமது அரசின் மனப்பூர்வமான
விழா. இங்கே
வாழ்த்திப் பேசப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் உங்களுக்குரியது.
அமைச்சர் அமைச்சர் என்று அவர்கள் புகழ்ந்ததெல்லாம்
உங்களைத்தான் '
கொஞ்சம்
வயதாகியிருந்த சாந்தகுமார் இப்போதுதான் தான் வயதாகியிருப்பதை உணர்ந்தார். நடப்பவைகளைப்
பார்த்து அவரது உடல் நடுங்கிக்
கொண்டிருந்தது.
முழு
சபையுமே எழுந்து நின்று கைகளைத்
தட்டிக் கொண்டிருந்தது. சாந்தகுமாரின்
மனைவியும் பிள்ளைகளும் மலைத்துப் போயிருந்தனர்.
………………………………………………………………………………………………………………………