தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !
- என். நஜ்முல் ஹுசைன்
கத்தாரிலிருந்து அப்பாதான் வீடியோ கோலில் பேசுகிறார்.
கனடா டொரொன்டோவிலிருக்கும் மனோகரன் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே வைத்து விட்டு கைபேசியை கையில் எடுத்தான்.
" இயஸ் டேட். ஹவ் ஆ யூ ? ஹவ் இஸ் கத்தார் ? (Yes Dad, how are you ? How is Qatar ?)" என்று மனோகரன் மகிழ்ச்சியோடு கேள்விகளை அடுக்கினான்.
அப்பாவின் உருவம் மட்டுமே கைபேசியில் தெரிந்தது. அவரது பேச்சு வரவில்லை.
"டேட்.... " என்று மீண்டும் அழைத்த போது மறுமுனையிலிருந்து அப்பா பேசினார்,
"மனோ, தமிழில் பேசப்பா, தமிழில் பேசு" என்றார். அவரது குரல் தழுதழுத்தது.
"டேட் வட் ஆ யூ டெல்லிங்? (Dad what are you telling ?)" என்று மனோகரன் ஆங்கிலத்தில்தான் பேசினான்.
"மனோ நான் சொல்றது விளங்கலையா ? இதுக்கப்புறம் என்னோடு தமிழ்ல பேசுறதென்னா பேசு. இல்லாட்டி பேசாத "
அப்பாவின் குரலில் கடுமை தெரிந்தது.
தமிழில் பேசவா ? நானா ? யோசித்தான் மனோகரன்.
அப்பாவுக்கு என்ன நடந்தது ? அப்பா சோமசுந்தரம் இலங்கையில் பெரிய இலக்கியப் பேச்சாளர்தான். அறிஞர் சோமசுந்தரம் என்றால் இலக்கிய உலகில் தெரியாதவர்கள் யாருமில்லை. இலங்கையில் மட்டுமல்ல தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அப்பாவின் புகழ் பரவித்தான் இருந்தது. அவரது இலக்கியப் பேச்சைக் கேட்க மிகவும் பெரும் தொகையானோர் கூடுவர். அப்பாவுடைய இலக்கிய உரைகள் யூடியூப்பிலெல்லாம் மிகவும் பிரசித்தம். அப்பாவுக்கு தமிழ் எப்படித் தெரியுமோ அதே அளவு ஆங்கிலமும் தெரியும். வெள்ளைக்காரன் போல் ஆங்கிலம் பேசுகிறார் என்று அவரைப் பாராட்டாதோர் யாருமில்லை.
அப்பா மனோகரனுடன் எப்போதுமே ஆங்கிலத்தில்தான் பேசுவார்.
மனோகரன் கனடாவுக்கு வந்து இப்போது பதினேழு வருடங்கள். ஊரிலிருந்த போது தமிழில் மிகவும் நன்றாகப் பேசிய மனோகரன் கனடா வந்த இந்த பதினேழு வருடங்களில் தமிழை விட்டும் மிகவும் தூரமாகிவிட்டான். அவனைச் சூழவுள்ளோர் அனைவருமே ஆங்கிலத்திலும் வேற்று மொழிகளிலும் பேசக் கூடியவர்களே. அதனால் தமிழில் பேச வேண்டிய தேவை அவனுக்கு இருக்கவில்லை. இப்போது அவன் சிந்திப்பது கூட ஆங்கிலத்தில்தான். அவனது மனைவியும் இலங்கையைச் சேர்ந்தவராக இருந்த போதும் அவளும் கூட ஆங்கிலத்தில் அத்துப்படி. அதனால் அவர்களது ஒன்பது வயது மகனும், ஏழு வயது மகளும் கூட வீட்டில் ஆங்கிலத்திலேயே கதைத்தனர். மேலதிகமாக பிரெஞ்ச், ஜப்பானிய மொழி போன்றவற்றையும் சரளமாக பேசினர்.
கத்தாருக்குக் கூட அப்பா இலக்கிய சொற்பொழிவுக்காகத்தான் சென்றிருந்தார். அங்கிருந்த தமிழ்ச் சங்கம் அவரை அழைத்திருந்தது.
அடுத்த வருடம் கனடாவுக்கும் வர இருக்கிறார். இங்கும் கூட அப்பாவின் சொற்பொழிவுகள் பல இடங்களில் நடக்கும்.
எப்போதுமே மனோவுடனும், மருமகளுடனும், பேரப் பிள்ளைகளுடனும் மிடுக்கான ஆங்கிலத்தில் பேசும் அப்பா,
" மனோ தமிழில் கதைக்கிறதென்றால் கதை. இல்லாட்டி கதைக்காதே " என்று சொல்வது மிகவும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது.
"அப்பா..." இத்தனை நேரம் 'டேட்' என்று அழைத்த மனோகரன் இப்போதுதான் "அப்பா" என்று அழைத்தான். என்றாலும்கூட அதற்கு மேல் அவனது வாயிலிருந்து வார்த்தைகள் எதுவும் வரவில்லை.
"அப்பா டோன்ட் கெட் எங்க்ரி. நெக்ஸ்ட் டைம் ஐ ல் டோக் டு யூ இன் டமில் (அப்பா கோபப்படாதீர்கள் அடுத்த முறை தமிழில் பேசுகிறேன்)" என்று தயங்கித் தயங்கி ஆங்கிலத்தில் சொன்னான்.
அவனுக்குத் தெரியும் அவனது அப்பா மிகவும் அன்பானவர். இதுவரை ஒரே மகனான அவனை எப்போதுமே கடிந்து பேசியதில்லை. இதுவரை காலம் இல்லாமல் இன்று இப்படிப் பேசுகிறார் என்றால் அவரது மனதைப் பாதிக்கும் ஏதாவது நடந்திருக்க வேண்டும்.
"அடுத்த முற பேசும் போது என்னோட தமிழ்ல பேசு. அப்படி பேசினாதான் நான் பேசுவேன் " என்று சொல்லிவிட்டு அப்பா தொடர்பைத் துண்டித்தார்.
அப்பா போனை வைத்ததும் மனோகரன் தமிழில் சில வார்த்தைகளை பேச முயற்சி செய்தான். அது மிகவுமே சிரமமாக இருந்தது.
'அடடா இலங்கையில் எவ்வளவு அழகாக பேசிய தமிழ். என்ன நடந்தது இப்போது ?' தனக்குத் தானே
கேட்டுக் கொண்டான் மனோகரன்.
அப்பாவிடம் வந்த இந்த திடீர் மாற்றத்தின் காரணமென்ன ? இந்தக் கேள்வியும் மனோகரனை குடைந்துக் கொண்டே இருந்தது ?
நான்கு நாட்களுக்குப் பிறகு மனோகரனின் அப்பா மீண்டும் பேசினார்.
இப்போது அவர் இலங்கையிலிருந்தார்.
"அப்பா....... சொல்லுங்க......." மிகவும் தட்டுத் தடுமாறி மனோகரன் தமிழில் பேசினான்.
"மனோ நான் தமிழ்ல பேசுறது விளங்குதுதானே ?"
"ஆம் அப்பா... ஆமா அப்பா... " மனோகரனின் வாயிலிருந்து சொற்கள் தடுக்கிக் கொண்டுதான் வந்தன. என்றாலும் அவனுக்குத் தமிழ் விளங்கியது. சிரமத்தோடு பேசவும் முடிந்தது.
"அப்பா ஏன் தீடீருன்னு இப்படி பேசுறன் என்னு பாக்குறியா அதுக்கு காரணம் இருக்கு .....:" அப்பா பேசிக் கொண்டு போனார். மனோகரன் காதைத் தீட்டிக் கொண்டு ஒவ்வொரு சொல்லையும் கேட்டுக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்கும் தமிழ். ஏதாவது சொற்களுக்கு அர்த்தம் புரியாமல் போய் விடக் கூடாதே.
"நான் கத்தாருக்கு போய் தமிழ் சங்கத்துல மூனு நாள் தொடர்ந்து பேசினேன். எனது பேச்ச கேட்க நிறைய கூட்டம் வந்திருந்தது. நிறைய இந்திய தமிழர்களும் இலங்கை தமிழர்களும் வந்திருந்தாங்க. இந்த மூனு நாள் பேச்சிலயும் ஒரு பையன அவதானிச்சன். மிகவும் ரசிச்சு எனது பேச்ச கேட்டுக்கொண்டிருந்தான். எனது பேச்சுக்கிடையே பலமுறை நான் அவனப் பார்த்தேன். அவனப் பார்த்தா ஒரு கத்தார் அரேபிய பையனப் போல இருந்தான். அவன் எப்படி எனது பேச்ச இப்படி ரசிக்கிறான் என்ற சிந்தன எனது பேச்சு முழுவதும் எனக்குள்ள ஓடிக் கொண்டே இருந்தது.
நிகழ்ச்சி முடிஞ்சதும் பலர் என் அருகே வந்து கைகூப்பி என்னைப் பாராட்டிப் பேசினர். எல்லோரையும் மதித்து நான் பேசிக் கொண்டிருந்தாலும் எனது கண்கள் அந்த வாலிபனைத் தேடிக் கொண்டிருந்தது. நான் நினைத்தது போலவே என் அருகே வந்த அந்த வாலிபன் அவனது நெஞ்சிலே கை வைத்து என்னுடன் பேசினான்
"ஐயா நா உங்க பெரிய ரசிகன். யூடியூபில் உங்கள் பேச்சையெல்லாம் விடாமல் கேட்பேன்" அழகிய தமிழில் அவன் பேசிய வார்த்தைகளைக் கேட்டு எனது கண்கள் அகல விரிந்தன.
நான் அவனது கைகளைப் பிடித்துக் கொண்டேன்,
"தம்பி நீங்க யாரு? உங்க பெயர் என்ன ? "
"என்ற பெயர் சாபித் அஹமத். நான் இங்க கத்தார்தான்"
"அடடா கத்தாரா ?" ஆச்சரியத்தோடு கேட்டேன்.
"ஆமாங்க. நான் பிறந்து வளர்ந்தது, பாடசாலைக்கு போனது எல்லாமே கத்தார்லதான்"
எனக்கு ஆச்சரியம் தாங்க முடியல்ல.
"கத்தாரா ? இவ்வளவு அழகா தமிழ் பேசுறீங்களே எப்படி ? " ஆவலோடு கேட்டேன்.
"அது எங்க உம்மா, வாப்பா இலங்கைதான். வாப்பா இங்க பெரிய அமெரிக்க நிறுவனத்துல மனேஜர். உம்மா பிரபல பாடசாலைல இங்கிலிஷ் டீச்சர்"
ஆவலோடு எனது பேச்சைக் கேட்க வந்தவனின் பேச்சைக் கேட்க நான் ஆவலாக இருந்தேன்.
"நான் இப்படி தமிழ் பேசுவதற்கு எங்க உம்மாதான் காரணம். எங்க உம்மா திருமணம் முடிச்ச உடனே இங்க வந்துட்டாங்க. எங்க உம்மாவும் வாப்பாவும் இங்கிலிஷ்லதான் பேசிக் கொள்ளுவாங்க. ஆனா நான் அவங்களுக்கு மூத்த பையனா பொறந்த போது எங்கட வாப்பாவுக்கு ஒரு கண்டிஷன் போட்டாங்க.
எங்க வீட்டில இதுக்குப் பிறகு நாங்க தமிழ்லதான் பேசனும். ஏன் இப்படி ஒரு திடீர் முடிவுன்னு வாப்பா கேட்ட போது உம்மா சொன்னாங்க
நாங்கெல்லாம் தமிழ்ல படிச்சுத்தான் இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம். அதுக்குப் பிறகு வேறு மொழி படிச்சாலும் அத எல்லாம் எங்களுக்கு புரிய வச்சது தமிழ்தான். எங்கட மார்க்கத்த கூட நாங்க தெரிஞ்சு கொண்டது தமிழாலதான். அதுதானே எங்கட தாய் மொழி. அது எங்கட முன்னேற்றத்தின் ஏணி. அத நாங்க வீட்டுல பேசாம போனா எங்கட பிள்ளைகளுக்கு தமிழ் என்ற மொழியே தெரியாம போகும். இந்த நாட்டுல அவங்க என்னென்னமோ படிப்பாங்க. ஆனா அவங்களுக்கு நாங்கதான் தமிழ கற்றுக் கொடுக்கோனும்.
நாங்க இலங்கைக்கு போனா அங்கவுள்ள எங்கட உம்மா வாப்பாவுக்கு, உறவினர்களுக்கு பெருசா இங்கிலீஷ் விளங்காது. எங்கட பிள்ளைகள் அங்க போய் இங்கிலீஷ்லயே பேசிக் கொண்டிருந்தா அவங்க எப்படி இவங்களோட மனம் விட்டுப் பேசுவாங்க. உண்மையான பாசத்த காட்டுவாங்க. எங்கட உம்மா வாப்பாக்கும் எங்கட பிள்ளைகளுக்கும் இடையில எந்த இடைவெளியும் இருக்கக் கூடாது. எங்கட தாய் மொழிய எப்போதும் எங்கட பிள்ளைகள் மறக்கவும் கூடாது. என்று சொல்லி எங்கட உம்மா வாப்பா வீட்டில தமிழ்லதான் பேசுவாங்க. அதுமட்டுமல்ல தமிழும் படிச்சுத் தந்தாங்க. நான் மட்டுமில்ல என்ட தம்பி, தங்கச்சி எல்லாமே நல்லா தமிழ் பேசுவாங்க. அதோட இங்க நாங்க இங்கிலிஷ் அரபு மொழிகளையும் படிச்சிருக்கிறோம். மலையாளமும், இந்தியும் பேசுவோம் " என்று அந்த வாலிபன் தனது வரலாறை சொல்லிக் கொண்டிருந்த போது எனது தலை சுற்றியது.
இங்க நான் மட்டும் தமிழ் பேச்சாளரா இருந்து கொண்டு என்ட பிள்ளைகள தமிழ்ல பேசக் கூட முடியாம ஆக்கிட்டனே என்று நான் அடைஞ்ச கவலைகக்கு அளவேயில்ல.
எங்கோ உள்ள ஒரு தாய், தாய் மொழிய பத்தி எனக்கு பாடம் நடத்தியிருக்கா. எனது மனச் சாட்சி என்ன குத்தி குதறிக் கொண்டிருக்குது.
அடே மகனே மனோ நீ இனிமே தமிழ்லயே பேசு. என்ட பேரப் பிள்ளைகளுக்கும் தமிழ படிச்சுக் கொடு.
நானும் அம்மாவும் அடுத்த முற கனடாவுக்கு வரும்போது என்ட பேரப் பிள்ளைகளோட தமிழ்லதான் கொஞ்சி விளையாடணும் "
கரகரத்த குரலில் அப்பா பேசினார்
அந்த சத்தியத்தை முழுதும் உணர்ந்து கொண்ட மனோகரன்,
"நிச்சயமா அப்பா நிச்சயமா " என்று கண்ணீர் மல்க கூறிய போது அதில் நம்பிக்கையின் வெளிச்சம் தெரிந்தது.
(ஞானம் - மார்ச், 2023)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக