எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

மாட்டிக்கொண்டான் - சிறுகதை

 

மாட்டிக்கொண்டான்


    - என். நஜ்முல் ஹுசைன்


முபாரக் ஒரு காலமும் இப்படி நடுங்கியதில்லை.  அச்சம் அவன் உள்ளத்தை மட்டுமல்ல உடம்பையே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. தான் கைது செய்யப்பட்டால் தனக்கு என்ன நிலைமையாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே அவனால் முடியாமலிருந்தது.


மீடியாக்கள் முண்டியடித்துக் கொண்டு அவனது வீட்டு வாசலில் கெமராக்களை தூக்கிக் கொண்டு வருவது போன்றே அவனது மனக்கண் முன் தோன்றிக் கொண்டிருந்தது. அந்த மாயத் தோற்றத்திலிருந்து அவனால் வெளியே வரவே முடியவில்லை.  அவனது கைதுக்குப் பிறகு மீடியாக்கள் அவனது குடும்பத்தை என்ன பாடுபடுத்தும் என்று அவனால் யோசிக்கவே முடியாதிருந்தது.


தொலைக்காட்சியைப் பார்க்கவே முடியவில்லை. சிங்கள செய்திகளிலெல்லாம் இவ்வாறான செய்திகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தன. அதுவும் வேதனையைத் தந்து கொண்டிருந்தது.


அந்தக் காட்சிகளைப் பார்க்கும் போதே குலை நடுங்கிக் கொண்டிருந்தது. இந்த வரிசையில் தானும் வந்து விடுவேனோ என்று நினைப்பே அவனது தலையில் இடி விழுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.


பொலிஸாரும் இராணுவத்தினருமாக இணைந்து வீடு வீடாக தேடுதல் நடத்திக் கொண்டிருந்தார்கள்.  தனது வீட்டுக்கு வந்தால் நிச்சயமாக அவர்கள் கண்டுப் பிடித்து விடுவார்கள்.


அவர்களது தேடுதலுக்குப் பயந்து முபாரக் எத்தனைப் பெறுமதியான நூல்களை எரித்துப் போட்டான் . அவன் மட்டுமல்ல அவனைப் போன்ற பலர் இதனைத்தான் செய்தார்கள். வருபவர்களுக்கு அரபு மொழியைப் பார்த்தாலே அது தீவிரவாதிகளின் நூல்கள் போலல்லவா தெரிகிறது.  அதனால் பலர் குர்ஆனைக்கூட எப்படி மறைப்பது என்று திண்டாடிக் கொண்டிருந்தார்கள்.  வீட்டில் அரபு கிதாபுகளையும் குர்ஆன்களையும் வைத்திருந்த ஒரு சிலரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று வந்த செய்திகளும் முபாரக்கின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தன.  "அல்ஹசனாத் " சஞ்சிகையை வைத்திருந்த பலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல்களும் அவனை குழப்பமடைய செய்திருந்தன. அவனது மனைவியும் அவனை விடாது நச்சரித்துக் கொண்டே இருந்ததால், தான் இஸ்லாமிய அறிவினைப் பெருக்கிக் கொண்ட பல பொக்கிஷங்களைத் தடயமின்றி  எரித்துப் போட்டான். அப்போது அவனது ஈமானிய இதயம் பட்ட பாட்டை வரிகளில் உள்ளடக்கிவிட முடியாது.


ஆனால் இப்போதுள்ள இக்கட்டிலிருந்து எப்படித் தப்புவதென்றுதான் புரியாமல் தவித்தான்.  இதிலென்றால் எப்படியும் தான் மாட்டிக் கொள்வேன் என்று அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. பொலிஸார் வந்து அவனது கைகளில் விலங்கு மாட்டி அவனை இழுத்துக் கொண்டுச் செல்லும் காட்சி அவனது மனக் கண் முன் தோன்றிக் கொண்டேயிருந்தன.


கண்டியில் அவனுக்குத் தெரிந்த உறவினர் ஒருவரையும் கைது செய்து அடைத்து வைத்து சில மாதங்களுக்குப் பிறகுதான் வெளியில் விட்டிருந்தார்கள்.  இத்தனைக்கும் அவர் செய்த குற்றம் - அவரது தேநீர் வைக்கும் மேசையில் போட்டிருந்த விரிப்பு. அது இராணுவ சீருடைக்கு ஒத்ததாக இருந்ததாம். அதனைக் காரணம் காட்டியே அவரைக் கைது செய்திருந்தார்கள். தொலைக்காட்சி செய்திகளில் தீவிரவாதிகளுடன் அவருக்கு தொடர்பிருக்கலாம் என்றும் வாய் கூசாமல் கூறப்பட்டன.  அவர் ஓர் அப்பாவி என்பது முபாரக்குக்கு நன்கு தெரியும். இருந்தாலும் என்ன செய்ய பாதுகாப்புப் படையினர் எங்களையெல்லாம் சந்தேகக் கண் கொண்டுதானே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


முபாரக் எந்தத் தவறுமே செய்யவில்லை. இருந்தாலும் இப்போது அவனிடம் இருக்கும் சான்று அவர்களுக்கு முபாரக்கை சந்தேகத்திற்குரியவனாகத்தானே காட்டும்.


அதை நினைத்து நினைத்துத்தான் இரவும் பகலும் அச்சத்துடனும் கவலையுடனும் இருந்தான்.


அந்த அச்சத்துடனும் கவலைக்கும் மூல காரணமாக இருந்தது அவனிடமிருந்த அந்த "கத்திகள்தான்".


வீடுகளிலிருந்த ஓரிரு கத்திகளுக்காகக் கூட சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே.   முபாரக்கிடம் கைவசம் இருப்பதோ  32  கத்திகள்.


இது சில வருடங்களுக்கு முன் அவன் செய்த வியாபாரத்தில் மிஞ்சியவை.  இப்போது அதற்கான ஆதாரங்கள் ஒன்றும் அவனிடமில்லை.


அதுதான் என்ன செய்வதென்று தெரியாமல் ஒரே குழப்பமாக இருந்தான் முபாரக்.  அவற்றையெல்லாம் ஒரு மூலையிலே போட்டு வைத்திருந்தான். அவை வெளிநாட்டுத் தயாரிப்பு என்ற காரணத்தால் ஆண்டுகள் பல கடந்தும் பளபளப்பாகத்தான் இருந்தன.  முபாரக் அவை தன்னிடமிருப்பதை மறந்தே போயிருந்தான். இந்தப் பிரச்சினைத் தோன்றிய பின்னர்தான் ஸ்டோர் அறையிலிருந்து அவற்றை வெளியில் எடுத்தான். அதிலிருந்து ஒரு சில கத்திகளையாவது எடுத்துச் செல்லுமாறு பல நண்பர்களிடம் கேட்டுப் பார்த்து விட்டான். என்றாலும் ஒருவர் கூட அதற்கு இணங்கவில்லை.  தங்களுக்கு இப்போதைக்கு கத்தி வேண்டாம் என்று கூறி விட்டார்கள்.


ஆனால் அதற்காக யாரையுமே குறை சொல்ல முடியாது. யாருமே தேவையற்ற சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை.


எல்லா கத்திகளையும் குழி தோண்டிப் புதைக்கலாம் என்று பார்த்தால் அதுவும் பிரச்சினையைப் பெரிதாக்கிவிடும். வீடுகளுக்கு மோப்ப நாய்களையும் அழைத்து வந்து தேடுகிறார்களாம்.


இதையெல்லாம் நினைத்து நினைத்தே முபாரக் பித்துப் பிடித்தவன் போல இருந்தான்.  அவனது மனைவி பரீதா கூட சமையல் செய்வதற்கும் திராணியற்று இருந்தாள். அவர்களது பிள்ளைகள் இது பற்றி எதுவுமே தெரியாமல் அவர்கள் பாட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.


இன்று முபாரக் வசித்த பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதலை ஆரம்பித்திருந்தனர் என்ற செய்தி

அவனுக்கு இன்னும் கலக்கத்தை ஏற்படுத்தியது.


"முபாரக் அய்யே, முபாரக் அய்யே" யாரோ வாசலிலிருந்து பலமுறை அழைத்துக் கொண்டிருந்தது முபாரக்கின் காதுகளில் விழவேயில்லை.


முபாரக்கின் மனைவிதான் உள்ளேயிருந்து வந்து எட்டிப் பார்த்தாள். அது பக்கத்து வீட்டு சுனில் அய்யா.


அவளுக்கும் அச்சம் பிடித்துக் கொண்டது. நடுக்கத்துடன், "எய் அய்யே ?" (ஏன் அண்ணா ?) என்று கேட்டாள்.


உள்ளுக்கு வரவா என்று கேட்டுக் கொண்டே அனுமதிக்கு காத்திருக்காமல் உள்ளே வந்தான்.


"முபாரக், முபாரக் அந்தா பொலிஸெல்லாம் வாராங்க"


சுனில்  முபாரக்கின் அச்சத்தை அதிகரித்தான். முபாரக் விழிகளை விழித்து சுனிலைப்  பார்த்தான்


"ஒங்கட கத்திய எல்லாம் என்ன செஞ்சீங்க ?" சுனில்  கேட்டான்.


முபாரக்கிடம் இருக்கும் கத்திகளைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். பக்கத்து வீடென்றதால் சுனிலின் மனைவி மெனிக்கே முபாரக்கின் வீட்டிற்குள்ளே எல்லாம் சுதந்திரமாக நடமாடுவாள்.  அவள்தான் கத்திகளைப் பற்றியும் முபாரக்கும், மனைவியும் பயந்து நடுங்கிக் கொண்டிருப்பது பற்றியும் சொல்லியிருப்பாள்.


"எல்லாம் அப்படித்தான் இருக்கி" முபாரக் ஈனக் குரலில் சொன்னான்.


"அவங்க வந்தா ஒங்கள எப்படியும் புடிச்சுருவாங்களே" என்று சொல்லிக் கொண்டே சுனில்  வெளியே ஓடினான்.


முபாரக் ஆடாமல் அசையாமல் இருந்தான்.


இப்போது மீண்டும் சுனிலின்  குரல் கேட்டது.


"முபாரக்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான்.


"நங்கி கத்தியெல்லாம் எங்க ? " என்று பதறிக் கொண்டு கேட்டான்.


எதுவுமே சொல்ல முடியாத நிலையில் பரீதா கத்திகள் இருக்கும் இடத்தைக் கைக் காட்டினாள்.


ஓடிப் போய் எல்லா கத்திகளையும் சுனில்  அள்ளி எடுத்தான். ஒரே முறையில் அவற்றையெல்லாம் அவனால் எடுக்க முடியவில்லை. எல்லாமே பெரிய கத்திகள்.


மூன்று முறை கத்திகளை தூக்கிக் கொண்டு வெளியே போனான்.


முபாரக்குக்கும், மனைவி பரீதாவுக்கும் சுனில்  என்ன செய்கிறான் என்றே விளங்கவில்லை. வெளியே போய் பார்த்தார்கள்.


சுனில்  தான் அன்றாடம் மரக்கறி விற்கும் தனது தள்ளு வண்டியிலே கத்திகளைப் பரப்பி வைத்திருந்தான்


முபாரக்கையும், பரீதாவையும் பார்த்து அவன் சொன்னான்,

"பய வெண்ட எபா (பயப்பட வேண்டாம்)" என்று சொல்லி விட்டு தெருவுக்குப் போனதும் கூவ ஆரம்பித்தான்,


"பிஹிய, பிஹிய லாபெட்ட பிஹிய (கத்தி, கத்தி மலிவு விலைக்கு கத்தி" என்று முபாரக் வசித்த அந்தத் தெருவைத் தாண்டிச் சென்றான்.


அவன் அந்தத் தெருவைத் தாண்டிச் செல்லவும் அவனுக்கு முன்னால் பொலிஸ் ஜீப்பொன்று வரவும் சரியாக இருந்தது.


ஜீப்பின் முன் சீட்டில் அந்தப் பகுதியின் ஓ.ஐ.சி.தான் அமர்ந்திருந்தார். ஜீப் நிறைய பொலிஸ்காரர்கள்.


சுனிலின் தள்ளு வண்டியைக்  கண்டதும் கையை நீட்டி அதை நிறுத்தச் சொன்னார்.


கொஞ்சம் நடுக்கத்தோடு சுனில் வண்டியை நிற்பாட்டினான்.  ஓ.ஐ.சி. அவனை முன்னே வரச் சொல்லி சைகை காட்டினார்.


முன்னே போன சுனிலிடம் பெயர் என்ன என்று கேட்டார். பெயரைச் சொன்னதும் . அவனிடமிருந்த கத்திகளில் ஒன்றை எடுத்து வருமாறு

பணித்தார். கத்திகள் ஒன்றை எடுத்துச் சென்றதும் அதனைக் கையில் வாங்கி திருப்பித் திருப்பிப் பார்த்தார்.


நண்பனுக்கு உதவி செய்யப் போய் தான் மாட்டிக் கொண்டேனே என்று சுனில் நினைத்துக் கொண்டிருந்த போதே,


"மேக்க கீயத பங் ? (இது எவ்வளவு ?) " என்ற ஓ.ஐ.சீ. கேட்டதுமே சுனில் தன்னை சுதாகரித்துக் கொண்டான்.


"இது 1500/- ரூபா மஹத்தயா "  என்றான்.


"எச்சர காணத ? (அவ்வளவு விலையா ?)

.

" சேர் இது இத்தாலி கத்தி சேர்" . மறுபடியும்  ஓ.ஐ.சி. கத்தியை திருப்பித் திருப்பிப் பார்த்து விட்டு சுனிலிடம் கொடுத்து விட்டு தனது பரிவாரங்களோடு முன்னே போனார்.


சுனில் இன்னும் உற்சாகமாக, "பிஹிய, பிஹிய " என்று கத்திக் கொண்டு எதிர்புறமாகப் போனான்.


முஸ்லிம்களின் வீடுகளில் தேடுதல் நடத்துவதற்காக பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் சென்று கொண்டிருந்தார்கள்.


எந்தவிதமான கலக்கமுமின்றி முபாரக் தனது பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். முபாரக்கின் மனைவி பரீதா இன்றாவது முபாரக்குக்கு வாய்க்கு ருசியாக   சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று சமையலிலே தீவிரமாக இருந்தாள்.


இனவாதம் தலை விரித்தாடிக் கொண்டிருந்த அந்த வேளையில் அதற்கு அடிமைப்பட்டு விடாமல் பழைய அதே நேசத்தில் எவ்வித குறையும் வைக்காமல் சுனில் செய்த அந்த உதவியை வாழ்க்கையில் என்றென்றும் முபாரக்கினால் மறக்கவே முடியாது. அதற்கு கைம்மாறாய் சுனிலின் படத்தை முபாரக் இதயத்தில் மாட்டிக் கொண்டான்.


.........................................

(ஞானம்  - செப்டெம்பர் 2023)

கருத்துகள் இல்லை: