எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 7 ஆகஸ்ட், 2024

படித்த மாணவன் - சிறுகதை

 04/08/2024 "தமிழன் வாரவெளியீட்டில்" இடம்பெற்ற எனது சிறுகதை -


படித்த மாணவன் !


        -                                                  என். நஜ்முல் ஹுசைன்


சரவணன் ஆசிரியருக்கு தலை சுற்றியது.  குமரன் இப்படி கை விரிப்பான் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. எத்தனை நம்பிக்கையோடு அவர் வந்தார். சென்றவுடன் கட்டி அணைப்பான்; சாப்பிடச் சொல்வான்;  சுகம் விசாரிப்பான் என்றெல்லாம் கனவு கண்டு கொண்டு வந்தவருக்கு, அவன் தண்ணீர் கூட கொடுக்கவில்லை. அவரோடு பேசிய வார்த்தைகள் ஒன்றிரண்டுதான்.  அவன் பேசியதெல்லாம் கைபேசியோடுதான். இப்படி ஏமாற்றமாக போய்விட்டதே.


குமரன் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவன். பாடசாலைக்கு வருவதற்கு ஒழுங்கான ஆடைகள் கூட அவனிடம் இருக்கவில்லை. என்றாலும் படிப்பில் கெட்டிக்காரன். சரவணன் ஆசிரியர் அவனை அடையாளம் கண்டு கொண்டார். அவனுக்கு இலவசமாக பிரத்தியேகமாக பாடம் நடத்தினார். அவனுக்கு நல்ல ஆடைகள் வாங்கிக் கொடுத்தார். சாப்பிட நல்ல உணவும் வாங்கிக் கொடுத்தார். பல வருடங்கள் அவனுக்குத் துணை நின்றார். அவரது கனவு வீண் போகவில்லை. கல்வியிலே குமரன் மிகவும் சிறப்படைந்தான். இப்போது கொழுத்த சம்பளத்தில் பெரியதொரு நிறுவனத்தில் மிகவும் உயர் பதவி வகிக்கிறான்.  அவன் உபயோகிக்கும் வாகனம் மட்டும் பல கோடி பெறுமதியானது. அவன் வாழும்  ஆடம்பரமான வாழ்க்கைக்கு அதுவே கட்டியம் கூறியது. 


குமரன் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு சரவணன் ஆசிரியர் ஒருமுறை கூட அவனைச் சந்திக்கச் செல்லவில்லை. ஆனால் இன்றுதான் முதன்முறையாக அவனது வீடு தேடிச் சென்றார். அதுவும் தனது மனைவிக்காக.  சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தனது மனைவிக்கு சிகிச்சை செய்ய  பன்னிரண்டு இலட்சம் தேவைப்பட்டது.  தான் செய்த உதவிகளை ஞாபகம் வைத்து இன்று குமரன் கட்டாயம் உதவி செய்வான் என்று நம்பிக்கையோடு போனவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. அவன் நடந்து கொண்ட விதத்திலிருந்து அவர் செய்த எந்த உதவியும் அவனுக்கு கொஞ்சமும் ஞாபகமில்லை என்று புரிந்து கொண்டார். ஒரு சில வார்த்தைகள் கூட அன்பாகப் பேசாத குமரனை எண்ணி மிகவும் வேதனைப்பட்டார். நன்றி கெட்ட அவனைத் தேடி வந்ததற்காக தன்னைத் தானே நொந்து கொண்டார்.


 சுட்டெரிக்கும் வெயிலிலே கவலையோடு நடந்து கொண்டிருந்த சரவணன் ஆசிரியர் யாரோ முன்னால் வந்து பேசுவது கண்டு விழித்தார்,


 "யாருங்க நீங்க ?" அறிமுகமற்ற அவரைப் பார்த்து சரவணன் ஆசிரியர் கேட்டார்.

 

"என்ன சேர், என்ன தெரியலயா. நா ஒங்கக்கிட்ட படிச்ச நடராஜன். 


"அடடா அப்படியா. எனக்கு ஞாபகமில்லையே அப்பா " என்ற சரவணன் ஆசிரியரிடம்,


"நா எங்க சேர் படிச்சன் ? எட்டாம் வகுப்போடயே நின்னுட்டன்.  நீங்க எத்தன முற அடிச்சு அடிச்சி சொல்லித் தந்தீங்க. எனக்கு எதுவும் ஏறல. ஆனா நீங்க அடிச்சி அடிச்சி சொல்லித் தந்த ஒழுக்கத்த, நல்ல பண்புகள இன்னைக்கும் கைவுடல்ல.  ஒங்களயும் என்னைக்கும் மறக்கல்ல" என்றான்.


தான் மறக்காதிருந்த தன் மாணவன் தன்னை மறந்தது எவ்வளவு வேதனை தந்ததோ அதுபோன்றே,

தான் மறந்த தன் மாணவன் தன்னை மறக்காதிருப்பது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.


"சேர், ஏதோ கவலையா இருக்கீங்க.  என்னென்னாலும் இந்த மாணவன்கிட்ட சொல்லுங்க" என்றான் நடராஜன். 


ஏற்கனவே ஒரு மாணவனிடம் பாடம் கற்ற சரவணன் வாத்தியார்,

"ஒன்றுமில்லை" என்று சமாளிக்கப் பார்த்தார்.


என்றாலும் நடராஜன் விடவில்லை.  


"இல்ல சேர், நீங்க ஏதோ பெரிய கவலயோட இருக்கிறது ஒங்கட முகத்த பாத்தாலே தெரியுது. வாங்க சேர். ஒங்கள வீட்டுல கூட்டிக்கிட்டு போய் விடுறென் சேர் " என்று அன்போடு அழைத்தான். 


அந்த கனிவான சொற்களைத் தட்டிவிட சரவணன் ஆசிரியருக்கு காரணம் இருக்கவில்லை.


ஒரு சிறிய கார் வந்து நின்றது . ஓர் இள வயது பையன் அதனை ஓட்டிக் கொண்டு வந்தான். 


"ஏறுங்க சேர்...." என்று  காரின் முன் பக்கக் கதவைத் திறந்து விட்டான்.


காரை செலுத்திய பையனிடம்               " அப்பா இன்னைக்கு இந்த நெலமைல இருக்குறதுக்கு காரணம் இந்த சேர்தான் " என்று கூறினான் நடராஜன்.


அந்தப் பையன் மிகவும் மரியாதையுடன் தலையசைத்து புன்னகைத்தான்.


" ஒங்க பையனா..... பேரென்ன ? " என்று சரவணன் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு நடராஜனிடமிருந்து  பதில் எதுவும் வரவில்லை.


 " சேர் ஒங்க கவல எதுன்னாலும் பரவாயில்ல சேர். தைரியமா சொல்லுங்க சேர்"

என்று மீண்டும் மீண்டும் கேட்டான்.


பெரியதொரு ஆளாக வளர்ந்திருந்த நடராஜன் தன்னை இத்தனை "சேர்" போட்டு அழைத்தது சரவணன் ஆசிரியருக்கு என்னவோ போலிருந்தது.


தனது மனக் கவலையை சரவணன் ஆசிரியர் தயங்கித் தயங்கி நடராஜனிடம் எடுத்துச் சொன்னார்.


அதனைக்  கேட்ட உடனேயே, " சேர், பன்னிரண்டு லட்சமா ? அது எனக்கு ஒரு பணமே இல்ல. நா தாறேன் சேர். அதுக்கும் மேலயும் தாறேன்.  நா இப்ப பெரிய கோடீஸ்வரன்" என்று சொன்னதோடு நிற்காமல்   " சேர் என்ட மகன்ட பேரென்ன என்று கேட்டீங்களே.  ஒங்க ஞாபகமா ஒங்கட பேரத்தான் அவனுக்கு வச்சிருக்கேன் " என்று நா தழுதழுக்க நடராஜன் சொன்ன போது 

   விழிகளிலிருந்து வழிந்த நீரை 

   துடைப்பதற்கும் சரவணன் 

  ஆசிரியரின் கைகளில் திராணி  

  இருக்கவில்லை.

கருத்துகள் இல்லை: