வெலிமடை ரபீக்
நீ
நோய்வாய்பட்டிருக்கிறாய்
என்று கேள்விப்பட்டதும்
என் வாய்
நோய்ப்பட்டது
அதனால்
எனது கவிதையில்
திக்கலும், திணறலும்
விக்கலும் இருக்கலாம்
ஆனாலும்
இந்த வாழ்த்துக் கவிதையில்
எந்த சிக்கலும் இருக்காது
ஏனெனில்
இது வெறும்
வாழ்த்துக் கவிதை அல்ல
எனது
இல்லை இல்லை
இங்கிருக்கும் அனைவரினதும்
பிரார்த்தனைக் கவிதை
கவிதைகளுக்கும்
பிரார்த்தனைகளுக்கும்
சக்தி இருக்கிறது
உனது துன்பங்களோடு
பேச்சு வார்த்தை நடாத்த
கவிஞனே
இலட்சங்கள் உன்னை
அலட்சியப்படுத்தலாம்
இதயங்கள் உன்னோடு
உறவாட மறக்காது
உன் கூர்
மைக் கவிதைகள்
"மைக் " கவிதைகளாய்
வாசகர்கள்
இதயங்களில் எதிரொலித்தது
செவிப்பறைகளில் அதிரும்
மானுடர்
இடர் களைய
நீ வடித்த கண்ணீர்
கவிதை பிரக்ஞையில்லா
மானுடர்க்கும்
முடர் நீர் பருக்கும்
நீ கவிஞனென
உன்னை அடையாளப்படுத்திய
வரிகளிலே
ஜொலிக்கும் உன் புகழ்
தாய்ப்பாலை
பால் மாக்களிலே கரைக்கும்
அன்னையருக்காய்
நீ வடித்தாய்
'பாழ்' மானுட கவிதை
அன்னையரே
அது பால் மாதிரி அல்ல
பாழ் மானுட என்று
விழிகளைத் திறந்து வைத்தாய்
கவிதைகளோடு பயணித்து
எங்கள் இதயங்களோடு
கை கோர்த்தவனே
வலிமையான வார்த்தைகளால்
கவிதை யாத்தவனே
கவலைப்படாதே
உனக்கும்
பூக்காலம் பூக்கலாம்
இன்னும் இன்னும் நீ
கவிதை படைக்க வேண்டும்
இன்னும் மின்னும்
கவிதை படைக்க வேண்டும்
நீ நீடு வாழ
சுகதேகியாய்
கவிதை உலகை ஆள
இது இதயத்துப் பிரார்த்தனை
இந்தக் கண்ணீரில்
மீன்கள் மட்டுமல்ல
ஆமீன்களும் இருக்கின்றன!
(கவிஞர் வெலிமடை ரபீக் அவர்களின் 'பூக்காலம் ' நூல் வெளியீட்டு விழா 2017 ல் கொழும்பு, அல்ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றபோது வாசிக்கப்பட்ட வாழ்த்துக் கவிதை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக