பாரதிரப்
பாடியவன் பாரதி
சொல்லிக்கொண்டிருக்கும்போதே
விளங்கிக் கொள்வதற்காய்
கிள்ளிக் கொண்டிருக்கும்போதே
கிளர்ந்தெழுவதற்காய்
பாடியவன்
காய் பாடியவன்
பாரதி
மானுடத்தைக்
கனியாக்குவற்காய்
சேர்ந்து வாழ்வதை
சொல்லித் தந்தவன்
சோர்ந்து விழுவதைக்
கிள்ளி எறிந்தவன்
பண்டிதத் தமிழை
புதுக்க விதைத்தவன்
புதுக்கவி தைத்தவன்
அவனால்
எத்தனை புதுக்கவிதைகள்
இன்று
நாட்டில் நடப்பதைச்
சொல்லிக் கொடுத்தவன்
மட்டுமல்ல
கவிஞர்களுக்கு
ஏட்டில் நடப்பதையும்
சொல்லிக் கொடுத்தவன்
விலங்கு போட்டு
வைத்திருந்த
தமிழ் கவிதையை
விளங்க வைத்து
விடுதலை
வாங்கித் தந்தவன்
ஏனெனில்
அவன் சுதந்திரப் பாட்டுக்காரன்
நாட்டுச் சுதந்திரத்திற்காய்
பாட்டுப் பாடியவன்
பாட்டுச் சுதந்திரத்திற்காய்
நாட்டைப் பாடியவன்
தன்
தலைப்பாகைக்குள்
தன்னை வைத்தவன்
தன்
தலைப் பா
கைக்குள் வைத்தவன்
எம்மோடு
சிறு வயது முதல்
ஓடி விளையாடி
காலை எழுந்தவுடன்
நல்ல
படிப்புச் சொல்லிக் கொடுத்து
சிந்து நதியின் மிசை
தமிழ் நிலவுச் சோறூட்டி
எம்மோடைக்கியமானவன்
பாரதி
எம் பேனா
பாரதிக்கு
உடைமை ஆனது
பாரதி
எம் பேனாவுக்கு
டை
மை ஆனான்
காலச் சக்கரத்திலே
அவன் கவிதை சர்க்கரை
இனிக்க மட்டுமல்ல
உறைக்கவும் செய்தது
உணர்வுகளைத் தட்டி எழுப்பி
உண்மைகளை
உரைக்கவும் செய்தது
பாரதி
நேற்று எழுதிய
கவிதையில்
இன்றும் வாழ்பவன்
நாளையும்
உயிரோடிருப்பதற்காய்
நாற்று நட்டவன்
ஏனெனில் அவன்
சொல்லேணி வைத்து
மில்லேனியக்
கவிதை பாடியவன்
பாரதியின்
கவிதை படிக்காதவன்
எழுதிக் குவித்தாலும்
பேனைப்
பிடிக்காதவன்
அதனால் தான்
பாரதி
தன்னை யாரென்று
கேட்கச் சொன்னான்
பாரதி
யார் ?
கேட்டுப்பார்
அப்போது உனக்கு
நீ யாரென்று
தெரியும்
என்.நஜ்முல் ஹுசைன்
2 கருத்துகள்:
மிக மிக அருமையான வரிகள் பாரதிபற்றிய உங்கள் ரசனை அற்புதம் வாழ்த்துக்கள் ஐயா.
Raj suga(T.Elizabeth)
மிக்க நன்றி சகோதரி எலிசபத்
கருத்துரையிடுக