எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

தமிழ் மிரர் பத்திரிகையில் 14/10/2016 அன்று பிரசுரமான எனது சிறுகதை



நிலைக்கண்ணாடி

- என். நஜ்முல் ஹுசைன்

மிகவும் வியப்பாக இருந்தது. கையிலே திருமண அழைப்பிதழ். பாரூக்கின் திருமண அழைப்பிதழ்.  மணமகள் றாஹிலா. தான் நீண்ட நாள் விரும்பியிருந்த பெண்ணையே அவன் திருமணம் முடிப்பது எனக்கு எந்த வித வியப்பையும் தரவில்லை. அந்த திருமணம் அவனது பெற்றோரின் சம்மதத்துடன் நடப்பதுதான் எனக்கு பெரும் வியப்பைத் தந்தது.
அவனது உம்மா பரவாயில்லை. மிகவும் இளகிய மனம் கொண்டவர். அவர் மனமிரங்கி வந்ததை ஏற்றுக் கொள்ளலாம்.
கடும் கோபக்காரரான வாப்பா இதற்கு எப்படி சம்மதம் தெரிவித்தார்.
சென்ற முறை இலங்கை போனபோது நான் பாரூக்கின் வாப்பாவோடு பேசிப் பார்த்தபோதுதான் அவரது கோபத்தையும் அதிலுள்ள நியாயத்தையும் உணர்ந்து கொண்டேன்.
பாரூக் எனது பாடசாலை நண்பன்.  அவனது தனிப்பட்ட விஷயங்களையும் என்னிடம் சொல்லிக் கொள்வான். அவனது வீடு இருந்த தெருவில் றாஹிலாவின் வீடு இருந்தது. அந்தத் தெருவால் போய் வரும் போதெல்லாம் ஜன்னல் அருகே அமர்ந்திருக்கும் றாஹிலாவைப் பார்த்து புன்னகைத்துவிட்டு செல்வான். நாளடைவில் புன்னகை அவர்களை அளவளாவுவதற்கு அழைத்துச் சென்றது. நாள் செல்லச் செல்ல இருவருக்கும் இடையில் நெருக்கம் அதிகமானது. அடிக்கடி றாஹிலாவின் வீட்டுக்குள்ளே சென்று றாஹிலாவுடன் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்க ஆரம்பித்தான். ஏனெனில் றாஹிலாவின் வீட்டாரிடமிருந்து அவர்களது நட்புக்கு எந்த விதமான எதிர்ப்பும் தோன்றவில்லை. மாறாக அதற்கு நல்ல ஆதரவு இருந்தது. அப்படி இல்லாமலிருந்தால் வயதுக்கு வந்த பெண்ணோடு ஒரு வாலிபனை தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க அனுமதிப்பார்களா?
அந்தத் தெருவிலே றாஹிலாவின் வீட்டினரைத் தெரியாதோர் யாருமே இல்லை என்று சொல்லலாம்.
அந்தத் தெருவிலே அடிக்கடி தெருச் சண்டை நடக்கும். பெரும்பாலும் அந்த சண்டையில் றாயிலாவின் வீட்டினரின் பங்களிப்பு இருக்கும். குறிப்பாக றாஹிலாவின் உம்மாவின் பங்களிப்பு. அவர் பெரிய சண்டைக்காரி என்று எல்லோருக்கும் தெரியும்.
தொண்டைக் கிழிய கத்துவார்கள் என்பார்களே. அதை சண்டை பிடிக்கும்போது அவளிடம் நிதர்சனமாக காணலாம்.
ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக றாஹிலா அதற்கெல்லாம் மாறானவள். கொஞ்சம் படித்தவள். மிகவும் நல்லவள். பலமுறை தனது உம்மாவை திருத்த முயன்று தோற்றுப் போனவள்.
பாரூக்கின் வாப்பாவுக்கு கொஞ்சம் நாள் கழித்தே தனது மகனின் இந்தத் தொடர்பு தெரிய வந்தது. அவர் மிகவும் அமைதியானவர். எந்த வம்பு தும்புக்கும் போகாதவர் மட்டுமல்ல இப்படி சண்டை பிடிப்பவர்களை அடியோடு வெறுப்பவர்.  விஷயம் தெரிய வந்ததும் கொதித்தெழுந்தார். தனது வீட்டுக்குள் மகனுக்கெதிராக யுத்தப் பிரகடனம் செய்தார். தலைக்கீழாய் நின்றாலும் இப்படி ஒரு சம்பந்தம் நடக்காது என ஆணித்தரமாக எடுத்துரைத்தார். பாரூக்கும் அமைதியானவன். பெற்றோரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாதவன். என்றாலும் தனது விருப்பம் றாஹிலாவை மணப்பதுதான் என்று விடாப்பிடியாக தெரிவித்தான். எத்தனையோ முறை அவனுக்கு வேறு இடங்களில் மணப்பெண் பார்த்தும் தனது பிடியை கொஞ்சமும் தளர்த்தவில்லை.
மிகவும் ஆத்திரமும் கோபமும் கொண்ட பாரூக்கின் வாப்பா ஒரு நாள் தன்னை தைரியப்படுத்திக் கொண்டு றாஹிலாவின் வீட்டுக்குள் நுழைந்தார். அவரைக் கண்டதும் றாஹிலா ஓடி மறைந்தாள். றாஹிலாவின் உம்மாதான் முன்னே வந்தார்.
'வாங்க வாங்க' என்று அன்பாக வரவேற்றார். என்றாலும் அந்த வரவேற்பை காதிலேயே வாங்கிக் கொள்ளாத பாரூக்கின் வாப்பா ' இது  ஒங்களுக்கு ஞாயமா? ஒரு  வயசு பொடியன வீட்டுள்ளுக்கு வச்சு பேசிக் கொண்டிருக்கிறது?  ' பொரிந்து தள்ளினார்.
உடனடியாகவே றாஹிலாவின் உம்மாவிடமிருந்து பதில் வந்தது
 ' ஏன் நீங்களும் வாங்களேன். உங்களையும் வச்சி பேசிக்கொண்டிருக்கிறோம் '
இப்படி ஒரு பதிலை கொஞ்சமும் எதிர்பார்க்காத பாரூக்கின் வாப்பா இடிந்து போனார். எங்காவது  ஒரு மூலையில் இந்த திருமணத்தை நடத்தி வைக்கலாம் என ஒரு சிறிய விருப்பம் இருந்திருந்தாலும் கூட அது சுக்கு நூறான தருணம் அது.
அவர் றாஹிலாவின் வீட்டுக்குப் போன வேளை றாஹிலாவின் உம்மா அழகான நாலு வார்த்தைகள் பேசி இருந்தால் கூட அவரது கோபம் தணிந்திருக்கும்.  சுனாமி கோபமாய் உள்ளே போனவருக்கு வெல்லம்பிட்டி வெள்ளமாய்தான் வெளியே வர முடிந்தது.
ஒரு காலமும் இல்லாமல் பாரூக்கின் வாப்பா ருத்ரதாண்டவமாடினார். கடுகளவேனும் றாஹிலாவை மணமுடிக்கும் ஆசையை மனசுக்குள் வைக்கவேண்டாம் என பாரூக்குக்கு சொல்லி வைக்கும்படி பக்கத்து வீடுகளுக்கும்  கேட்கும்படி பிரகடனப்படுத்தினார். என்னையும் விட்டு வைக்கவில்லை. தனது கோபத்தையும் நியாயத்தையும் என்னிடம் தெளிவுபடுத்தினார்.
நட்பு ரீதியாக பாரூக்கிடம் பேசினேன். றாஹிலாவின் வீட்டுக்குச் சென்று பேசுவதை நிறுத்தியிருந்தான். ஆனாலும் றாஹிலாவை மணமுடிக்க வேண்டும் என்ற அவனது முடிவு கொஞ்சம் கூட தளர்ந்திருக்கவில்லை. அதில் அவன் விட்டுக் கொடுக்காமலிருந்தான்.
அவனது வாப்பாவின் பிடிவாதத்திற்கு முன்பு எதுவும் நடக்காது என்பது எனக்கு விளங்கியது.

எதுவுமே நடக்காமல் நாட்களும் உருண்டோட நான் இப்போது சவூதிக்கு வந்து வருடங்களும் மூன்றாகியது. இப்போது என் கைகளில்  தவழும் திருமண அழைப்பிதழ்.
அவிழ்க்;கப்படாத முடிச்சு. சரி திருமணத்திற்கென்று செல்லும் வாய்ப்பில்லை. இன்னும் சில மாதங்களில் லீவில் இலங்கை செல்லவிருக்கிறேன். அப்போது பார்த்துக்கொள்வோம்
...............
லீவில் இலங்கை வந்தேன்.  ஒரு வாரம் கழிந்த பிறகுதான் எங்கள் கதையின் கதாநாயகன் பாரூக்கின் வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது
பாரூக்கின் தந்தையைதான் முதலில் கண்டேன்.  மனிதர் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.  மிகவும் பலமாக வரவேற்றார்.
பாரூக்கை கண்டு ஆரத்தழுவினேன். அவனது முகத்தில் மட்டுமல்ல வீட்டிலிருந்த அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
அவர்கள் அனைவரினதும் மகிழ்ச்சிக்கான காரணம் சிறிது நேரத்திலேயே எனக்கு தெரிந்து விட்டது.
பாரூக்கின் மனைவிதான் அந்தக் காரணம்.  என்னோடும் மரியாதைக்காக சிரித்து விட்டுப் போனாள்.  அவளது நடை உடை பாவனை அவளது நற்குணத்தை எடுத்தோதியது. பாரூக்கின் தந்தை எதிர்பார்த்ததற்கு மாற்றமாக அவள் விளங்கினாள்.
வீட்டிலுள்ள அனைவருடனும் மிகவும் அன்பாகப் பழகினாள். பாரூக்கின் சகோதரிகள் அவள் மீது  உயிரை வைத்திருந்தது விளங்கியது.  பாரூக்கின் பெற்றோரோடு மிகவும் மரியாதையாக பழகினாள்.  மொத்தத்தில் குடும்ப உறுப்பினர் அனைவரும் அவளது பாச வலையில் வீழ்ந்திருந்தனர்.
பழைய கதைகளை பாரூக்கோடு பேசிக் கொண்டிருந்தேன். சுற்றிலும் பலர் இருந்ததால் அவனது திருமண கதையைப் பற்றி எதுவுமே பேசக் கிடைக்கவில்லை.
அதுபற்றி எதுவுமே அன்று பேசக்கிடைக்காது என்று தான் நினைத்தேன்.
வீட்டுக்குள்ளே இருந்து குரல் வர பாரூக் எழுந்து சென்றான். நான் மட்டும் தனியே இருந்தேன்.
அப்போது பாரூக்கின் தந்தை உள்ளே வந்தார். அவராகவே பேச்சை ஆரம்பித்தார்,
 'உங்களுக்கு ஆச்சரியமாக இருக்குமே. வாணாமே வாணாம் என்றிருந்த நா எப்படி இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்; என்று'.
இவருக்கு எப்படி தலைவெடிக்க நான் இங்கே உட்கார்ந்திருப்பது தெரிந்தது, இப்படி மனதறிந்து பேசுகிறார்.
'நீங்க என்ட மகன்ட கூட்டாளி.  எனக்கு தெரியாது அவன்ட எல்லா கொணமும் உங்களுக்கு தெரியுமா என்று'
அவர் என்ன சொல்ல வருகிறார் என்று காதுகளைத் தீட்டிக் கொண்டு கேட்கத் தயாரானேன்.
'என்ட மவன் பெரிய பொறுமசாலி. என்ட மத்த புள்ளங்களுக்கிட்ட இல்லாத நல்ல கொணம் பாரூக்குக்கிட்ட இரிக்கி. செல நேரங்களில் அவங்கட உம்மா சோத்த மட்டும் பிளேட்ல போட்டுட்டு கறியோ, மரக்கறியோ எடுக்கப் போய்ட்டு வேறெதாவது வேலையிலே மறந்துட்டு நெனவு வந்தவுடன் பதறிக்கொண்டு கறிய கொண்டு வந்து பாத்தா மகன் இருக்கமாட்டாரு. பிளேட்ல சோறும் இருக்காது. ஆமா எதுவுமே இல்லாம வெறுஞ் சோத்த தின்னுட்டு போயிருப்பாரு. ஆனா மத்த புள்ளைங்கன்னா பெரிய கொழப்பமே பண்ணியிருப்பாங்க.
சோத்தில உப்பில்ல என்றால்கூட ஒரு நாளும் சொன்னதில்ல. நாங்க யாரும்தான் தின்னுட்டு சோத்தில உப்பே இல்லன்னு சொல்லுவோம்.  அப்பதான் என் பொண்டாட்டியும் நான் உப்பு போட மறந்துட்டென் என்று சொல்லுவா.
அப்படி பட்டவன் என் மவன்.  இந்த கல்யாண விஷயத்தில மிச்சம் கோவமா இருந்த நான் ஒரு நா அவ சோறு தின்னுக் கொண்டிருந்த நேரம் என்ட ஆத்திரத்துக்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் ஏசினேன். அவன் ஒரு மறுமொழியும் சொல்லாம தின்னுக் கொண்டிருந்தான்.  அந்த வீட்டில இருந்தவங்க எனக்கு ஏசியது நெனவுக்கு வந்ததும் அந்த எடம் வேணாமுன்னு சொல்லுங்க வேணாமுன்னு சொல்லுங்க என்னு கத்தினேன். அப்ப அவ 'இல்ல நா முடிச்சா அங்கேதான் முடிப்பேன். இல்லாட்டி முடிக்க மாட்டன்' என்னு மெதுவா ஆனா உறுதியா சொன்னான்.
அப்ப எனக்கு வந்த கோவத்த எனக்கே அடக்க முடியல. ஆத்திரத்தோடு திரும்பினேன். எங்கட வீட்டு சுவரில நல்ல உறுதியான பழய நெலக்கண்ணாடி ஒன்னு இருந்துச்சு. கோவத்தோடு அத கழட்டி எடுத்து பாரூக்ட தலைலர் ஒரே அடி.  'படீர்' என்ற சத்தத்தோடு கண்ணாடி நொறுங்கி விழுந்திச்சு. கண்ணாடியின் சட்டம் அவன்ட கழுத்தில தொங்கிச்சு. அவன்ட தல மேலெல்லாம் ஒரே ரத்தம். அந்த சத்தத்த கேட்டு பக்கத்து வீட்டுக்காரங்க கூட எங்கட வீட்டுக்கு ஓடி வந்துட்டாங்க. அடிச்ச எனக்கே அது பேரதிர்ச்சியா இருந்திச்சு. ஆனா.....ஆனா.... என் மவன் பாரூக்.......'
ஒரு கணம் விக்கித்து நின்றார்
 'என் மவன் பாரூக் ஒரு துளி சலனம்கூட காட்டாம அப்படியே இருந்தான். கொறஞ்ச பச்சம் 'ம்' என்றுகூட ஒரு எதிர்ப்பு வார்த்த அவன்கிட்ட இருந்து வரல்ல. இப்படி ஒன்ன என்ட வாப்பா எனக்கு செஞ்சிருந்தா நான் கட்டாயம் அவருக்கு திருப்பி அடிச்சிருப்பன். பாரூக்ட எடத்துல வேறு எந்த மவன் இருந்திருந்தாலும் கொறஞ்சது என்ன தள்ளியாவது விட்டிருப்பாங்க. என்னடா இது. ஒரு மரக்கட்டய போல இப்படி அசையாம இருக்கிறானே. என்று எண்ணி எண்ணி அந்த நிமிஷம் நான் கலங்குன கலக்கம் அந்த அல்லாஹ்வுக்குதான் தெரியும்.
அட இப்படியான ஒரு பொறுமசாலி மவன இப்படி கொடுமபடுத்திட்டேனே. உடனே என்ட வாயில இருந்து வந்த சொல் 'நீங்க எங்க கல்யாணம் முடிக்கோணும் என்னு சொல்லிரீங்களோ அங்கேயே முடிச்சிக்கோங்க. எனக்கு பூரண சம்மதம். பரிபூரண சம்மதம்'
அதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் கட்டுக்கடங்காது பாய்ந்தோடியது - எனது கண்களிலிருந்தும்தான் !

கருத்துகள் இல்லை: