எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 23 மார்ச், 2025

ரமழான் கவிதை 2025

 இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் 16/03/2025 ஞாயிறு இரவு ஒலிபரப்பான கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'கவிதா நதி' யில் ஒலிபரப்பான எனது ரமழான் கவிதை.


ரமழானே
உன்னிடம் நாங்கள்
ஒப்படைக்கப்பட்டிருக்கிறோம்

எம்மிடம் நீ
ஒப்படைக்கப்பட்டிருக்கிறாய்

இது ஓர்
உடன்படிக்கை

எங்களுக்கும் உனக்கும்
சில
பொறுப்புகள் உண்டு

உன்னை நாங்கள்
இபாதத்தால்
அலங்கரிக்க வேண்டும்

நீ எங்களை தக்வாவால்
கழுவி
சுத்தம் செய்ய வேண்டும்

உனக்காக
எங்கள் வயிறுகளை
நாங்கள்
வெறுமையாக்க வேண்டும் 

எங்கள் ஆத்மாவுக்கு
நீ
விருந்து வைக்க வேண்டும்

நீ வந்து
எங்களுக்கு
ஏழைகளை ஞாபகப்படுத்த வேண்டும்

நாங்கள் பொட்டலம் ஏந்தி
வறுமையின்
வாசல் தேடி
பயணம் செய்ய வேண்டும்

நாங்கள்
வணக்கத்தின் எண்ணிக்கைகளை
அதிகரிக்க வேண்டும்

நீ
ஒன்றுக்கு பல என்று
பதிவு
செய்ய வேண்டும்

நாங்கள் குர்ஆனின்
பக்கங்களில்
தஞ்சமாக வேண்டும்

நீ
சொர்க்கத்தின் பக்கங்களில்
எங்கள் பெயரையும்
எழுதி வைக்க
வேண்டும்

முடிவில் நீ
விடை பெறுவாய்
நாங்கள்
விடை தருவோம்

நீ மீண்டும் வருவாய்
என்ற நம்பிக்கையில் -

நாங்கள் மீண்டும்
பழைய
வாழ்க்கைக்குள்
மூழ்கி விட மாட்டோம்
என்ற நம்பிக்கையில்!

- என். நஜ்முல் ஹுசைன்

கருத்துகள் இல்லை: