(09/11/2025 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.30 க்கு இடம்பெற்ற மஸாஹிரா கனியின் 'வேரெழுது', 'விடத்தல்தீவு புலவர் முஹம்மத் காசிம் ஆலிம்' ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழாவின்போது வாசிக்கப்பட்ட வாழ்த்துக் கவிதை)
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அனைவருக்கும். அஸ்ஸலாமு அலைக்கும்
வணக்கம்
வேறெழுத முடியாமல்
வேரெழுத வந்தார்
வேறெதுவும்
எழுத முடியாமல்
தன்
வேரெழுத வந்தார்
போர் எழுதியதால்
ஊர் அழுத
பொழுதெழுதி
பேர் எழுதிக் கொண்டார்
சுவைப்
போர் எழுதிய
சுவையால்
தன்
சுமை எழுதிக் கொண்டார்
தன் இமைப் பொழுதில்
எழுதியதை
இதயத்தில் எழுதி -
நூல் எழுதி -
நிஜம் எழுதி
எம்முன்னே
வைத்தார்
பல நெஞ்சங்கள்
தைத்தார்
மஸாஹிரா கனி
கனிந்தெழுதினாலும்
கனி எழுத வரவில்லை
காய் எழுத வரவில்லை
மானிடர்க்காய்
எழுத வந்தார்
வேரெழுத வந்தார்
வேரெழுது
என்று
ஏர் உழுது சென்றார்
கிளை பரப்பி
தலை நிமிர்ந்து
தன்
கனி கொடுத்து நிற்கும்
விருட்சத்தின்
அடி காண
எமை
அழைத்துச் சென்றார்
எமை
வளைத்துக் கொண்டார்
தன் பாட்டன்
விடத்தல்தீவு புலவர்
முஹம்மது காசிம் ஆலிம்
புகழ் எழுதிச்
சென்றார்
தன் வேர்
கண்டு கொண்டார்
அதனால்
வீறு கொண்டார்
நீர் எழுதியதால்
கண்ணீர் எழுதிய
காவியங்கள் பிறந்த
நாட்டில்
மஸாஹிரா கனியே
நீர் எழுதியது
ஆனந்தக் கண்ணீர்
காவியம்
தமிழ்
மார் எழுதிய
பால் குடித்து
தமிழ்ப்பால்
தனை வளைத்து
தாழ்ப்பாள் போடாது
கவிதை
மடை திறக்கும்
மஸாஹிரா
இவர் விழித்திருந்தது
பல இரா
அதில் கண்டதெல்லாம்
வேர் காணும் கனா
வயிற்றுக்கு
சோறெழுதிய
ஏர் எழுதிய
கவிதை
நெற்கதிர்
எங்கள்
வாழ்க்கைக்கு
வாழ்த்தெழுதிய
மஸாஹிரா கனியின்
எழுத்துக்கு
யார் நிற்கப் போகிறார்கள்
எதிர்
கார் எழுதியது
மழை
கெட்டிக் காரி
இவள் எழுதியது
கலை
அதை வைத்துத்தானே
எமக்கெல்லாம்
வீசியிருக்கிறார்
வலை
மஸாஹிரா கனி
விண்மீன் சொற்கொண்டு
எழுதிய கவிதையில்
வலைமீனாய்
வசியப்பட்டுப் போயிருக்கிறோம்
மூல வேர்
விடத்தல்தீவு புலவர்
முஹம்மது காசிம் ஆலிம்
பேத்தியே
மஸாஹிரா கனியே
இன்னும் இன்னும்
உன்
வேரெழுது
அங்கெல்லாம்
உன்
பேரெழுது
உனை
வாழ்த்தி மகிழ்கிறேன்
வல்லான் அல்லாஹ்
தொழுது !
நன்றி !
- என். நஜ்முல் ஹுசைன்
