எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 18 ஜூன், 2026

இப்போது புரிந்தது - சிறுகதை

 இப்போது புரிந்தது


   - என். நஜ்முல் ஹுசைன் 

அப்துல்லாஹ் கலங்கிப் போனான். இப்படி ஒரு பதில் தனது பொஸ்ஸிடமிருந்து வரும் என அவன் எதிர்பார்க்கவே இல்லை.

அவனது பொஸ் தாஹிர் ஹாஜியார் மிகவும் நல்ல மனிதர். இரக்க குணமுடையவர். எல்லோருடனும் அன்பாகப் பழகுபவர். யாருடைய மனம் நோகும்படியும் பேசமாட்டார்.

அதற்கு ஒரு காரணம் இருந்தது. அவர் ஏழையாக இருந்து செல்வந்தர் ஆனவர். ஆனால் அவரது பிள்ளைகளிடம் அந்தப் பண்புகளை எதிர்பார்க்க முடியாது. அதிலும் அவரது மூத்த மகன் மிகவும் கர்வம் பிடித்தவன். நிறுவனத்தில் பணிபுரிபவர்களுடன் முகம் கொடுத்தே பேசமாட்டான். அவர்களை மனிதர்களாகவே மதிக்கமாட்டான். 

அவர்களது நிறுவனம் பல பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனம். அங்கே நீண்ட காலம் அப்துல்லாஹ் பொறுப்பான பணியில் இருந்தான்.

தாஹிர் ஹாஜியார் அப்துல்லாஹ்வுடன் மிக அன்பாக இருப்பார். அவன் தனது பணிகளிலே நேர்மையாக இருப்பதை பலமுறை அவதானித்திருக்கிறார். சிலவேளை சில விடயங்களில் தாஹிர் ஹாஜியாருக்கே அப்துல்லாஹ் ஹலால், ஹராம் சொல்லிக் கொடுத்திருக்கிறான். அதனால் மற்றவர்கள் மேல் காட்டும் அன்பைவிட அப்துல்லாஹ் மீது கொஞ்சம் கூடுதலான அன்பும், நன்மதிப்பும் தாஹிர் ஹாஜியாருக்கு இருந்தது.

அப்துல்லாஹ் எப்போதுமே எனக்கு அது வேண்டும், இது வேண்டும் எனக் கேட்க மாட்டான். தவிர்க்க முடியாத தேவையிருந்தால் மட்டுமே தாஹிர் ஹாஜியாரிடம் கேட்பான். மற்றபடி தனக்கு கிடைக்கும் சம்பளத்திலேயே எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்வான். அதனை நன்றாக தெரிந்த தாஹிர் ஹாஜியார் அவன் இடையில் என்ன உதவி கேட்டாலும் அதனைக் கொடுக்கத் தயங்க மாட்டார்.

இன்றுதான் முதன்முறையாக அப்துல்லாஹ் கேட்டு தாஹிர் ஹாஜியார் "இல்லை" என்று சொல்லியிருக்கிறார். மிகவும் எதிர்பார்ப்போடு இருந்த அப்துல்லாஹ்வுக்கு இது பெரிய ஏமாற்றமாக இருந்தது.

அவர் "இல்லை" என்று சொன்னபோது அருகில் மூத்த மகனும் இருந்தான். அவன்தான் அவரது நல்ல மனதைக் கெடுத்திருக்க வேண்டும். "இப்போது யாவாரம் ரொம்ப டல். பொறவு பார்ப்போம்" என்று சொன்ன பதிலை அப்துல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

ஆம் ஹாஜியாரின் மூத்த மகன்தான் அதற்கு காரணம். அப்துல்லாஹ் கொடுத்த கடிதத்தை மகனிடம் கொடுத்துதான் ஹாஜியார் வாசிக்கச் சொன்னார். 

அதை வாசித்த உடனே அவன் அந்தக் கடிதத்தை மேசையில் வீசினான்.

"டெடி, இப்படி கேக்குற கேக்குற நேரமெல்லாம் இவங்களுக்கு பணம் குடுக்க வாணாம். நாங்கதான் நல்ல செலரி குடுக்குறோமே. அதுல இத எல்லாம் அவங்க பார்த்து கொள்ளணும். எங்களுக்கே எவ்வளவு கொமிட்மன்ட்ஸ் இருக்கு"

தன் டெடி அப்துல்லாஹ்வுக்கு உதவி செய்வதற்கு பெரியதொரு தடையைப் போட்டு நின்றான் அந்த மகன். ஹாஜியார் என்னதான் நல்ல குணமுள்ளவராக இருந்தாலும் தனது அன்பு மகனின் பேச்சை மீற அவரால் முடியவில்லை.

அதுதான் அவர் அப்துல்லாஹ்வுக்கு சொன்ன "இல்லை"க்கு காரணம்.

உள்ளே என்ன நடந்திருக்கும் என்பதை அப்துல்லாஹ் நன்கு புரிந்து கொண்டான்.

வீட்டுக்குச் சென்று மகளிடம் என்ன சொல்வது ? மனைவியிடம் என்ன சொல்வது ? என்ற கவலை அவனை உறைந்து போக வைத்தது.

இவ்வளவுக்கும் அவன் பெரிதாய் எதையும் முதலாளியிடம் கேட்கவில்லை. உயர்தரம் படித்துக் கொண்டிருந்த தனது மகளது டியூஸன் பீஸ், புத்தக செலவுகளுக்காக உடனடியாக அவனுக்கு 26,000/- ரூபா அளவில் தேவைப்பட்டது. அதனைத்தான் அவன் சரியாகவே கணக்கிட்டு தனது மகளின் படிப்புச் செலவுக்காக
 25,600/- ரூபாய் தேவை என எழுதிக் கொடுத்திருந்தான்.

கலங்கிப் போயிருந்த அப்துல்லாஹ் "யா அல்லாஹ், நீயே போதுமானவன்" என்று மொழிந்தவனாக தனது அன்றாட பணிகளில் ஈடுபட ஆரம்பித்தான்.

வழமையாக வரும் தபால்காரன் அலுவலகத்திற்கு வந்த தபால்களை அப்துல்லாஹ்விடம் கொடுத்துவிட்டுச் சென்றான். அவன் போன கையோடே அன்றைய பதிவுத் தபால்காரனும் வந்து சேர்ந்தான். அப்துல்லாஹ்விடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஒரு கடிதத்தைக் கொடுத்துச் சென்றான்.  

அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டுச் சென்று முதலாளியின் கெபினைத் தட்டி கடிதங்களை கொடுத்துவிட்டு வந்து தனது பணிகளில் மீண்டும் ஈடுபடலானான் அப்துல்லாஹ். 

ஒரு அரை மணித்தியாலம் சென்றிருக்கும், தாஹிர் ஹாஜியார், "அப்துல்லாஹ், அப்துல்லாஹ்" என்று கூப்பிடுவது கேட்டது. 

அப்துல்லாஹ் உள்ளே சென்றான். தாஹிர் ஹாஜியார் ஒரு என்விலப்பை நீட்டினார். கையில் வாங்கிய அப்துல்லாஹ் ஒட்டாமல் இருந்த என்விலப்பை அங்கேயே திறந்துப் பார்த்தான். அதில் 30,000/- ரூபா பணம் இருந்தது. எதுவுமே விளங்காமல் விழித்த அப்துல்லாஹ்விடம், "இது நீங்க காலையில கேட்ட பணம். முதலுல இல்லன்னு சொன்னேன்னு ஒன்னும் நெனைக்க வாணாம். இத கொண்டு போய் ஒங்கட மகள்ட படிப்ப பாருங்க" ஹாஜியார் சொன்னார். அருகே அவரது மகனும் அப்துல்லாஹ்வை சிரித்த முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென ஏன் இந்த மனமாற்றம். ஒன்றும் புரியவில்லை.

"ஜஸாக்கல்லாஹ் கைர்" என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தான் அப்துல்லாஹ்.


அல்ஹம்துலில்லாஹ் ஒருவழியாக மகளது பிரச்சினை தீர்ந்தது. என்றாலும் ஹாஜியாருக்கும் அவரது மகனுக்கும் ஏற்பட்ட திடீர் மனமாற்றத்தின் காரணத்தை யோசிப்பதை மட்டும் அவனது மனம் நிறுத்தவில்லை.


தனது வேலைகளில் மூழ்கிப் போயிருந்த அப்துல்லாஹ்வைக் கூப்பிட்டு அன்று வந்திருந்த கடிதங்களை பைல் பண்ணக் கொடுத்தார் தாஹிர் ஹாஜியார்.

அதற்கான பைல்களையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக பைல் பண்ணத் தொடங்கினான் அப்துல்லாஹ்.

அப்போதுதான் அவனது கண்களைக் குத்திக் கொண்டு நின்றது ஒரு கடிதம். அது அரசாங்க கடிதம். டெண்டர் ஒன்றில் கலந்து வெற்றி பெற்று பொருள்களை இறக்குமதி செய்து கொடுத்ததற்கான கொமிஷனைக் குறிக்கும் கடிதம். 

சில மாதங்களுக்கொரு முறை இப்படியான கடிதங்கள் வருவது வழக்கம். கொமிஷனுக்கான காசோலையும் அதனோடு வரும்.

இப்போதுதான் அப்துல்லாஹ்வுக்கு ஒரு விஷயம் புரிய ஆரம்பித்தது.

அப்துல்லாஹ் கொடுத்து விட்டுச் சென்ற கடிதங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்கலானார் தாஹிர் ஹாஜியார். பதிவுத் தபாலில் வந்த கடிதத்தைத்தான் முதலில் உடைத்தார். 

உள்ளே இருந்த செக்கையும், கடிதத்தையும் பார்த்த ஹாஜியாருக்கு பெரிய அதிர்ச்சி. 

இம்முறை கொம்பெனிக்கு வந்த கொமிஷன் பணம் 853,000/-. எப்போதுமே அந்தக் கொமிஷன் பணம் முழுமையாகவே வந்து விடும். ஆனால் இந்தத் தடவை அந்தத் தொகையிலிருந்து மூன்று சதவீதம் எனக் கூறி ரூபா 25,599/- கழித்து வந்திருந்தது. புதிய நடைமுறைக்கேற்ப இனிவரும் காலங்களில் கொமிஷன் பணத்திலிருந்து மூன்று சதவீதத்தை வரியாக அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் என்றும் கூறப்பட்டிருந்தது.

எப்போதுமே முழுமையாக வரும் கொமிஷன் பணம் இம்முறை மூன்று சதவீத கழிவுடன் வந்திருக்கிறது. அதுவும் அந்தக் கழிவுத் தொகை ஏறக்குறைய அப்துல்லாஹ் கேட்ட அந்தத் தொகை. அல்லாஹ் கணக்குப் போடுவதில் மாபெரும் வல்லவன்.

மகனைப் பார்த்து ஹாஜியார் சொன்னார், " இங்கப் பாருங்க. நாங்க அப்துல்லாஹ்வுக்கு கொடுக்க ஏலாது என்று சொன்ன பணத்தை அல்லாஹ் கழிச்சிட்டு அனுப்பிட்டான். அப்துல்லாஹ் போன்ற நேர்மையானவங்க எங்களுக்கிட்ட கேட்காம வேறு யாரிடம் கேட்பாங்க ? மகன் அல்லாஹ் மிக வல்லம உள்ளவன். எல்லாத்தையும் அறிஞ்சவன். நாங்க இப்படி உதவி செய்றதெல்லாம் எங்களுக்கு எந்த நஷ்டத்தையும் கொண்டு வராது. அல்லாஹ்ட பரக்கத்தான் கொண்டு வரும்"

கடிதத்தையும், காசோலையையும் கையிலே எடுத்துப் பார்த்துக் கொண்டே தனது டெடி சொல்வதையும் கேட்டுக் கொண்டிருந்த அவரது மகன் ," இயஸ் டெடி, நீங்க சொல்லுறது சரி. ஒருநாளும் இல்லாம இப்படி நடந்திருக்கு. இது அல்லாஹ்ட வேலதான். அல்லாஹ் எங்கட கண்ண தொறந்திருக்கான். நீங்க நெனச்சத அப்துல்லாவுக்கு கொடுங்க டெடி" என்றான். அவனது பேச்சிலும் ஒரு தெளிவு இருந்தது.

•••••••••••••••••••••••••••••••••

(விடிவெள்ளி 18/06/2026)