எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 1 அக்டோபர், 2015

கவிஞர் ஈழகணேஷுக்கு................

வலம்புரி கவிதா வட்டத்தின் 20வது கவியரங்கு புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அரங்கில் 27-09-2015 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றபோது கவியரங்கத் தலைமையை ஏற்று நடாத்த கவிஞர் ஈழகணேஷுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்
 

- என்.நஜ்முல் ஹுசைன்



ஆழம் நிறைந்த சொல்லுக்கு
சொந்தக்காரன்
ஆளும் இவனது வரிகள்
எங்கள் நெஞ்சின்ஓரம் - ஓர்
ஆளும் இவனது பார்வையை விட்டுச்
செல்லான் தூரம்
நாளும் சூழலைப் போற்றிப் பாடும்
பாட்டுக்காரன்


வாழும் மனித நேயன்
எங்கள் சொந்தக்காரன்
வாழும் வகவ மூச்சுக்காற்றின்
பங்குக்காரன்
சூழும் எங்கள் சிக்கல் தீர்க்கும்
கெட்டிக்காரன்
எதையும் இதமாய் எடுத்துக் கொள்ளும்
பக்குவக்காரன்

நீளும் இவனது புகழைப் பட்டியல்
போட்டுச் சொன்னால்
போதும் இனிநாம் தலைமை ஏற்க
அவனை அழைப்போம்

ஆளும் கவியே ஈழகணேஷே தலைமை ஏற்பாய்
கோலும் ஏந்தி கொள்கை நாட்டி இதயம் அமர்வாய்

ஈழகணேஷ்
இன்றுனக்கு தலைமை
மறையவை எங்கள் முதுமை


வியாழன், 17 செப்டம்பர், 2015

ஈமானிய கவசத்தோடு………..







இது
றப்பு நாடு
இங்கு உன்
றப்பு நாடு

என்று
ஆண்டுதோறும் அழைக்கின்ற
அரபு நாடு

மக்கம்
பக்கம் வைக்கிறது
சொர்க்கம்

இதயத்துக்கும்
இஹ்ராம் கட்டி
வந்தவர்களெல்லாம்
வெற்றிபெற்றோர்
வர்க்கம்

கரை புரண்டோடும்
மக்கள் வெள்ளத்தில்
கறை
கரைந்து போகிறது

தேச
எல்லைக்கோடுகள்
களைந்து

பல
வண்ணப்பூக்கள்
வெள்ளைப்பூக்களாய்

இதயங்கள் எல்லாம்
இங்கே
ஒன்றாய் வைத்து
தைக்கப்படுகின்றன

மனதுக்குள் இருக்கும்
ஷைத்தான்கள்
உதைக்கப்படுகின்றன

தக்பீர் ஒலியின்
உன்னத நாதம்
அங்கே
ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது

ஒளி
பரப்பும் ஹாஜிகள்
இனி அதை
உலக
மூலை முடுக்குகளெல்லாம்
ஒலிபரப்புச் செய்வார்கள்

உலக சவால்களை
முறியடிப்பதற்காக
மனங்கள்
பக்குவப்படுத்தப்படுகின்றன

முஸ்லிம் உம்மத்தை
துவம்சம் செய்ய
உம்மத்தம் பிடித்து
அழைவோரே

விலகிப் போங்கள்

ஈமானிய கவசம் அணிந்து
ஹாஜிகள்
புறப்பட்டு வருகிறார்கள்

இனி இந்த உலகம்
அவர்கள் வசம்

-    என்.நஜ்முல் ஹுசைன்

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

மேமன் கவி


Memon Kavi: Man of Pakistani origin makes waves as Tamil poet










29-8-2015 அன்று இடம்பெற்ற 19வது வலம்புரி கவிதா வட்ட கவியரங்கிற்கு தலைமை தாங்க இலக்கிய வித்தகர் கவிஞர் மேமன் கவிக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் -

மேல்வாரியாய் எதையும்
செய்ய மாட்டான் - தன்
மேல் வாரிப் போட்டேதான்
முனைந்தே நிற்பான்
ஆழ்கடலில் மூழ்கி ஒரு
முத் தெடுக்கும்
ஆள்போலே இலக்கியத்தில்
இறங் கிடுவான்

அரிதான தகவல்களைப்
பிரித் தெடுத்து
அதற்காக மூளையையும்
பிழிந் தெடுத்து
பரிசாக கோத்தெடுத்துத்
தந்திடுவான்
அவனை
இலக்கிய
வித் தகன்; என்றால்
ஓப்பமாட்டான்

எங்கெங்கோ பரந்திருக்கும்
இலக்கியத்து
உறவுகளை
தன் உறவாய்
தான் நினைத்து
கை கோத்து
இலக்கியத்தில் சிற கடிப்பான்

நூல்களுக்குள்
தன் மனதை யேபுதைத்து
நாளும்
புதியவைகளைக் கற்று
தனை வடிப்பான்

இவன்
ஆற்றல் களாலே சிலிர்க்கும்
இந்தப் புவி
இவன்
எம் மனதை ஆட்சி செயும்
மேமன்கவி

கவிஞா மேமன்கவி
இனி -
கவியரங்கை  தலைமேலே
ஏற்றே நடத்து
எங்கள் கவிஞர்களின்
எடைகளையே
சொல் நீ நிறுத்து

எங்கள் இதயங்களை
உன் அருகே
இழுத்தே நிறுத்து

-     என். நஜ்முல் {சைன்

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

மா மேதை அப்துல் கலாம்



ஓர்
ஒப்பாரிப் பாட
வரவில்லை

உங்களை
ஒப்பிட்டுப் பார்க்க
வந்தேன்

அப்துல் கலாம்
அவர்களே

இந்தியாவுக்கே
உப்பிட்ட உங்களை
ஒப்பிட்டுப் பார்க்க
வந்தேன்

அவன் அள்ளி வழங்கிய
பாரி
நீங்களோ மக்களுக்காய்
எல்லாவற்றையும் வைத்துவிட்டு
கொஞ்சமாய்
கிள்ளி எடுத்த
பாரி

அவர்கள்
அணு அணுவாய்
அனுபவித்தார்கள்

நீங்கள்
அணுவைத்தானே
அனுபவித்தீர்கள்

நீங்கள்
ஜனாதிபதியாய் வாழ்ந்திருக்கிறீர்கள்

4.
பலர்
செத்துப் போயிருக்கிறார்கள்

இந்தியாவுக்கே
குடைப் பிடித்த நீங்கள்
கிழிந்த குடை தைக்கும்

சகோதரருக்காய்
ஒரு
கடை கூட திறக்காமல்....

ஆப்பிரகாம் லிங்கன்
ஜனநாயகத்துக்கு
வரைவிலக்கணம்
சொல்லப்போய்
வார்த்தைகளை
வீணாக்கியுள்ளார்

'மக்களின்
மக்களால்
மக்களுக்காக'  என்று

உங்களைக் கண்டிருந்தால்
அது
அப்துல் கலாம் என்றிருப்பார்

அப்துல் கலாமே
உங்களோடு ஒப்பிடுவதற்கு
உங்கள் அருகில் கூட
ஒருவருமில்லையே

அதனால் நான்
ஒப்பிட்டுப் பார்க்க வரவில்லை

உங்களுக்கில்லா
ஒப்பாரி யாருக்கென்று
ஒப்பாரிப் பாடத்தான்
வந்தேன்

சனி, 18 ஜூலை, 2015


வசந்தம் எப்.எம். வானொலி நோன்புப் பெருநாள் தினமான 18-07-2015 அன்று காலை 8.30 க்கு எனது குரலில் ஒலிபரப்பிய கவிதை







தூசு தட்டி
துப்பரவாக்கி வைத்திருந்தோம்
எங்கள் மனங்களை
ரமழானே
நீ வந்து எங்கள் இதயங்களில்
இபாதத் செய்யவேண்டும்
என்பதற்காய்

நீ வந்தாய்
ரமழானே நீ வந்தாய்

பாவிகளாய் இருந்த நாங்கள்
ஞானிகள் ஆனோம்

கல்லாய் இருந்த எங்களை
வைரக்
கல்லாய் ஜொலிக்கச் செய்தாய்
என்று
பெருமை கொண்டோம்

சொர்க்கத்தின் வாரிசுகளாய்
எங்கள் பெயர்களையும்
எழுதிச் சென்றாய்
என்று

இறுமாப்புக் கொண்டோம்

எங்கள் கால்களை
ஷவ்வாலிடம்
ஒப்படைத்துவிட்டுச் சென்றாயே
ரமழானே

ரமழானை
அனுபவித்த சுகந்தத்தில்
இன்று
ஈதுப் பெருநாள் கொண்டாடுகிறோம்

ஈதுப் பெருநாள்
நாம் கொண்டாட
இது பெருநாளா என்று
திண்டாடும் ஒரு கூட்டம்

ரமழானில் நாம்
தின்பதற்கான வயிறுகளைக்
கட்டிப்போட்டோம்

இந்த
ஷவ்வால் பெருநாளிலும்
தின்பதற்கான வயிறுகளைத்
திறக்க முடியாது
ஒரு கூட்டம்

சொர்க்கத்தில்
எங்கள் பெயர்களும் இருக்கிறதா

உறுதிப்படுத்திக் கொள்ள
அந்த
ஏழைகளின் வயிறுகளைப் பாருங்கள்

அந்த வயிறுகளும்
நிரம்பிய பின்புதானே
ரமழான் எங்கள் இபாதத்களை
சொர்க்கத்தில் ஒப்படைக்க
தூக்கிச் செல்லும்

ஈதுப் பெருநாள்
இது உங்களுக்கும் பெருநாள்தான் என
ஏழைகளிடம்
பிரகடனப்படுத்துங்கள்

ஷவ்வால் தன்
செவ் வாய்த்திறந்து
கூறும்
நாங்கள்
சொர்க்கத்தின் சொந்தக்காரர்கள்
என்று !

ஈத் முபாரக்

-    என். நஜ்முல் ஹுசைன்

செவ்வாய், 31 மார்ச், 2015





free website counter

புதன், 25 மார்ச், 2015

இஸ்லாமிய கீதம் - இயற்றியவர் : என். நஜ்முல் ஹுசைன். பாடியவர்: ஈழத்து இசை முரசு கலைக்கமல்
https://www.filepicker.io/api/file/mVqhhhRKa1edcCdFAxRw