எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 6 அக்டோபர், 2017

கவிதாயினி யோகராஜன் சுசீலா




வலம்புரி கவிதா வட்டத்தின் (வகவம்) 42வது கவியரங்கு 05-10-2017 அன்று நடைபெற்றபோது கவியரங்கைத் தலைமைத் தாங்கி நடாத்த கவிதாயினி யோகராஜன் சுசீலாவுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் - என் நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்



 
புலிபோலே பாய்ந்து வரும் பெண்ணாள் - இவள்
பொங்கிடுவாள் கொடுமைகள் முன்னால்
வலி மிகுந்தாள் பெண்கள் வலி
கண்டால்
வார்த்தைகளால் சுட்டெரித்துக்
கொல்வாள்
வரிகளிலே ஏந்திய இவள்
சொல் வாள் 

இல்லை இவள் கவிதையிலே வேஷம்
இதயத்தைப் பிழிந்திடுவாள் ;
பேசும்
சொல்லுக்குள்ளே பொங்கும்
ரோஷம்
சோர்வில்லாள்; இவள் முன்னே 
எம் கவிதை கூசும்

உளவியலைப் பொருட்டாக கொண்டாள்
உலவுகின்ற மனத்துயரை
தீர்க்கும்
உறுதியினை தலைமேலே
வைத்தாள்
உம்மத்தம் செய்து திரிவோரை
அச்சமின்றி வெளிப்படையாய்
வைதாள் 

வகவத் திற்கிவள் வந்தாள்
மயிலா
தோகை விரித்தாடுகின்ற
குயிலா
வாகை சூடும் இவள்
வை சுசீலா
உன் தலைமையிலே சிறப்பை
வை சுசீலா 

யோகராஜன் சுசீலாவின்
தலைமை
காட்டிடுவாள் கவிதையிலே
இளமை
தொட்டிடுவோம் இவள்
கொட்டும் உளமை
வகவத்திற் கிவள் வருகை
பெருமை!

புதன், 20 செப்டம்பர், 2017

கவிஞர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ்

வலம்புரி கவிதா வட்டத்தின் 41 வது கவியரங்கம் 05/09/2017 அன்று நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடாத்த கவிஞர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்
- என் நஜ்முல் ஹுசைன்,  தலைவர்,  வகவம்

சமுதாயம் சீர் பெறவே வேண்டும் என்ற
சிந்தனையை வைத்திருக்கும்
சட்டத்தரணி
அமுதான இலக்கியத்தைக் கூட கையில்
ஏந்தியதால் புகழ்பெறுவார் இந்தத் தரணி
நிமிராதோ வளைந்திருக்கும்
மனித உள்ளம்
என்று நிதம் எண்ணுவதால் வருவார் பவனி
தமிழாலே துணை நிற்கும் கவிதை நெஞ்சே
வட்டத்தில் சட்டமிடும் இவரை கவனி

வேலைப் பளு எனும் சுமைக்குள்
மூழ்கி இவரும்
வேகமென வேஇயங்கி வந்த போதும்
வேளை வரும் போதெல்லாம்
தாளை எடுத்து
தமிழ் வடித்தார் வடித்தவைகள்
நெஞ்சம் கவரும்
தன்னையுமே வகவத்தோடிணைத்து இங்கே
கவிதைக்காய் குரல் கொடுக்க
வந்தார் இவரும்

சட்டத்தரணி ரஷீத் எம்
இம்தியாஸ் -  இன்று
வகவ கவியரங்கு உங்களிடம்

பெறுங்கள் சபாஷ்
எங்கள் கவிஞர்கள் கவிதைக்கு
அணியும் சேர்த்து
காட்டிடுங்கள் இன்று நீங்கள்
இங்கே பிக்போஸ் !



திங்கள், 28 ஆகஸ்ட், 2017

சிறுகதை - " இப்படி செஞ்சிட்டீங்களே...............!"

இன்று 25/8/2017 வெள்ளிக்கிழமை "விடிவெள்ளி" பத்திரிகையில் இடம்பெற்ற எனது சிறுகதை

இப்படி செஞ்சிட்டீங்களே...............!
 

                                                                  என். நஜ்முல் ஹுசைன்

ஸ்ரியாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கைகளைப் பிசைந்து கொண்டு நின்றாள். தனது தாய் இப்படி செய்வாள் என்றும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..இப்போது அவர் வந்து விடுவார்.

அதற்குள் இதனை சரி செய்ய முடியுமா? முடியாது என்று நஸ்ரியாவுக்குத் தெரியும்.

'என்ன உம்மா இப்படி செஞ்சிட்டீங்க ?' வேதனை கலந்த கோபத்தோடு நஸ்ரியா கேட்டாள். தாய் பேந்த பேந்த விழித்தாள்.

'சரி சரி கொஞ்சம் சீக்கிரமாக எறங்கி வாங்க.....' என்று கூறியவாறே தனது தாயை கைத்தாங்கலாகப் பிடித்தாள். அவளைப் பிடித்தவாறே குளியலறைக்கு அழைத்துச் சென்றாள்.

அவளது தாய் நடுங்கியவாறு அவள் இழுத்த இழுப்புக்குச் சென்றாள். அப்படி போய்க்கொண்டிருக்கும் போதே அன்வர் வந்து விட்டான்.
களைப்போடும், அலுப்போடும் அவன் இருந்தது அவனது முகத்திலேயே தெரிந்தது.

'நஸ்ரியா இன்னக்கி ஒபீஸ்ல சரியான வேல. எனக்கு கொஞ்சம் டீ தாங்க' என்று சொல்லிக் கொண்டே அவர்களது அறைக்குள் போனான்.
நஸ்ரியாவுக்கு ஒரு நாளும் ஏற்படாத ஒரு நடுக்கம் ஏற்பட்டது. தனது கணவர் பெரிய கோபக்காரர் அல்ல என்றாலும் கோபப்படாதவரும் அல்ல என்பது அவளுக்கு நன்கு தெரியும்.

நஸ்ரியாவுக்கு திருமணம் முடிந்து எட்டு மாதங்கள்தான் ஆகின்றன. தந்தை இல்லை. அவளது ஒரே சகோதரன் பாரூக் கஷ்டப்பட்டு நஸ்ரியாவுக்கு திருமணம் முடித்து வைத்தான். அன்வரோடு நஸ்ரியா தனிக்குடித்தனம் வந்து விட்டாள்.

கஷ்டப்பட்டு செய்து வைத்ததால் நஸ்ரியாவின் குடும்ப வாழ்வில் சுமையாகிப் போகக்கூடாது என்பதற்காக வயதான தனது தாயை தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டான் பாரூக்.

தனது மகளைப் பார்க்க ஆசையாக இருக்கிறது என்று தாய் விடுத்த வேண்டுகோளை ஏற்று நஸ்ரியாவின் வீட்டுக்கு அழைத்து வந்தான் பாரூக். தாயை கண்டதும் நஸ்ரியா கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள். அவள் அவளது தாயின் மேல் உயிரையே வைத்திருந்தாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்ட காரணத்தால் எப்போதுமே தாயின் நிழல் போலத்தான் நஸ்ரியா இருப்பாள்.

அவளது திருமண வாழ்க்கை தாயாரிடமிருந்து அவளைத் தூரமாக்கியது.
அதுதான் தாயைக் கண்டதும் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் .

'நானா ரெண்டு நாளைக்காவது உம்மாவ என்கிட்ட உட்டுட்டுப் போங்க. எனக்கு ஆசையா இருக்கு' என்றாள்.

'வேண்டாம்மா இப்ப அவங்கள பாக்கிறது ஒங்களுக்கு கஷ்டம்' என்று அவளது சகோதரன் கூறியும் நஸ்ரியாவின் பிடிவாதத்தால் விட்டுவிட்டுப் போனான்.
நாநா சொன்னது போல பெரிய கஷ்டம் ஒன்றும் இருக்கவில்லை. அவர்களது பாட்டில் சாப்பிட்டு விட்டு தூங்குவார்கள். முன்பு போல பேச்சு இல்லை. சில நேரம் மலசலகூடத்துக்குக் கூட்டிக்கொண்டு போகவேண்டும். இன்று பகல் சாப்பாட்டுக்குப் பிறகு தள்ளாடி தள்ளாடி நஸ்ரியாவின் அறைக்கு வந்தார். மெதுமெதுவாக பழைய கதைகளைப் பேச ஆரம்பித்தார். நஸ்ரியாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவளும் சில விஷயங்களை நினைவுப்படுத்தி பேசிக்கொண்டிருந்தாள். அவர்களது பேச்சு வார்த்தை நடந்தது நஸ்ரியாவின் கட்டிலின் மேல். பேசிக் கொண்டிருந்தவாறே தாயார் தூங்கிப் போனார். பரவாயில்லை கொஞ்சம் தூங்கட்டும் என நஸ்ரியா தனது வேலைகளை கவனிக்கப் போனாள்.

தனது வேலைகளை முடித்துக் கொண்டு அறைப் பக்கம் வந்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அறைக்குள் வித்தியாசமான வாசம். நஸ்ரியா மூக்கை உறிஞ்சினாள். அது வாசமல்ல் துர்நாற்றம். பதறிக்கொண்டு பார்த்தாள். அவளது உம்மா கட்டிலை அசுத்தப்படுத்தியிருந்தாள். அவளது நாநா சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் நஸ்ரியாவுக்குப் புரிந்தது.
வயதானவள்; தன் உணர்விழந்திருந்தாள். முதன்முறையாக அவள் தனது தாயின் மீது கோபப்பட்டாள். இப்போது அவர் வரும் நேரம். இதையெல்லாம் கழுவி காயவைக்க முடியாது. படுக்கையை எதுவும் செய்யவும் முடியாது.

'நஸ்ரியா' அவளது கணவன் முதன் முதலாக கத்தினான். உம்மா செய்த காரியத்தால் எனக்கே கோபம் வந்ததே. அவருக்கு வராமல் இருக்குமா. என்ன சொல்லி சமாளிக்கப் போறன் என்று யோசித்துக் கொண்டே உம்மாவை ஒரு நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு அறைக்கு ஓடினாள்.

இப்போதுதான் அவளது உம்மாவுக்கு சரியான நினைவு வந்திருந்தது. தான் விட்ட பிழை அவளுக்குத் தெரிந்தது. அவள் வேண்டுமென்று எதையும் செய்யவில்லை. என்ன செய்ய அவளது கட்டுப்பாட்டை அவள் இழந்து விட்டாள்.

அறைக்குள் ஓடிய நஸ்ரியாவுக்கு அவளை அறியாமலேயே சிறிய காய்ச்சல் ஏற்பட்டிருந்தது.

'நஸ்ரியா கூப்பிட்டது காதுல விழலையா' மறுபடி அன்வர் கத்தியபோது நஸ்ரியா உள்ளே போய்விட்டாள்.

'இல்லங்க வந்து......அவங்க. ...' தடுமாறினாள் நஸ்ரியா.
'நான் ஏன் கூப்பிட்டன் என்று தெரியாம என்ன பொலம்புறீங்க....நான் காலைல இங்க வச்சிட்டுப் போன பைல் எங்க. ...? '

நஸ்ரியாவுக்கு ஒன்றும் புரியவில்லை. 'அத நான் தான் எடுத்து வச்சேன். ..... இந்தாங்க ..' என்று வைத்த இடத்திலிருந்து எடுத்துக் கொடுத்தாள்.

'அதுதானே நானும் பயந்துட்டன். இது முக்கியமான பைல்' அன்வர் இயல்பு நிலைக்கு வந்திருந்தான்.

'சரி, டீ கொண்டு வந்தீங்களா .....' என்று கேட்டுக் கொண்டே அன்வர் இப்போதுதான் நஸ்ரியாவின் முகத்தைப் பார்த்தான். அதில் வியர்வை படிந்திருந்தது. ஓர் அச்சமும் தெரிந்தது.

'என்ன நஸ்ரியா பேயறைஞ்ச மாதிரி இருக்கீங்க. உங்களுக்கு ஒடம்பு சரியில்லையா' என்று கேட்டவாறே அவளது நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.

'இல்ல.... உம்மா...' அவள் எதையோ சொல்லத் தயங்கினாள். அப்போதுதான் அன்வர் அறைக்குள் வீசிய துர்நாற்றத்தை உணர்ந்தான்.

'சொல்லுங்க நஸ்ரியா. என்ன நடந்திச்சு. என்ன நாத்தம்'
நஸ்ரியா உருக்குலைந்து போனாள். கணவனின் அந்தக் கேள்விக்கு நஸ்ரியாவால் உடனடியாக தெளிவான பதில் சொல்ல முடியவில்லை.
துண்டுத் துண்டாக எதை எதையோ சொன்னாள். தனது தாயை குற்றவாளி கூண்டில் ஏற்றுவது அவளுக்கு சங்கோஜமாக இருந்தது.

அவள் தெளிவாக சொல்லாவிட்டாலும் அன்வர் நடந்தது என்ன என்பதை புரிந்து கொண்டான்.

அன்வர் நஸ்ரியாவின் கைகளைப் பற்றினான்.அதிலே ஒரு பரிவு இருந்தது.

'இதுக்காகவா கவலபடுறீங்க...' அன்வரின் தொனியில் அன்பு இருந்தது.

'நஸ்ரியா எங்க உம்மா வாப்பா எங்க வீட்ட அசுத்தப்படுத்தினா, படுக்கைய அசுத்தப்படுத்தினா உண்மையிலேயே அது எங்களுக்கு பெரிய பாக்கியம்.
அவங்களுக்கு வயசு போக போக அவங்க கொழந்தய போல. நாங்க கொழந்தையா இருக்கிற நேரம் எத்தனை தடவ அவங்க மேலெல்லாம் நஜீஸாக்கியிருப்போம். படுக்கய அசுத்தமாக்கியிருப்போம். எந்த உம்மா, வாப்பாவாவது தங்கட கொழந்தய அதுக்காக ஏசியிருக்காங்களா. பதிலுக்கு வாரி அணைக்க இல்லையா. நாங்க கொஞ்சம் பெரிய புள்ள ஆன நேரத்தில கூட தெரியாம கட்டுல்ல சிறுநீர் கழிச்சிருக்கோம். எங்க உம்மா, வாப்பா அத யாருக்கும் தெரியாம கழுவி போட இல்லையா.

அந்த உம்மா, வாப்பாக்கு நாங்க எப்ப கைம்மாறு செய்றது . நாங்க எத்தன மொற செஞ்சாலும் அவங்க செஞ்சதுக்கு ஈடாகுமா .....'

அன்வர் பேசுவதை கேட்டு நஸ்ரியா பூரித்துப் போனாள்.
சாரத்தை அணிந்து கொண்ட அன்வர் பெட் சீட்டை நானே கழுவுறேன் என்று நஸ்ரியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தி எடுத்துச் சென்றான்.

தனது மகளை மருமகன் அடித்து விடுவானோ என்று பயந்து போய் வந்த நஸ்ரியாவின் தாய் அன்வரின் பேச்சைக் கேட்டு கதவருகே கதறியழுது கொண்டிருந்தாள்.
.............................................................................................................................

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

கவிஞர் ஆறுமுகம்


திங்கள், 17 ஜூலை, 2017

கவிஞர் ஏ. பீர் முகம்மது

வலம்புரி கவிதா வட்டத்தின் 39 வது கவியரங்கு 8-7-2017 அன்று நடந்தபோது கவியரங்கினை தலைமையேற்று நடாத்த கவிஞர் ஏ. பீர் முகம்மது அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்புவிடுத்தேன்.
- என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்


பேராற்றல் கொண்ட ஒரு
குடும்பத்தின் உறுப்பினராய்
பேர் பெற்ற ஒரு கவிஞர்
பேச்சாளர் எழுத்தாளர்
கூர் கொண்ட பேனாவின்
தேன் நாவின் சொந்தமிவர்
சீர்வரிசை யாக இவர்
வகவத் தோடொன்றிணைந்தார்
பீர்முகம்மத் பெற்றதினை
எங்களுக்குப் பெருமை என்பேன்


கிழக்கிலங்கை மண்ணுக்கே
உண்டான செழுமை பெற்று
முழக்கமிட்டு இலக்கியத்தில்
முத்திரையும் பதிப்பவராம்
சளைக்காத தன் பேச்சில்
சுவையூட்டி மனங்கவரும்
வித்தகராம்
கலைக்காக மட்டுமல்ல கல்விக்கும் இவர் சேவை
கல்வி
அதிகாரியாய் இருந்து
காட்டிய இவர் திறமை
மாணவர்
மனங்களெல்லாம் மணக்குதம்மா


கவிதை வெள்ளம் பாய்கிறது
வகவத்தில் என்றறிந்து
நனைவதற்கு இவர் வந்தார்
உங்கள் கவிதையிலே நனைவதற்கு
நாமுள்ளோம் என்றுரைத்து
கவிதை
தலைமையினை இன்று
தந்தோம்
கவிஞரே பீர்முகம்மது
ஊற்றுங்கள் எங்கள் காதுகளில்
உங்கள் அக மது
எங்கள் அகமது வைப்போம்
உங்கள் பேர் முகமது

   - என். நஜ்முல் ஹுசைன்


வியாழன், 6 ஜூலை, 2017

கழுதைகளிடம் ஏன் கற்பூரம்?



மனது வலிக்கிறது
பாடப் புத்தகங்களைக் கிழித்து
கை துடைக்க
தரும்போது

அறிவூட்டிய
ஒரு தாயல்லவா
கழுத்து நெறித்து
கொல்லப்படுகிறாள்

இன்னும்
பல பிள்ளைகளைப்
பெற்றெடுக்கத் தகுதியானவள்

அறிவிலிகளின் கைகளில்
அகப்பட்டு
சின்னாப்
பின்னமாக்கப்படுகிறாள்

பாவத்தில் எங்களுக்கும்
பங்கு வைத்து

படித்த முட்டாள் பிள்ளைகளும்
இளந் தாயை
முதியோர் இல்லத்தில்
ஒப்படைத்து

இந்தத்  தாயை
கொலை செய்த காரணத்தால்
எத்தனை அறிஞர்கள்
கரு கலைக்கப்பட்டார்கள்

சரியாக கணக்குப் பார்த்து
பணத்தைப் பெற்ற
ஹோட்டல் முதலாளி
சொல்லிக் கொடுத்த
தாயை
காலுக்குக் கீழல்லவா
போட்டுள்ளார்

தயவுசெய்து
படித்த பாடப் புத்தகங்களை
சிறு தொகைக்காய்
சீனி சுற்ற கொடுக்காதீர்கள்

எத்தனையோ
ஏழை தேனிகளின்
தேன்
அங்கே புதைந்திருக்கும்போது

நாளைய பெரும் முதலீட்டுக்காய்
அறிஞர்களாக துடித்துக் கொண்டிருக்கும்
அந்த அப்பாவிகளிடம்
ஒப்படையுங்கள்!

- என். நஜ்முல் ஹுசைன்
05/07/2017