எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 9 பிப்ரவரி, 2011

கவிக்கோவின் கவிதை

“பால் நகையாள்
வெண்முத்துப் பல் நகையாள்
கண்ணகியாள் கால் நகையால்
வாய் நகைபோய்க்
கழுத்து நகை இழந்த கதை “.

அருஞ்சொற்பொருள் :
பால் நகையாள் = பால் உணர்ச்சி தோன்றுகிற மாதிரி சிரிக்காதவள்
வெண்முத்துப் பல் நகையாள் = முத்துப் போன்ற பற்களை உடையவள்
கால் நகையால் = காற் சிலம்பினால்;
வாய் நகை போய் = புன்னகை மறைந்துப்போய்
கழுத்து நகை = மாங்கல்யம் (தாலி)

கவிக்கோவின் இக் கவிதை குமுதம் சஞ்சிகையில் எழுபதுகளில் இடம்பெற்ற போது இதனை வாசித்த எனது நண்பர் தமிழ்த் தென்றல் எஸ். எம். அலி அக்பர் மாதவி இல்லாத
சிலப்பதிகரமா? இக் கவிதையில் ஒரு எழுத்தை மாற்றுவதன் மூலம் மாதவியையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம் என்றார். அவர் இதனை இப்படி மாற்றினர்.

“பால் நகையாள்
வெண்முத்துப் பல் நகையால்
கண்ணகியாள் கால் நகையால்
வாய் நகைபோய்க்
கழுத்து நகை இழந்த கதை “.

பால் உணர்ச்சி தோன்றுகிற மாதிரி சிரிக்கக் கூடிய வெண் முத்துப் போன்ற
பற்களை உடைய மாதவியால் கண்ணகியாள் கால் நகையை விற்கப்போய் தனது கணவனை இழந்த கதை.

- என். நஜ்முல் ஹுசைன்

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

கை தவறி போகும் டயரி



வந்தது ஜனவரி
இனி வரும் ஒரு கூட்டம்
எடுப்பதற்கு டயரி

கடந்த வருடம்
கெஞ்சிக் கூத்தாடிப் பெற்ற
டயரிகளில் பல
பட்டினியால் செத்துப் போயின

உணர்வுகளைச் சுமப்பதற்காய்
புது வருடத்தில் புதிய குழந்தைகளாய்
ஆவலோடு பிறந்தன

உணர்வற்ற பலரது கைகளில் சிக்கி
நடைப் பிணமாய் போயின

கதையையும், கவிதையையும்
ஏன் காவியத்தையும்
சுமக்கவேண்டிய டயரிகள்
பரவாயில்லை
கணக்கையாவது சுமந்திருக்கலாம்

இப்படி அநியாயமாய்
பட்டினிப் போட்டுவிடீர்களே ?

ஒவ்வொரு தினச்செவியிலும்
உங்கள் பேனா(நா)க்கள்
ரகசியம் சொல்லும் என்று
எதிர்பார்த்து ஏமாந்துப் போயின

எழுதத் தெரியாதவர் கைகளில்
டயரி வெறுமனே ஒப்பனை

உபயோகிக்கத் தெரிந்தவருக்கு
கடந்த காலத்தைக் காட்டி நின்று
சொல்லும் கதைகள்தான் எத்தனை ?

ஏன் டயரிகள் என்று தெரியாத பலரும்
ஏன்தான் உயிரை விடுகிறார்களோ
டயரிகளுக்காய்

எழுதத் தெரியாத அநியாயக்காரர்களே
இனி கேட்டுச் செல்லாதீர்கள்
டயரிகள்

வேண்டுமென்றால்
ஒரு கொப்பிப் புத்தகம்
வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்

- என். நஜ்முல் ஹுசைன்

புதன், 1 செப்டம்பர், 2010

நோன்பு பிடிக்காதவன்

அவன்

நோன்பு பிடிக்கவில்லை

ஏனெனில்

அவனுக்கு நோன்பை பிடிக்கவில்லை

இல்லை இல்லை

நோன்புக்கு அவனைப் பிடிக்கவில்லை

புதன், 17 மார்ச், 2010

சிரிக்கச் சொன்னவன் ஸ்ரீதர்

'ஒரு
சோகமான செய்தி'
தொலைபேசியின்
அடுத்த முனையில்
ஸ்ரீதர்

வேலைப்பளுவுக்கு மத்தியிலும்
அந்த
சோகச் செய்தியை
தாங்கிக் கொள்ள
என்னை நான் தயார் செய்துகொண்டு
'என்ன செய்தி'
என்றேன்

ஒரு பிரபல கவிஞரின்
பெயரைக் குறிப்பிட்டு
'அவன் என்ன சொன்னாலும்
கேட்காமல்
மறுபடியும் நூல் வெளியிடுகிறானாம்'

சொல்லிச் சிரித்தான்
ஸ்ரீதர்

ஸ்ரீதர்
பெயரிலேயே சிரிக்கச் சொன்னவன்

செயலிலே
நம்மை எல்லாம்
சிரிக்க வைத்தவன்

உண்மையைச் சொல்கிறேன்
ஒரு நாள் கூட
அவன் என்னை
அழ வைத்ததில்லை

இன்று மட்டும்
நான் எப்படி அழ..........

ஸ்ரீதர்
எம்மை விட்டும்
மறைந்துவிட்டானாம்
நண்பர்கள் சொன்னார்கள்

என்றாலும்
மனம் இன்னும் அதை
ஏற்றுக்கொள்ள மறுக்கிறது

இல்லை இல்லை
ஸ்ரீதர்
இறந்து போகவில்லை

பலநாட்கள்
ஸ்ரீதரை காணாமலிருந்திருக்கிறேன்

தொடர்பில்லாமல் இருந்திருக்கிறேன்

அது போல்தான் இன்றும்
நான் அவனைக் காணவில்லை

ஆனாலும் அவன்
காணாமல் போகவில்லை

இப்படி சொல்லித்தான்
என் மனதுக்கு
ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன்

அழுகின்ற என் நண்பர்களே
நீங்களும் இப்படி உங்கள் மனங்களுக்கு
ஆறுதல் சொல்லிக் கொள்ளுங்கள்

நண்பா ஸ்ரீதரா

Diana மறைந்தபோது
Diana
Die ஆனாள்
என்று நான் பாடிய கவிதையை
காணும்போதெல்லாம்
சிலாகித்துக் கூறியவனே

நீ இன்று
Die ஆனாயே

ஐயகோ
நண்பா ஸ்ரீதரா

நீ வெறுமனே
இறந்து போகும்
Die ஆகவில்லை

என்றுமே
எங்கள் எண்ணங்களிலே
வண்ணக் கலவையாய்
நிலைத்திருக்கும்
Dye ஆனாய்
Dye ஆனாய்


[கொழும்பு இலக்கிய வட்ட ஏற்பாட்டில் 14 . 03 .2010 அன்று இல. 176 , புதுச் செட்டித் தெரு, கொழும்பு 13 ல் இடம்பெற்ற மறைந்த "பல்கலைச் செல்வன்" ஸ்ரீதர் பிச்சையப்பா அஞ்சலி நிகழ்வின்போது என். நஜ்முல் ஹுசைனால் வாசிக்கப்பட்ட கவிதை]

செவ்வாய், 17 நவம்பர், 2009

Map IP Address
Powered byIP2Location.com

திங்கள், 19 அக்டோபர், 2009

அரசியல்வாதிகள்

எங்களை
வாழவைப்பதாக
அவர்கள் வாக்களிக்கிறார்கள்
அவர்களை வாழவைக்க
நாங்கள்
வாக்களிக்கிறோம்

புதன், 14 அக்டோபர், 2009

தொலைபேசி

பணத்தை
மூச்சை
தொலை -

பேசி