எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 17 மே, 2018

கலாபூஷணம் பாணந்துறை எம். பி. எம். நிஸ்வான்




வலம்புரி கவிதா வட்டத்தின் 48 வது கவியரங்கு  29-04-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு  கொழும்புஅல் ஹிக்மா கல்லூரியில்  நடைபெற்றபோது கவியரங்கை தலைமை தாங்கி நடாத்த பன்னூலாசிரியர் கவிஞர் கலாபூஷணம் பாணந்துறை எம். பி. எம்.  நிஸ்வான் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் -
என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம்


பல பட்டம் பெற்ற திவர் எழுத்து - அவை
கனியாகி இருக்கிறதே பழுத்து
உலவிடுவார் நெஞ்சத்தில் இனித்து - இன்றும்
இலக்கியத்தில்  நல்ல இடம் பிடித்து

வயதாகவே இல்லை இவர்க்கு - இவர்
வாய்வீச்சும் அழைக்கிறதே போர்க்கு
அயர்வகற்றும் இவர் கவிதை பலர்க்கு - எனினும்
இவரை நாம் ஒப்பிடலாம் மலர்க்கு

காதிநீதி பதியான மனிதர்  -பல
நீதிக் கதைகளில் மிளிரும் புனிதர்
போதனையால் பிணக்குகளை நீக்கி - பிரிந்தோர்
பலபேரை சோ;த்து வைத்த சித்தர்

கூர்மதியோ டியங்குகின்ற ஒரு மான் - கொள்கைகளை
செய்திடவே மாட்டாரே குர்பான்
பேர் இவரும் வைத்தாரே இன்ஸான் - சுறுசுறுப்பாய்
இயங்குபவர் பாணந்துறை நிஸ்வான்

வந்தாரே கவியரங்கை ஏற்க - தன்
கவியாலே கவிஞர்களை தூக்க
பாணந்துறை நிஸ்வானை கேட்க
தயாராவோம்; துன்பங்கள் போக்க

கவிஞர் கலாபூஷணம்
எம்.பி.எம். நிஸ்வான்
இனி கவியரங்கு உங்களுக்கு
தமிழ் இன்பம் எங்களுக்கு!

செவ்வாய், 27 மார்ச், 2018

இதயத்துள் வாழ்பவரே ஈஸ்வரன் ஐயாவே !







இதயம் கனத்தேதான் இங்கே பாட வந்தேன்
ஈரவிழி
துடைத்தே ஐயா ஈஸ்வரனை தேடி
வந்தேன்
உதயம் என்றிருந்தால் மறைவும் அங்கிருக்கும்
ஊமையாய்
போனோமே உங்களையே மறையவிட்டு

ஈஸ்வரனே
பெருமகனே இதயத்துள் வாழ்பவரே
ஈனக்குரல்
எடுத்தே நாங்கள் புலம்புகின்றோம்
தூசாகிப்
போனோம் நாம்; துரும்பாகித் தான்போனோம்
தூய மனததனைத் தேடி அலைகின்றோம்

மானிடரா
நீங்கள் இல்லை ஒருபடிமேல் சென்றவரே
மானிடரின்
இடர்கண்டு துடைத்திடவே துடித்தவரே
கூனிடவே
வைக்காமல் வறியோரை ஆதரித்து
குறை தீர்த்து வைத்த குணம் குவலயத்தில்
யார்க்கு வரும் ?

கோடிபணம்
வைத்திருந்தும் கோடீஸ்வரன் 'பணி'வினிலே
கோடியிலே
நிற்க வைத்து தலைகுனிய வைக்காமல்
நாடிவந்த
பேர்களது நாடியினைத் தானறிந்து
தேடிச்
சென்று கொடுத்தவரே தேடி உம்மை அலைகின்றோம்

 வியாபாரக்
கடலினிலே முத்தெடுத்து மகிழ்ந்திருந்தும்

வியப்புறவே
செய்தீர்கள் இலக்கியத்தி லேஜொலித்து
தயாராகவே
வந்தோம் உங்களது நகைச்சுவைகள்
தேன்சொட்டும்
உரையினிலே எமை மயக்கி நாம்
செல்ல

தந்தைவழி
வந்ததுங்கள் உயர்பண்பு ஐயாவே
தகைமைசால்
ஈஸ்வரனே தகைமையினை மதித்தவரே
எந்தன்மகள்
வக்கீலாய் ஆனதென அறிந்தவுடன்
அனுப்பிவைத்து
பரிசினையே எங்களையே குளிரவைத்தீர்

என்கவிதை
தான் கேட்க ஆவலென சொன்னீர்கள்
இக்கவிதை
தனைக் கேட்க நீங்கள்இலை என்
சொல்வேன்
இன்கவிதையால்
வாழ்த்தி இன்புறவே நானிருந்தேன்
இரங்கல்
கவிபாட  வைத்து
விட்டுச் சென்றீர்கள்

இதயங்கள்
வென்றவரே வீ.டி.வீ
பெருமகனே
ஈஸ்வரனே
ஐயாவே எங்கேயும் செல்லவில்லை
விதையாக
வேநீங்கள் எம்மனதில் உள்ளீர்கள்
விதைத்தோம்
நாம் எம்மனதில் ஈஸ்வரன் எனும் சொல்லை

 உங்களையே
மறையவிட்டு துயருற்றோர் எண்ணிக்கை

கணக்கினிலே
அடங்காது; எல்லோர்க்கும் சொந்தம்தான்
தங்கமகனாரே
இனம்கடந்த பெருமகனே
தாங்கவில்லை
துயரம்தான்; இன்றைக்கும் நாம் அழுவோம்

எந்நாளும்
உங்கள் புகழ் இம்மண்ணில் நிலைத்திருக்கும்
எம்மனதில்
உங்கள் பேர் என்றென்றும் நிறைந்திருக்கும்
கண்ணோடும்
நீருக்குள் உங்களது நிழலிருக்கும்
ஐயாவே ஈஸ்வரனேஎன் கவிதைக்கும் உயிரிருக்கும்
!

                                                                -              என். நஜ்முல் ஹுசைன்

(கம்பளைதாசனின்
முத்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் 18.03.2018 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 க்கு கொழும்பு 12, பிரைட்டன்
ரெஸ்ட் ஹோட்டலில் இடம்பெற்ற மறைந்த தேசபந்து, அறங்காவலர்
தெய்வநாயகம்பிள்ளை ஈஸ்வரன் பெருந்தகையை நினைவுகூர்ந்து
இடம்பெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்தில் பாடப்பட்ட இரங்கல் கவிதை)

செவ்வாய், 13 மார்ச், 2018

கவிஞர் எஸ். தனபாலன்

வலம்புரி கவிதா வட்டத்தின் 46 வது கவியரங்கு 01-03-2018 அன்று கொழும்பு, அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றபோது கவியரங்கைத் தலைமையேற்க கவிஞர் எஸ். தனபாலனுக்கு நான் இவ்வாறு அழைப்புவிடுத்தேன். – 

என். நஜ்முல் ஹுசைன், தலைவர் - வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)

உள்ளத்தை கிள்ளிடும் கவிதைகளால்
உட்கார்ந்திருப்பான் எம் இதயத்திலே
பள்ளத்தில் வீழ்ந்திடும் மானுடத்தை
பாட்டாலே உயர்த்திட பாடிடுவான்
துள்ளியே பாடிட ஸ்ரீ தருக்கும்
தந்தவன் நல்ல கவிவரிகள்
அள்ளியே செல்கிறான் எம் மனதை
பிச்சை யப்பா எமை பிய்ச்சி யப்பா

வகவம் எங்களின்   கவிக் கூடம்
வான வில்லாய் இவன் வந்து நின்றான்
பழகும் போதே பணிவுடனே
பனியாய் இவனும் குளிர்ந்து நின்றான்
நிலவும் உயர்ந்த குணம் காட்டி
நிதமும் உறுதுணை யாய் நிற்பான்
நிலவும் வானும் போன்று கவி
நிறைவாய் தந்து இலங்கிடுவான்

தலைமை தன்னை இன்றேற்க
தனபால னுமே உடன்பட்டான்
கலைமை கொண்டே கவிஎழுதி
கவிஞர் தம்மை ஒன்றிணைத்தான்

கவிஞா எஸ். தனபாலா

நிலைமை உயர மானுடத்தின்
நிஜமாம் கவிதை தனைதந்து
உளமை தன்னைக் காட்டி விடு
கவி யரங்கில் உன்றன் புகழோங்க
வெற்றிக் கொடிநீ நாட்டிவிடு

கவிஞர்  எஸ். தனபாலன்
இனி கவியரங்கு
உன்றனக்கு
கவிஞர்களின் படை நடத்து!

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் "பாரம்பரியம் " பேட்டி நிகழ்ச்சி







இலங்கை வானொலி முஸ்லிம் சேவை "பாரம்பரியம்" பேட்டி நிகழ்ச்சி. என்னை பேட்டி காண்கிறார் நண்பர் எம் எஸ் எம் ஜின்னா 

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

கவிஞர் எம். எஸ். தாஜ்மஹான்

வலம்புரி கவிதா வட்டத்தின் 45 வது கவியரங்கம் 31/01/2018 அன்று கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றபோது கவியரங்க தலைமையேற்று நடத்துமாறு கவிஞர் எம். எஸ். தாஜ்மஹான் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் - என். நஜ்முல் ஹுசைன், தலைவர், 
வலம்புரி கவிதா வட்டம்

 தாகத்தோ டிவனும் தான்
இங்கே வந்தான்
தேன் கவிதை யேகேட்டு
மோகம் கொண்டான்
 வேகத்தோ டடியெடுத்து
 முன்னே வந்து
 வேட்கை யுடன் கவி படிக்க ஆவலுற்றான்

 படிப் படியாய் படிப் படியாய்
வகவப் படிகள்
 பாங்காகவே ஏறி கவிதை சொன்னான்
அடி மேலே அடி அடிக்க
நகரும் அம்மி
 இவன் கவிதையிலே போட வந்தான் புதிய கும்மி

 நயம் உளது பொருள் உளது
சுவையும் உளது
 நயந்தேதான் சொன்னவர்க்கு
 பெரிய மனது
சுயம் காட்டும் இவன் கவிதை போக்கை வாழ்த்த
 சுவைக்கின்ற வகவத் திற்குளது மனது

 தயங்காது தலைமையினை ஏற்றுக் கொள்ளு
 தாஜ்மஹானே கவிஞர்களின் சிந்தை அள்ளு
 இயங்காத இதயங்களும் இசைந்து ஆட
ஈர்க்கின்ற கவிதைகளால்
 நெஞ்சில் நில்லு

 கவிஞர்களை ஒப்படைத்தேன் உன்றனுக்கு
கவிமகனே ஒப்படை தேன்
 எங்களுக்கு
 கவியரங்கை தலை யேற்ற தாஜ்மஹானே - உன்
 தலைமையிலே பாயட்டும்
 புதிய தேனே!

திங்கள், 11 டிசம்பர், 2017

கவிதாயினி சுதர்ஸனி பொன்னையா



03-12-2017 அன்று இடம்பெற்ற 44வது வகவ கவியரங்கத்தை தலைமையேற்று நடாத்த கவிதாயினி சுதர்ஸனி பொன்னையா அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்புவிடுத்தேன்-
                                                     என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்

பல மைல்கள் இவர் தாண்டி வந்தார் - வகவம்
தன் மைல் கல் என நம்பி
வந்தார்
பலம் கவிதை என்ற உணர்வினாலே - எமை
உறவென்றே இவர் ஏற்றுக் கொண்டார்

அழகான கவி வரிகள் தருவார் -
அதில் ஆழம் போய்
முத்தெடுத்து எமை மயக்கி
வெல்வார்
அழகான பெண்ணுக்குள் இருக்கும்
சோகத்தை கவியாக்கி
கயமையையும்    கொல்வார்

வகவத்தை புகுந்த வீடாக்கி
புள காங்கிதம் கொண்ட
கவிதா யினி இவரை
வரவேற்று நாம் மகிழ்ந்தோமே
இன்று
கவியரங்க தலைமையை தான்
தந்தோமே

கவிதாயினி !
சுதர்ஸனி பொன்னையா எனும்
தையலே
தைத்திடு எம்மை நீ
உன் கவிதையால் இன்று

அது எம் மனதுக்குள் சென்று
தைத்திட வேண்டும்
கிழிந்த எம் மனங்களை
ஒன்றாக்கி
தைத்திடவும்  வேண்டும்

சுதர்ஸனி
நீ இனி
கவிதையால் இனி !

சனி, 9 டிசம்பர், 2017

"நேற்று, இன்று, நாளை " நேத்ரா மீலாத் கவியரங்கில்


கடந்த 01-12-2017 வெள்ளிக்கிழமை மாலை 5.15 க்கு நேத்ரா தொலைக்காட்சியில் மீலாத் விசேட நிகழ்ச்சியில் ஒளிபரப்பான "நேற்று, இன்று, நாளை " என்ற கவியரங்கில் நான் வாசித்த கவிதை. தமிழ்த்தென்றல் அலி அக்பர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் என்னோடு கவிஞர்கள் கம்மல்துறை இக்பால் மற்றும் மன்னூரான் சிஹார் ஆகியோரும் பங்கு கொண்டனர்.
- என். நஜ்முல் ஹுசைன்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

(நேற்று)

உயிரினும் மேலாம்
எங்கள் அண்ணல் நபி
நினைவேந்தி நடக்கின்ற
கவியரங்கு
நேத்ரா நேயமுடன்
அழைத்ததனால் நாமிங்கு
தமிழ்த்தென்றல் அலி அக்பர்
தலைமையிலே தமிழெடுத்தோம்
தூயோன் தூதரே
உங்கள் புகழ் பாட
புகழ் பாட

சேர்ந்து ஸலவாத்துச் சொல்ல
காத்திருக்கும் சொந்தங்களே
நாவுக்கு மட்டுமல்ல நாளைய
வாழ்வுக்கும் வளம் சேர்க்க
பார்த்திருக்கும்
நெஞ்சங்களே
அஸ்ஸலாமு அலைக்கும்

ஒரு
ராக் குகையிலிருந்துதானே
எங்கள் அண்ணல் நபி
இந்த உலகுக்கு
பகலைத் தந்தார்கள்

அந்த ஹிராக் குகையிலிருந்துதானே
எங்கள் அண்ணல் நபி
இந்த உலகுக்கு
பகலைத் தந்தார்கள்

இன்னல் அவர்கள் வாழ்வில்
பின்னல் போட்ட போதும்
கன்னலாய்தானே
அதனை ஏற்றுக் கொண்டார்கள்
அது
உம்மத் எமக்காகத்தானே

வல்லான் அல்லாஹ்
சொர்க்கத்துக்குச் செல்ல
அண்ணல் நபியவர்களுக்கு
செங்கம்பளம் விரித்து வைத்திருக்கிறான்
தாயிப் நகரமோ
அண்ணல் நபியின் இரத்தத்தால்தானே
கம்பளம் விரித்தது -
நபியின் கோரிக்கைகளுக்கெதிராய்
கைகள் விரித்தது

கொடுமை கோபுரம் தொட்டது
வானவர்களின் நெஞ்சை சுட்டது
என்றாலும்
கோபம் கோமான் நபியை
நெருங்கிட பயந்தது

பொறுமை பல தீமைகளை
மட்டுமல்ல
பல “தீ “ களையும்
தடுக்கும் ஆற்றல் பெற்றது
என்று நேற்றே சொல்லித் தந்தீர்கள்

நாங்கள் உங்கள் வழி
நடக்கிறோம் என்று
அடிக்கடி வழுக்கி விழுகிறோம்

எங்கள் உம்மத்துகளை
பலருக்கு
விழுங்க விடுகிறோம்

அண்ணலே யாரஸூலே
நீங்கள் நேற்று
வரலாறு படைத்தபோது
உங்கள் சஹாபா விழுதுகள்
பல தரைகளில் விதைக்கப்பட்டார்கள்-
எங்கள் மண்ணிலும்

அந்த உறுதிப்பத்திரத்தை
காணாமலாக்கிவிட்டு
தலை குனிந்து நிற்கிறோம்
என்றாலும்
அண்ணலே யாரஸூலே
உங்களது நேற்றைதானே
நாங்கள் திரும்பத் திரும்ப
படிக்கிறோம்

எமது இன்றைய வெற்றியும்
நாளைய வெற்றியும்
அங்கேதானிருக்கிறது
என்று தெரிந்து கொண்டதால்
……………………………………..

(இன்று)
எங்கள் வாழ்க்கையெல்லாம்
எங்களோடு
பயணித்துக் கொண்டிருக்கும்
யார ஸூலே
அடிக்கடி நாம்
உங்கள் ஒட்டகத்திலிருந்து
இறங்கிப் போய் விடுகிறோம்

எங்கள் அகத்திலிருந்து
உங்களை
இறக்கி வைத்துவிடுகிறோம்
அதனால்
எங்களை நாங்கள்
அழுக்காக்கிக் கொண்டு

ஏந்தல் நபியே
உங்களை ஏந்திய
மனங்களுக்குத்தர்னே
மணக்கும் மகிமை இருக்கிறது
என்பதை
அடிக்கடி மறந்து போகிறோம்

நீங்கள் எங்களுக்கு
ஒரேயொரு பெயர் வைத்தீர்கள்
ஆனால்
இப்போது எங்களுக்கு
பல பெயர்கள்

எங்களுக்கென்று பல
நாடுகள்
நாங்கள்தான்
எந்த நாட்டிலுமில்லை

வரலாறு படைத்த நாம்
வரலாற்றுப் பாடங்களில்
சித்தியடைய முடியாமல்
இன்று

எமது கழுத்தை
நாமே அறுக்க
துடித்துக் கொண்டிருக்கிறோம்

ஒற்றுமை உங்களுடன் வாழ்ந்தது
இங்கே உனக்கு இடமில்லை
என்று நாங்களோ அதை
விரட்டிக் கொண்டிருக்கிறோம்

எங்கள் உறவுகள்
அகதிகளாய்
ஓடித் திரிகிறார்கள்
செல்வம் எங்களிடம்
குவிந்து கிடந்தாலும்
மன்னித்துக் கொள்ளுங்கள்
அந்த அழுகுரல்களுக்கு
காது கொடுக்க முடியாமல்
மேலை நாட்டு “இயர் போன்”
எங்கள் காதுகளில் மாட்டப்பட்டுள்ளது

பலம் எங்களிடமிருக்கிறது
அதனைக் கண்டு
அகதிகளை விரட்டியடிப்போர்
கிஞ்சித்தும் அஞ்சமாட்டார்கள்
அதை எப்போதுமே
நாம் காட்டமாட்டோம்
என்று தெரிந்ததால்

இஸ்லாம் எங்களோடிருக்கிறது
பாவம்
நாங்கள்தான் அதனோடு இல்லை

அண்ணலே யாரஸூலே
இதயத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டதால்
சர்வதேசமெங்கும்
நாங்கள் ஏளனப் பொருளாய்

இல்லை இல்லை
எமது இன்று
இப்படியே முடிந்து விடாது
எங்கள் கோமான் நபியே
உங்கள் மீது ஸலவாத்துச் சொல்லி
இதோ இதோ
நாங்கள்
நடக்கத் தயாராகிவிட்டோம்
உங்கள் வழி !
………………………………………..

(நாளை)
வா முஸ்லிம் உம்மத்தே
இந்த வாழ்க்கையை
அந்த வள்ளல் நபியிடம்
முழுமையாய் ஒப்படைக்க

நேற்று கரடு முரடான பாதையிலே நடந்த
அண்ணல் நபி
இன்று நன்கு செப்பனிட்ட பாதையிலே
எங்களை
கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்

காணாமல் போன ஒட்டகம்
கல்வி
உடைந்து போன எங்கள்
பெருமைகளை ஒட்ட
“கம்”GUM மும் கல்விதான்
என்று
எங்கள் சந்ததிகளுக்குச்
சொல்லிக் கொடுப்போம்

வெறும் கல்விமான்களாய்
மாத்திரமல்ல
பட்டங்களைச் சுமந்த
ஜடங்களாய் மாத்திரமல்ல
அண்ணல் நபியே
உங்கள் அழகிய வழியின்
பொக்கிஷங்களாய்
அவர்களை மின்னச் செய்வோம் -
அவர்களை மனிதர்களாய்
மிளிரச் செய்வோம்

விட்டுக் கொடுப்பதும்
சேர்ந்து வாழ்வதும்
இஸ்லாம்தான்
என்று புரிய வைப்போம்
அனைவரும் ஆதமின் மக்கள்
என்று வேதம் சொன்னதை
சிந்தையில் ஏற்றுவோம்

சினம் இனம் அழிக்கும்
என்று உணரச் செய்வோம்
பொறுமையை பெருமை ஆடையாய்
அணிந்த பூமான் நபியே
எங்கள் உம்மத்திற்கு
அதை
பொன்னாடையாய் போர்த்திவைப்போம்

எல்லார் கைகளுமே
பற்றிப் பிடித்தால்
ஒற்றுமையின் கயிற்றை
யாருக்கு தைரியம் வரும்
அதில் போட ஓட்டை

சர்வதேசமெங்கும்
சர்வதேசமெங்கும்
இஸ்லாம் சிம்மாசனம் போட்டு அமர
முஸ்லிம் உம்மத்தை
உங்கள் இதயாசனத்தில்
அமரச் செய்வோம்

குண்டு வைக்க வந்தவனல்ல
இவன்
மானிடர்க்கு தொண்டு செய்ய வந்தவன்
என்று உலகோர்
உணர்ந்து கொள்ள வழி சமைப்போம்

எங்கள் உடைகளுக்குள்
புதைந்திருக்கும் மனிதத்தை
பாரெங்கும் பறை சாற்றுவோம்

மரியாதைக்குரியவர்கள் இவர்கள்
என்ற
அடைமொழிக்கு
சொந்தக்காரர்களாவோம்

அண்ணலே யாரஸூலே
இதோ
எங்கள் நாளைய தினத்தை
உங்கள் பாதையிலே
ஒப்படைக்கிறோம்
நாளைய மஹ்ஷரிலே
நாங்கள்
சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்கள்
என்று
ஒப்பமிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் !

ஸல்லல்லா ஹு அலா முஹம்மத்
ஸல்லல்லா ஹு அலைவஸல்லம்!