எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 9 ஜூலை, 2018

"நடந்தது என்ன......?" சிறுகதை. விடிவெள்ளி பத்திரிகையில் 06/07/2018 இடம்பெற்றது

-       என். நஜ்முல் ஹுசைன்


வாப்பா மரணித்ததன் பின் முழு குடும்பப் பொறுப்பும் அவனுக்குத்தான். உயர்தரம் கற்றிருந்த நியாஸ் டாக்டராகும்  கனவை உதறிவிட்டு பொருத்தமான தொழிலை தேடிக் கொண்டான். தங்கை நஸீமாவுக்கும், தம்பி ரபீக்குக்கும் ஒழுங்கான படிப்பு கொடுக்க வேண்டும்.  உம்மாவை கவலைப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  காலதாமதம் செய்யாமல் நஸீமாவுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே அவனது புதிய கனவாக இருந்தது.

நல்ல தொழிலிலும் இருந்த காரணத்தால் கலியாண தரகர்கள் அவனுக்கு தொல்லைக் கொடுக்க ஆரம்பித்தனர். தங்கை நஸீமாவை திருமணம் முடித்துக் கொடுக்காமல் தான் திருமணம் முடிக்கக் கூடாது என்பதை ஒரு வைராக்கியமாகவே நெஞ்சில் பதித்துக் கொண்டான்.
 
நஸீமா சாதாரண தர பரீட்சை எழுதியதிலிருந்து உம்மா அடிக்கடி அவளது திருமணம் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார். அவளுக்கு சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதாயிருந்தால் அதனை தான் இப்போது பெறும் சம்பளத்திலிருந்து சமாளிக்க முடியாது என்பது நியாஸுக்கு நன்றாக தெரிந்தது.  மூளையை கசக்கிப்பிழிந்த பின் வெளிநாடு செல்லும் யோசனை அவனுக்கு வந்தது. தெரிந்த நண்பர்களின் துணையுடன் ஒரு வெளிநாட்டு முகவர் நிலையத்தின் மூலம் துபாயில் தொழிலைப் பெற்றுக்கொண்டான். 

நல்ல திறமைசாலியாகவும், தனக்குத் தரப்படும் பணிகளை கச்சிதமாக செய்து முடிக்கும் ஆற்றலும் பெற்றிருந்த நியாஸ் மிக விரைவிலேயே பதவி உயர்வுகள் பெற்றுக்கொண்டான். கொழுத்த சம்பளமும் கிடைத்தது.
தங்கை நஸீமாவுக்கு நல்லதொரு மாப்பிள்ளையை உம்மாவிடம் பார்க்கச் சொல்லியிருந்தான். புரோக்கரகள்; பல இடங்களை கொண்டு வந்து காட்டிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு நாள் இரவும் அது பற்றி கதைத்து உம்மாவுக்கு நியாஸ் ஆலோசனை கூறிக்கொண்டிருந்தான். தான் துபாயிலிருந்து இலங்கைக்கு விடுமுறையில் வரும்போது தங்கையின் திருமணத்தை முடிப்பதே அவனது எண்ணமாக இருந்தது.  உம்மா காட்டிய இரண்டு இடங்கள் அவனுக்குப் பிடித்தன. இலங்கைக்கு வந்து தான் பேசிக் கொள்கிறேன் என்று தெரிவித்தான்.

இலங்கை வந்து ஒருநாள்தான் ஓய்வெடுத்தான். அடுத்த நாளிலிருந்து நஸீமாவின் திருமண விஷயத்தில் மிகவும் கரிசனையோடு ஈடுபட்டான். தான் முதலில் பார்த்து வைத்திருந்த இரண்டு இடங்களுக்கும் நியாஸ் போனான்.  அதில் ரபீக்கை நியாஸுக்கு மிகவும் பிடித்தது.  அவர்களை தங்கள் வீட்டுக்கு வரச் சொன்னான்.  ரபீக்கின் தாய் கொஞ்சம் கறாரானவர் என்று தெரிந்து கொண்டான்.  அவர்களுக்கும் முதல் பார்வையிலேயே நஸீமாவைப் பிடித்துப் போனது.  தனக்கு ஒரே தங்கை என்ற காரணத்தால் மாப்பிள்ளை வீட்டாரின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டான். உடனடியாகவே திருமணத்தையும் நடாத்தி முடித்து நஸீமாவை மாப்பிளை வீட்டுக்கு அனுப்பி வைத்த போது அவனது லீவும் முடியும் தறுவாயிலிருந்தது. உறவுகளைப் பிரிய மனமின்றி மறுபடி துபாய் வந்து சேர்ந்தான்.

ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு தொலைபேசியில் பேசி சுகம் விசாரித்துக் கொள்வான்.  நஸீமாவுடைய திருமண வாழ்க்கையைப் பற்றியும் மிகவும் அக்கறையோடு விசாரிப்பான். நஸீமாவின் கணவர் தங்கமானவர் என்றும் அவரது தாயார்தான் முரட்டுத்தனமானவர் என்றும் நியாஸின் உம்மா சொல்லி வைத்தார்.  சரி நூற்றுக்கு நூறு எல்லோரையும் சிறப்பானவர்களாக எதிர்பார்க்க முடியாது.  கொஞ்சம் அனுசரித்து போகுமாறு நியாஸும்  நஸீமாவுக்கு சொல்லி வைத்தான்.

சில நாட்கள் கோலெடுக்கும் உம்மா நஸீமாவின் மாமியார் செய்யும் கொடுமைகளை சொல்ல ஆரம்பித்தார்.  நியாஸுக்கும் கவலையாக இருந்தது.  அருமையாக வளர்த்த தங்கையல்லவா.  அடிக்கடி நஸீமாவின் கணவரோடும் நியாஸ் பேசிக் கொண்டான்.  என்றாலும் அவரது தாயாரைப் பற்றி ஒருநாளும் குறை கூறியதில்லை.
நேற்று உம்மா போனில் சொன்ன செய்தி நியாஸுக்கு இடி விழுந்தது போலிருந்தது.
'மகன், நஸீமாட மாமிட கொடும எல்ல மீறி போயிடுச்சி. எம் மகள அவ கொல்லப் பார்த்திருக்கா. நல்ல வேள அல்லாஹ் எனக்கு காட்டித் தந்தான். ஒடனே மகள கூட்டிட்டு நான் வந்திட்டன்.  அவங்க ஒறவே வாணாம். எம் மக வாழாவெட்டியாக இருந்தாலும் பரவாயில்லை. அன்னைக்கு மாடிப்படியில எறங்குறப்போ நஸீமா கால் தவறி கீழ விழுந்துட்டதா சொன்னேனே. அதுகூட எனக்கு இப்ப சந்தேகமா இருக்கு. நஸீமா மாமியார்தான் பின்னால நின்னு தள்ளிவிட்டிருப்பா' என்று சொல்லி தேம்பித் தேம்பி அழுதார்.
'இப்படி ஒரு கொடும கார மாமியாரா' நியாஸால நம்பவே முடியவில்லை.  எவ்வளவு தியாகத்தோடு நஸீமாவுக்கு திருமணம் முடிச்சு கொடுத்தேன். அது இவ்வளவு சீக்கிரம் இப்படி ஆகிறிச்சே' நினைக்க நினைக்க நியாஸுக்கு பொறுக்கவில்லை.
பலமுறை நஸீமாவின் கணவரிடமிருந்து நியாஸுக்கு கோல் வந்தது.  நியாஸுக்கு பேசவே பிடிக்கவில்லை.  அவர் நல்லவராக இருந்து என்ன பயன்.  அவரது உம்மாவின் கொடுமைகளை தடுக்க முடியவில்லையே.

நஸீமாவின் மனது நோகும் என்பதால் எதையும் விபரமாக விசாரிக்கப் போகவில்லை.  ஆறுதல் மட்டும் கூறிக் கொண்டான்.  உம்மா நஸீமாவுக்கு விவாகரத்து செய்து விடவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தார்.

கடந்த விடுமுறையை நஸீமாவின் திருமண வேலைகளுக்காக கழித்த நியாஸுக்கு இம்முறை விடுமுறையை அவளது விவாகரத்து வேலைகளுக்காக கழிக்க வேண்டியிருந்தது.

இரண்டு வருட தொடர் வேலைக்குப் பிறகு விடுமுறையில் இலங்கைக்கு வந்தான் நியாஸ்.

இப்போதுதான் உம்மா நஸீமாவுக்கு நடந்த கொடுமையை விலாவாரியாக சொன்னார்.

இவர்கள் நஸீமாவைப் பார்க்க நஸீமாவின் கணவர் வீட்டுக்கு போனபோது ரபீக் இருக்கவில்லை.  ஆனால் நஸீமா கடுமையான வயிற்று வலியால்  துடித்துக் கொண்டிருக்கிறாள். அவளது மாமியோ இதென்ன பெரிய வயித்து வலியா. ஓம திரவம் குடிச்சா சரியா போகும் என்று சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார். பெற்ற வயிறு பற்றி எரிந்திருக்கிறது.
நஸீமாவின் மாமியோடு வாய் தர்க்கம் புரிந்து டாக்டரிடம் கூட்டி வந்திருக்கிறார்.

'மகன் டாக்டர் உங்களோடு படிச்சாரே உங்க கூட்டாளி பாஹிம்தான். ஒடனே நஸீமாவ செக் பண்ணிட்டு மகளுக்கு நஞ்சு உணவு கொடுத்திருக்கிறாங்க என்ற அதிர்ச்சி தகவல சொன்னாரு. நல்ல நேரம் ஒடனே கூட்டிக்கிட்டு வந்தீங்க. இல்லாட்டி ஆபத்தா போயிருக்கும் என்று சொல்லி மருந்து தந்தாரு. என் புள்ளயை கொல்லப் பார்த்த அவங்க ஊட்டுக்கு எப்படி மகன் நம்ம புள்ளய அனுப்புறது. வேண்டாம் மகன் வேண்டாம் மகன். எப்படியாவது என் மகளுக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்திருங்க. இதுவர இந்த வெட்கக்கேட்ட யாருக்கிட்டயும் சொல்லல்ல மகன்' கதறி அழுதார் நியாஸின் உம்மா.

நஸீமாவோடு பேசியபோது தனது கணவரைப் பற்றி சிறப்பாகத்தான் சொன்னாள். ஆனால் மாமியாரின் கொடுமைகளை நிறையச் சொன்னாள்.  தான் எதை செய்தாலும் குறை கண்டு பிடிப்பவராகவே தனது மாமி திகழ்ந்ததாகவும் சொன்னாள்.

என்ன செய்ய மாமியாரின் கொடுமைக்காகவே ஒற்றுமையான கணவன் மனைவியை பிரிக்க வேண்டியுள்ளது.  என்றாலும் கொலை வரைப் போகத் துணிந்த மாமியாருக்காகவாவது இந்த விவாகரத்தைப் பெற்றுக் கொடுக்கத்தான் வேண்டும். நல்ல வேளை நஸீமா பிள்ளை எதுவும் உண்டாகியிருக்கவில்லை.

நியாஸ் தீவிரமாக நஸீமாவின் விவாகரத்து விஷயத்தில் ஈடுபடலானான். காதி நீதிபதியைப் பற்றித் தெரிந்த நண்பர்களின் ஆலோசனையையும் பெற்றுக்கொண்டான்.

நியாஸ்     தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தான்.  அருகில் ஒரு கார் வந்து நின்றது.  உள்ளே இருந்து யாரோ அழைப்பது போலிருந்தது.  பார்த்தான்.  நியாஸின் நண்பன் டாக்டர் பாஹிம். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்தால் பழைய விவரங்களையெல்லாம் பேசினான். இறுதியில் உம்மாவைப் பற்றியும் நஸீமாவைப் பற்றியும் விசாரித்தான்.

மிகவும் கவலையுடன் அவளது விவாகரத்து குறித்து பாஹிமிடம் கூறினான்.
'விவாகரத்துக்கு போகும் அளவுக்கு என்ன நடந்தது? '
அப்போதுதான் நஸீமாவுக்கு நஞ்சூட்டியதை கண்டு பிடிதத்தே டாக்டர் பாஹிம்தானே என்று உம்மா சொன்ன நினைவு வந்தது.

'ஓ அந்த தங்கச்சிக்கு நஞ்சூட்டிய விவகாரம்தான்' என்று சொன்னான்.

' அடடா அப்படியா அது பொலிஸ் கேஸாச்சே. யார் நஞ்சூட்டினார்கள்' என்று புதுக் கதை போன்று கேட்டான்.

'விஷயத்தை இவன் மறந்து விட்டானோ. இப்படி புதிதாய் கேட்கிறானே' என்று உம்மா நஸீமாவோடு அவனிடம் மருந்தெடுக்கப் போன கதையை ஞாபகப்படுத்தினான்.

'நான் சொன்னேனா.....? ' ஆச்சரியமாக யோசித்தான் டாக்டர் பாஹிம்.

அவனிடம் பல நூறு நோயாளிகள் வருவதால் அவன் மறந்திருக்கலாம் என்றாலும் உம்மாவையும், நஸீமாவையும் அவன் எப்படி மறக்க முடியும்?
வியப்போடு அவனைப் பார்த்தான்.

கொஞ்ச நேரம் யோசித்து விட்டு பாஹிம் பழைய சம்பவத்தை ஞாபகப்படுத்திப் பார்த்தான்.

'ஆம். ஞாபகம் வருகிறது. ஒரு நாள் ஒங்கட உம்மாவும், தங்கச்சியும் எனக்கிட்ட மருந்தெடுக்க வந்தது ஞாபகமிருக்கு. வேற விசேஷமா ஒன்னும் ஞாபகமில்லையே' என்று சொன்ன அவன், சிறிது நேரம் யோசித்துவிட்டு,

'சரி சரி ஞாபகம் வருது.  தங்கச்சிக்கு வயித்து வலி என்று வந்தாங்க. புட் பொயிஸனா இருந்திச்சி.....' என்று சொல்லிக் கொண்டே,

'இப்ப எனக்கு வெளங்குது. புட் பொயிஸன் உணவு நஞ்சாவுறதென்னா சில சமயம் சில உணவு பழசாகியிருந்தா அப்படி ஏற்படும். பழசா போன சிக்கன தின்னா சிலருக்கு ஏற்படும்.    உணவு நஞ்சாகி இருக்குன்னு நான் சொன்னத உங்க உம்மா நஞ்சு போட்டிருக்காங்கன்னு நெனச்சிருக்காங்க.....'
டாக்டர் பாஹிம் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் நியாஸுக்கு எல்லாம் விளங்க ஆரம்பித்தது. அவனின்மேல் அவனுக்கே கோபம் ஏற்பட்டது.

'நானும் ஆராயாமல் அவசரப்பட்டு நல்லதொரு மனிதனை இழக்கப் பார்த்தேனே'.
பாஹிமை சந்தித்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லிக் கொண்டே காதியாரைப் பார்க்க ஓடினான் நியாஸ் - விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வேண்டாம் என்று சொல்ல !
..................................................................................................................................................................................................................








வியாழன், 17 மே, 2018

கலாபூஷணம் பாணந்துறை எம். பி. எம். நிஸ்வான்




வலம்புரி கவிதா வட்டத்தின் 48 வது கவியரங்கு  29-04-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு  கொழும்புஅல் ஹிக்மா கல்லூரியில்  நடைபெற்றபோது கவியரங்கை தலைமை தாங்கி நடாத்த பன்னூலாசிரியர் கவிஞர் கலாபூஷணம் பாணந்துறை எம். பி. எம்.  நிஸ்வான் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் -
என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம்


பல பட்டம் பெற்ற திவர் எழுத்து - அவை
கனியாகி இருக்கிறதே பழுத்து
உலவிடுவார் நெஞ்சத்தில் இனித்து - இன்றும்
இலக்கியத்தில்  நல்ல இடம் பிடித்து

வயதாகவே இல்லை இவர்க்கு - இவர்
வாய்வீச்சும் அழைக்கிறதே போர்க்கு
அயர்வகற்றும் இவர் கவிதை பலர்க்கு - எனினும்
இவரை நாம் ஒப்பிடலாம் மலர்க்கு

காதிநீதி பதியான மனிதர்  -பல
நீதிக் கதைகளில் மிளிரும் புனிதர்
போதனையால் பிணக்குகளை நீக்கி - பிரிந்தோர்
பலபேரை சோ;த்து வைத்த சித்தர்

கூர்மதியோ டியங்குகின்ற ஒரு மான் - கொள்கைகளை
செய்திடவே மாட்டாரே குர்பான்
பேர் இவரும் வைத்தாரே இன்ஸான் - சுறுசுறுப்பாய்
இயங்குபவர் பாணந்துறை நிஸ்வான்

வந்தாரே கவியரங்கை ஏற்க - தன்
கவியாலே கவிஞர்களை தூக்க
பாணந்துறை நிஸ்வானை கேட்க
தயாராவோம்; துன்பங்கள் போக்க

கவிஞர் கலாபூஷணம்
எம்.பி.எம். நிஸ்வான்
இனி கவியரங்கு உங்களுக்கு
தமிழ் இன்பம் எங்களுக்கு!

செவ்வாய், 27 மார்ச், 2018

இதயத்துள் வாழ்பவரே ஈஸ்வரன் ஐயாவே !







இதயம் கனத்தேதான் இங்கே பாட வந்தேன்
ஈரவிழி
துடைத்தே ஐயா ஈஸ்வரனை தேடி
வந்தேன்
உதயம் என்றிருந்தால் மறைவும் அங்கிருக்கும்
ஊமையாய்
போனோமே உங்களையே மறையவிட்டு

ஈஸ்வரனே
பெருமகனே இதயத்துள் வாழ்பவரே
ஈனக்குரல்
எடுத்தே நாங்கள் புலம்புகின்றோம்
தூசாகிப்
போனோம் நாம்; துரும்பாகித் தான்போனோம்
தூய மனததனைத் தேடி அலைகின்றோம்

மானிடரா
நீங்கள் இல்லை ஒருபடிமேல் சென்றவரே
மானிடரின்
இடர்கண்டு துடைத்திடவே துடித்தவரே
கூனிடவே
வைக்காமல் வறியோரை ஆதரித்து
குறை தீர்த்து வைத்த குணம் குவலயத்தில்
யார்க்கு வரும் ?

கோடிபணம்
வைத்திருந்தும் கோடீஸ்வரன் 'பணி'வினிலே
கோடியிலே
நிற்க வைத்து தலைகுனிய வைக்காமல்
நாடிவந்த
பேர்களது நாடியினைத் தானறிந்து
தேடிச்
சென்று கொடுத்தவரே தேடி உம்மை அலைகின்றோம்

 வியாபாரக்
கடலினிலே முத்தெடுத்து மகிழ்ந்திருந்தும்

வியப்புறவே
செய்தீர்கள் இலக்கியத்தி லேஜொலித்து
தயாராகவே
வந்தோம் உங்களது நகைச்சுவைகள்
தேன்சொட்டும்
உரையினிலே எமை மயக்கி நாம்
செல்ல

தந்தைவழி
வந்ததுங்கள் உயர்பண்பு ஐயாவே
தகைமைசால்
ஈஸ்வரனே தகைமையினை மதித்தவரே
எந்தன்மகள்
வக்கீலாய் ஆனதென அறிந்தவுடன்
அனுப்பிவைத்து
பரிசினையே எங்களையே குளிரவைத்தீர்

என்கவிதை
தான் கேட்க ஆவலென சொன்னீர்கள்
இக்கவிதை
தனைக் கேட்க நீங்கள்இலை என்
சொல்வேன்
இன்கவிதையால்
வாழ்த்தி இன்புறவே நானிருந்தேன்
இரங்கல்
கவிபாட  வைத்து
விட்டுச் சென்றீர்கள்

இதயங்கள்
வென்றவரே வீ.டி.வீ
பெருமகனே
ஈஸ்வரனே
ஐயாவே எங்கேயும் செல்லவில்லை
விதையாக
வேநீங்கள் எம்மனதில் உள்ளீர்கள்
விதைத்தோம்
நாம் எம்மனதில் ஈஸ்வரன் எனும் சொல்லை

 உங்களையே
மறையவிட்டு துயருற்றோர் எண்ணிக்கை

கணக்கினிலே
அடங்காது; எல்லோர்க்கும் சொந்தம்தான்
தங்கமகனாரே
இனம்கடந்த பெருமகனே
தாங்கவில்லை
துயரம்தான்; இன்றைக்கும் நாம் அழுவோம்

எந்நாளும்
உங்கள் புகழ் இம்மண்ணில் நிலைத்திருக்கும்
எம்மனதில்
உங்கள் பேர் என்றென்றும் நிறைந்திருக்கும்
கண்ணோடும்
நீருக்குள் உங்களது நிழலிருக்கும்
ஐயாவே ஈஸ்வரனேஎன் கவிதைக்கும் உயிரிருக்கும்
!

                                                                -              என். நஜ்முல் ஹுசைன்

(கம்பளைதாசனின்
முத்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் 18.03.2018 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 க்கு கொழும்பு 12, பிரைட்டன்
ரெஸ்ட் ஹோட்டலில் இடம்பெற்ற மறைந்த தேசபந்து, அறங்காவலர்
தெய்வநாயகம்பிள்ளை ஈஸ்வரன் பெருந்தகையை நினைவுகூர்ந்து
இடம்பெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்தில் பாடப்பட்ட இரங்கல் கவிதை)

செவ்வாய், 13 மார்ச், 2018

கவிஞர் எஸ். தனபாலன்

வலம்புரி கவிதா வட்டத்தின் 46 வது கவியரங்கு 01-03-2018 அன்று கொழும்பு, அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றபோது கவியரங்கைத் தலைமையேற்க கவிஞர் எஸ். தனபாலனுக்கு நான் இவ்வாறு அழைப்புவிடுத்தேன். – 

என். நஜ்முல் ஹுசைன், தலைவர் - வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)

உள்ளத்தை கிள்ளிடும் கவிதைகளால்
உட்கார்ந்திருப்பான் எம் இதயத்திலே
பள்ளத்தில் வீழ்ந்திடும் மானுடத்தை
பாட்டாலே உயர்த்திட பாடிடுவான்
துள்ளியே பாடிட ஸ்ரீ தருக்கும்
தந்தவன் நல்ல கவிவரிகள்
அள்ளியே செல்கிறான் எம் மனதை
பிச்சை யப்பா எமை பிய்ச்சி யப்பா

வகவம் எங்களின்   கவிக் கூடம்
வான வில்லாய் இவன் வந்து நின்றான்
பழகும் போதே பணிவுடனே
பனியாய் இவனும் குளிர்ந்து நின்றான்
நிலவும் உயர்ந்த குணம் காட்டி
நிதமும் உறுதுணை யாய் நிற்பான்
நிலவும் வானும் போன்று கவி
நிறைவாய் தந்து இலங்கிடுவான்

தலைமை தன்னை இன்றேற்க
தனபால னுமே உடன்பட்டான்
கலைமை கொண்டே கவிஎழுதி
கவிஞர் தம்மை ஒன்றிணைத்தான்

கவிஞா எஸ். தனபாலா

நிலைமை உயர மானுடத்தின்
நிஜமாம் கவிதை தனைதந்து
உளமை தன்னைக் காட்டி விடு
கவி யரங்கில் உன்றன் புகழோங்க
வெற்றிக் கொடிநீ நாட்டிவிடு

கவிஞர்  எஸ். தனபாலன்
இனி கவியரங்கு
உன்றனக்கு
கவிஞர்களின் படை நடத்து!

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் "பாரம்பரியம் " பேட்டி நிகழ்ச்சி







இலங்கை வானொலி முஸ்லிம் சேவை "பாரம்பரியம்" பேட்டி நிகழ்ச்சி. என்னை பேட்டி காண்கிறார் நண்பர் எம் எஸ் எம் ஜின்னா 

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

கவிஞர் எம். எஸ். தாஜ்மஹான்

வலம்புரி கவிதா வட்டத்தின் 45 வது கவியரங்கம் 31/01/2018 அன்று கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றபோது கவியரங்க தலைமையேற்று நடத்துமாறு கவிஞர் எம். எஸ். தாஜ்மஹான் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் - என். நஜ்முல் ஹுசைன், தலைவர், 
வலம்புரி கவிதா வட்டம்

 தாகத்தோ டிவனும் தான்
இங்கே வந்தான்
தேன் கவிதை யேகேட்டு
மோகம் கொண்டான்
 வேகத்தோ டடியெடுத்து
 முன்னே வந்து
 வேட்கை யுடன் கவி படிக்க ஆவலுற்றான்

 படிப் படியாய் படிப் படியாய்
வகவப் படிகள்
 பாங்காகவே ஏறி கவிதை சொன்னான்
அடி மேலே அடி அடிக்க
நகரும் அம்மி
 இவன் கவிதையிலே போட வந்தான் புதிய கும்மி

 நயம் உளது பொருள் உளது
சுவையும் உளது
 நயந்தேதான் சொன்னவர்க்கு
 பெரிய மனது
சுயம் காட்டும் இவன் கவிதை போக்கை வாழ்த்த
 சுவைக்கின்ற வகவத் திற்குளது மனது

 தயங்காது தலைமையினை ஏற்றுக் கொள்ளு
 தாஜ்மஹானே கவிஞர்களின் சிந்தை அள்ளு
 இயங்காத இதயங்களும் இசைந்து ஆட
ஈர்க்கின்ற கவிதைகளால்
 நெஞ்சில் நில்லு

 கவிஞர்களை ஒப்படைத்தேன் உன்றனுக்கு
கவிமகனே ஒப்படை தேன்
 எங்களுக்கு
 கவியரங்கை தலை யேற்ற தாஜ்மஹானே - உன்
 தலைமையிலே பாயட்டும்
 புதிய தேனே!

திங்கள், 11 டிசம்பர், 2017

கவிதாயினி சுதர்ஸனி பொன்னையா



03-12-2017 அன்று இடம்பெற்ற 44வது வகவ கவியரங்கத்தை தலைமையேற்று நடாத்த கவிதாயினி சுதர்ஸனி பொன்னையா அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்புவிடுத்தேன்-
                                                     என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்

பல மைல்கள் இவர் தாண்டி வந்தார் - வகவம்
தன் மைல் கல் என நம்பி
வந்தார்
பலம் கவிதை என்ற உணர்வினாலே - எமை
உறவென்றே இவர் ஏற்றுக் கொண்டார்

அழகான கவி வரிகள் தருவார் -
அதில் ஆழம் போய்
முத்தெடுத்து எமை மயக்கி
வெல்வார்
அழகான பெண்ணுக்குள் இருக்கும்
சோகத்தை கவியாக்கி
கயமையையும்    கொல்வார்

வகவத்தை புகுந்த வீடாக்கி
புள காங்கிதம் கொண்ட
கவிதா யினி இவரை
வரவேற்று நாம் மகிழ்ந்தோமே
இன்று
கவியரங்க தலைமையை தான்
தந்தோமே

கவிதாயினி !
சுதர்ஸனி பொன்னையா எனும்
தையலே
தைத்திடு எம்மை நீ
உன் கவிதையால் இன்று

அது எம் மனதுக்குள் சென்று
தைத்திட வேண்டும்
கிழிந்த எம் மனங்களை
ஒன்றாக்கி
தைத்திடவும்  வேண்டும்

சுதர்ஸனி
நீ இனி
கவிதையால் இனி !