எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 11 அக்டோபர், 2021

உழைத்து வாழ வேண்டும்

 07/10/2021 வியாழக்கிழமை விடிவெள்ளி பத்திரிகையில் இடம்பெற்ற எனது சிறுகதை.


என். நஜ்முல் ஹுசைன்


"டக்... டக்...டக்..."

யாரோ கதவைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். கியாஸ் வீட்டுக்குள்ளே ஒரு வேளையாய் இருந்தான். அவனது மகனும் மகளும் முன் அறையில்தான் இருந்தனர். என்றாலும் அவர்கள் கதவைத் திறக்கவில்லை.

ஆம் அது பிள்ளைகளுக்கு கியாஸின் உத்தரவு. யார் வீட்டுக் கதவைத் தட்டினாலும் போய் கதவைத் திறக்க வேண்டாம் என்று கட்டளை இட்டிருக்கிறான்.

மீண்டும் கொரோனா தலை தூக்கி தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. இந்த வேளையில் பிள்ளைகளையும் குடும்பத்தையும் பாதுகாப்பது அவனது  கடமை என்பதை அவன் நன்றாக உணர்ந்திருந்தான்.

கியாஸ் சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவன். என்றாலும் அவனது பழக்க வழக்கங்கள் உயர்வானவை. எப்போதும் தெளிவாக சிந்திப்பவன் மட்டுமல்ல நேர்மையாக சிந்திப்பவனும் கூட. தன்னால் யாரும் காயப்பட்டு விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருப்பவன்.  பிள்ளைகளுக்கும் அந்த நல்ல பழக்க வழக்கங்களை போதித்திருந்தான். அவனது போதனைகளுக்குப் புறம்பாக அவனைப் பார்த்தே பல நல்லவற்றை அவனது பிள்ளைகள் கற்றிருந்தனர். வீட்டிலிருந்த சின்ன பிள்ளைகள் மட்டுமல்ல திருமணம் முடித்து வெளியே சென்றிருக்கும் பிள்ளைகளும் அப்படித்தான் வளர்க்கப்பட்டிருந்தனர்.

தந்தை சொல்லை மந்திரமாக கருதினர். தங்கள் தந்தை தவறு செய்யமாட்டார் என்று அவர்கள்
உறுதியாக நம்பினர். தங்களின் எந்தப் பிரச்சினைக்கும் தந்தையிடமே ஆலோசனை கேட்டனர். அவர் கூறியபடியே நடந்து கொண்டனர்.

கியாஸ் தொழில் புரிந்தது ஒரு கோழிக் கடையில். வீட்டுக்கு ஒரு சில கிலோமீட்டர்களுக்கு அப்பால் அந்தக் கோழிக் கடை இருந்தது. கியாஸ்தான் அந்தக் கோழிக் கடையைப் பொறுப்பாக பார்த்துக் கொண்டான். அவனுக்குக் கீழ் மூவர் வேலை செய்தனர்.

அது சுஹைப் ஹாஜியாரின் கடை. கடந்த 10 வருடங்கள் கியாஸ் அங்கே நேர்மையாக உழைத்து வருகிறான். தனக்குக் கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு தனது குடும்பத்தை சிறப்பாக நிர்வகித்து வந்தான். விரலுக்கேற்ற வீக்கம்தான் அவன் தனது குடும்பத்துக்கு வழங்கும் உபதேசம்.

கோழிக் கடை முதலாளி சுஹைப் ஹாஜியார் மிகவும் வசதியுடன் வாழ்ந்த போதும் தனது ஊழியர்களுடன் மிகவும் கறாராகத்தான் நடந்து கொள்வார். வேலைக்கு வந்தால் மட்டுமே அவர்களுக்கு சம்பளம் கொடுப்பார்; கடையை பொறுப்பாக நடத்தும் கியாஸுக்கும் அதே நிலைதான்.  கியாஸ் தனது குடும்ப நிலையை கவனத்தில் கொண்டு தேவையின்றி லீவெடுக்கவே மாட்டான்.

சென்ற வருடம் வந்த கொரோனா,  வருமானத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒருவாறு சமாளித்துக் கொண்டான். லொக்டவுனை எடுத்ததும் மறுபடி கடை திறக்கப்பட்டது. ஒருவாறு தலையை தூக்கிக் கொண்டு வரும் போது சரியாக நோன்புப் பெருநாளைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் லொக் டவுன் ஆரம்பித்து விட்டது.

கையிலே பணமில்லாத கடை ஊழியர்கள் கியாஸை நச்சரிக்க ஆரம்பித்தனர். முதலாளியுடன் பேசி ஏதாவது பண உதவி பெற்றுத் தருமாறு கெஞ்சினார்கள்.  அப்படியான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்பவர் அல்ல சுஹைப் ஹாஜியார். என்றாலும் தனக்குக் கீழ் வேலை பார்க்கும் ஊழியர்களின் கஷ்ட நிலையை உணர்ந்து கொண்ட காரணத்தினால் முதலாளி ஏசினாலும்  பரவாயில்லை என்று வேலை செய்பவர்களுக்காக கியாஸ் பேசினான். அதெல்லாம் முடியாது என்று அடம் பிடித்த சுஹைப் ஹாஜியார் கியாஸின் பிடிவாதத்திற்காக இணங்கினார்.  கொஞ்சம் பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் இட்டார். என்றாலும் கியாஸுக்கென்று எதையுமே போடவில்லை. ஏனெனில் கியாஸ் தனக்கென்று எதையுமே கேட்கவில்லை.

மற்ற வேலைக்காரர்களின் நிலைமைதான் கியாஸின் நிலைமையும். தொடர் லொக் டவுனால் பொருளாதாரத்தின் அடிமட்டத்துக்கே சென்று விட்டான். சுஹைப் ஹாஜியாருக்கு நேர்மையாக இருந்த காரணத்தால் வேறெங்குமே அவன் எந்தத் தொழிலும் மேலதிகமாக புரியவில்லை. அவனுக்கு வந்த வருமானம் சுஹைப் ஹாஜியார் வழங்கிய சம்பளம் மட்டும்தான். அதனை வைத்துத்தான் தனது குடும்ப செலவை சமாளித்து வந்தான்.

தன்மான உணர்வு மேலோங்கி இருந்த கியாஸினால் எப்போதுமே அது வேண்டும் இது வேண்டும் என்று தலையை சொறியும் பழக்கம் அளவேயில்லை. அதனை சுஹைப் முதலாளி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு ஒப்புக்காகவாவது உங்களுக்கு எதுவும் வேண்டுமா என்று கேட்கவேயில்லை.

இப்போது அடிக்கடி கியாஸின் மனைவி கியாஸை நச்சரிக்கத் தொடங்கினால்
" பாருங்க, நோம்பு பெருநாளைல இருந்தே எங்களுக்கு கஷ்டம் தானே. ஒங்க ஹாஜியாருக்கு மன சாட்சியே இல்லையா. ஒங்கட கஷ்ட நஷ்டங்கள அவரு பாக்க வேணாமா.  அட பெருநாளைக்கு இவங்க என்ன தின்டாங்க என்று கூட பாக்க இல்லையே. எத்தனை வருஷம் ஒங்க மொதலாளிக்கு ஒழச்சி கொடுத்திருக்கீங்க. நீங்க அவருக்கிட்ட வாய தொறந்து கேளுங்க. மத்தவங்க கிட்டதான் நீங்க கேக்க மாட்டீங்க.
மொதலாளிக்கிட்ட கேக்கிறத ஒங்கட உரிமதானே" என்று அடிக்கடி புலம்ப ஆரம்பித்தாள்.

அவள் எப்போதும் கணவனை மீறி பேசுபவள் அல்ல. என்றாலும் வறுமை கோட்டை பார்த்துக் கொண்டிருக்கும் அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை.

இந்த லொக் டவுன் எப்போதுதான் முடியும் என்றே தெரியவில்லை. அரசாங்கத்தையும் குறை சொல்ல முடியாது. லொக் டவுனை எடுத்தவுடன் எங்களவர்கள் நடந்து கொள்ளும் விதம் அப்படி.

முகத் கவசத்தை முறையாக அணியுங்கள்; சமூக இடைவெளியை முறையாக பேணுங்கள் என்ற அறிவுரையை சட்டைப் பண்ணுபவர்கள்  மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர்.  அதனால்தான் சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கமைய நீண்ட கால லொக் டவுனை அரசாங்கம் போடுகிறது. நடமாடத் தடை என்று அரசாங்கம் அறிவித்திருந்த காலத்தில் பாதையில் ஓடிய வாகனங்கள் 'அப்படி ஒரு சட்டம்' இருக்கிறதா என்று வீட்டிலே முடங்கி இருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தோரை எண்ண வைத்தது.

வெளியே சென்றால்தான் வருமானம் என்ற நிலை உள்ளவர்களின் கதி அதோ கதிதான். பல குடும்பங்கள் கஷ்டத்தின் விளிம்பு நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன என்பது பலருக்கும் தெரியும்.

பல நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தங்களால் முடிந்த உதவிகளை தேவையானோருக்கு கொடுத்து கொண்டிருப்பவர்களும்  இல்லாமலில்லை. சிலர் விளம்பரத்துக்காக உதவி செய்து பேஸ்புக், வட்ஸ்அப் என்று போட்டுக் கொண்டிருந்தாலும் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக உதவும் பரோபகார சிந்தை படைத்தவர்களும் நம் மத்தியில் இருக்கிறார்கள்.

என்றாலும் என்ன செய்ய ? கியாஸை நோக்கித்தான் எந்த உதவியும் வரவேயில்லை.  இப்படி இந்த இடர் காலத்தில் எந்த உதவியும் கிடைக்காமல் சொல்லொணா துயரத்துடன் காலம் கழிப்பவர்களும் ஏராளமாக எம் மத்தியில் இருக்கிறார்கள்தானே.

"டக்...டக்....டக்.... " என்று கதவு தட்டும் சத்தம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டே இருந்தது.

கியாஸ் சென்று மெதுவாக கதவைத் திறந்தான். அங்கே பாயிஸ் நின்று கொண்டிருந்தான்.

பாயிஸ் அவனது  பால்ய கால நண்பன். வெளிநாடு செல்ல வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்தும் அதில் அவனுக்கு வெற்றி கிடைக்கவேயில்லை.  கடைசியாக சென்ற நேர்முகப் பரீட்சைக்கு இந்தியாவிலிருந்து ஏஜன்ட் வந்திருந்தார்.

அதில் பாயிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டான் - சும்மாவல்ல.  இரண்டு லட்சம் கொடுத்தால் ஏஜன்ட்டுடனேயே இந்தியாவுக்குச் சென்று துபாய் செல்லலாம் என்றும் சொல்லி வைத்தான். இரண்டு லட்சத்துக்கு பாயிஸ் எங்கே போவான். ஏஜன்ட் போவதற்கு ஒரு வாரம்தான் இருந்தது. தனது மனைவியின் நகையை விற்று இன்னும் சிலரிடம் கடன் வாங்கி ஏஜன்ட்டிடம் கொண்டு போய் பணத்தைக் கொடுத்தான்.  இன்னும் இரண்டு நாட்களில் துபாய் போகலாம் என்று சொன்ன ஏஜன்ட்டிடமிருந்து இரண்டு நாட்கள் எதுவித பதிலும் வரவில்லை. அவனது கைபேசியும் சுவிட்ச் ஓப் பாகி இருந்தது.

"ஆகா ஏமாந்து விட்டோமே " என்று கவலையோடு இருந்த பாயிஸுக்கு மூன்றாவது நாள் காலை ஏஜன்ட்டிடமிருந்து போன் வந்தது. உடனடியாக விமான நிலையம் வருமாறு சொன்னார். பாயிஸ் தயார் நிலையிலேயே இருந்ததால் உடனே ஆயத்தமாகி விட்டான்.

அவனது மனைவி மிகவும் மனவேதனையோடு அவனை வழியனுப்பி வைத்தாள். வேறு யாருக்கும் பயணம் சொல்ல அவனுக்கு நேரம் இருக்கவில்லை.

மும்பைக்குச் சென்று அங்கிருந்து துபாய்க்குச் செல்வதாக கூறி சென்றான்.  மும்பையில் இறங்கியவுடன் மனைவிக்கு போனில் பேசியவன்தான்.  மாதக் கணக்காக அவனிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லை. அவனது மனைவியும் குடும்பமும் கலங்கிப் போனார்கள்.  பல இடங்களில் விசாரித்தும் பாயிஸைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கியாஸும் கூட அவனுக்குத் தெரிந்த விதத்திலெல்லாம் விசாரித்துப் பார்த்து விட்டான். எதிலுமே வெற்றிக் கிடைக்கவில்லை.  பாயிஸின் மனைவி பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறியதோடு தன்னால் முடிந்த உதவிகளை செய்வதைவிட வேறு ஒன்றையும் அவனாலும் செய்ய முடியாமலிருந்தது.

தவித்துக் கொண்டிருந்த பாயிஸ் குடும்பத்துக்கு  ஆறு மாதங்கள் கழித்துதான் பாயிஸிடமிருந்து கோல் வந்தது. அந்த இந்திய ஏஜன்ட் அவனை ஏமாற்றி மும்பையிலேயே விட்டு விட்டு தலைமறைவாகிவிட்டானாம்.  சாப்பிட கூட வழியில்லாமல் தெருத் தெருவாக அலைந்து திரிந்த பாயிஸ் பல மாதங்களுக்குப் பிறகு மும்பையில்  தமிழ் நாட்டுக்காரர் ஒருவரின் சலூனில் தொழில் பார்த்துள்ளான். அதற்குப் பிறகுதான் கோல் பேசக் கூட அவனால் முடிந்திருக்கிறது.  துபாய் பயணம் கனவாகியே போனது. மனைவியின் அத்தனை தங்க நகைகளும் விழலுக்கு இறைத்த நீராகிப்  போயின. 

"பரவாயில்லை, எங்களுக்கு பணம் வேண்டாம். நீங்கள் திரும்பி வந்தால் போதும்" என்ற மனைவியின் அழுகுரலுக்கு அடிபணிந்து ஒருவாறாக விமான டிக்கெட்டை சமாளித்து இலங்கை வந்து சேர்ந்தான்.

பல மாதம் இங்கும் ஒரு தொழிலுமின்றி அவதிப்பட்டான் பாயிஸ்.  கியாஸ் அவனை தான் வேலைப் பார்க்கும் கோழிக் கடையில் வந்து சேருமாறு சொல்லியும் அவன் மறுத்து விட்டான்.

அதற்குப் பிறகு ஒருநாள் கியாஸை பார்க்க வந்த பாயிஸ்,
" எனக்கு ஒரு வேலையும் செட்டாகுது இல்ல.  அதனால நானே ஒரு சலூனை போடலாம் என்று நெனைக்கிறேன். எனக்கு கொஞ்சம் கொஞ்சம் முடி வெட்டத் தெரியும் " என்றான்.

ஆனாலும் கியாஸ் அது வேண்டவே வேண்டாம் என சொன்னான். "எங்கட யாரும் ஒன்னய மதிக்க மாட்டாங்க " என்றான்.

" ஏன்ட பொண்டாட்டியும் இப்படித்தான் சொல்லுறா. இருந்தாலும் நான் ஆரம்பிக்கக் தான்  போறேன்." என்று சொல்லிவிட்டு போனான்.

ஏனோ கியாஸுக்கு மனம் ஒப்பவில்லை. பாயிஸ் முடி வெட்டும் சலூன் ஆரம்பித்தாலும் கூட கியாஸ் ஒரு முறையாவது அந்த சலூன் பக்கம் போகவில்லை.

அதற்குள் இந்தக் கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்று வந்து முழுவதுமாக முடக்கிப் போட்டுவிட்டது.

கதவைத் திறந்ததும் பாயிஸ்தான் நின்று கொண்டிருந்தான்.

முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தான். முன்பெல்லாம் பாயிஸைக் கண்டவுடன் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டுதான் பேசுவான். இப்பொழுதுள்ள சூழல் அப்படியெல்லாம் பேச முடியவில்லை.

"அடே பாயிஸ், சொகமா இருக்கியா ? வா வா உள்ளுக்கு வா " என்று தனது பால்ய நண்பனைக் கண்ட மகிழ்ச்சியில் முகம் மலர அழைத்தான்.

" இல்ல கியாஸ், நா உள்ள வரல்ல.  பிள்ளைகள் இருக்கிற எடம். நீ கொஞ்சம் வெளிய வா..." என்றான் பாயிஸ்.

வெளியே சென்ற கியாஸ் அப்போதுதான் பார்த்தான். ஒரு பெரிய பொதியோடு பாயிஸ் வந்திருந்தான்.

"கியாஸ் இந்த பார்ஸல ஒனக்குதான் கொண்டு வந்தேன் " என்று கூறி அதனை எடுத்து முன்னே வைத்தான். அது மட்டுமல்ல கியாஸின் கையில் இரண்டு ஐந்தாயிரம் ரூபாய்களையும் வைத்தான்.

"இதெல்லாம் என்ன. எனக்கு ஒன்னும் வாணாம். இந்தக் கஷ்ட காலத்துல நீ ஒன்னையும் ஒன்ட குடும்பத்தையும் பாரு" என்று பணத்தை மறுபடி பாயிஸின் கையில் வைத்தவாறு   கியாஸ் சொன்னான்.

"இல்ல இல்ல, எனக்கும் ஏன்ட குடும்பத்துக்கும் வச்சிட்டுத்தான் ஒனக்கு கொணந்திருக்கேன் "
என்று சொல்லிக் கொண்டே பாயிஸ் பேசினான்,

"இது எனக்கு கஷ்ட காலமே இல்ல. நா வழமையவிட நல்லா சம்பாதிக்கிறன்" என்று சொன்ன பாயிஸை கியாஸ் ஆச்சரியமாக பார்த்தான்.  'எல்லோருமே வியாபாரம் இல்லை என்று மூக்கால் அழுது கொண்டிருக்கும் போது இவன் என்ன நல்லா சம்பாதிக்கிறேன் என்று சொல்கிறான்'

கியாஸ் மனதால் இப்படி நினைக்கும் போதே பாயிஸ் பேசினான்.

"நா பம்பாயில இருந்து வந்து சலூன் போட போறன் என்று சொன்னதும் யாருமே அதுக்கு சப்போர்ட் பண்ணயில.  நீ கூட வாணாம் என்று தான் சொன்னாய்.  என்றாலும் எனக்கு அப்ப இருந்த சூழ்நிலையில அது தவிர வேறொன்றும் தெரியல்ல. ரெண்டு சீப்பும் ரெண்டு கத்திரியும் ஒரு சார்ஜ் செய்யிற ரேஷர் மெஷினோடு இன்னும் செல சாமான்கள வாங்கி சலூன வீட்டுக்கு முன்ன இருந்த அறையில ஆரம்பிச்சன். நான் தொழில் படிச்ச தமிழ் நாட்டுக்காரர் நல்லாதான் எனக்கு சொல்லித்தந்திருந்தார்.

கொஞ்சம் கொஞ்சமா ஆள் கள் வர ஆரம்பிச்சாங்க. சாதாரணமாதான் தொழில் நடந்திச்சு. மொதலாவது லொக் டவுன் போட்டு எடுத்த ஒடனே என்னய தேடி பட எடுத்து வர ஆரம்பிச்சாங்க. டொக்டர்மார்ட்ட போலவே எனக்கிட்டயும் எப்பொயின்மன்ட் எடுத்து ஆள் கள் வர ஆரம்பிச்சாங்க. நா சரியான பிஸி ஆகிட்டன்.  அதே நேரம் எனக்கிட்டயும் அல்ஹம்துலில்லாஹ் பணம் குவிய ஆரம்பிச்சிடுச்சு. மாஷா அல்லாஹ் இப்ப எனக்கிட்ட கை நெறய பணமிருக்கி. எனக்கு ஓன்ட கோழிக் கட மொதலாளி சுஹைப் ஹாஜியார பத்தித்தான் நல்லா தெரியுமே. பெரிய கஞ்சன். ஒன்னயெல்லாம் சரியா கவனிக்கிறதேயில்ல என்றது எனக்கு நல்லா தெரியும்.  அதுதான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தன்.

முதல்ல இந்த பார்ஸல உள்ள வை. இந்தா இந்த பணத்தை புடி." வலுக்கட்டாயமாக பணத்தை திணித்தான்.

"ஒனக்கு என்ன தேவயென்றாலும் இனி நீ தாராளமா கேளு. நா கஷ்டப் பட்ட நேரத்துல எத்தன தடவ நீ எனக்கு ஒதவி செஞ்சிரீக்க. நா இந்தியாவுல மாட்டிக்கொண்டிருந்த நேரம் ஏன்ட குடும்பத்துக்கு நீ எவ்வளவு ஒதவி செஞ்சிரீக்க"

பாயிஸ் பேசிக்கொண்டே போனான். அடடா நாங்களெல்லாம் கீழாக நெனைச்ச ஒரு தொழில் மூலம் பாயிஸ் எப்படி முன்னேறியிருக்கிறான்.

ஆம் உழைத்து சம்பாதிப்பதில் எதுவுமே தவறில்லை. கியாஸின் மனம் சொல்லிக் கொண்டிருந்தது.

"



வெள்ளி, 30 ஜூலை, 2021

தியாகப் பாடம்

 தியாகப் பாடம்


வெட்கத்தில் எங்கள் பாதங்கள்

மக்கத்து மண்ணை

முத்தமிட முடியாமல்

போனதே என்று


சிறு கதவை மட்டுமே

திறந்து வைத்திருக்கும் புனித மண்


கொரோனா சிறையில் அகப்பட்ட

வெள்ளைப் புறாக்கள் -

சிறகுகள் விரிக்க முடியாமல்


உலகத் தோழர்களோடு

தோள் சேர முடியாமல்

போடப்பட்டிருக்கும் முடிச்சு


ஹஜ்ஜையே தியாகம் செய்ய வைத்துள்ள

ஹஜ்ஜுப் பெருநாள்


எங்களை பரிசோதனைக் குழாயிலிட்டு.....

ஹஜ்ஜுக்கு போகாமலே

ஹாஜியாய் முடிசூடிக் கொள்கிறோமா

என்று பார்க்கும் ஏகன்


எங்களுக்கு அருகிலேயே

எங்களை ஹாஜியாக்கும்

பாக்கியங்கள்


நாங்கள் தியாகிகளா ?

நிரூபிப்பது எங்களிடத்தில்  


புரிந்து கொண்டவர்கள்

எல்லோருமே ஹாஜிகள்தான் !



   - என். நஜ்முல் ஹுசைன். 


('தமிழன்' பத்திரிகையின் ஹஜ்ஜுப் பெருநாள் விசேட மலரில் பிரசுரமான கவிதை - 21/08/2021)





புதன், 21 ஏப்ரல், 2021

டாக்டர் தி. ஞானசேகரன் 80 ஆவது அகவை வாழ்த்துக் கவிதை

 

இமயமாய் உயர்ந்து நிற்கும்
இவரையே வாழ்த்த நானும்
இதயத்தின் வார்த்தை கொண்டு
இங்கு நான் வந்து நின்றேன்

பெயரிலே மட்டுமல்ல
ஆற்றலில் ஞானம் கொண்ட
ஆளுமை எங்கள் ஞான
சேகரன் போற்ற வந்தேன்

எத்தனை எழுத்துக் குவியல்
எங்களை மலைக்கச் செய்ய
வித்தகம் புரிந்து இங்கே
விசித்திரம் பேசுதம்மா

இன்னுமே இன்னும் கூட
ஓயவே இல்லை கைகள்
மின்னுமே இவரின் எழுத்து
பத்திகள் பலதை உழுது

உயர்ந்த ஓர் இடத்தில் இவரும்
இருக்கின்ற போதும் கூட
என்றுமே கர்வம் கொண்டு
இருந்ததை கண்டதில்லை

பெரும் புகழ் பெற்றே திகழும்
போதினில் கூட இவரும்
அரும்பியே எழுத விழையும்
இளையவர் உதைத்த தில்லை

களமது தந்து பலரை
உலகெலாம் அறியச் செய்யும்
உளமது கொண்ட ஞான
சேகரன் பெரிய மனத்தார்

இன்னமும் குழந்தை உள்ளம்
இளமையும் அங்கு துள்ளும்
வயததும் இளமையோடு
இவருடன் கொஞ்சிப் பேசும்

இன்னுமோர் நூறு வயது
இவருடன் கொஞ்சிப் பேச
இருகரம் ஏந்துகின்றேன்
இறைவனை வேண்டுகின்றேன்

ஆரோக்கிய மாக இவரும்
அழகிய வாழ்க்கை வாழ
இதயத்தின் வார்த்தை கொண்டு
இறைஞ்சியே வேண்டு கின்றேன்

எண்பது என்பது
எண்ணுக்குள் இருப்பது
எங்கள் மனங்களில் இருப்பது
இருபதே இருபது

வாழ்க உயர்திரு டாக்டர் ஞானசேகரன்
பல்லாண்டு பல்லாண்டு

- என். நஜ்முல் ஹுசைன்

17/04/2021 அன்று கொழும்பு தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் நடைபெற்ற ஞானம் ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன் அவர்களின் எண்பதாவது அகவை ஒன்று கூடினர் போது வாசிக்கப் பட்ட வாழ்த்துக் கவிதை


  

திங்கள், 1 மார்ச், 2021

எழுதாத எழுத்துகள்



நாங்கள்

பேனா துறவிகள்


வளைத்து வளைத்து

எழுதி மகிழ்ந்த

எழுத்துகளே


இப்போது

கணினியிலும்

கைபேசியிலும்

அரசாட்சி புரிகிறோம்


அதனால்

நாங்கள் எழுதுவதில்லை


நேராய் தொடுகிறோம்

நீங்களே

வளைந்து நெளிந்து

வந்து விழுகிறீர்கள்


எதிர்காலத்தில்

எங்கள் சந்ததிகளுக்கு

எழுத்துத் தெரியும்

எழுதத் தெரியாது

போகலாம் !


       - என். நஜ்முல் ஹுசைன்

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

கவிஞர் கம்மல்துறை இக்பால்,

வலம்புரி கவிதா வட்டத்தின் 70 ஆவது கவியரங்கு 01 – 09 – 2020 செவ்வாய்க்கிழமை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கைத் தலைமையேற்க கவிஞர் கம்மல்துறை இக்பால் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன். - என். நஜ்முல் ஹுசைன், தலைவர் - வகவம் 

அடக்கம் தனை தன்னுள்ளே வைத்து 
அகங்காரம் என்றெதுவும் இன்றி 
தொடக்கம் முதல் இலக்கியத்தில் இயங்கி 
தெரியாதது போல் இவரும் இருப்பார் 
நடக்கின்ற வற்றையெல்லாம் ரசித்து 
நல்லவற்றைப் பாராட்டி மகிழ்வார் 
கிடைக்கின்ற போதெல்லாம் எழுதி 
குவித்தாலும் இலைமறைத்த காய்தான் 

 தசாப்தங்கள் பலவற்றைத் தாண்டி 
தன் திறமை பத்திரிகைத் தாளில் 
உசாராக இவர் பதித்தாலும் 
எங்கேயோ எங்கேயோ போட்டார் 
விசா தந்து அழைத்தவக வத்தால் 
வியப்புற்றார் தன்நிலைமை கற்றார் 
அசாதார ணகவிஞன் தானும் 
என்ற உண்மை இவர் உணர்ந்து கொண்டார் 

 கட்டிடத் துறைதன்னில் மிளிர்ந்து 
காரியங்கள் ஆற்றிட்ட போதும் 
எட்டிடும் துறை எங்கள் கவிதை 
என்பதையே உணர்ந் தின்று எழுந்தார் 
பட்டிட்ட அனுபவங்கள் எல்லாம் 
பாங்காக படைத்துவிடு மிவரை 
கட்டியேநாம் கூட்டி வந்தோம் 
கவியரங்கத் தலைமையையும் தந்தோம் 

கம்மல் துறை தந்த இக்பால் 
கண்ணியம் பொருந்திய ஓர் ஆள் 
சம்மதம் சொன்னாரே அரங்கை 
 சறுக்காமல் தலைமேலே ஏற்க 
கம்பனை வள்ளுவன் தம்மை 
காட்டுக கவிஞரோ டிணைந்து 
எம்பியே குதித்திட வைப்பீர் 
எம்புகழ் திக்கெட்டும் பரவ 

கவிஞர் கம்மல்துறை இக்பால், 

கவியரங்கை உங்களிடம் தந்தோம் 
எங்கள் காதுகளில் கம்மலிட்டு ஜொலிக்க 
வைப்பீரென்று 
எதிர்பார்த்து நாங்களிங்கு நின்றோம் !

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

"உடைந்த சைக்கிள்" சிறுகதை

Add caption
 

  •  உடைந்த சைக்கிள்
                           - என். நஜ்முல் ஹுசைன்

    " பழைய இரும்பு சாமான், பிளாஸ்டிக், பழைய பேப்பர் வாங்குறது "
    மிக தொலை தூரத்திலிருந்து இந்த சத்தம் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது.

    அன்று ஞாயிற்றுக்கிழமை ஒன்பது மணிக்குப் பிறகும் படுக்கையிலே உருண்டு கொண்டிருந்தான் நியாஸ்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் சுபஹ் தொழுது குர்ஆன் ஓதிய பின் சூரியன் உதயமான பின்பு மீண்டும் ஒருமுறை உறங்கும் வழக்கம் நீண்ட காலமாக நியாஸிடம் இருக்கும் பழக்கம். மற்ற நாட்களில் அப்படி உறங்குவதற்கு அவனுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதேயில்லை. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து விட்டு மூத்த மகனை பாடசாலையில் விட்டு விட்டு அலுவலகம் செல்வதற்கு நேரம் சரியாக இருக்கும். எனவே ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை அவன் அனுபவிக்கத் தவறுவதில்லை.

    அரை தூக்கத்திலிருந்த நியாஸுக்கு அந்த பழைய இரும்பு சாமான்காரனின் சத்தம் கேட்டாலும் கூட கண்களை மூடிக் கொண்டுதானிருந்தான்.

    " ஏம்பா தேடிக்கொண்டிருந்தீங்களே. இதோ வாரான். கொஞ்சம் எழும்பி அந்த சைக்கிள கொடுத்துறுங்க..... " மனைவி பாஹிரா சொன்னாள்.

    " ஆ....." சோம்பல் முறித்தவாறே கண்களை திறந்தான் நியாஸ்

    " இரி இரி.... அவ என்ன இங்கயா இரிக்கான். ஒரு கட்டக்கி அங்குட்டு இரிக்கான். "

    " அட அப்படியென்னா நீங்க சத்தத்த கேட்டுக் கொண்டுதானிருக்கீங்க. பொய்க்கி தூங்குற மாதிரி நடிக்கிறீங்க" என்றாள் பாஹிரா.

    "நாங்க கொஞ்சம் தூங்குனா ஒங்களுக்கு புடிக்காதே "  நியாஸ் முணுமுணுத்தான்.

    " தூங்குங்க தூங்குங்க நல்லா தூங்குங்க. ஆம்புள்ளைகளுக்கு என்னா லீவு நாள் என்று ஒன்று இரிக்கி. எங்களய மாதிரி பொம்பளகளுக்கு எங்க லீவு. எல்லா நாளும் வேல நாளுதான் " கிண்டலாகச் சொன்னாள் பாஹிரா.

    படுக்கையிலிருந்து எழுந்து கொண்டு கண்ணைக் கசக்கிக் கொண்டு சிரித்துக் கொண்டே நியாஸ் சொன்னான், "அதென்டா உண்மதான். பொம்பளைகளுக்கு எங்க லீவு. சில பேங்குகளுல 24 தர 7 - 365 நாட்கள் என்று விளம்பரம் போட்டிருக்காங்க "

    " அட அதென்ன 24 தர 7 - 365 நாட்கள் ? " கேட்டாள் பாஹிரா.

    " அப்படின்னா அந்த பேங்கு ஒவ்வொரு நாளும் 24 மணித்தியாலம் அதுவும் 7 நாளும் வேல செய்யுறாங்கலாம். மூடுறதே இல்லையாம். அதுதான் வருஷத்தில 365 நாளும் லீவே எடுக்காம வேல செய்யுறாங்கலாம். எனக்கிட்ட கேட்டா ஒங்களய மாதிரி பொம்பளைங்களதான் 24 தர 7 - 365 நாட்கள் என்று சொல்லனும். நீங்க தானே ஒவ்வொரு நாளும் இருபத்தி நாலு மணி நேரமும் லீவே எடுக்காம வேல செய்யுறீங்க " என்று பெண்களுக்குச் சான்றிதழ் வழங்கினான் நியாஸ்

    " அத ஒத்துக் கொண்டீங்களே அதுக்கு முதல்ல ஒரு தேங்ஸ் சொல்லனும் " பாஹிரா நக்கலாகச் சிரித்தாள்

    பேசிக் கொண்டே நியாஸ் படுக்கையிலிருந்து எழுந்து குளியலறைச் சென்று அவசரமாக வாயை அலம்பி முகத்தை பேருக்கு கழுவிக் கொண்டான்.

    நியாஸ் வெளியே வரவும், பழைய இரும்பு வியாபாரி வீட்டு வாசலுக்கு வரவும் சரியாய் இருந்தது.

    " ஏ பழைய இரும்பு கொஞ்சம் நில்லு வாரேன் " என்று தெருவுக்கு கேட்பதற்கு கத்தினான்.

    பழைய இரும்பு வியாபாரி இப்படியான சத்தங்களை கேட்பதற்கே தனது காதுகளை கூர்மையாக்கிக் கொண்டு வருபவன்தான்.

    அதனால் சத்தம் கேட்டவுடன் நியாஸின் வீட்டு வாசலில் தான் தள்ளிக் கொண்டு வந்த வண்டியை நிறுத்தினான்.

    அவனது வண்டியில் பழைய சாமான்கள் கொஞ்சம் இருந்தன. பெட்டி போன்றிருந்த பழைய கொம்பியூட்டரும்கூட அவனது வண்டியை அலங்கரித்துக் கொண்டிருந்தது. இப்போது தான் மெல்லிய கொம்பியூட்டர்கள் வந்து விட்ட காரணத்தால் பழைய பெட்டி கொம்பியூட்டர்களுக்கு மவுசு போய்விட்டது. அதனால் அதுவும்கூட  பழைய இரும்பு பிளாஸ்டிக் பொருட்களுடன் இணைந்து கொண்டன.

    வீட்டு ஸ்டோர் அறையிலே இருந்து நியாஸ் ஒரு சிறிய சைக்கிளை தூக்கிக் கொண்டு வந்தான். அவனது நான்கு வயது மகன் ஓட்டி விளையாடிய மூன்று சக்கர வண்டி.  முன்னால் உள்ள சக்கரத்தின் கம்பிகள் வளைந்திருந்தன.

    குழந்தையாக இருந்த போதிலிருந்தே அவனது மகன் மூன்று சக்கர சைக்கிளை கண்டால் விடமாட்டான். அதிலே அவனை ஏற்றி உட்கார வைத்தால்தான் அழுகையை நிறுத்துவான்.   அதிலே வைத்து தள்ளும் போதுதான் சிரிப்பான். அப்படியான சைக்கிள் எங்காவது உறவினர் வீடுகளுக்கு போனால்தான் இருக்கும். என்றாலும் நியாஸ் தனது சிறிய மகனை அந்த வண்டியில் வைத்ததும் அந்த வீட்டிலிருக்கும் சைக்கிளின் சொந்தக்கார பிள்ளை 'வீல்' என்று அழும். தனது சொத்து தன்னிடமிருந்து பறி போகிறதே என்ற ஏக்கம் அதற்கு. தனது பிள்ளையை சிரிக்க வைக்க இன்னொரு பிள்ளையை அழ வைக்கவேண்டியிருந்தது.

    தனது மகனுக்கு கால் நீட்டமானதுமே நியாஸ் செய்த முதல் வேலை மகனுக்கென்றொரு மூன்று சக்கர வண்டி வாங்கியதுதான்.

    அவனது வீட்டுச் சுற்றுப்புறத்தில் மகனுக்கு பெரிதாய் விளையாட இடம் இல்லாவிட்டாலும் விடுமுறை நாட்களில் சிறுவர் பூங்காவுக்கு அழைத்துச் சென்று விளையாட வைப்பான். அப்படி தனது மகன் காலாற விளையாடிய சைக்கிள்தான் அது. விளையாடி விளையாடி அதன் முன் சக்கரங்களின் கம்பிகள் உடைந்தும் போயின. இப்போது அந்த மகனுக்கு நான்கு வயது. அவனுக்கு இப்போது இந்த சைக்கிளின் மீதுள்ள ஆசைபோய்விட்டது. அதற்கு பதிலாக சார்ஜ் செய்து ஓட்டும் மின்சார பைக்கின் மேல் ஆசை வந்து விட்டது. எங்கேயாவது ஷொப்பிங் சென்டர் களுக்கு போனால் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் மின்சார பைக்கில் ஏறி உட்கார்ந்து கொண்டு இறங்க மாட்டான். மிகவும் கஷ்டப்பட்டே அதிலிருந்து அவனை எடுத்துக் கொண்டு வருவார்கள். இல்லை இழுத்துக் கொண்டு வருவார்கள். எப்படியும் அப்படியான ஒரு பைக்கை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நியாஸும் அவனது மனைவியும் தீர்மானித்துக் கொண்டார்கள். ஆகக் குறைந்ததையே இருபதினாயிரம் என்று சொன்னார்கள்.

    பட்ஜெட்டில் இருபதினாயிரத்தை ஒதுக்க ஒரு மூன்று மாதங்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டன. மகன் ஆசைப்பட்டது போலவே மின்சார பைக் வாங்கி அதை அவன் ஆசை தீர ஓட்டி மகிழ்கிறான்.

    அதனால் இந்த பழைய மூன்று சக்கர சைக்கிளை யாருக்காவது விற்றுவிட்டு வோம் என்று யோசித்தார்கள். என்றாலும் அதனை வாங்க யாரும் முனைப்பு காட்டவில்லை. அதனால்தான் அதனை பழைய இரும்பு வியாபாரியிடம் விற்பதற்கு கணவனும் மனைவியும் பேசிக் கொண்டார்கள். அதுதான் பழைய இரும்பு வியாபாரியின் குரல் கேட்டதுமே அவர்களுக்கு உற்சாகம் வந்து விட்டது.

    இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து வாங்கிய மூன்று சக்கர சைக்கிள் வண்டி. இப்போது முன் சக்கரம் மட்டும் தான் உடைந்திருக்கிறது. அதை ரிப்பெயார் செய்தால் நன்றாக ஓடலாம்.

    " தம்பி இத எடுத்துக்கிட்டு ஆயிரம் ரூபா தா. கொஞ்சம் இத செஞ்சா நல்ல வெலக்கி விய்க்கலாம் "

    அதை நீட்டியவுடன் பழைய இரும்பு வியாபாரி மிகவும் ஆவலோடு அதை வாங்கி அங்கும் இங்கும் திருப்பித் திருப்பிப் பார்த்தான். ஏதோ யோசித்தான்.

    "தொர இத எனக்கு தாங்க. நான் முந்நூறு ரூபா தாறேன் " என்றான்.

    " போப்பா முந்நூறு ரூபாய்க்கு இத தர ஏலுமா. நல்லா ஒன்றுமே ஒடைஞ்சி இல்லநீ கொஞ்சம் சரி செஞ்சா ஒனக்கு நல்ல வெலக்கி விக்க ஏலும். இதுல புது பைசிக்கள் மூவாயிரம் ரூபா வரும். சரி பரவாயில்லை எட்டு நூறு ரூபா தா "

    " இல்ல தொர எனக்கிட்ட அவ்வளவு சல்லி இல்ல.  ஒரு முன்னூத்தி அம்பது ரூபா தாறேன். எனக்கு தாங்க தொர " என்று வியாபாரியாக இல்லாமல் ஏதோ ஓர் ஏக்கத்துடன் கேட்டான்.

    நியாஸுக்கு அவன் மகனுக்கு வாங்கிய மின்சார பைக்கின் விலை ஞாபகம் வந்தது. பதினெட்டாயிரம். இந்த சைக்கிளை விற்று ஒரு எண்ணூறு ரூபாயையாவது அதில் ஈடு செய்ய வேண்டும் என்பதே அவனது தீர்மானமாக இருந்தது.

    " ஏலா ஏலா எட்டு நூறு ரூபா தாரதென்டா தா . இல்லாட்டி போ. நான் சைக்கிள விக்க இல்ல " என்று சொல்லியவாறே சைக்கிளை மீண்டும் கையிலே எடுத்துக் கொண்டான் நியாஸ்.

    பரிதாபமாக பார்த்தபடி அந்த இரும்பு வியாபாரி 


    " தொர இத நா விக்க எடுக்கல்லை. ஏன்ட மகனுக்கு குடுக்க நெனச்சேன். மிச்ச நாளா எனக்கிட்ட ஏன்ட மவன் சைக்கிள் வாங்கி கேட்டு அழுந்து கொண்டிருக்கிறான். புதிய சைக்கிள் வாங்க எங்க தோரே எங்கள்ட சல்லி. ஒங்க சைக்கிள கொண்டு போய் ஒரு முன்னூறு செலவளிச்சா புது சைக்கிள் மாதிரி செஞ்சி குடுத்துருவன். அதுதான் பாத்தேன். "

    இப்போதுதான் இரும்பு வியாபாரி சைக்கிளை ஏக்கத்துடன் பார்த்த காரணம் நியாஸுக்கு விளங்கியது. என்றாலும் நியாஸ் கேட்ட எண்ணூறு ரூபாய்க்கும் அவன் சொல்லும் முன்னூற்றி ஐம்பது ரூபாய்க்கும் எவ்வளவு வித்தியாசம். நியாஸ் யோசித்துக் கொண்டிருந்த போதே உள்ளே இருந்து சாஹிரா பேசினாள்

    " கொஞ்சம் இங்க வாங்க..... " என்று நியாஸை கூப்பிட்டாள்.

    நியாஸ் கையிலே சைக்கிளையும் தூக்கிக் கொண்டே உள்ளே போனான். இரும்பு வியாபாரி சிறிது நேரம் தாமதித்துப் பார்த்தான். உள்ளே போன நியாஸ் வெளியே வர காணவில்லை.

    உள்ளே சென்ற நியாஸுக்கு அவரது மனைவி "வேலய பாருங்க அந்த சைக்கிள தூக்கி ஒரு மூலைல போடுங்க. முன்னூத்தி அம்பது ரூபா பெரிய முன்னூத்தி அம்பது ரூபா " என்று சொல்வது போல் காதில் கேட்டது

    தனது ஆசை நிராசையான வேதனையோடு இரும்பு வியாபாரி அந்த இடத்தை விட்டு அகன்றான். தனது அன்பு மகனின் முகம் அவனது மனத்திரையில் வந்து கொண்டிருந்ததால் ' பழைய இரும்பு சாமான், பிளாஸ்டிக், பழைய பேப்பர் வாங்குறது ' என்று கத்த முடியாமல் அவனது தொண்டை கரகரத்துக் கொண்டிருந்தது.

    மௌனமாகவே சிறிது தூரம் வண்டியை தள்ளிக் கொண்டு போன அவனை
    " தம்பி தம்பி " என்ற சத்தம் திரும்பிப் பார்க்க வைத்தது.

    தூரத்திலே நியாஸ் நின்று கொண்டு கையை அசைத்து அங்கே வருமாறு சைகை காட்டினான்.
    வண்டியை மெதுவாக திருப்பிக் கொண்டு நியாஸுக்கு அருகில் சென்று நிறுத்தினான். மீண்டும் அவனை அங்கே நிறுத்தி விட்டு உள்ளே சென்ற நியாஸ் கையிலே சைக்கிளுடன் வந்தான்.

    " தம்பி இந்த சைக்கிள எடுத்துக்கோ " என்று சொல்லியதோடு நிற்காமல் நியாஸ்


    " இந்த பணத்தையும் வச்சி முன் ரோதய ரிப்பெயார் பண்ணி ஒன்ட மகனுக்கு குடு " என்று கூறி ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றையும் நீட்டினான்.

    இரும்பு வியாபாரிக்கு தனது கண்களையே நம்ப முடியவில்லை.
    அவரது மனைவி சொன்னதை அவர் கேட்கவில்லையோ,  என்று  நினைத்தான்.

    தனது மகனுக்காக ஆசைப்பட்ட சைக்கிள் தனக்கு கிடைக்கிறதே அதுவும் போதாதற்கு ரிப்பெயார் பண்ண பணமும் தருகிறாரே.

    " ஐயா பணமெல்லாம் வாணாம் ஐயா. இந்த முன்னூத்தி அம்பது ரூபாயவாவது எடுங்க ஐயா "

    " இல்லப்பா நான் மனப்பூர்வமா இத தாரேன். நீ ஒன்ட மகனுக்கு என்டு சொன்னதும் ஏன்ட பொண்டாட்டிட மனச உருக்கிரிச்சு. ' எங்கட மகன் எங்கள கரச்சல் பண்ணினது மாதிரி தானே அவர்ட மகனும் கரச்சல் குடுப்பான். எங்களுக்கு எங்கட மகன் மாதிரி தானே அவருக்கு அவர்ட மகன். பணம் என்னப்பா பெரிய பணம். இந்த சைக்கிளையும் குடுத்து அது ரிப்பெயார் பண்ண ஒரு ஐநூறு ரூபாயும் கொடுங்கப்பா ' என்று சொல்லிட்டா. இனி என்ட பொண்டாட்டி சொன்னா அதுக்கு மறுபேச்சு ஏது. இந்தா சந்தோஷமா தாரேன். ஒன்ட மகனுக்கு சந்தோஷமா குடு " என்று மலர்ந்த முகத்துடன் கொடுத்தான்.

    அந்த உள்ளங்களின் பெருந்தன்மையை  எண்ணி கடவுளுக்கு நன்றி சொன்னவனாக நியாஸ் கொடுத்த சைக்கிளையும், பணத்தையும் நன்றி உணர்வோடு பெற்றுக் கொண்ட பழைய இரும்பு வியாபாரி

    " குடுக்கிறன் தொர குடுக்கிறன் ஒங்க ரெண்டு பேரையும் சொல்லியே ஏன்ட மகன் கிட்ட குடுக்கிறன் " என்று சொன்ன போது அவனது கண்கள் பனித்திருந்தன.
    ...................................................




    தினகரன் வாரமஞ்சரி 23-08-2020

  • நன்றி: பிரதம ஆசிரியர் திரு. செந்தில் வேலவர்


புதன், 19 ஆகஸ்ட், 2020

ஹஜ்ஜுப் பெருநாள் கவிதை 01/08/2020


01/08/2020 வசந்தம் தொலைக்காட்சியின் ஹஜ்ஜுப்  பெருநாள் விசேட ஒளிபரப்பில் இடம்பெற்ற கவிதை